களனி பள்ளத்தாக்கின் முடிசூடா தொழிலாளர் தலைவராகத் திகழ்ந்த கே.ஜி.எஸ். நாயர் | தினகரன் வாரமஞ்சரி

களனி பள்ளத்தாக்கின் முடிசூடா தொழிலாளர் தலைவராகத் திகழ்ந்த கே.ஜி.எஸ். நாயர்

இந்திய வம்சாவளி மக்களின் எழுச்சி இலங்கை - இந்தியன் காங்கிரஸின் உதயத்தோடு ஆரம்பமாகியதெனினும், 1937ம் ஆண்டு இந்திய காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் தலைவி கமலாதேவி சட்டோபாத்யாவின் இலங்கை வருகையுடன் முளைவிட தொடங்கியதெனலாம்.

1937ம் ஆண்டு மார்ச் 28ம் திகதி காலை 7.30க்கு தலைமன்னாரிலிருந்து கொழும்பு வந்த திருமதி கமலாதேவி, ஏப்ரல் 02ம் திகதி நாவலப்பிட்டி செல்லும் வழியில் எட்டியாந்தோட்டையில் பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டார். கலாநிதி என்.எம். பெரேரா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இப்பிராந்தியத்தில் இந்திய வம்சாவளி மக்களின் இன்னல்கள் குறித்தும் அவர்களின் எழுச்சி குறித்தும் கனல்கக்கிய அமரர் கே.ஜி.எஸ். நாயர் களனிப் பள்ளத்தாக்கில் புதியதோர் புரட்சிக்கு வித்திட்டார் எனலாம்.

வெள்ளைக்கார தோட்டத் துரையாகிய மார்க் என்டனி ப்ரெஸ்கர்டல் இக்கூட்டத்தில், ஆங்கிலேய தோட்டக் கம்பனிகளின் அடாவடித் தனத்தைக் கண்டித்தும் அப்பாவித் தொழிலாளர்கள் அஞ்சாமல் போராட வேண்டுமென்றும் அறைகூவல் விடுத்தார். லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கமாகிய லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் மூலம் தொழிற்சங்க நடவடிக்கைகளை கலாநிதி என்.எம். பெரேரா தலைமையில் முன்னெடுத்து வந்த அக்காலக் கட்டத்தில் 1939ம் ஆண்டு ஆசிய ஜோதி ஜவகர்லால் நேருவின் இலங்கை விஜயத்தை இலங்கை - இந்தியன் காங்கிரஸ் ஒழுங்கு செய்தது.

இந்தியாவின் மேற்கு வங்காளத்திற்கு ஈடாக பொதுவுடமை சித்தாந்தத்தை மலையகத்தில் பேணிய மலையாளியான கே.ஜி.எஸ். நாயர் ஏற்கனவே எட்டியாந்தோட்டை இந்து இளைஞர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கி கலாசார, சமய விழுமியங்களைப் பேணி வந்தவராகையினால் இந்திய வம்சாவளி மக்களின் மத கலாசாரங்களைப் பேணும் அதேவேளை, தொழிலாளர் நலன்களையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென கருதி நேருவின் வருகையுடன் இலங்கை இந்தியன் காங்கிரசின் களனிவெலி மாநில கிளையை ஆரம்பித்தார்.

தலைநகர் கொழும்பை அண்மித்த ஹங்வெல்ல, பாதுக்கை முதல் கினிகத்தேனையை அண்மித்த கித்துல்கலை வரையிலான பெருநிலப்பரப்பு களனிவெலி மாநிலமென அழைக்கப்பட்டு இம் மாநிலத்தின் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் தோட்டக்கமிட்டிகளின் தலைவர்களினால் நாயர் தெரிவு செய்யப்பட்டார். நாளடைவில் நாயரின் செயற்பாடுகள் காரணமாக இலங்கை - இந்தியன் காங்கிரஸின் மத்திய கமிட்டியில் முக்கிய பிரமுகராகவும், கூட்டுக் காரியதரிசியாகவும் தெரிவானார் கே.ஜி.எஸ். நாயர்.

மிகப்பெரிய மாநிலமொன்றின் தொழிற்சங்கப் பணிமனையாக எட்டியாந்தோட்டையில் அமைந்திருந்த காங்கிரஸ் அலுவலகம், எந்நேரமும் பரபரப்புடன் காணப்பட்டது. பெருந்தோட்டங்களின் தொழில் பிணக்குகள் மாத்திரமின்றி சமூக சச்சரவுகள், குடும்பத் தகராறுகள் என விசாரணை மேற்கொண்டு சமரசமும், தவறு புரிந்தவர்களுக்கு எச்சரிக்கையும், தண்டமும் விடுக்கும் வண்ணம் காங்கிரஸ் பணிமனையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டிருந்தது.

இப்பிராந்திய பெருந்தோட்ட மக்கள் மத்தியில் அமைதியும் கட்டுப்பாடும் காங்கிரஸ் மூலம் பேணப்பட்டது. பாடசாலை கல்வி முடித்த பல இளைஞர்கள் தமது ஆங்கிலப் புலமையை இப்பணிமனை மூலம் தொழிலாளர் நலனுக்காக செலவிட்டனர். கே.ரி. சண்முகம், இராஜு, அடைக்கன், ஜோர்ஜ் ஜோசப், செபஸ்தியன், ஜே. அண்டனி, வி.ஏ. செல்லமுத்து கற்ற இளைஞர்கள் நாயர் பின்னால் அணிதிரண்டமையால் இப்பிராந்தியத்தில் தோட்ட நிர்வாகங்கள் ஆடிப்போயின.

தையல் கலைஞராக தொழில்புரிந்த நாயர், தமது ஓய்வொழிச்சலற்ற பணி காரணமாக தமது சொந்த தொழிலை சரிவர பேண முடியவில்லை. எனவே அவரது குடும்பம் வறுமையில் வாடியது. தொழிற்சங்கப் பணிக்காக பணம் தேவைப்படும்போது மனைவியின் தாலிக்கொடியையும் விற்று சப்புமல்கந்தை தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக ஈடுபட்டமை இப்பகுதி மக்கள் அறிந்த உண்மை.

1947ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்டங்களிலிருந்து இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகள் பெறுவெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றமையும், அவர்கள் எதிர்க்கட்சியாக பலமாக விளங்கிய லங்கா சமசமாஜக் கட்சியின் இடதுசாரி முற்போக்குக் கொள்கையை ஆதரிப்பவர்களாக இருந்தமையும் அன்றைய ஆட்சியாளர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கவே இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது அரசு. டி.எஸ். சேனநாயக்க, எஸ்.டபிள்யுூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஜி.ஜி. பொன்னம்பலம் முதலிய தலைவர்கள் இதை சாதித்து வன்மம் தீர்த்துக் கொண்டனர்.

குடியுரிமையை இழந்த இந்நாட்டு இந்திய வம்சாவளியினர் தமது உறவுகளைக்காண இந்திய செல்லமுடியாது தவித்தனர். குடியுரிமையின்றி கடவுச்சீட்டு பெறமுடியாது. ஓர் அங்குல நிலமேனும் உரிமைகொள்ள முடியாது. அரச தொழில் வாய்ப்புகள் பெற அருகதையற்றவர்களாகினர்.

உள்ளுராட்சி மன்றங்களின் நகரசுத்தி தொழிலாளர், கழிவகற்றும் தொழிலாளர்கள், பாதைகளுக்கு கல் உடைக்கும் தொழிலாளர்களென மாத்திரமே இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன. வாக்காளர் இடாப்புகளில் பெயர் இடம்பெறாத அபுூர்வ குடிகளாகினர் இந்நாட்டுக்காக உழைத்த இந்திய வம்சாவளி மக்கள்.

குடியுரிமை கோரி மாபெரும் போராட்டத்தை இலங்கை இந்தியன் காங்கிரஸ் ஆரம்பித்தது. அதன் ஒரு கட்டமாக காலிமுகத்திடல் பாராளுமன்ற கட்டிடத்தின் முன்னாள் மாபெரும் சத்தியாக்கிரக நடவடிக்கை இடம்பெற்றது. இதனை ஒழுங்கு செய்து முன்னின்று நடாத்தியவரே கே.ஜி.எஸ். நாயர்.

பெருந்தலைவர்களான செள. தொண்டமான், ஏ. அஸீஸ், கே. இராஜலிங்கம் முதலானோர் ஆட்சியாளர்களின் காவல்துறையினராலும், காடையர்களினாலும் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டனர். தெற்கேயும், வடக்கேயுமாக இத்தலைவர்கள் கடத்திச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டனர். இவர்களைப் பின்தொடர்ந்து சென்று மீட்டுவரும் பணியையும் நாயர் தனது நண்பராகிய வி. பழனிச்சாமிப்பிள்ளையுடன் மேற்கொண்டனர்.

குடியுரிமை கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு லண்டன் பிரிவ் கவுன்சில்வரை சென்றது. இவ்வழக்கு கொட்டம்பள்ளி கோவிந்தன் செல்லப்ப நாயர் என்னும் கே.ஜி.எஸ். நாயர் அவர்களை மனுதாரராகக் கொண்டிருந்தது. அதனால் இவ்வழக்கை பின்னாளில் “கொட்டம்பிள்ளை வழக்கு“ என்றார்கள்.

இலங்கை இந்தியன் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றம் பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இணைச் செயலாளராக நாயர் தெரிவு செய்யப்பட்டார்.

களனிவெலி மாவட்டத்தில் நிகழ்ந்த உருளவள்ளி போராட்டம் நாயர் ஆரம்பித்த பெரும் போராட்டம். செளமியமூர்த்தி தொண்டமான் தலைமைதாங்கிய முதலாவது தொழிற்சங்க போராட்டமும் இதுதான்.

அல்கொல்ல தோட்ட வளையல் போராட்டம் குறிப்பிடத்தக்கது. மலையகப் பெண் தொழிலாளர்களின் மீது தோட்ட நிர்வாகம் மேற்கொண்ட அடக்குமுறை இதன்மூலம் மட்டுப்படுத்தப்பட்டது. மத்திய மாகாணம், ஊவா, சபரகமுவ, மேல் மாகாணம், தென் மாகாணம் என பரந்து வாழ்ந்த தேயிலை இரப்பர் தோட்டங்களின் தொழிலாளர் வர்க்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்னும் மாபெரும் இயக்கத்தின் ஒரேகுடையின் கீழ் அங்கத்துவம் பெற்றிருந்தன. காங்கிரஸ் மத்திய, மாவட்ட கிளைகளில் முதலாளித்துவத்தை ஆதரிப்போரும், முற்போக்குவாதிகளும் பணிப்போரில் ஈடுபட்டு இறுதியில் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுண்டது.

அப்துல் அஸீஸ் தலைமையில் கே.ஜி.எஸ். நாயர், நடேசன், சி.வி. வேலுப்பிள்ளை, எஸ்.எம். சுப்பையா, முகம்மது சாய்பு, பழனிச்சாமிப்பிள்ளை முதலான முற்போக்குவாதிகள் இ.தொ.கா.விலிருந்து விலகி ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்னும் அமைப்பை உருவாக்கினர். இதன் பொதுச் செயலாளராக நாயர் தெரிவு செய்யப்பட்டார். வி. பழனிச்சாமிப்பிள்ளை போசகராகவும், துரைசாமி நாயுடு பொருளாளராகவும் நியமிக்கப்பட்டு புதிய பயணத்தை ஆரம்பித்தது அஸீஸ் தலைமையிலான அணி.

17 ரூபா 50 சதம் மேலதிகமாக பஞ்சப்படியாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென மாபெரும் போராட்டத்தை நாயர் சார்ந்த அணியினர் நடாத்தியபோது பத்துசத சம்பள உயர்வு பெற்றுத்தருவதாகக் கூறி மாற்று அணியினர் இப்போராட்டத்தைத் தோல்வியுறச் செய்தனர்.

பெண் தொழிலாளர்களுக்கு பிரசவ சகாய நிதியைப் பெற்றுத்தருவதில் நாயர் அணி வெற்றிகண்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வேதனத்தைப் பெற்றுக்கொடுத்மை, வருடாந்த போனஸ், ஊழியர் சேமலாப நிதியென இவர்கள் பல வெற்றிகளைக் குவித்தனர்.

தோட்டப் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்கும்படி வலியுறுத்திய முதலாவது பிரேரணையை ஜனநாயக தொழிலாளர் காங்கிரசே முன்மொழிந்தது. தமது சொந்த மொழியையும், குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாது அப்பழுக்கற்ற பணிபுரிந்த நாயர். 1962 மே மாதம் 12ம் திகதி தமது அலுவலக மேசைமீது தலைவைத்து உயிர்ந்தார்.

இவரது இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம், நாயர் நடாத்திய குடியுரிமை போராட்டமே எம்மை தமிழ் காங்கிரஸிலிருந்து விலகி இலங்கை தமிழரசுக் கட்சியை ஆரம்பிப்பதற்கு காரணமாகியது என இரக்கலுரையில் குறிப்பிட்டார்.

பல சாதனைகளுக்கும் புதிய பாதைகளுக்கும் காரணமான நாயரின் குடும்பத்தை பெருந்தோட்ட மக்கள் நிதி சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பிவைத்து தமது நன்றியை வெளிப்படுத்தினார்.

சி.கே. முருகேசு

Comments