பொதுமக்கள் தமது கருத்துகளை முன்வைக்க ஒரு மாத அவகாசம் | தினகரன் வாரமஞ்சரி

பொதுமக்கள் தமது கருத்துகளை முன்வைக்க ஒரு மாத அவகாசம்

உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொவிட்-19 தொற்று  காரணமாக இலங்கையும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு அப்பால் ஜனநாயக ரீதியிலும் நாடு சவாலுக்கு முகங் கொடுத்துள்ளது.

காலத்துக்குக் காலம் தேர்தல்கள் நடத்தப்படுவதே ஜனநாயக நாடொன்றுக்கான இலட்சணமாகும். எனினும், இலங்கையைப் பொறுத்த வரையில் கொவிட் பரவல் காரணமாக மாகாணசபைத் தேர்தல்களை இன்னமும் நடத்த முடியாத சவால் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கான பதவிக் காலம் முடிவடைந்து சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாகியுள்ள போதும், இன்னமும் அவற்றுக்கான தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

கடந்த வருட இறுதியில் அல்லது இவ்வருட ஆரம்பத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டிய போதும், கொவிட் தொற்றுநோய் பரவலால் அரசாங்கம் அதனை நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு பௌதீக ரீதியிலான சூழ்நிலை இல்லா விட்டாலும், அரசாங்கம் தேர்தல்களுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது என்றே கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தல்களுக்குத் தயாராகுமாறு அண்மையில் அதிகாரிகளைச் சந்தித்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையிலேயே, மூன்றாவது அலையின் தாக்கம் நாட்டை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மாகாணசபைத் தேர்தல்களைப் பொறுத்த வரையில் இதனை நடத்துவதற்கு சட்டரீதியான முட்டுக்கட்டைகளும் காணப்படுகின்றன.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டம் திருத்தப்பட்டது. இதற்கமைய 50 சதவீத தொகுதி முறையும், 50 சதவீத விகிதாசார முறையும் என்ற கலப்பு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

அவசர அவசரமாக இதனை நிறைவேற்ற அப்போதைய அரசாங்கம் முயற்சித்த போதும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க சிறுபான்மைக் கட்சிகள் அரசுக்கு நிபந்தனை விதித்திருந்தன. அதாவது, சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதாயின், எல்லை நிர்ணய அறிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

இதனால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போதும், அது பூரணப்படுத்தப்படவில்லை. ஏனெனில், நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை அரசின் பங்காளிக் கட்சிகளாலேயே தோற்கடிக்கப்பட்டது. இதனால் மாகாண சபைத் திருத்தச் சட்டமூலம் முற்றுப் பெறாமல் ஸ்தம்பித்துப் போனது. அதன் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் மாகாணசபைத் தேர்தல்களில் அக்கறை காண்பிக்காது ஜனாதிபதித் தேர்தலில் கவனம் செலுத்தியமையால் இவ்விடயம் இழுபறி நிலைக்குச் சென்றது.

இந்த நிலையில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய பொறுப்பு பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் மீது சுமத்தப்பட்டது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் கட்டாயம் சட்டத் திருத்தமொன்றுக்குச் செல்ல வேண்டும் அல்லது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து பழைய முறைக்குச் செல்வதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில் தற்போதைய அரசு உள்ளது.

தேர்தல்களை நடத்துவதற்கான பௌதிகச் சூழல் கொவிட் தொற்றினால் அற்றுப் போனது. இருந்த போதும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு காணப்படும் சட்டரீதியான சிக்கல்களை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

இதன் ஒரு அங்கமாக தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங் காண்பதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கான குழுவும் நியமிக்கப்பட்டது.

சபை முதல்வரும், வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் இந்த விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி சில்வா, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பவித்ராதேவி வன்னிஆரச்சி, டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவங்ச, எம்.யூ.எம். அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர திசாநாயக்க, கபீர் ஹஷீம், ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம்.ஏ. சுமந்திரன், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதும் தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்வதும் இக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.

இந்த விசேட குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் முறை தொடர்பில் முதலாவது கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் இடம்பெற வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதற்கு குழு தீர்மானித்துள்ளது.

அதேநேரம், விசேட பாராளுமன்றக் குழுவில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முதலாவது கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இக்குழுவில் உள்வாங்கப்பட வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தினேன். இது தொடர்பில் பிரேரணையொன்றை நிறைவேற்றி அவர்களை உள்வாங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது” என்றார்.

“அத்துடன், தேர்தல் சீர்திருத்தங்கள் மூலம் தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்தும் குறைய ஒருபோதும் இடமளிக்க முடியாது, அடாவடியான தேர்தல் முறை மாற்றத்துக்கு அரசாங்கம் தயாராகுமானால் அதற்கு எதிராக தேசிய, சர்வதேச ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராககவுள்ளோம். இலங்கை வாழ் தமிழர், முஸ்லிம் சனத்தொகையில், வடக்கு கிழக்குக்கு வெளியே 50 வீத தமிழரும், 65 வீத முஸ்லிம்களும் தென்னிலங்கை மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள்.

இன்றைய விகிதாசார தேர்தல் முறைமை அடாவடியாக மாற்றப்பட்டு உத்தேச கலப்பு முறைமை கொண்டு வரப்பட்டால், எமது மக்களின் பிரதிநிதித்துவங்கள் சரிபாதிக்கு மேல் பாராளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் குறைந்து விடும்” என்றும் மனோ கணேசன் சுட்டிக் காட்டியிருந்தார்.

“அரசாங்க யோசனைகளை நாம் உள்வாங்கி, தனித்தமிழ் தொகுதிகளை, தனி முஸ்லிம் தொகுதிகளை எல்லை மீள் நிர்ணயம் செய்து உருவாக்குவோம் என கூறுவது ஒரு வெறுங்கனவு. இதற்கு தென்னிலங்கையில் நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியே இடமில்லை. ஒருபோதும், பெரும்பான்மை கட்சிகளும், பெரும்பான்மை அதிகார வர்க்கமும், தனித் தமிழ் தொகுதிகளை நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியே உருவாக்க உடன்படாது. அடுத்தது, பல அங்கத்தவர் தொகுதிகளையும், நிலத் தொடர்பற்ற தனித்தமிழ் தொகுதிகளையும் புதிதாக உருவாக்க இடமில்லை.
உண்மையில் இப்படி தனித்தமிழ், தனி முஸ்லிம் தொகுதிகளை உருவாக்க நிலப்பரப்பும், தமிழ், முஸ்லிம் ஜன அடர்த்தியும் கூட இடமளிக்காது” எனவும் மனோ கணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

எதுவாக இருந்தாலும், காலத்துக்கு ஏற்ற வகையில் தேர்தல் முறையில் திருத்தம் கொண்டு வருவது முக்கியமானதாக இருந்தாலும், எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அத்திருத்தங்கள் அமைய வேண்டும்.

அது மாத்திரமன்றி தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தாத வகையிலும் அத்திருத்தங்கள் அமைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் வகையிலும், பெரிய கட்சிகளுக்கு சாதகமான நிலைமைகளை வழங்கக் கூடிய தேர்தல் திருத்தங்கள் நாட்டின் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதாக அமையது. இது விடயத்தில் பொதுமக்கள் தமது கருத்துக்களையும், யோசனைகளையும் முன்வைப்பதற்கு அவகாசம் இருப்பதால் உரிய யோசனைகளை அரசாங்கத்துக்கு முன்வைக்க முடியும் என்பதைம் நாம் கவனத்தில் கொள்ளலாம்.

Comments