தேசிய தலைமையொன்றின் நிரப்பப்படாத வெற்றிடம் | தினகரன் வாரமஞ்சரி

தேசிய தலைமையொன்றின் நிரப்பப்படாத வெற்றிடம்

அமரர் அறுமுகன் தொண்டமான் மறைந்து வருடம் ஒன்றாகிவிட்டது. கடந்த 25ஆம் திகதி அவரது முதலாம் ஆண்டு பூர்த்தி நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டது. அவர் விட்டுச்சென்ற இடைவெளி இன்னும் அப்படியே வெறுமையாக உள்ளது. அவர் ஒரு சகாப்தம். அவரின் அரசியல் சமூக தடங்கள் ஸ்திரமானவை. அவரது பிரிவின் பாதிப்பு அவர் தலைமை வகித்த சமூகத்தினால் இன்னும் அழுத்தமாகவே அனுபவிக்கப்படுகிறது.

அவரின் சாதுர்யம், சமயோசிதம், தொலைநோக்கு, விலைபோகா விவேகம் மக்களிடத்து விசுவாம் வலுப்பெறவே செய்தது. அதை ஈடுசெய்ய யாராலும் முடியாது என்பதையே தற்போதைய கள நிலவரங்கள் உளவியல் ரீதியாக உறுதி செய்கின்றன.  

அவரது 1000 ரூபா தினச்சம்பள கனவு இன்று கைகூடியிருப்பது என்னவோ உண்மைதான். எனினும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக அதை அடைவதில் ஏகப்பட்ட இடையூறுகள். கம்பனி தரப்பு காட்டும் கெடுபிடிகள் அமரர் ஆறுமுகன் தொண்டமான் பெரிதும் நம்பியிருந்த கூட்டு ஒப்பந்த முறைமை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. கம்பனி நிர்வாகங்கள் பழையபடி தோட்டத் தொழிலாளர்களை கைப்பொம்மைகளாக்கத் தலைப்பட்டு விட்டன. முறுகல்கள், மோதல்கள், முரண்பாடுகளென தினந்தோறும் பிரச்சினைகளோடுதான் தோட்டத் தொழிலாளர்களின் பொழுதுகள் விடிகின்றன.  

தொழில் ரீதியிலான பிணக்குகள் கூட காவல்துறை வந்து தலையிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டது. இவை எவ்வாறு சரி செய்யப்பட போகின்றன? பதிலைத் தேடும் போதுதான் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இல்லாமை மனதைச் சுடுகிறது. இயலாமை காரணமாக மலையக மக்களின் எதிர்காலம் சூன்யமாகிப் போய்விடுமோ என்னும் அச்சம் உச்சம் தொட்டு நிற்கின்றது. இன்று தொழிற்சங்கத் தரப்பு பலவீனப்பட்டுப் போயுள்ளது. எங்கு பார்த்தாலும் வெறுமையின் காட்சி. அரசியல் நகர்வில் தளம்பல் கோலம்.  

இவைதான் இன்று மலையகத்தில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பேரிழப்பு ஏற்படுத்தியுள்ள சாட்சிகள். தோன்றும்போதே புகழோடும் பெருமையோடும் தோன்றியுள்ள ஒரு வரலாற்று நாயகனின் நினைவேந்தல் தருணத்தில் நிழலாடும் உணர்வுகளின் நிஜங்களை மறுப்பதற்கு இல்லை. தனது பாட்டனார் அமரர் செளமியமுர்த்தி தொண்டமானைப் போலவே அரசியல், தொழிற்சங்கம் இரண்டு துறைகளிலும் பிரகாசித்தார். இவரது தந்தையார் இராமநாதன் மத்திய மாகாண சபையில் அமைச்சராக இருந்தவர். 1993களில் தான் இவர் தொழிற்சங்கப் பிரவேசம் செய்தார். இ.தொ.கா.வின் நிதிச் செயலாளராக பொறுப்பேற்று அதனைச் செவ்வனே நிறைவேற்றினார். 1994ஆம் ஆண்டு இ.தொ.காவின் பொதுச் செயலாளராக பதவியேற்று புடம்போடப்பட்டார்.  

1994 ஆம் ஆண்டு தடம்பதித்த தானைத் தலைவனின் வாழ்வில் முக்கிய நிகழ்வு அரங்கேறியது. அவரது கன்னி அரசியல் பிரவேசம் நடந்தது. அவ்வேளையில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். அன்று தொட்டு அவர் மறையும் வரை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி சாதனை படைத்தார்.  

சுமார் 30 வருடகால அரசியல் நகர்வு மலையக மக்களின் சமூக, அரசியல், பொருளாதார மாற்றத்துக்காக பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளை அவர் இக்காலக்கட்டத்தில் மேற்கொண்டார். தீர்க்கதரிசனமாக முடிவெடுத்து மலையக சமூகத்தின் பேரம் பேசும் சத்தியினை மிகச்சரியாக பயன்படுத்தினார். 2000, 2004, 2010, 2015 என்று இடம்பெற்ற அனைத்து தேர்தல்களிலும் மிக அதிகப்படியான விருப்பு வாக்குகளைப்பெற்று தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.  
ஸ்திரமான அரசியல் கொள்கையாளராக இறுதி மூச்சுவரை செயற்பட்டார். சமகால அரசியல் கள நிலவரங்களையொட்டி அதிரடியான அரசியல் முடிவுகளை எடுப்பதில் வல்லவர். இதனால் விமர்சனங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தபோதும் அவைகளை துணிச்சலாக சிந்தித்து மலையக மக்களின் அபிலாஷைகளுக்கு மட்டுமே முன்னிலை வழங்கினார்.  ஆளுங்கட்சியோடு பங்காளியாகும் இராஜதந்திரத்தை அவர் பின்பற்றினார். இது பாட்டனார் வழியாக வந்த ஒரு வழக்கம்.  

இது பல சாதனைகளைப் படைக்கக்கூடிய வலிமையை அவருக்கு ஏற்படுத்தியது. ஆளும் தரப்போடு அந்நியோன்யம் கொண்டிருந்த போதும் தொழிலாளர்களுக்கு பாதகமான முடிவுகள் எட்டப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக கிளர்ந்தெழ அவர் அஞ்சியதில்லை. 1996 ஆம் ஆண்டு சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது அப்போதைய தொழில் அமைச்சர் தொழிலாளர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். சிறிதும் தயக்கமின்றி அந்த அமைச்சருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாப் பிரேரணயைக் கொண்டு வந்து அசத்தினார்.  

தமக்குக் கிடைத்த அமைச்சுப் பதவிகள் மூலம் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்றினார். 3179 மலையக ஆசிரியர் நியமனங்கள், 500 தபால் சேவை ஊழியர் நியமனங்கள், 200 தொடர்பாடல் உத்தியோகத்தர் பதவிகள் யாவும் அவரது அரசியல் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றிகளாகும். 2003ஆம் ஆண்டு வரை நாடற்றவர் நிலையில் இருந்த சுமார் 3 இலட்சம் மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைக்க வழிசமைத்து வரலாற்றில் இடம்பிடித்தார். மலையக மக்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கு வழிசமைக்கும் வகையில் அவரது சேவை ஆக்கபூர்வமாக பரிணமித்தது. அவரது ஆளுமை அனைவரையும் ஆகர்ஷித்துக் கொண்டது. சர்வதேச ரீதியிலும் பாட்டனாரைப் போலவே இவரும் பாராட்டைப் பெற்றார். இந்தியா போன்ற அயல்நாட்டுத் தலைவர்களால் மதிக்கப்படுபவராக வாழ்ந்தார். சகலரோடும் நல்லுறவைப் பேணுவதில் நாட்டம் கொண்டிருந்தார். இதனால் மலையகத்தில் மட்டுமின்றி வட கிழக்கிலும் தென்னிலங்கையிலும் கூட அவரது அரசியல் தீர்மானங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. அவர் சகல இன சமூகங்களோடும் சகோதரத்தை வளர்த்ததனால் அனைவரதும் அன்பினையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ள முடிந்தது. இதன் காரணமாகவே அவரைத் தேசிய தலைவராக அங்கீகரித்து கெளரவப்படுத்தியது அரசாங்கம். தனது இறப்பின் மூலமும் பிறப்பின் சிறப்பை பறைசாற்றும் பேறுபெற்றவர் அவர். இதனாலேயே அவரது பிரசன்னம் இல்லாத மலையக களமானது. பலமானதாக தெரியவில்லை. அப்பழுக்கற்ற சேவையால் அவர் மக்கள் மனங்களை வெல்லக்கூடியவராக விளங்கினார்.  

அரசியல் ரீதியில் கிடைத்த சறுக்கல்களை எல்லாம் அனுபவப் பாடங்களாக ஆக்கிக் கொண்ட ஆசான் அவர். ஆற்றல், துணிச்சல்மிக்கவர். இதுவே நல்லதொரு தலைவன் பெறக்கூடிய அந்தஸ்து. இதன் காரணமாகவே அவரின் இழப்புச் செய்தி முழுநாட்டையும் துக்கத்தில் மூழ்கடித்தது. மலையகத்தின் எதிர்காலம் இனி எப்படிஅமையப் போகின்றது என்ற புதிர் தோன்றலானது. அக்கினியோடு அவர் தேகம் அழிந்து கொண்டிருந்த அதேநேரம் எமக்கினி யார் துணை என்ற ஏக்கத்தோடு மலையக மக்களின் மனங்கள் அழுது கொண்டிருந்தன.  

அவர் விட்டுச்சென்ற தடங்கள் அப்படியே அமுங்கிப் போகக்கூடாது. அதுதான் அவருக்கு சமூகம் செலுத்தும் நன்றிக் கடன். அவை மீளவும் உயிர்பிக்கப்பட வேண்டும். அதற்கான தேவை இருக்கவே செய்கின்றது. ஒரு சரித்திர நாயகனின் சாதனை சம்பவங்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட மட்டுமல்ல, பவித்திரமாக பேணப்படுதோடு தொடர் பயணத்துக்கான போதனைகளாக போற்றப்பட வேண்டியவை. பின்பற்றப்பட்டக் கூடியவை. இந்த மன உறுதிப்பாடே அவருக்கான நினைவேந்தலாக இருக்கமுடியும்.    

பன். பாலா  
 

Comments