தீய்ஞ்ச சோறு | தினகரன் வாரமஞ்சரி

தீய்ஞ்ச சோறு

மைமூனாவுக்கு எல்லாமாக நான்கு பிள்ளைகள். மூத்த இருவரும் ஆண்கள். மூத்தவன் முபீன் நெயினாகுடிக்கு சில கிலோமீட்டர்கள் அப்பாலுள்ள நகர அரச காரியாலயமொன்றில் மத்திய தர உத்தியோகமொன்றை வகிப்பவன். மற்றவன்; மலைநாட்டு நகரமொன்றில் சிறியளவிலான புடவைக் கடையொன்றுக்குச் சொந்தக்காரன். ஏனைய பெண்கள் இருவரும் உள்;ரிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியைகளாக பணியாற்றுபவர்கள்.

அறைக்குள் ஆள் அரவங்கள் கேட்டதால் ஊஞ்சலிலிருந்தும் எழுந்து சென்று காலைத் தேநீருக்காக கேத்தலில் நீர் மொண்டு அடுப்பை எரியவிட்டாள்.

“உம்மா   அவரு நேரத்தோட வேலைக்குப் போகணுமாம். ஓடிட் நடக்குதாம். தேத்தண்ணி ஊத்திட்டியாம்மா?; ஊத்துனா தா கொண்டு போய்க் கொடுக்கன்.”

“இப்பதாத்தான்டி தண்ணியைக் கொதிக்கவைக்கன். கொஞ்சம் பொறுத்துக்க இதோ ஊத்தித் தத்துடறேன்.”
இஸ்மாலியா முகத்தில் கோபம் காட்டினாள்.

“இவ்வளவு நேரமும் என்ன செய்துகொண்டிருந்த நீ? புருசளை நினைச்சி  அழுதுகொண்டிருந்தியாக்கும்.”
மைமூனா மகளை உற்றுப் பார்த்தாள். மகள் தொடர்பான வெறுப்பு பாசியாக மனதில் படர்ந்தது.

“என் புருசனை நான் நினைச்சா உனக்கென்னடி நட்டம்?”

“நட்டம்தான். இதப் பாரு அவருக்கு நேரத்துக்கு தேத்தண்ணி கொடுக்கல்ல. காலைச்சாப்பாட்டுக்கு இன்னமும் ஏற்பாடு பண்ணல்ல. எனக்கும் கொஞ்ச நேரத்தோட ஸ்கூலுக்குப் போகணும்.

இனஸ்பெக்சனுக்கு யாரோ வாறதாம். வாப்பா மவுத்தாகி மூணு வருசம் முடியப்போகுது. அவர நினைச்சி நினைச்சி நீ இன்னும் அழுதுகொண்டிருக்கீயே. நீ அழுதா அவரு திரும்பி வரப் போறாரா என்ன? போட்டுட்டு வேலையைப் பாரும்மா.”

“சரிசரி. இந்தா. தேத்தண்ணியைக் கொண்டு போய் உன் மாப்பிள்ளைக்குக் கொடுத்துட்டு  நீ கொஞ்சம் இஞ்ச வா. ஒன்னோட கதைக்கோணும்.”

“இப்பதான் கதைக்கோணுமா? ஸ்கூலுக்குப்போயிட்டு வந்து பின்னேரமா ஆறுதலா கதைக்கலாமே.”

“இல்லல்ல. இப்பதான் கதைக்கோணும். நீ ஸ்கூலுக்குப் போனதுக்கப்புறம் உன்ட மூத்த நாநாவை இஞ்ச கூப்பிட்டு அவனோடயும் கதைக்கணும்.”

“சரி. வாறன்.”

சில நிமிடங்களில் தோளில் சாய்ந்திருந்த கைக்குழந்தையுடன் அவள் சமையலறைக்குள் வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து மார்புச் சேலையை நீவி பால் பருக்கத் தொடங்கினாள்.

“ஏன்டி மன நேத்து பின்னேரம் நான் சொன்ன விசயத்தை ராவு அவரோட கதைச்சியா?” துருவியில் தேங்காயைத் துருவியவாறு மகளைப் பார்த்து மைமூனா கேட்டாள்.

“ஓ.ஓ. கதைச்சன்.”

“என்ன சொன்னாரு?”

“அவரு சொன்னதை எல்லாம் உனக்கிட்ட சொன்னா உனக்கு விசருதான் புடிக்கும்.”

“அப்படி என்னதான்டீ சொன்னாரு?”

“வாப்பாட பேரிலே ஆண்டுக் கத்தம் ஓதி சொந்தக்காரங்களை அழைத்து விருந்து கொடுக்கிறதெல்லாம் இப்ப வழக்கமில்லியாம். அதெல்லாம் வழக்கொழிஞ்சு போன கலாச்சாரமாம். விலைவாசிகளெல்லாம் எகிறி இருக்கிற இந்த நேரத்திலே இதெல்லாம் தேவைதானா எனக் கேட்டாரு.”

“அதுக்கு நீ என்ன சொன்னாய்?”

“நான் என்னத்தைச் சொல்ற. அவருக்கு ஒத்து ஊதினேன்.”

மகளையும் மருமகனையும் அவளுடைய உள் மனம் வெறுத்தது. முற்றிய சீனி நோய் காரணமாக காலொன்று கழற்றப்பட்டு சில மாதங்கள் பாயோடு படுத்திருந்த அவளது கணவர் மூன்று வருடங்களுக்கு முன்னரான ஒரு  காலைப் பொழுதில் இறைவனடி சேர்ந்து விட்டார். அவளை ஆறாத் துயரில் தவிக்க விட்டுவிட்டு அவர் நீங்கிச் சென்ற ஆண்டு நிறைவு இன்னும் சில நாட்களில் வரவுள்ளது. அன்றைய தினம் குடும்பத்திலுள்ள அங்கத்தவர்களையெல்லாம் ஒரு சேர அழைத்து  ஒன்றிணைந்து அவரது மறுமையின் நல் வாழ்வுக்காக எல்லாம் வல்லவனிடம் கையேந்திப் பிரார்த்திக்க வேண்டுமென்பது அவளது கோரிக்கை. அந்த நிகழ்வை அந்த வீட்டில் செயற்படுத்துவது பற்றி  மருமகனிடம் கதைக்குமாறு மகளிடம் கூறியிருந்தாள்.
இஸ்மாலியாவின் உப்புச்சப்பற்ற பதில் மைமூனாவை சடுதியாக கோபமடைய வைத்தது.

“ஓஹோ! அப்படி விசயத்தை உடைச்சிச் சொல்லேன். இதப் பாருடி நான் ஒன்றும் உன்னையோ உன்ட புருசனையோ நான் பெத்த மத்தப் பிள்ளைகளையோ இதுக்காக ஒரு சதம்தானும் செலவழிக்கச் சொல்லல்ல. அவருட கண்ணுக்குப் புறகு நீங்க இப்படியெல்லாம் சொல்வீங்க என்டு அவரு அப்பவே எனக்கிட்டச் சொல்லியிருக்காரு. ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு பயன் படுத்துவதற்காக ஒரு தொகைப் பணத்தை பேங்கிலே என் பேரிலே சேமிப்பிலே போட்டு வைச்சிருக்காரு. அந்தப் பணத்திலே கொஞ்சத்தை எடுத்து அவருக்கு ஹத்தம் ஓத நான் செலவழிப்பேன். நீங்க ஒரு துட்டும் தரத் தேவல்ல. ஏன்டீ  போன வருசமும் அதுக்கு முதல் வருசமும் நான்தானேடி செலவழிச்ச. மறந்திட்டியா?” “உம்மா  நீ செலவழிக்கிறதென்டா எங்களுக்கு ஒரு ஆட்சேபமும் இல்ல” கூறியவாறு செயற்கையான சிரிப்பை முகத்தில் வரவைத்தாள்.
***

அன்று பிற்பகல் வேளையில் இன்னுமோர் உரையாடல் மைமூனாவின் இல்லத்தில் இடம்பெற்றது. அவளது மூத்த மகன் முபீன் மூத்த மகள் மூசினா  இஸ்மாலியா ஆகியோர் வாசலில் கிளைகளும் இலைகளுமாகப் படர்ந்து நின்ற மா மரமொன்றின் கீழ் விரித்திருந்த பாய்களில் உட்கார்ந்திருந்தவாறு தாயுடன் உரையாடிக்கொண்டிருந்தனர்.

“ஏன்டீ மன குழந்தம்மாவைச் சொல்லிட்டீயா?” இஸ்மாலியாவைப் பார்த்து மைமூனா கேடடாள்.

“சொல்லியனுப்பிட்டன். இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்திடுவா.”

குழந்தம்மா நெய்னாகுடியில் பிரபலமான சமையற்காரி. ஐம்பதறுவது பேருக்கு சமைப்பதென்றால் பொதுவாக அழைப்பது இவளைத்தான். பல வருடங்களுக்கு முன்னர் சவுதியிலுள்ள பணக்காரரொருவரின் வீட்டில் ஆஸ்தான சமையற்காரியாக வேலை பார்த்துவிட்டு உழைத்த பணத்தையெல்லாம் கொண்டு நெய்னாகுடியில் பெரிய அளவிலதான இரண்டு மாடி வீடுகள் கட்டி இரண்டு மகள்களையும் திருமணபந்தத்தில் இணைத்துவிட்டு புருசனுடன் தனியாக வாழ்ந்துகொண்டிருக்கிறாள். தம் பிரியாணி பால் பிரியாணி தலப்பாக்கட்டு பிரியாணி ஹைதராபாத் பிரியாணி கல்கத்தா பிரியாணி பொம்பே பிரியாணி திண்டுக்கல் பிரியாணி சிந்தி பிரியாணி  பாய் பிரியாணி மூங்கிக்குழல் பிரியாணி என நானாவித பிரியாணிகள் சமைப்பதில் ஊரிலும் அண்டை வட்டாரங்களிலும் ஒப்பற்றவளாகத் திகழ்ந்தாள்.
 
“அப்போ அவ வாரதுக்கு முன்னாடி நாம லிஸ்ட்டைப் போட்டு முடிச்சிரணும். அப்பத்தான் எத்தனை பேருக்கு சமைக்கணும்ன சரியான எண்ணிக்கையை அவக்கிட்ட சொல்லிரலாம்.” என்றாள் மூசினா.

பட்டியலைத் தயாரிப்பதற்கு பேனையும் தாளுமாக இஸ்மாலியா தயாராக இருந்தாள்.

“சொல்லும்மா. ஆராரைக் கூப்பிடணும்.”

“முதல்ல என் வயிற்றிலே புறந்த நீங்க நாலுபேரும் உங்கட பொஞ்சாதி புருசன்மாரும்  என்ட எட்டு பேரப்புள்ளைகளும். எல்லாமாக பதினாறு பேரு.”

“உம்மா. தம்பி வரமாட்டானாம். அவன்ட பேரைச் சேர்க்காதீங்க.” என்றான் முபீன்.

“ஏன் அவனுக்கென்ன கோதாரி? வாப்பாவுக்காக நடக்கிற நிகழ்ச்சியிலே முதலாளி கலந்துகொள்ளமாட்டாகளோ?”

“இல்லம்மா. வாப்பாட ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வருது. அன்றைக்கு அவன் கடை வைச்சிருக்கிற டவுணிலே பொல. எக்கச்சக்கமா யாபாரம் நடக்குற நாளாம்;. யாபாரத்தை உட்டுட்டு ஒரு நேர சோத்துக்காக அவன் வரப்போறானா என்ன?”

“நீ அவனோட கதைச்சியா?”

“டெலிபோன்ல கதைச்சேன்மா. வர ஏலான்டு சொல்லிட்டான்.”
மைமூனாவுக்கு நெஞ்சினுள் கூரானதொரு முள் இடறி தைத்தது.

“பரவால்ல. அப்புறம் வேற யாரைக் கூப்பிடுற?”

“நீதான் சொல்லும்மா.”

“உங்க நாலு பேருட புருசன் பொண்டாட்டிமாருட பெற்றோரை கூப்பிடுங்க.”

“அப்புறம்?”

“என்ட நானா தங்கச்சிமார் அவங்கட புருசன் பொண்டாட்டி புள்ளைகள் என்று எல்லாமா ஒரு பதினைஞ்சி பேரை எழுது. அத்தோட உங்க வாப்பாட வழியிலே அவருட ராத்தாமாரு  தங்கச்சிமாரு நானா தம்பிமாரென்றும் அவங்கட பொஞ்சாதி புருசன்மாரென்றும் சரியான கணக்கைப் போட்டு லிஸ்ட எழுது.”
இஸ்மாலியா விரல்களை நொடித்து மனதில் கணக்கிட்டாள்.

“எல்லாமா இருபது பேரும்மா.”

“பரவால்ல. எழுது. இப்ப மொத்தமா கூட்டிச் சொல்லு.”

“எல்லாமா அம்பத்தெட்டுப் பேர் வாறாங்க.”

“ஒரு எழுபது பேருக்கு சமைப்பம். கூடக்குறைய வந்தா பார்த்துக்கலாம்.”

“ஏன்மா? உன்ட கூட்டாளி பார்வதியைக் கூப்பிடறல்லியா?” இஸ்மாலியா கேட்டாள்.

“அவயையும் அவட புருசனையும் போடு.”

“இப்போ எத்தனை பேரு?”

“எல்லாமா அறுபத்தொன்று.”
முன் கேட்டைத் திறந்தவாறு குழந்தம்மா தனது சற்றுப் பாரமான சரீரத்தை அசைத்து நடந்து வருவது தெரிந்தது.

“வா புள்ள. அப்படி பாயிலே இரு.”
கணவன் காலஞ்சென்ற மூன்றாம் ஆண்டு  நிறைவாக அவருக்காக  பிரார்த்தனை செய்வதற்கும் அழைக்கப்படுபவர்களுக்கு விருந்து பரிமாறவுள்ளதுமான தீர்மானத்தை மைமூனா விலாவாரியாக குழந்தம்மாவிடம் கூறினாள்.

“நல்ல விசயம்தான். பொதுவாக நம்முட ஊரிலே இப்ப இதுவெல்லாம் செய்கிறாக இல்ல. இருந்தாலும் நீங்க உங்கட புருசனாரோட கொண்டிருந்த அன்பு  பாசம் இந்த ஊருக்கெல்லாம் தெரியும். ஒரு காலைக் கழற்றியதற்குப் பின்னாலே அவரு படுத்த படுக்கையா இருந்த அந்த அஞ்சாறு மாசமும் ஒரு கைக்குழந்தையைக் கவனிக்கிறாப்ல எவ்வளவு பாசமா நீங்க அவரைக் கவனிச்சீங்க. அதற்குரிய பலனை அல்லா உங்களுக்குத் தருவான். அதுசரி. விருந்துக்கு என்ன கொடுக்கிறதா உத்தேசம்?” குழந்தம்மா கூறிவிட்டு மைமூனாவையும் இஸ்மாலியாவையும் ஒருங்கு சேரப் பார்த்தாள்.

“உம்மாக்கு விருப்பம் பிரியாணிச் சோறு கொடுக்கவேண்டுமென்பதுதான். ஏனென்றா வாப்பா மெயின் றோட்டிலே ஹோட்டல் நடத்துறப்போ அந்த ஹோட்டல்லே பேமஸ் சாப்பாடு பிரியாணியும் ஆட்டுக்கால் சூப்பும்தான்.” என்றாள் மூசினா.

“அதென்டா மெய்தான். உங்க வாப்பாட ஹோட்டல் மட்டன் பிரியாணியைத் தின்னாத ஆக்கள் நம்முட நெய்னாகுடியிலேயும் அக்கம் பக்கத்து ஊர்களிலேயும் யாராவது இருக்காகளா? என்ன பிரியாணி சமைப்பம்?”

“தம் பிரியாணி. குழந்த ராத்தா அத சமைக்கிறதிலே ரொம்ப பேமசாமே!” என்றான் முபீன்.

“இறைச்சி?”

“ஆட்டிறைச்சி.”

“கனக்க காசி போகுமே?”

“காசைப் பத்தி யோசிக்காதீங்க. அதெல்லாம் பார்த்துக்கலாம்.” தாய் மைமூனாவைக் கண்ணோடியவாறே இஸ்மாலியா கூறினாள்.

“ஆக்கள் எத்தனை பேரென்று லிஸ்ட் போட்டுட்டீங்;களா?”

“ஏன்டீ மன அல்லசல்காரங்களை அதிலே சேர்த்தியா?”

“இல்லம்மா.”

“அவங்கள்ளேயும் ஆறேழு பேரைப் போடு.”

“எல்லாமா எழுபத்திரெண்டு வருது குழந்த ராத்தா”

தம் பிரியாணிக்கான ஆட்டிறைச்சி  பொரித்து பாலாண்டி செய்வதற்காக கோழி இறைச்சி கீரிச் சம்பா அரிசி மரக்கறி ஏனைய மளிகைச்சாமான்கள் என வாங்க வேண்டியவைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

“இதப் பாருங்க  ஒங்கட சாப்பாட்டுக்கு இன்னும் மூணு நாள்தான் கிடக்கு. ஞாயற்றுக்கிழமை காலையிலே துணைக்கு ஒருத்தியையும் கூட்டிக்கொண்டு நான் இங்க வந்துடுவன். பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம் உள்ளி என எல்லாத்தையும் உரிச்சி இஞ்சியையும் தோல் சுரண்டி விடியிறதுக்கிடையிலே தயாரா வைச்சிடணும். என்ன செய்து வைப்பீங்களா?”

“ஓமோம். அன்றிராவு எங்களுக்கு வேற என்ன வேலை? ஜோரா செய்து வைச்சிடுவோம்” உம்மாவிலும் ராத்தாவிலும் கண்ணோடியவாறு இஸ்மாலியா கூறினாள்.

“என்ட கூலியைப் பேசிக்கொள்ளல்லியே?”

அவர்கள் பேசிக்கொண்டதும் திருப்தியுற்றவளாக குழந்தம்மா நீங்கினாள்.
மூசினாவும் அவளது வீட்டுக்குப்போவதற்காக எழுந்து நடந்தாள். இஸ்மாலியா அவளை வாயிற்கதவு வரை பின்தொடர்ந்தாள்.

அன்றிரவு நீண்ட நேரம் மைமூனா நித்திரையில்லாமல் புரண்டாள். காலஞ்சென்ற அவளது கணவனின் நினைவு தொடர்ச்சியாக தட்டாமாலை சுற்றியது. நாற்பது வருடங்களுக்கு மேற்பட்ட காலம் அவருடன் இணைந்து வாழ்ந்த வசந்த வாழ்வு வண்ணவண்ணக் கோலங்களை மனதில் போட்டவாறிருந்தது. இறுதியாக கண் மூடுவதற்கு இரண்டொரு மாதங்களுக்கு முன்னரான ஒரு நாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவளுடைய மடியில் தலை வைத்துப் படுத்திருந்தவாறு அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மேகங்களாக ஊர்ந்தன.

“புள்ள என் உடல் நிலைமை எனக்கு நல்லாவே புரியுது. இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி உன்னோட அன்னியோன்யமா நான் குடும்பம் நடத்துவேனோ தெரியாது.
அதனாலே”

“அதனாலே”

“என் சேமிப்புக் கணக்கில கொஞ்சம் பணம் வைச்சிருக்கேன். பேங்குக்குப் போய் அதை எடுத்து உன் பேரிலே ஒரு அக்கவுண்டைத் திறந்து அதிலே போட்டுவைக்கேன். நான் பணம் போட்டு வைப்பது பிள்ளைகள் யாருக்கும் தெரியக்கூடாது.”

“ஏன் அப்படிச் சொல்றீக?”

“தெரிஞ்சா உனக்கிட்ட பணம் இருக்குதானே உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கொள்வாய் என்று கவனிக்காம விட்டுடுவாங்க.”

“நம்மட புள்ளைகள் அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க. நீங்க ஒன்றும் யோசிக்க வாணா.”

“நீ அப்பாவியா அப்படியே எண்ணிக்கொண்டிரு. நம்ம புள்ளைகள் மட்டுமில்ல அரசன்ட புள்ளைகளென்றாலும் நான் சொல்றாப்போலத்தான் நடந்துக்குவாங்க. உன் கணக்கில போடப்போற காசை ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு மட்டும் பயன்படுத்திக்க. சேமிப்புப் புத்தகத்தை வைக்கிற இடத்தைக் கூட யாரிட்டயும் சொல்லாத. ஒரு வேளை இந்த விசயம் தெரிஞ்சி போய் அவங்க யாரும் கடனா கேட்டா கூட கொடுக்காத.”
அவர் ஆரூடமாகக் கூறியதெல்லாமே நிஜ

வாழ்க்கையில் அடிக்கடி நடந்துகொண்டிருப்பது சரசரவென அவளது மனதில் தைத்து மறைந்தன.

***

சனிக்கிழமை இரவு. இரவுணவு முடிந்து எச்சில் பாத்திரங்களையெல்லாம் மைமூனா கழுவித் துடைத்து அடுக்கி வைத்தாள். குளியலறைக்குள் சென்று கால் முகம் கழுவி உடுப்பு மாற்றினாள்.

“ஏன்டி மன வாறியா இந்த வெங்காயம் உள்ளியெல்லாத்தையும் உரிக்கத் தொடங்குவம்” என்றாள் இளைய மகளைப் பார்த்து.

“ஓம்மா. தொடங்குவம். எதுக்கும் முதல்லே புள்ளைக்கு பால் கொடுத்து நித்திரையாக்கிட்டு வாறன். நீ சின்ன வெங்காயங்களை தண்ணிக்குள்ளே போட்டுட்டு பெரிசிகளை உரிக்கத் தொடங்கு.”

ஒரு தொகை பெரிய வெங்காயம் பூடு நீரினுள் அமிழ்ந்து கிடந்த சிறிய வெங்காயங்கள் ஆகியவை தோலுரிக்கப்பட்டு முடிவடைந்து எதிரே தட்டொன்றினுள் கிடந்த இஞ்சி முழுவதையும் தோல் சுரண்டி முடித்து எடுத்ததும் மைமூனா அண்ணாந்து சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். நள்ளிரவு இரண்டரை காட்டியது. இந்த வேலைகளைச் செய்வதற்காக முதல் நாள் பிற்பகல் வருவதாகக் கூறிச்சென்ற மூசினாவும் வரவில்லை. குழந்தையை நித்திரையாக்கிவிட்டு வருவதாகச் சொல்லிய இளையவளும் பங்கெடுக்கவில்லை.

அடுத்த நாள் விடிவதற்கு முன்னர் சந்து களையப்பட்ட ஆட்டிறைச்சியையும் துண்டுகளாக்கப்பட்டிருந்த கோழி இறைச்சியையும் யாராரோ கொண்டு வந்து விநியோகித்துவிட்டுச் சென்றனர். பொலபொலவென விடியும் வேளையில் குழந்தம்மா துணைக்கு ஒரு பெண்ணையும் அழைத்துக்கொண்டு ஆஜரானாள். இஸ்மாலியா ஊஞ்சலில் ஆடியவாறே குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

“வெங்காயம் உள்ளியெல்லாம் உரிச்சி வைச்சிட்டீங்களா?”

“ஆமாமா. நீங்க சொன்ன எல்லா வேலைகளையும் செய்து வைச்சிட்டம்” என்றாள் முந்திரிக்கொட்டையாக இஸ்மாலியா.

“நீங்க ராத்தா தங்கச்சிமார்தான் செய்தீங்களோ இல்லே சொந்தக்காரங்க யாராவது வந்து நின்று செய்து தந்தாங்களோ?”

“ஆமாமா. நாங்க எல்லாரும்தான் செய்தோம்.”

மைமூனா பார்வையில் அதீத வெறுப்பை உட்புகுத்தி இளைய மகளின்; மீது கண்ணோடினாள்.

“பீங்கான் பாத்திரங்களெல்லாம் கழுவி எனக்குத் தேவையான சாமான்களை எடுத்துத் தாரதுக்கு நீங்க யாராவது ஒருத்தர் என்னோட கூடமாட நிக்கணும். யாரு நிப்பா?”

“நீங்க கவலைப்படாதீங்க. நாங்க ஆள் மாறி ஆள் நிப்பம்.”

“அப்போ நான் இறைச்சியை அரியத் தொடங்குறேன். நீ தேங்காயைத் துருவத் தொடங்கு” என்றாள் குழந்தம்மா தான் கூட்டிவந்திருந்த பெண்ணைப் பார்த்து.
வீட்டின் பின்பக்கக் கோடியில் எல்லைச் சுவரோடு சேர்த்து கம்பங்களை நட்டி தகடுகள் விரிக்கப்பட்டிருந்த கொட்டகையொன்றினுள் விறகடுப்புகளில் சமையல் வேலைகள் இடம்பெற்றன. குழந்தம்மாவுக்கு உதவியாக தொடர்ந்தும் மைமூனா செயற்பட்டாள். உணவுண்ணும் பாத்திரங்களைக் கழுவுவதற்காக இஸ்மாலியாவோ மூசினாவோ அந்தப் பக்கம் எட்டித்தானும் பார்க்கவில்லை. முந்தானையை உயர்த்தி இழுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு நீர்க்குழாயருகில் குந்தியவாறு ஒவ்வொரு பாத்திரமாக அவள் கழுவிக்கொண்டிருந்தாள்.

மதிய நேரமானபோது விருந்துக்காக அழைக்கப்பட்டவர்களில் பெண்கள்; ஒவ்வொருவராக  வரத் தொடங்கினர். படுக்கை அறைகளுக்குள் விரித்திருந்த கற்பன் பாய்களில் அமர்ந்தனர். குழந்தம்மா தயாரித்துக்கொடுத்திருந்த வரவேற்புப் பானத்தை அருந்தினர். ளுஹர் தொழுகை முடிந்த கையுடன் ஆண்கள் வந்தனர். மண்டபத்தினுள் அமர்ந்தனர். பள்ளிவாசல் இமாம் முஅத்தினார் சகிதமாக வந்தார். அழைக்கப்பட்ட எல்லோருமே வந்துவிட்டதால் புனித குர்ஆனிலிருந்து அத்தியாயமொன்றை ஓதத் தொடங்கினர். ஓதல் முடிவுற்றதும் எல்லோரும் காலஞ்சென்றவருக்காக இரு கைகளையும் ஏந்தி  நீண்ட நேரம் பிரார்த்தித்தனர்.

சமையலறைக்குள் கிடந்த சிறிய மரக்குற்றியொன்றில் குந்தியிருந்தவாறு மைமூனா தனது நினைவில் நித்திய ஜோதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் கணவனுக்காக கன்னங்களில் நீர் வடிய அழுதழுது பிரார்த்தித்தாள்.

பிரார்த்தனை முடிவுற்றதும் முதலில் சிறுவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. தொடர்ந்து ஆண்களுக்கு. உணவுண்ட ஆண்கள் கலைந்து சென்றதும்  கழுவுவதற்காகக் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்ட  எச்சில் பாத்திரங்களை எல்லாம் உடலெல்லாம் வடிந்த வேர்வையுடன் நின்ற மைமூனா  சவர்க்காரம் இட்டு மூச்சு வாங்க கழுவிக் கொடுத்தாள். கழுவுவதைத் தொடர்ந்தாள்.

அதுவரை அறைகளுக்குள்ளிருந்த பெண்களை மண்டபத்தினுள் அழைப்பித்து உணவு பரிமாறத் தொடங்கினர்.

“இஸ்மாலியா எல்லோரும் இருக்காங்க. உன்ட உம்மாவைக் காணல்லியே. அவயையும் கூப்பிடு” என்றாள் தனக்குப் பக்கத்தில் நின்ற இஸ்மாலியாவைப் பார்த்து மெதுவான குரலில் பார்வதி.

“அவ கோடியிலே வேலையிலே நிக்கா. தேவையானவற்றைப் பரிமாற குசினிக்குள்ளேயும் ஒருவராவது நிக்கணுமே. அப்பதானே சாப்பிடும்போது ஏதும் தேவைப்பட்டா எடுத்துத் தர முடியும். அவ நிக்கட்டும். நாம சாப்பிடுவம்.”
ஆளுக்காள் மெதுமெதுவாக கதைத்தவாறு குழந்தம்மாவின் சமையல் ருசியைப் புகழ்ந்தவாறு பெண்கள் உணவுண்டனர்.

பேசன்களினுள் வைக்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்களில் குறைவேற்பட்டதும் மேலதிகமாகக் கொண்டு வருமாறு மைமூனாவை விளித்து பல கட்டளைகள் அடிக்கடி பறந்தன.

பெண்களெல்லாம் உணவுண்டு முடித்தனர்.

இஸ்மாலியா வேகவேகமாக சமையறைக்குள் வந்தாள். அகன்ற சோற்றுப் பானைக்குள் அகப்பையை விட்டு எஞ்சிக் கிடந்தவற்றில் கணிசமானதை அள்ளி தான் கொண்டுவந்த ஷொப்பிங் பையினுள் வைத்தாள். சட்டியொன்றைத் திறந்து கறி அள்ளி அதன் மீது கொட்டினாள். “உம்மா  கோழிப்பொரியல் ரெண்டொரு துண்டு இல்லியா?” தாயிடம் கேட்டாள்.

“ஒரு துண்டும் இல்லடி. எல்லாம் முடிஞ்சு போச்சு.”

“நீ என்ன ஆள்ம்மா. ரெண்டொரு துண்டுகளை வைச்சிக்கொள்ளுறதில்லையா?”

“நீ எதுக்குக் கேக்கே?”

“என்ட மாப்பிளைட தங்கச்சிமாரு அவருட உம்மாட ஊட்ட வந்து நிக்காங்களாம். அவங்களுக்கு சாப்பாடு அனுப்பட்டாம்.”

“அப்படியா?”

சிறிது நேரத்தில் மூத்தவன் முபீன் வந்தான்;. இளையவள் செய்த அதே செயற்பாட்டைச் செய்தான்.

“நீ எதுக்குச் சோறு எடுக்கிறே?”

“என் பொஞ்சாதிர தம்பியை நாம அழைக்கல்ல. அவனுக்கு சாப்பாடு கொண்டு போகணும்.”

“அப்படியா? எடுத்துக்கொண்டு போ.”

உறவினர் இரண்டொருவரைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் ஏகிவிட்டிருந்தனர்.
மைமூனாவுக்கு ஏகமாகப் பசித்தது. குடல் முறுகி அழுத சத்தம் வெளியே கேட்டது.
பாத்திரமொன்றை இடது கையிலேந்தியவாறு சோற்றுப் பானைக்குள் அகப்பையை விட்டாள். இறுக்கமாக அடிப்பிடித்து ஒட்டிக்கிடந்த தீய்ந்து கரியான கொஞ்சம் சோற்றை பலம்கொண்ட மட்டும் அகப்பையால் வழித்தாள். அதை பீங்கானுக்குள் போட்டு கறிச் சட்டியொன்றினுள் மண்டியாகக் கிடந்த குழம்பில் வழித்து எடுத்ததை சோற்றின் மீது ஊற்றி குற்றியில் குந்தியிருந்து பிசைந்து ஒரு பிடியை வாயினுள் வைத்தாள். வாய் முழுதும் கரி பிடித்த சோறு கசந்தது.

தனது கணவனின் பெயரால் குடும்பத்திலுள்ள சகல அங்கத்தவர்களும் வயிறார உணவுண்டு நிறைவாகச் சென்றதை நினைக்கும்போது அவளின் மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அவர்களில் யாராவது ஒருவர்தானும்   தான் சாப்பிட்டதா எனக் கூட வினவவில்லையே என்ற எண்ணம் அவளது ஆழ் மனதில் எங்கோவொரு மூலையில் சடுதியாக மேலெழ.

பற்களால் அரைக்கப்பட்டு உமிழ்நீருடன் கலந்த தீய்ந்த சோறு கடுங்கசப்பு ருசியுடன்; தொண்டைக்குள்ளால் இறங்கும்போது முகம் அருவருப்பைக் காட்ட கண்கள் நீர்த்துளிகளை உதிர்த்தன.

ஜுனைதா ஷெரீப்
 

Comments