மக்கள் கவனம் சிதறக் கூடாது | தினகரன் வாரமஞ்சரி

மக்கள் கவனம் சிதறக் கூடாது

கடந்த மூன்று வாரங்களாக முழு இலங்கையிலும் கடைபிடிக்கப்பட்டு வந்த பயணக் கட்டுப்பாடு என்று அழைக்கப்பட்ட ஒரு வகையான ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. மக்களினதும் அதிகாரிகளினதும் கவனச் சிதறலினால் ஏற்பட்டதே மூன்றாவது கொரோனா அலை என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இப்போது நாம் முன் உள்ள முக்கிய விஷயம், மூன்றாவது அலையோடு முடக்கத்தை நிறுத்திக் கொண்டு வழமையான செயற்பாட்டுக்கு நாட்டை இட்டுச் செல்லப் போகிறோமா அல்லது நான்காவது முழு முடக்கத்தை நோக்கி நாட்டை நகர்த்தப் போகிறோமா என்பதேயாகும்.  

இந்த முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் சுமார் ஒரு வாரம் மட்டுமே பயணக் கட்டுப்பாடு எதிர்பார்க்கப்பட்ட அளவில் இருந்தது. பின்னர் நகரங்களில், குறிப்பாகக் கொழும்பில், வழமைபோல வாகன நெரிசல் ஏற்படத் தொடங்கியது. அதாவது, பஸ், ரயில் மூலமாக போக்குவரத்தைப் பயன்படுத்தியவர்கள் மட்டுமே வீடுகளில் இருக்க, சொந்த வாகனம் வைத்திருப்போர். ஏறக்குறைய, அனைவருமே ஏதேதோ காரணங்களைக் கூறிக்கொண்டு வெளியே சுற்றத் தொடங்கினர். தனிமைப்படுத்தல் மற்றும் முடக்கத்தை மீறுவோர் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும், நகருக்குள் வரும் வாகன எண்ணிக்கையை குறைப்பதற்கு பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்பட்ட போதிலும் தோல்வியடைந்தது பொலிசாரே! ஊரடங்கு அல்லது பயணத்தடை என்ற சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்படாது ‘கட்டுப்பாடு’ என்ற சொல் உபயோகிக்கப்பட்டதும் இதற்கான காரணமாக இருக்கலாம். 

இம் மாத இறுதிவரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டு உறுதியாக அது நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலமே தொற்றை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்ற சுகாதாரத்துறையினரின் கடுமையான அழுத்தத்தையும் அடுத்தே நாட்டை வழமைக்கு கொண்டுவரும் தீர்மானம் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதாக அறிகிறோம்.  
நாட்டின் மீதான பக்தி, விசுவாசம் என்பது தேசிய கீதத்துக்கும் தேசிய கொடிக்கும் தலைவணங்குவதோடு நின்று விடுவதாக நம்மில் பலர் கருதுகின்றனர். நாட்டின் பொருளாதார அபிவிருத்திற்கு பங்கம் விளைவிக்காது இருப்பதும், கடுமையாக உழைப்பதுமே உண்மையான தேசபக்தி என்பதை பலரும் உணர்வதில்லை. தேச பக்தியை ஒரு பக்கம் வைத்துவிட்டுப் பார்த்தாலும் கூட, பெருந்தொற்றின் நான்காவது அலை நாட்டில் கிளர்ந்தெழுவதை தடுத்து நிறுத்துவதை மனதில் இருத்தி செயல்படுவதும் கூட தேசபக்திதான். 

நாட்டைத் திறந்து விடுவது என்பது, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கு திரும்பிச் செல்வது என்பது பொருள் அல்ல. பயணத்தடைக் காலத்தில் தெருக்களில் நாம் பார்த்த வாகன நெரிசல் என்பது, தத்தமது காரியங்களைப் பார்க்க வேண்டும்; பெருந்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வருவது எமது வேலை அல்ல என்ற மனப்பான்மையின், சமூக பொறுப்பற்ற தன்மையின் விளைவாக உருவானதே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

இன்று மக்கள் எந்த அளவுக்கு வீதிக்கு இறங்குகிறார்கள்; தெருக்களில் வாகன நெரிசல் தென்படுகிறதா, மது விற்பனை நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறதா என்பதை அவதானித்தால், நான்காவது அலையை நோக்கி நாம் பயணிக்கமுடிவு எடுத்துள்ளோமா, இல்லையா என்பதை ஓரளவுக்கேனும் அனுமானிக்கலாம்.  

இப் பெருந்தொற்றில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழியாக மொத்த சனத்தொகையின் நாற்பது சதவீதமானோருக்காவது தடுப்பூசி ஏற்றுவது மட்டுமே இருக்க முடியும். இது உலக யதார்த்தம். நாம் தடுப்பூசி மருந்தை இறக்குமதி செய்யும் ஒரு நாடு என்ற வகையில் இந்த இலக்கை அடைவதற்கு காலம் எடுக்கும். அதுவரை நான்காம் அலை நோக்கி நகர்வதை மக்கள் தவிர்க்க வேண்டியது முக்கியம். இது சமூக ரீதியாகப் பரவும் நோய் என்பதால் அரசின் அல்லது சுகாதாரத்துறையினரின் மீது பழி போடுவதில் பயன் இல்லை. தனி நபர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதுவே தொற்றின் எதிர்கால வீச்சு எல்லையை நிர்ணயிக்கும். இத் தொற்றின் எதிர்காலம் நம் கைகளில் இருப்பதால் தனிமனித இடைவெளி, முகக் கவசம் மற்றும் அடிக்கடி கைகழுவுதல் ஆகிய பழக்கங்கள் தடுப்பூசிக்கு நிகராகக் கருதப்பட்டு பின்பற்றப்பட வேண்டும். இப் பழக்கங்களில் இருந்து பின்வாங்கக் கூடாது. 

இவற்றில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுவது அரிதாகவே உள்ளது. அதற்கான நடைமுறை சாத்தியங்களும் குறைவு. ஒரு மீட்டர் தூர இடைவெளியை ஏன் கடைபிடிப்பதில்லை என்று கேட்டால், இடைவெளி விட்டு நின்றால் அந்த இடைவெளிக்குள் புகுந்து விடுகிறார்களே என்ற பதில் கிடைக்கிறது. நாம் கடைபிடித்து வந்த சமூக இடைவெளி தொடர்ந்து தீவிரமாக கடைபிடிக்கப்பட வேண்டும். குறிப்பாக பஸ், ரயில் பயணங்களில், எனவே சமூக இடைவெளி தொடர்பில் ஒவ்வொரு தனி நபரும் விழிப்புடன் இருக்க வேண்டியது முக்கியம். பொதுபோக்குவரத்திலும், திரையரங்குகளிலும் முன்னர் மக்கள் தாராளமாகவே புகை பிடித்தனர். சட்டங்களும், கட்டுப்பாடுகளும் அதைத் தடுக்கவில்லை. இறுதியாக சிகரெட் புகையைத் தாங்கிக் கொள்ளமுடியாத பெண்கள் நேரடியாகவே புகைப்பவர்களை எதிர்த்த பின்னரேயே போக்குவரத்திலும் படமாளிகைகளிலும் புகைப்பது முடிவுக்கு வந்தது. 

கைகளைக் கழுவுவது, தூய்மை படுத்திக் கொள்வது மற்றும் முகக் கவசம் அணிவது என்பதிலும் மக்கள் ஒருமித்த கருத்து கொண்டவர்களாகவும், கடைபிடிக்கப்படாத இடங்களில் அதை வன்மையாக, பெண்கள் எதிர்த்து நின்றதைப் போலவே, எதிர்க்கவும் முன்வர வேண்டும். தேசிய கொடுக்கல் மரியாதை செய்வதைப் போன்ற ஒரு நிலைப்பாடுதான் இதுவும். 

பயணக் கட்டுப்பாடு என்ற பெயரிலான முடக்கம் தொடருமா அல்லது அடுத்த வாரத்தின் பின்னர் மற்றொரு முடக்கத்துக்கு செல்வோமா என்பது முற்றிலும் மக்களின் நடத்தையை பொறுத்ததேயாகும். எனவே எல்லாம் முடிந்து விட்டது என்று எவரும் நினைத்துவிட வேண்டாம். 

நான்காம் தொற்றலையைத் தவிர்க்க இப்போதிருந்தே முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வோம். மற்றொரு தொற்றலையை நாமும் தாங்கமாட்டோம்; நாடும் தாங்காது.

Comments