நஷ்டஈடு பெற்றுக்கொள்வதனால் மாத்திரம் முடிவடைந்து போகின்ற விவகாரமல்ல இது! | தினகரன் வாரமஞ்சரி

நஷ்டஈடு பெற்றுக்கொள்வதனால் மாத்திரம் முடிவடைந்து போகின்ற விவகாரமல்ல இது!

கொழும்பு துறைமுகத்துக்கு அண்மித்த கடற்பரப்பில் அரைவாசி மூழ்கிய நிலையிலுள்ள சிங்கப்பூர் கம்பனிக்கு சொந்தமான ‘எக்ஸ்-பிரஸ் பேர்ள்’ கப்பலில் இருந்து ஏற்படக்கூடிய எரிபொருள் கசிவு தொடர்பில் சகலரது கவனமும் திரும்பியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்மதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் என சர்வதேச ஊடகமொன்றில் பகிரப்பட்ட படத்தில் பாதியளவு நீரில் மூழ்கியுள்ள கப்பலிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரை மினுமினுப்பான படலமொன்று தென்பட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.

இது எண்ணெய்க் கசிவாக இருக்கும் என அந்த ஊடகம் சுட்டிக் காட்டியுள்ளது. எனினும் இது தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் இன்னமும் வெளியாகவில்லை. தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை நிறுவனம் இது குறித்த ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளது.

எனினும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருப்பதாக குறித்த நிறுவனம் உறுதிப்படுத்தியதாக இலத்திரனியல் ஊடகமொன்று வெளியிட்ட செய்திக்கும் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. எண்ணெய்க் கசிவு ஏற்பட்டால் அதனைத் தடுப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதுடன், இதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினரும் தெரிவித்துள்ளனர். எனவே இந்த விடயத்தில் ஆறுதல் தரும் தகவலாகவே இது உள்ளது.

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு ஏற்படுகிறதோ இல்லையோ என்பது மாத்திரம் இப்போது அவதானத்துக்குரிய விடயமல்ல.  இக்கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தினால் ஏற்பட்ட சூழல் பாதிப்பே மதிப்பிட முடியாததாக உள்ளது. அதன் காரணமாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருப்பதும் பாரதூரமான ஒரு விடயம் ஆகும்.

கப்பல் தீவிபத்து காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான முனைப்புகள் அரசாங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கப்பல் தீவிபத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து கப்பல் நிறுவனத்திடமிருந்து ஆகக் கூடிய நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு ஐந்து நிபுணத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர், மீன்பிடித்துறை மற்றும் துறைமுக அதிகாரசபை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்கள் பலரையும் இணைத்து நடத்திய நடத்திய சந்திப்பிலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் விபத்தினால் எமது நாடு, எமது மீன்பிடித்துறை, எமது கடற் சூழல் ஆகியவற்றுக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்தல் மற்றும் ஆகக் கூடிய நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொடுப்பதே பிரதான நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது.

அது மாத்திரமன்றி, உரிய பொறிமுறையொன்றை உருவாக்க சட்டமா அதிபருக்கு நிபுணர்கள், விஞ்ஞானிகள் மற்றும் அரச, தனியார் துறையைச் சேர்ந்தவர்களிடமிருந்து அதியுச்ச ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி சுட்டிக் காட்டினார். பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் துறைக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிக்கவுள்ளோம் என்றார் அவர்.

தீவிபத்துக்கு உள்ளான கப்பல் குறித்து உள்நாட்டு முகவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடமிருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கப்பல் கப்டன் மற்றும் பிரதான பொறியியல் அதிகாரி ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருப்பதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் தென்பகுதி கடற்கரை வரை கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அத்துடன் இதுவரை ஏழு கடலாமைகளும், இரண்டு டொல்பின் மீன்களும் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. இவை இறந்தமைக்கான காரணங்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத போதும், கப்பல் தீவிபத்தினால் ஏற்பட்ட கடல் பாதிப்பே இவற்றின் இறப்புக்கான காரணங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

கனமான உலோகங்கள் பல சேர்ந்தால் ஏற்படுகின்ற நிறமாற்றம் போன்று அவற்றின் உடல்கள் பச்சை நிறத்திற்கு மாறியிருப்பதால், கடல்நீரில் ஏற்பட்ட இரசாயனப் பாதிப்பு இவற்றின் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சூழல் பாதிப்பு மாத்திரமன்றி, பொருளாதாரப் பாதிப்புகளும் இவ்விபத்தினால் ஏற்பட்டுள்ளன. கடல்நீர் அசுத்தமடைந்துள்ளது என்ற அச்சத்தினால் மேல்மாகாணம் மற்றும் தென்மாகாணப் பகுதிகளில் உள்ள பலர் கடல் உணவுகளைத் தவிர்த்து வருவதைக் காண முடிகிறது.

கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்த அனர்த்தத்தினால் மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட துறையினர் அரசாங்கத்திடமிருந்து நிவாரணங்களை எதிர்பார்த்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் சம்பந்தப்பட்ட கப்பலின் உரிமையைக் கொண்டுள்ள சிங்கப்பூ  நிறுவனத்திடமிருந்து நஷ்டஈட்டை எதிர்பார்த்துள்ளது.

அதேநேரம், எக்பிரஸ் பேர்ள் கப்பலில் 46 இற்கும் அதிகமான இரசாயனப் பதார்த்தங்கள் இருந்திருப்பதாக சுற்றுச் சூழலியலாளரும், சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் நிறுவுனருமான மேஹமந்த விதானகே சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
எனினும், தொன் கணக்கான பிளாஸ்டிக் துண்டுகளே வெளிப்படையாகத் தெரிகின்றன. இந்த பிளாஸ்டிக் துண்டுகள் சிதைந்து போவதற்கு 500 முதல் 1000 ஆண்டுகள் எடுக்கும் என்கிறார்கள் துறை சார்ந்த விற்பன்னர்கள். இவை இலங்கையின் அனைத்து கரையோரங்களுக்கும் அடித்துச் செல்லப்படும் சாத்தியம் உள்ளது.

ஆனால் உண்மையான ஆபத்துகள் இந்தப் பிளாஸ்டிக் அல்ல என்கிறார்கள் அவர்கள்.  அந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களை மீன்கள் அல்லது கடல் வாழ் உயிரினங்கள் உண்ணும் போது அவற்றின் ஊடாக எமது உடல்களுக்கும் பிளாஸ்டிக் துகள்கள் செல்வதற்கான ஆபத்து இருப்பதாக துறைசார் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதேவேளை, எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் நைட்ரிக் அமிலக் கசிவு ஏற்பட்டிருப்பதால் துபாய் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் குறித்த கப்பலுக்கு அனுமதி வழங்காத நிலையில், இலங்கையின் துறைமுக அதிகார சபைக்குத் தெரியாமல் கப்பல் நாட்டுக்குள் நுழைந்திருக்க முடியாது என சுற்றாடல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
கப்பலில் இரசாயனக் கசிவு உள்ளது என கப்பல் கம்பனி அனுப்பிய மின்னஞ்சல் அதன் உள்நாட்டு முகவரினால் அழிக்கப்பட்டமை குறித்த தகவல்கள் நீதிமன்ற விசாரணைகளில் புலப்பட்டுள்ளன. இந்தக் கசிவினால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து மேற்படி நிறுவனம் முன்னரே அறிந்துள்ளது.

எனினும், கப்பலில் பிரச்சினை இருப்பது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லையென துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இருந்த போதும் துறைமுக அதிகாரசபைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதாக ‘சீகொன்சோர்ட்டியம் லங்கா’ நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் கூறியுள்ளமை குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுவதாக தயா ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொள்வது சாத்தியமாக இருந்தாலும் இதனால் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ஈடு செய்ய முடியாததாகும். ஒரு வருட காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது கப்பல் விபத்து இதுவாகும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதற்கு உரிய பொறிமுறைகள் தயாரிக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும் என்பதையே இப்போதைய விளைவுகள் எமக்குப் புரிய வைக்கின்றன.

பி.ஹர்ஷன்

Comments