ஆசிரியர் தலையங்கம் | தினகரன் வாரமஞ்சரி

ஆசிரியர் தலையங்கம்

மறுக்கப்படும் உரிமையை போராடிப் பெறுவதற்கு எவருக்கும் உரிமை இருக்கிறது. ஜனநாயகம் இதற்கு தாராளமாக வழிவிட்டிருக்கிறது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது.

போராடும் சுதந்திரமும் உரிமையும் மற்றொருவரின் உரிமையை சிதைத்தால் அதற்குப் பெயர் போராட்டமல்ல மாறாக, போராட்டம் என்ற பெயரில் நடக்கும் அடாவடித்தனம் என்பதே பொருத்தமாக இருக்கும்.

ரயில்வே சாரதிகள், பாதுகாவலர்களின் வேலை நிறுத்தத்தை இப்படித்தான் பார்க்க முடிகிறது.

ரயில்வே சாரதிகளும் பாதுகாவலர்களும் கடந்த புதனன்று திடீர்வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள். முன்னறிவிப்புகள் எதுவுமின்றி மாலை ஆறு மணிக்குப்பின்பு வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு கோட்டையிலிருந்து மாலை வேளைகளில் புறப்பட்டுச்செல்லும் எந்தவொரு ரயிலும் சேவையில் ஈடுபடவே இல்லை.

அறிவிப்புக்கள் எதுவுமில்லாத இந்த திடீர் வேலைநிறுத்தக் குதிப்பு, நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல, ரயில் பயணிகளை பரிதவிக்கச் செய்தது.

தொழிற்சங்கப் போராட்டங்கள் என்பது இந்த நாட்டு மக்களுக்கு ஒன்றும் புதிதானதல்ல என்றாலும், உரிமைப் போராட்டங்களை நடத்துவதற்கு ஒரு நாகரிகம் இருக்கிறது. அதே நேரம், விதிமுறைகளும் இருக்கின்றன.

திடீர் வேலைநிறுத்தத்தை காலையில் அறிவித்து செயற்படுத்தியிருக்கலாம். அல்லது மக்களைப் பாதிக்காத வகையில் ஏதோ ஒரு வழியைக் கையாண்டிருக்கலாம். ஆனால், அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக மக்களைப் பலிக்கடாவாக்குவது தொழிற்சங்கப் போராட்டமாகக் கொள்ளமுடியாது.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி தோல்வியடைந்ததால் வேலை நிறுத்தத்தில் குதித்தோம் என்கின்றது தொழிற்சங்கம். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்பதற்காக மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவது தெருச்சண்டித்தனத்துக்கு ஒப்பானது.

ரயில்வே திணைக்கள நியமனங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டுமென்பதே தொழிற்சங்கங்களின் கோரிக்கை. இது தொடர்பில் பலசுற்றுப் பேச்சு நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில் வேலைநிறுத்தம் செய்தனர் என்பது உண்மை.

‘போராடுங்கள்,... உரிமைகளை வென்றெடுங்கள்...!’ இது நமது அடிப்படை உரிமை பலவீனமான கோரிக்கைகளை பலமாகக் காட்டி, அரசாங்கத்தை அடிபணிய வைப்பதற்காக அப்பாவி மக்களை கேடயமாக்குவது ஆரோக்கியமானதல்ல.

திடீர் வேலை நிறுத்தத்தை பகல் வேளைகளில் செய்திருந்தால் மக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்தியிருப்பார்கள். மாலை 6 மணிக்குப் பின் ரயில்களை ஓடவிடாமல் தடுத்ததும், பணிகளில் ஈடுபடாது ரயில் சாரதிகள் ஓடிஒழித்ததும், திட்டமிட்ட அநாகரிகச் செயல் என்பதை மறுப்பதற்கில்லை.

கொழும்பைப் பொறுத்தளவில் 100க்கு 95 வீதமான அலு வலக ஊழியர்கள் ரயில் பயணத்தை நம்பியே தங்கள் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். குறைந்த சம்பளத்தில் தொழில் செய்பவர்களும் அன்றாடங் காய்ச்சிகளும்; பருவகாலச் சீட்டில் பயணம் செய்பவர்களும் ரயில் பயணத்தில்தான் தங்கியிருக்கின்றனர்.

கிராமப்புறங்களிலிருந்து தொழிலுக்காக கொழும்பு வரும் ஊழியர்கள் மதிய உணவு பார்சலுடன் வந்தடைந்து, பின்னர் பணியை முடித்ததும் ரயிலில் வீடு சென்றடைவதுதான் வாழ்க்கைச் சுற்றாக இருக்கிறது.

கொழும்பு கோட்டையிலிருந்து 50க்கும் மேற்பட்ட ரயில்கள் தினமும் நாட்டின் நாலாபுறமும் புறப்பட்டு செல்கின்றன. என்றாலும், அலுவலகப் பணியாளர்களுக்கான ரயில்கள் காலையும் மாலையும் விசேடமாக சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. மாலை வேளைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்கள் அலுவலக ஊழியர்களாலேயே நிரம்பி வழிவது வழக்கம்!

இந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் கோட்டை ரயில் நிலையம் ரணகளமாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

தூர இடம் செல்வோருக்கு ரயிலும் இல்லை; பஸ்களும் இல்லை. மாற்று வழிகளில் செல்வதென்றாலும் கையில் காசும் இல்லை. இந்த பரிதாப நிலையை தொழிற்சங்கங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ரயில்வே நியமனங்களில் முரண்பாடு என்பது ஒரு சிலருக்கான பிரச்சினை, ஆனால், அடாவடித்தனமான தொழிற்சங்கப் போராட்டத்தினால் ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பரிதவித்தது மட்டுமல்ல அநாதரவாக விடப்பட்டார்கள்.

மக்களை, குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினரை நடுத்தெருவில் வைத்து நிர்வாணமாக்குவதற்கு ஒப்பானதாகவே இந்த தொழிற்சங்கப் போராட்டத்தை பார்க்க முடிகிறது.

மக்களை வஞ்சிக்கும் எந்தவொரு தொழிற்சங்கப் போராட்டமும் இலக்கை எட்டியதாக வரலாறு இல்லை. ரயில் சாரதிகள், பாதுகாவலர்கள் சங்கம் இதனை மறுக்கலாம் அல்லது நியாயம் கற்பித்து விளக்கம் கூறலாம். இத்தகைய விளக்கங்கள் எதுவும் பயணிகளின் பரிதவிப்புக்கு ஈடுகொடுக்காது என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.

இந்த ஜனநாயக நாட்டில், தொழிற்சங்கங்கள் உரிமைப் போராட்டம் நடத்த தாராள இடமிருக்கிறது. அதனை மக்களின் முதுகில் ஏறிநின்று நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது.

ரயில் சேவை என்பது மக்களுக்கான அத்தியாவசிய பணி. அரசு அதனை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தாவிட்டாலும், போக்குவரத்து, மருத்துவம் போன்றவை அத்தியாவசிய சேவைகள் என்பதை தொழிற்சங்கங்கள் புரிந்து செயற்படவேண்டும்.

மக்களை அன்னியப்படுத்தும் தொழிற்சங்களின் போராட்டங்களால் தொழிற்சங்கங்களே மக்களிடமிருந்து அன்னியப்படுமென்பதை மறந்து செயற்படுவது நல்லதல்ல.

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.