
கலாபூஷணம், பேராதனை ஏ. ஏ.ஜுனைதீன்
முருங்கை பருத்தாலும் உத்தரத்திற்கு உதவாது என்பதற்கு உதாரணமாக 'பொன்மணி' திரைப்படத்தைச் சொல்லலாம்.
அப்படி இல்லை என்றால் நல்லதொரு வீணை செய்தே, அதை நலங் கெட புழுதியில் எறிந்த கதை. என்றும் வர்ணிக்கலாம். மிக அருமையான காவலூராரின் ‘பொன்மணி’ கதையை நாங்க படமா எடுப்போமா?” என நான் கூட ஏ. ரகுநாதனிடம் ஒரு தடவைக் கேட்டதுண்டு.
‘பொன்மணி' தயாரிப்பாளர்கள் திரைப்படம் தயாரித்ததில் எவ்விதத்திலும் தவறில்லை. சினிமாத் துறையில் எனது ஐம்பதாண்டு கால அனுபவத்தைக் கொண்டு பார்க்கும்போது பொன்மணி படம் படுதோல்வி அடைய பல காரணங்களில் முதல் காரணம் தயாரிப்பாளரைச் சுற்றி இருந்த “ஹை சொசைட்டி”யே என நினைக்கிறேன்.
அடுத்தக் காரணம் திரைப் படத்தின் முதுகெலும்பான இயக்குனரின் தெரிவு.
தர்மசேன பதிராஜ என் ஊரான பேராதனையைச் சேர்ந்தவர். கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் போதே அவர் இலங்கை சமசமஜக் கட்சியின் மக்கள் இளைஞர் என்ற இயக்கத்தின் கண்டி மாவட்டக் கிளையின் செயவாளராக செயல் பட்டவர்.
1970 ‘சதுரோ’ (எதிரிகள்) என்ற குறுந்திரைப் படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர்.
1973 இல் ‘அஹஸ் கவ்வ’ (தொடுவானம்) என்ற முழு நீளத் திரைப்படத்தை இயக்கினார். அது பொது மக்களுக்காக திரைக்கு வந்த அன்று, கண்டி வேல்ஸ் தியட்டரில் அவருடன் அமர்ந்து நானும் இன்னும், பலரும் முதல் காட்சியை பார்ததுக் கொண்டிருந்தோம்.
படம் ஆரம்பித்து சுமார் இருபது நிமிடங்களில் டிக்கெட் வாங்கிய ரசிக பெருமக்கள் திேயட்டருக்குள் எம்மைத் தேடிப் பிடித்து விரட்டி விரட்டி அடித்தனர்.
திரையிட்டு ஒரு வாரத்துக்குள் ‘அஹஸ் கவ்வ’ பெட்டிக்குள் ஓளிந்துக் கொண்டது.
அதன் பின் 1977 இல் அவர் இயக்கிய ‘எயா தென் லொகு லமயெக்’ (இப்போது அவள் பெரிய பிள்ளை) சுமாராக ஓடியது.
அதன் பின் 1977 இல் பொன்மணி!
தர்மசேன பத்திராஜா என இயக்குனரின் பெயரை தவறாக உச்சரிக்கும் தயாரிப்பாளர்கள், அவருடைய சரியான பெயரைக் கூட என்ன என்று சரியாக உச்சரிக்கக் கூடத் தெரியாமலேயே இயக்குனர் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துள்ளனர். அவருடைய பெயர் ‘பத்திராஜா’ என்பார்கள்.
அவருடைய பெயர் பதிராஜ.
இதில் பங்கு பற்றியுள்ள நடிக, நடிகையரில் லடிஸ் வீரமணியையும் இன்னும் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருமே மாவட்ட ஓய்வு பெற்ற நீதிபதி, டொக்டர்மார், ஓய்வு பெற்ற விரிவுரையாளர்கள், ஓய்வு பெற்ற மாநகர சபை ஆனணயாளர்கள், மின் பொறியியலாளர்கள் என கல்வி கற்ற உயர் மட்ட ‘ஹை சொசைட்டி’யில் உள்ளவர்கள். பெரும்பாலும் சினிமா படப்பிடிப்பு ஒன்றையாவது காணாதவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் சினிமா தயாரித்தால் என்ன நடக்கும் என்பதற்கு பொன்மணி உதாரணமானது.
இதற்கு கீழேவரும் சம்பவம் நல்லதொரு உதாரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.
சிலோன் ஸ்டூடியோ ஒலிப்பதிவு கூடத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்த காலம். ‘கடமையின் எல்லை’ படத்திற்காக ஸ்டூடியோவினுள்ளே அரண்மனை செட் போடப்பட்டு, தேவன் அழகக்கோனும் ஐராங்கனியும் நடிக்கும் காதல் காட்சிக்கான படபிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
பண்டிதரும் ஆங்கில பேராசிரியரும் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளருமான டாக்டர் எஸ். வேதநாயகம் இயக்குனராக, படத்தை இயங்கிக் கொண்டிருந்தார். இவர் சினி கெமராவைக் கண்டதே இந்த படப்பிடிப்பில் தான். அது தான் அவருடைய சினிமா அனுபவம்!
ஒளிப்பதிவாளராக அனுபவமிக்க ஏ. ரீ. அரசு செயல்பட்டுக் கொண்டிருந்தார். கெமராவில் முதலில் பொருத்திய நெகடிவ் 400 அடிச் சுருளின் படப்பிடிப்பு முடிந்த பின்னர், இன்னொரு 400 அடிச் சுருள் மெகசின் மாற்றிய பின்னரே, அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும். இந்தக் காரியத்தில் கெமரா எஸிஸ்டனும் அந்தக் குழுவில் பணியாற்றும் இன்னொருவரும் ஈடுபடுவார்கள். இது மிக அவதானமாக செய்ய வேண்டிய ஒரு செயல். இதற்கு சுமார் பத்து நிமிடங்கள் வரை எடுக்கும். அதுவரை படப்பிடிப்பு கெமரா குழுவினர் சும்மா இருப்பார்கள்.
இந்த விஷயம் தெரியாத வேதநாயகம், படப்பிடிப்பு கெமரா குழுவினர் சும்மா இருப்பதாகக் கருதி எரிச்கலுடன் “என்னடா எல்லாம் சும்மா நிற்கிறீயள்?’ எனக் கொதித்தார்.
பக்கத்தில் நின்ற ஒரு சிங்கள ஊழியர் தமிழ் தெரியாததால் சிங்களத்தில் விஷயத்தைச் சொன்னார்.
வேதநாயகம் அவர்களுக்கு சிங்களம் தெரியாததால் அந்த ஊழியர் சொன்னதில் அர்த்தம் புரியததால் வேதநாயகம் பொங்கி எழுந்தார்.
“இவன் நாசமறுப்பான்! உந்தக் கோடாறியக் கொண்டு வந்து கொத்தி எறியுங்கோடா, இந்தக் கெமராவை!” என்றார், வேதநாயகம்.
இந்த வீர வசனத்தைக் கேட்டு விளங்கி பிரமித்தவர்கள் சிலர்,
வாய் விட்டு தன்னையும் சூழ்நிலையும் மறந்து சிரித்தவர்கள் இரண்டொருவர், சிரிப்பவர்களையும் விழிப்பவர்களையும் பார்த்து, பாஷை பரியாமல் முழித்தவர்கள் இன்னும் சிலர்.
இதே போலத் தான் ‘பொன்மணி’ இயக்குனருக்கு தமிழ் தெரியாது. தயாரிப்பாளர் உட்பட நடிக, நடிகையருக்கு சிங்களம் தெரியாது. இயக்குனருக்கு தமிழோ, தயாரிப்பாளர் உட்பட நடிக, நடிகையருக்கு சிங்களமோ தெரிந்திருக்குமானால் அல்லது இயக்குனருக்கு உள் வாங்கும் ஆளுமை இருந்திருந்தாலோ படம் ஓரளவாவது தப்பி இருக்கும்.
எல்லோரும் இங்கிலீசில் பேசிப் பேசி படம் செய்தார்கள். படம் உப்பு இல்லாத பண்டம் ஆனது.
நல்லதொரு தேசிய தமிழ் சினிமா வீணாயிற்று.
நல்லதொரு தாயாரிப்பாளர் எங்களுக்கு இல்லாது போனார்.
ஒரு சிங்கள இயக்குனருக்கு தமிழ்த் திரைப்படத்தை இயக்கக் கொடுத்ததில் எந்தத் தவறும் இல்லை.
நானும் வி.பி. கணேசன், ஏ. ரகுநாதன் ஆகியோரும் எங்கள் தமிழ்ப் படங்களை சிங்கள இயக்குனர்களிடம் கொடுத்து வெற்றியும் கண்டுள்ளோம்.
பொன்மணி திரைக்கு வரும் முன்னரேயே ஏகப்பட்ட கட்டுரைகளும் தமிழ், சிங்கள தகவல் ஊடகங்களில் உலாவின. ‘ஹை சொசைட்டி’ யினர் நடிக, நடிகையராக படத்தில் தோன்றியதால் தமிழ் ஊடகங்களும் “இனி இது போல் ஒரு தமிழ்த் திரைபடபடம் வரவே வரப்போவதில்லை” என்ற அளவுக்கு ‘புழுகி’த்தள்ளினார்கள்.
இயக்குனர் பதிராஜவும் தனது கலைத்திறமையை விட அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சிங்கள பத்திரிகைகளில் எழுது வித்தார்.
(தொடரும்)
1973 இல் திரையிடப்பட்ட பதிராஜவின் ‘அஹஸ் கவ்வ’ என்ற படம் ஆரம்பித்து சுமார் இருபது நிமிடங்களில் டிக்கட் வாங்கிய ரசிக பெருமக்கள் தியட்டருக்குள் எம்மைத் தேடிப் பிடித்து விரட்டி விரட்டி அடித்தார்களோ,
அதே மாதிரி மூன்று வருடங்களுக்குப் பின்னர் 1977 ஆம் வருடம் ‘பொன்மணி’ திரையிடப்பட்ட முதல் நாளன்று யாழ் தியட்டரில் நடிக, நடிகையராக படத்தில் தோன்றியவர்களும் முதல் காட்சிக்கு வந்திருந்தனர். அந்தக் காட்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் படம் பார்த்து எரிச்சல் அடைந்தனர. ‘உங்களுக்கு எதுக்கடி நடிப்பு’ என நடிக, நடிகையரை திட்டி அடிக்க விரட்டினர். அவர்களும் துண்டக் காணோம் துணியைக் காணோம் எனத் தப்பி ஓடினர். (இதன் பின்னர் இவர் இயக்கிய திரைப்படங்களுக்கும் இதே கதியே நடந்தது)
‘பொன்மணி’ படம் திரைக்கு வந்து எண்ணி ஏழு நாட்களுக்கு மேல் திரைகளில் தரித்து இருக்க வில்லை. திரையை விட்டு படம் அகன்ற பின்னரும் படம் பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் ‘புத்தி ஜீவி’களும் தமிழ் ஊடகங்களுக்கு விமர்சனங்களும் அபிப்பிராயங்களும் எழுதினார்கள், எழுதுவிக்கப்பட்டார்கள்.
சில விமர்சனங்கள் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியில் இருந்தன. இது நுரை தின்று பசி ஆறிய கதை.
திரைப்படம் என்றால் அது மக்கள் மத்தியில் செல்ல வேண்டு;ம். ஜனரஞ்சகமாக வேண்டும். அப்படியில்லாமல் தன்னைத் தானே மெச்சிக் கொண்டதாம் தவிட்டுக் கொழுக்கட்டை என்பது போல் தங்களது ஆட்களே தாங்களுக்கு தங்களாக புகழ்ந்து விமர்சனம் எழுதிக் கொணடால் முதலீடும் வராது. படமும் ஓடாது. இவர்கள் இப்படி சுய விளம்பரம் தேடிய எரிச்சலில் ஒரு ஆங்கில வார இதழ் அதனது விமர்சனத்தில் ‘பொன்மணி நோ மணி’ என மிக மிக ரத்தினச் சுருக்கமாக எழுதி இருந்தது.
பொன்மணியில் இறுதிக் காட்சியாக மாட்டு வண்டியில் ஒரு சவ ஊர்வலம் மயானத்துக்கு கொண்டு செல்லப்படும் காட்சி இடம் பெற்றிருந்தது. சுமார் பத்து நிமிடங்கள் வரை அந்தக் காட்சியே தொடர்ந்து காண்பிக்கப்பட்டது.
இக் காட்சியை ரசிகர்கள் ரசிக்கவில்லை.
இந்த சவ ஊர்வலம் காட்சி தான், ‘பொன்மணி’ திரைபப்படத்தை சவக்குழி வரைக் கொண்டு சென்றது என்றால் அது மிகையே இல்லை.
‘வெண் சங்கு’, ‘பொன்மணி’ இரு திரைப்படங்களிலும் எனக்கு புரியாத ஒரு புதிரும் உண்டு. இந்த இரண்டு படங்களிலும் லடிஸ் வீரமணி நடித்தார். சமுதாயம் படத்தில் நடித்தால் கை குண்டு எறிந்து கொலை செய்வேன் என நடிகர் எஸ். என். தனரத்தினத்துக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து விரட்டிய இவர்.
என்றுமே ஒரு சண்டியராகவே வாழந்தவர்.
வெண் சங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த அராலியூர் புவனேந்திரனும் பொன்மணியில் கதாநாயகனாக நடித்த பாலச்சந்திரனும் படப்பிடிப்பின் இடையில் மேலதிகமாக பணம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நரகாசுர வதை கொடுத்தனர்.
ஆனால், இப்படி செய்திருக்க வேண்டியவர் லடிஸ் வீரமணி தான். ஏனென்றால் என்றுமே அவர் ஒரு சண்டியர். ஆனால், இந்த வேலையைச் அவர் செய்ய வில்லை. ஏனென்றால் சண்டியனாக இருந்தாலும் லடிஸ் வீரமணி சிறந்ததொரு கலைஞன். மற்றவர்கள் கல்விமான்களாக இருந்தாலும் கலைத்துறை தெரியாத மூடர்களாகவே இருந்தனர்.
1996 ஜனவரி மாதத்தில் ஒரு நாள் ரூபவாஹினியில் இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள் என்னும் தலைப்பிலான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர் எஸ். விஸ்வநாதன் என்னை அழைத்தார்.
“என்னை நீங்கள் பேட்டி காண்பதாக இருந்தால் மட்டும் நான் வருகிறேன்” என்றேன்.
அதற்கு அவர் “நான் தான் உங்iளை பேட்டி எடுப்பேன்” என்றார்.
“எவ்வளவு நேரம் எனக்கு தருவீர்கள்? ” எனக் கேட்டேன்.
“ 45 நிமிஷம் தான் தர முடியும்” என்றார்.
“ சரி நான் வருகிறேன்” என்றேன்.
குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் பேட்டி ஆரம்பமாகியது.
நிகழ்ச்சியில் என்னோடு கலந்து கொள்ள காவலூர் ராஜதுரை வந்திருந்தார். எனக்கு அது மகிழ்ச்சியாகவும் இருந்தது.
தயாரிப்பாளர் எஸ். விஸ்வநாதன் என்னையும் காவலூர்; ராஜதுரையையும் மாறி மாறி கேள்விகள் கேட்டார்..
“இலங்கையில் தமிழ்த் திரைப் படங்கள் யாழ்ப்பாண மொழியிலா, மலை நாட்டுத் தமிழ் மொழியிலா தயாரிக்கப்பட வேண்டும்? ” எனக் கேட்டார்.
“யாழப்பாண மொழியில் தான் இலங்கையில் தமிழ்த் திரைப் படங்கள் தயாரிக்கப் பட வேண்டும். ஏனென்றால் யாழ்ப்பாண மொழி தான் எமது மண்வாசைன மொழி” என்றார், காவலூரார்.
“யாழ்ப்பாண மொழி தான் எமது மண்வாசனை மொழி என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இலங்கையில் தமிழ்த் திரைப் படங்கள் தென் இந்திய மொழியில் தான் தயாரிக்கப் பட வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும். எமது காதுகள் அதற்குத் தான் பழக்கப் பட்டுள்ளன, யாழப்பாண மொழி பேசினால் யாழ்ப்பாண ரசிகர்களே நிராகரிப்பார்கள்” என்றேன்.
“அதை எப்படி நீர் சொல்வீர்? ” என்று சற்று காரமாகக் கேட்டார், காவலூரார்.
‘கடமையின் எல்லை’ யாழ்ப்பாண மொழி பேசியதை யாழப்பாண ரசிகர்களே ஏற்றுக் கொள்ள வில்லை. கடமையின் எல்லை திரைப் படம் திரையிட்ட போது தனக்கு பதினைந்து வயது என்றும் தனது மாமாவுடன் கடமையின் எல்லை
பார்க்கப் போனதாகவும் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் “பனங் கொட்டை! பனங்கொட்டை படம் எங்களுக்கு வேண்டாம்! என ரசிகர்கள் கூக்குரலிட்டதாக தம்பி ஐயா தேவதாஸ் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.” என்றேன்.
இதற்கு இடையில் விஸ்வநாதன் குறுக்கிட்டு “ஜுனைதீன், இலங்கை சிங்கள சினிமா ஆரம்ப காலத்தில் இந்தியர்களின் உதவியோடு தயாரிக்கப்பட்டது. இப்போது ஏன் அப்படி தாயாரிக்கப் படுவதில்லை?” என ஒரு கேள்வியை கேட்டார்.
“அதற்கு மூல காரணம் எஸ். டப்ளியூ. ஆர். டி.பண்டார நாயக்கா அவர்களே! 1956 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் இனி யாரும் இந்தியா சென்று திரைப்படம் தயாரிக்கக் கூடாது என அதைத் தடை செய்து விட்டார்” என பதில் சொன்னேன்.
“அவர் அப்படிச் செய்யக் காணம் என்ன? ” எனக் கேட்டார்.
“தமிழருக்கும் அவருக்கும் ஆகாது (அப்படி அவர் அன்று செய்யாமல் இருந்திருந்தால் இன்று நாங்கள் எங்கள் தமிழ் சினிமா மூலம் உலகை வென்றிருப்போம்” என நான் சர்வ சாதாரணமாக பதில் சொன்னேன். என் பதிலைக் கேட்ட விஸ்வநாதன் சிறிது கலவரப்பட்டதைக் உணர்ந்தேன்.
சில வினாடிகளில் என்னன நோக்கி கைக் கூப்பிய விஸ்வநாதன், “நீங்கள் இந்தப் பேட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்காக நன்றி! வணக்கம்!!” என பேட்டியை முடித்து என்னை வெளியே அனுப்பி விட்டார்.
“என்னடா இவ்வளவு சீக்கிமா 45 நிமிஷம் முடிந்து விட்டதா!” என கூடத்துக்கு வந்து கடிகாரத்தைப் பார்த்தால் 19 நிமிடங்களே கடந்திருந்தன.
இந்த பேட்டியை அப்போதைய 21. 01. 1996 ‘சூடாமணி’ பத்திரிகை “ஜுனைதீனின் துணிச்சலான பதில்” என என்னைப் பாராட்டி எழுதி இருந்தது.
சில வருடங்களுக்கு பின்னர் ரூபவாஹினியில் இன்னொரு தயாரிப்பாளரான எஸ். மோசஸ் என்னுடன் கலந்துரையாடி ஒரு பேட்டிக்கான நாளையும் நேரத்தையும் ஒழுங்கு செய்தார்.
பேட்டிக்கான முதல் நாள் இரவு பத்து மணியளவில் தொலை பேசியில் அழைத்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர், “நாளைக் காலை பேட்டியை நடத்த இயலாத நிலையில் தான் இருப்பதாக ” க் கூறி வேதனைப்பட்டார்.
“எக்காரணம் கொண்டும் ஜுனைதீனை மட்டும் ரூபவாஹினியில் பேட்டிக்கு கூப்பிட வேண்டாம்” என விஸ்வநாதன் தடுத்து
விட்டார் எனவும், அவர் தனது மேலதிகாரி எனவும் பின்னர் என்னிடம் விளக்கினார் மோசஸ், விஸ்வநதன் தொழில் புரிந்த இடம் ரூபவாஹினி!
“நீங்கள் போன முறை வந்து தற்போதைய ஜனாதிபதி சந்திரிகாவின் தகப்பனாரை தமிழ் துவேசி என்றீர்களாம். அதை யராவது மேலதிகாரிகளுக்கு சொல்லி இருந்தால் தனது தொழில் பறி போய் இருக்கும் என்கிறார்” என்றார் மோசஸ். அந்த பேட்டி நடை பெறவில்லை.
அதன் பின விஸ்வநாதனை நான் சந்தித்த போதெல்லாம் “ஒன்னுமே செய்யாம போயிட்டீங்களே ” என்று சொல்லி இருக்கிறேன். அவரும் மிக அழகாக சிரித்துவிட்டு போவார்.
விஸ்வநாதனுக்கு முன்னர் பணிப்பாளராக இருந்த பி.விக்னேஸ்வரன் ‘மலையோரம் வீசும் காற்று’ , ‘தப்பு’ போன்ற தொலைக்காட்சி தொடர் நாடகங்களையாவது செய்தார்.
எஸ். விஸ்வநாதனால் எதுவும் செய்ய முடிய வில்லை.
புதிய காற்றின் வெற்றியே கணேசன் அடுத்தடுத்து படம் தயாரிக்க காரணமானது
புதிய காற்று என்ற இலங்கை தமிழ்த் திரைப்படம் 1975 ம் ஆண்டு வெளியிடப்பட்டு, வெற்றி வாகை சூடியது. அதற்கு முன்பதாக தோட்டக்காரி, பொன்மணி, மஞ்சள் குங்குமம், குத்து விளக்கு, கடமையின் எல்லை, வாடைக் காற்று, நிர்மலா, காத்திருப்பேன் உனக்காக, சர்மிளாவின் இதய ராகம், டெக்ஸி டிரைவர், ஹம்லட், நான் உங்கள் தோழன், நாடு போற்ற வாழ்க, அவள் ஒரு ஜீவநதி, கோமாளிகள் போன்ற படங்களை வரிசைபடுத்தாமல் இங்கு தந்துள்ளேன்.
இப் படக்கதை தோட்ட மக்களை மையமாகக் கொண்டதாகும். தோ ட்டத் தொழிலாளர்கள் வீடற்று வாழும் நிலைமையை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டது. ஒரே அறையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாழ்ந்து வரும் கலாச்சார சீரழிவையும், மனித உரிமை மீறல்களையும் பிரதிபலிக்கும் விதத்தில் இக் கதை எழுதப்பட்டது.ஒரு வகையில் இக் கதை நாட்டு மக்களும், அரசும், தோட்டக் கம்பெனி நிர்வாகங்களும் அறிந்துக் கொள்வதற்கும், உணர்ந்து கொள்வதற்கும் ஓர் பிரசார படமாக உருவாக்கப்பட்டது. கதையோட்டமும், படத்துக்கான நோக்கமும் சிதைந்து விடாமல் இருப்பதற்காக இப்படத்தின் டைரக்டர் ராமநாதன் அவர்கள் செயல்பட்டார். இவர் மாத்தளையைச் சேர்ந்தவர். அவருக்கு ஆலோசனை வழங்குபவனாக, உதவியாளனாகவும் அத்தோடு ப்ரொடக்ஷன் மெனேஜராகவும் நான் செயற்பட்டேன்.
படப்பிடிப்பு பண்டாரவளை, ஐஸ்லபி, மல்வத்தை, ஊவா ஹைலன்ஸ், யட்டியாந்தோட்டை, பனாவத்தை தோட்டங்களில் நடைபெற்றது. பூவை செங்குட்டுவனும், கவிஞர் கண்ணதாசனும், மற்றும் இலங்கைக் கவிஞர் சாது ஹமீதும் பாடல்களை எழுதியிருந்தார்கள்.
‘மேதினம்.. மேதினம். மேதினி எங்கும் மேதினம்' மண்டிய காடு விலங்குகளோடு' மருண்டு கிடந்தது மலையகம்.. அதை கண்டு திருத்தி கழனிகள் தந்தது தமிழினம்’ என்ற இந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசனும், டூயட் பாடல்களை பூவை செங்குட்டுவனும், “மலை நாட்டில் ஒரு மாற்றம் வர வேண்டும் புதிய காற்று” என்ற பாடலை சாது என்ற புனை பெயர் கொண்ட ஹமீதும் எழுதியிருந்தார்கள்.
பாடல்களை பாடகர் முத்தழகு, கலாவதி சின்னசாமி, சுஜாத்தா அத்தனாயக்க, வவுனியா பாலச்சந்திரன், மற்றும் சிலரும் பாடியிருந்தார்கள்.
மலையகத்தின் இயற்கை காட்சிகளை அழகுற கெமராவுக்குள் கலைஞர் லெனி கொஸ்தா கொண்டு வந்திருந்தார். வேறு எந்த இலங்கைப் படங்களையும் விட புதிய காற்று படம் வெற்றி பெற்றதற்கு மலையகத்தின் இயற்கை காட்சிகளும், மலையகத் தொழிலாளர் பற்றிய உருக்கமான கதையமைப்புமே காரணமாகும். இப் படம் காண்பிக்கப்படும் போது, நாடு முழுவதிலும் தமிழ், சிங்கள ரசிகர்களின் நல்ல வரவேற்பு கிடைத்தது. வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் பட மாளிகைகளில் வாழை மரங்கள், தென்னோலை தோரணங்கள் கட்டி வரவேற்பு செய்திருந்தனர். தயாரிப்பாளர் வி.பி.கணேசனுக்கு இப் படம் பெரும் புகழைத் தேடித் தந்தது. இந்த உத்வேகத்தின் காரணமாக அவர் “நான் உங்கள் தோழன்”, “நாடு போற்ற வாழ்க” போன்ற இரு படங்களையும் அடுத்தடுத்து தயாரித்தார். கலைஞர் கலைச்செல்வன், நான் உங்கள் தோழன் படத்துக்கு திரைக் கதை வசனம் எழுதி, கதாநாயகி அப்புத்தளை சுபாசினிக்கு தந்தையாக பாகமேற்று நடித்திருந்தார். இப் படத்தில் வானொலி, மேடை நாடக சினிமா நடிகரான ஜவாஹிர் முக்கிய பாகமேற்று நடித்திருந்தார். நாடு போற்ற வாழ்க படத்துக்கு எஸ்.என்.தனரத்தினம் திரைக் கதை வசனம் எழுதி நடித்திருந்தார். இம் மூன்று படங்களின் தகவல்கள் யாவும் நினைவுகள் மூலமே எழுதப்பட்டுள்ளன. தகவல் அறிந்தவர்கள் மேலதிகத் தகவல்கலைத் தந்துதவலாம்.
மு.சிவலிங்கம் – கொட்டகலை.