காமம் கருக்கிய மற்றொரு மொட்டு ? | தினகரன் வாரமஞ்சரி

காமம் கருக்கிய மற்றொரு மொட்டு ?

ஹைதராபாத் பெண் கால்நடை மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை புரிந்து எரித்து கொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தை மட்டுமல்லாது முழு உலகையும் உலுக்கி அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

27 வயது  கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சாத்நகர் பகுதியை சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பித்த சாத்நகர் பொலிசார்  கண்காணிப்பு கெமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.  ​ெலாறி சாரதி முகமத் ஆரிப், சென்னகேசவ் மற்றும் உதவியாளர்கள் சிவா, நவீன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இக் கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தினர். குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிலையில் பொலிசார் வியாழக்கிழமை காலை நான்கு கொலையாளிகளையும் விசாரணை நடத்துவதற்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று பார்வையிட்டனர். அங்கு பிரியங்கா ரெட்டியின் கைபேசி கைப்பற்றப்பட்டது. கொலை செய்தது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அந்த நான்கு பேரும் பொலிசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இத் துப்பாக்கிச் சூட்டில் 4 பேரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிசார் கூறினர்.

இது தொடர்பில் பிரியங்காவின் தந்தை கூறியது,

"எனது மகள் இறந்து இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது. காவல்துறைக்கும் அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும்," என கொலை செய்யப்பட்ட மருத்துவரின் தந்தை தெரிவித்துள்ளார். ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள் பலர் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

"இவர்கள் தான் குற்றம் செய்தனர் என்று சொல்வதற்கு போதிய சாட்சிகள் உள்ளனவா? எந்த நீதிமன்றமாவது அந்த ஆதாரத்தை பார்த்ததா? எந்த நீதிமன்றமாவது தீர்ப்பு வழங்கியதா? அவர்கள் குற்றம் செய்ததாக நாமாக நினைத்துக் கொள்கிறோம். எதற்குமே ஒரு முறை உண்டு" என மனித உரிமை ஆர்வலர் ​ெரபேக்கா மாமென் ஜான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எவ்வாறான வாதப்பிரதிவாதங்கள் நடந்தாலும். பெண்களுக்கான கொடுமைகள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறதே தவிர குறைந்த பாடில்லை.

பிரியங்கா வன்புணர்வுக்கு முதல் நாள் கோவையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் 17 வயது சிறுமியை, 6 நபர்கள் வன்புணர்வு செய்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி, மாலை வேளையில், தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, வீட்டின் அருகே உள்ள பூங்காவிற்கு தனது நண்பருடன் சென்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட சிறுமி. அப்போது அங்கிருந்த 6 நபர்கள் கொண்ட கும்பல் இருவரையும் தாக்கியதோடு, சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, பொலிசார் விசாரணை நடத்தியதில் சிறுமியை வன்புணர்வு செய்ததாக ராகுல் (வயது 21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயண    மூர்த்தி (30) ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.

பூங்காவில் இருந்த சிறுமியையும், அவருடைய நண்பரையும் அங்கிருந்த நபர்கள் மிரட்டி சிறுமியின் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கிவிட்டார்.

சிறுமியையும் தாக்கி, அவர் சத்தம்போடாமல் இருக்க வாயை பொத்தியதோடு, இருவரையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல், சிறுமியை பூங்காவின் மறைவான பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை கைபேசியில் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்', என பொலிசார் கூறுகின்றனர். சிறுமியை அழைத்துச் சென்ற நபர் தான், குற்றம்சாட்டப்பட்ட 6 பேரோடு கூட்டு சேர்ந்து வன்புணர்வு செய்தார், எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறை இதுவரை முறையான தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை.

இச்சம்பவங்கள் இவ்வாறிருக்க அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிர் தப்பிய பெண், வன்கொடுமை செய்தவர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் உன்னாவில் உள்ள கிராமத்திற்கு வயல்வெளிக்கு சென்ற இளம்பெண்ணை 5 நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளனர். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் உயிருக்கு போராடி வருகிறார். இவர் மேலதிக சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர் எனவும் அவர் கடந்த மார்ச் மாதம் இதுகுறித்து முறைப்பாடு செய்தார் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். மேலும் அவரை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள்தான் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரில் 3 பேரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் கூறுகின்றனர். மேலும், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே இரண்டு முறைப்பாடுகளை செய்துள்ளார்.

உன்னாவில் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு உயிர் தப்பியவர்களில் தற்போது 80% பெண்கள் தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்கள். தொடரான இச் சம்பவங்கள் பெண்களின் இருப்பு குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண் இனம் என்ன ஆண்களுக்கு அடிமைகளா? ஏன் இந்த மிருக குணங்களும் காட்டுமிராண்டித்தனங்களும் நடக்கின்றன.​ நவீன உலகம் பெண்களை நரகத்தில் தள்ளிவிட்டுள்ளதா? இவ்வாறான மூடர்களின் மிருகத்தனத்துக்கு முடிவு கட்டுவது எப்படி? பெண்ணை கொல்வதற்கு ஆண்களுக்கு உரிமை வழங்கியது யார்? இது போன்ற கேள்விக் கனை களுக்கு இந்த உலகமே ஒன்றிணைந்து பதில் கூறுவதோடு முடிவுகட்டவும் முடிவெடுக்க வேண்டும்.

தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரப்படி, ஒவ்வொரு 20 நிமிடத்திலும் இந்தியாவின் ஏதாவதொரு பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஒரு பெண் ஆளாகிறாள்.

பாலியல் குற்றமிழைப்பவர்களைக் கொல்ல வேண்டும் என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள்... மரணதண்டனை தீர்வாகுமா?

அது, மக்களின் ஆவேசத்தால் எழும்பும் கருத்துகள்.

பாலியல் குற்றங்களைக் குறைக்க முதலில், குழந்தை வளர்ப்பிலிருந்து தொடங்க வேண்டும். தாய் தன் பிள்ளையை வளர்க்கும்போதே பெண்ணும் ஆணும் சமம்தான், பேதமில்லை எனச் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அப்படி வளர்பவர்கள்தான், நல்லெண்ணம் மேலோங்கி உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிந்தவர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் முதலில் பாலியல் கல்வியைப் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். கல்வி நிறுவனங்களும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக, முன்னெச்சரிக்ைக உணர்வைச் சொல்லித் தர வேண்டும். ஆனால், ஆசிரியர்கள், காவலர்கள் எனப் பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். இந்தக் கொடியநிலை மாற, எல்லோரும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டிய கட்டாய மாற்றம் இது. பாலியல் குற்றங்களில் எந்தவிதத் தலையீடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது. எந்தச் சார்புமின்றி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மரண தண்டனை அல்ல தாமதமற்ற நீதிதான் குற்றவாளிகளைப் பயமுறுத்தும் பெரிய தண்டனை.

ஆனால் சட்டம் மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வல்ல.

"பெண்ணின் உடல் மீதான உரிமை அவளுக்கு மட்டுமே உண்டு. பெண்ணைப் புணர அவள் சம்மதமே அடிப்படை" - இந்த இரண்டும் பற்றிய புரிதலும் உடன்பாடும் தான் வன்புணர்வு தடுக்கும் வழி.

Comments