தனித்துப் போட்டியிடும் தேசிய காங்கிரஸின் தென்னிலங்கை வியூகம் | தினகரன் வாரமஞ்சரி

தனித்துப் போட்டியிடும் தேசிய காங்கிரஸின் தென்னிலங்கை வியூகம்

பாராளுமன்றத் தேர்தல் களம் நாளாந்தம் சுறுசுறுப்படைந்து வருகையில் கிழக்கில் இடம்பெறும் கட்சித் தாவல்கள் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது. 196 எம்பிக்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இப்பொதுத் தேர்தலில் தமிழ் மொழி பேசுவோர் பெரும்பான்மையாகவுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 29 எம்பிக்களே தெரிவு செய்யப்படுவர். வடக்கில் 13 பேரும் கிழக்கில் 16 பேருமே தெரிவாவர். ஏனைய 67 எம்பிக்களும் தென்னிலங்கையின் 17 மாவட்டங்களில் தெரிவு செய்யப்படுவர். இவர்களைத் தெரிவு செய்வதற்கு கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் 29 தேசிய பட்டியல்களும் பகிர்ந்தளிக்கப்படும். இதுவல்ல விடயம். 29 எம்பிக்களைத் தெரிவு செய்யும் வடக்கு கிழக்கில் அதிக போட்டிகள் நிலவுவது ஏன்?. சிறுபான்மையினரின் உரிமைக்கு குரல் கொடுப்பதாகக் கூறும் சகல தமிழ்,முஸ்லிம் தலைமைகளும் இம் மாகாணங்களைத் தளமாகக் கொண்டியங்குவது ஏன்? இச்சிறிய நிலப்பரப்புக்குள் செயற்படும் இத்தலைமைகள் எப்படித் தீர்மானிக்கும் சக்திகளாகத் திகழலாம். திகழ்ந்திருந்தால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இத்தலைமைகளால் ஜனாதிபதியைத் தீர்மானிக்க முடியாமல் போனதே ஏன்?  நாட்டின் மொத்த வாக்காளர் தொகையில் (ஒரு கோடியே 63 இலட்சம்) வெறும் 17 இலட்சம் வாக்குகள் உள்ள வடக்கு, கிழக்கு மாகாணக் கட்சிகள் எவ்வாறு தேசிய தலைமைகளாகத் திகழ்வது? இவைகள்தான் இன்றைய கேள்விகள். முஸ்லிம்களின் அதிக வாக்குள்ள முதல் ஐந்து மாவட்டங்களில் அம்பாறையும், திருகோணமலையுமே உள்ளன. இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் இடங்களில் முறையே தென்னிலங்கை மாவட்டங்களான கொழும்பு, கண்டி, புத்தளம் மாவட்டங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே சிறுபான்மையினர் பெரும்பான்மையாக உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்து நின்று எம்பியைப் பெறுவதால் மாத்திரம் தேசிய தலைமையாகலாமா? கொழும்பு மாவட்டத்தில் 2,71719, கண்டி மாவட்டத்தில் 1,96347 புத்தளம் மாவட்டத்தில் 1,52280 முஸ்லிம் வாக்குகள் உள்ள நிலையில் பெரும்பான்மைக் கட்சிகளுடன் கலந்து போட்டியிடுவது எவ்வாறு தனித்து வமாகும். இது தவிர முஸ்லிம்கள் திரட்சியாக வாழும் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் கூட்டிணைவதேன்.? தேசியப் பட்டியலுக்காகவா?அல்லது எதிரிகளை வீழ்த்தவா? 

இந்தக் கூட்டிணைவுகளில் எதிரிகளை வீழ்த்தினாலும் பேரம் பேசலை இழந்ததாகவே முஸ்லிம் தலைமைகள் நோக்கப்பட்டன. இவ்விடத்தில் எம்பிக்களல்ல பிரதானம் வாக்கு வங்கிகளை நிரூபிப்பதே சமூகங்களின் அங்கீகாரங்களை அடையாளப்படுத்தும். சமூக, இன, மதச்சார்பிலான கட்சிகளை தென்னிலங்கை சிறுபான்மைச் சமூகங்கள் புறந்தள்ளும் இன்றைய சூழ்நிலையில், தேசிய காங்கிரஸின் வருகை இப்பிராந்திய மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது. இங்கு இன்னுமொன்றையும் சிந்திப்பது சிறந்தது.

சமூகம், இனம், மத அடையாளத்தால் மாத்திரம் எந்தவொரு கட்சியும் தேசிய அந்தஸ்த்தைப் பெறமுடியாது. தேசத்தையும் மக்களையும் சிந்தனையில் செயற்படுத்துதல், சகல சமூகங்களின் அங்கீகாரத்தைப் பெறுவதும் தேசிய அந்தஸ்துக்கு அவசியம். இதனால்தான் தேசிய காங்கிரஸ் நாடு முழுவதும் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. ஏறெடுத்தும் பார்க்கப்படாதிருந்த தேசிய காங்கிரஸின் தேசிய சிந்தனைகள், காலத்தால் எழுந்த தேவைகளாலே  இன்று உயிரூட்டப்படுகிறது. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் எழுந்த சந்தேகங்கள்,தனித்துவ தலைமைகள் மீதான குற்றச்சாட்டுக்கள்,விமர்சனங்களால் அச்சம், விரக்தியிலுள்ள தென்னிலங்கைச் சிறுபான்மையினர், 

மாற்று வழிகள் பற்றி சிந்திப்பதும் தேசிய காங்கிரஸுக்கு வாய்ப்பாகி வருகிறது. அதிகாரங்கள், ஆள்புல எல்லைகள், சுய ஆட்சிகளுக்குள் மக்களை வரையறுக்காத, வேறுபடு த்தாத, தேசிய காங்கிரஸின் தேசிய சிந்தனைள்தான் முழு முஸ்லிம்களையும் வாழ வைக்கும்.

தென்னிலங்கை மாவட்டங்களில் தேசிய காங்கிரஸ் பெறவுள்ள வாக்குகள் சக சமூகங்களுடன் முஸ்லிம்கள் ஒன்றித்து வாழ விரும்புவதையும் சிங்கள, தமிழ் மக்கள் தேசிய காங்கிரஸ் தலைமையில் நம்பிக்கை வைத்துள்ளமைக்கான அடையாளங்களையும் பிரதிபலிக்கவுள்ளன. கொழும்பு, கண்டி, புத்தளம், குருநாகலை, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் முறையே 271719, 196347, 152280, 117697, 114851, 114422 முஸ்லிம் வாக்குகளில் கணிசமான தொகைகள் தேசிய காங்கிரஸின் குதிரைச் சின்னத்துக்கு அளித்து, பிரிவினைவாதச் சித்தாந்தங்களைத் தோற்கடித்ததாகக் காட்டுவதே மூத்த முஸ்லிம் தலைவர்கள் வித்திட்ட சமூக ஐக்கியம் இன நல்லிணக்கம் என்பவற்றுக்கு மீண்டும் வித்திடும். 

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சியின் இழுபறிக்குள் இங்குள்ள சிறுபான்மை கட்சிகளை ஆதரிப்பதில் அர்த்தமில்லை. ஆகக் குறைந்தது ஒரு தசாப்தத்திற்கு எதிர்க்கட்சியில் இருந்து இவர்களால் எதைச் சாதிக்க முடியும். பெரும்பான்மைச் சமூகத்தின் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ள தனித்துவ கட்சிகளின்  வேட்பாளர்கள் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியை பௌத்தர்கள் ஆதரிப்பதும் சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. 

எனவே முஸ்லிம்களுக்கு இன்று தேவைப்படும் சகோதர சமூகங்களுடனான ஐக்கியம், அந்நியப்படுத்தப்படும் ஆபத்துக்கள், அவசரமாகத் தேவைப்படும் அபிவிருத்தி, தொழில்வாய்ப்புக்களைக் கருதியும் பிரிவினையில் உடன்பாடில்லை என்பதைப் பெரும்பான்மைச் சமூகத்திற்குப் புரிய வைக்கவும் முஸ்லிம்களுக்குள்ள தெரிவு தேசிய காங்கிரஸ்தான். அம்பாரை மாவட்டத்தை பிரித்து முஸ்லிம்களுக்கு வழங்குவதை ஆதரித்துக் கொண்டு கண்டியிலோ, குருநாகலிலோ முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாது. மதவாதத்தை தூக்கிப்பிடித்து, அடிப்படைவாதத்தை தீவிரப்படுத்தி, ஆத்மீக உணர்வுகளை விளம்பரமாக்கி,  சமூக உணர்ச்சிகளைக் கிளர்ச்சியூட்டும் தனித்துவ தலைமைகளால் களுத்துறை, கம்பஹா, பதுளை, காலி உள்ளிட்ட தென்னிலங்கை முஸ்லிம்களின் இருப்புக்களை எந்த மூலையிலும் உறுதிப்படுத்த முடியாது. போர் நடந்த காலங்களில் தென்னிலங்கை சகோதரத் தமிழர்களுக்கு நேர்ந்தவைகள் அழியாத வடுக்கள்தான்.

இங்கு இன்னுமொன்றையும் சிந்திக்க வேண்டி உள்ளது.  தென்னிலங்கையில் தனித்துப் போட்டியிடுவது ஈஸ்டர் தாக்குதல் எதிரொலிகளுக்கு மத்தியில் அபாயத்தை ஏற்படுத்தாதா என்பதே அது? இந்தத் தாக்குதல் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள, விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள தலைவர்களின் கட்சிகள் போட்டியிடுவதும் அதை அதரிப்பதுமே முஸ்லிம்களுக்கு ஆபத்தாக அமையும். தேசப்பற்று, சமூக இணக்கப்பாடு, பிரிவினைக் கோட்பாடுகளைப் புறந்தள்ளும் தேசிய காங்கிரஸின் தென்னிலங்கை வருகை இம்மக்களுக்கு அரணாகவே அமையும்.

ஏ.ஜீ.எம்.தௌபீக்

Comments