பன்முக ஆளுமை கொண்ட எழுத்துக்கலைஞன் செம்பியன் செல்வன் | தினகரன் வாரமஞ்சரி

பன்முக ஆளுமை கொண்ட எழுத்துக்கலைஞன் செம்பியன் செல்வன்

ஈழத்தமிழ் இலக்கிய உலகின் புத்தெழுச்சிக் காலமாகத் திகழ்ந்த 1960களுக்குப் பிந்திய காலத்தில் ஒரு முக்கியமான படைப்பாளியாகத் திகழ்ந்தவர் செம்பியன் செல்வன். 

சிறுகதை, குறுங்கதை, உருவகக் கதை, நாவல், இதழியல், அரங்கியல், ஆய்வு, உரைச்சித்திரம் எனப் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளியாகவும் இலக்கியச் செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர் இவர். 

இலக்கிய உணர்வு சிறிது சிறிதாக ஊற்றெடுத்து உள்ளூணர்வில் வியாபிக்க இவரது இளமைக்கால பள்ளித் தோழர்களும் ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்திருக்கின்றனர். 

யாழ்ப்பாணம் திருநெல் வேலியில் 1943ஜனவரி முதலாம் திகதி பிறந்தவர் செம்பியன். (01.01.1943) தந்தை பெயர் ஆறுமுகம். தாயார் தமர்தாம்பிகை. பெற்றோர் இவருக்கிட்ட பெயர் இராஜகோபால். யாழ்ப்பாணம் இந்து தமிழ் ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், யாழ் இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் பெற்றவர். கம்யூனிஸ்ட் கார்த்திகேயன் என்றே அறியப்பட்ட கார்த்திகேசு மாஸ்டர், ஏரம்ப மூர்த்தி போன்ற ஆசிரியப் பெருந்தகைகளின் மாணவனாகத் திகழும் பாக்கியமும், கவிஞர் சோ. பத்மநாதன், து. வைத்தியலிங்கம், முனியப்பதாசன், செங்கை ஆழியான் போன்ற சக மாணவர்களுடன் பழகும் வாய்ப்பும் இளம் வயதிலிருந்தே எழுத்து இலக்கியம், வாசித்தல், ரசித்தல் என்பவைகள் இவரை ஈர்க்கத் துணையாக இருந்திருக்கின்றன. 

பட்டப் படிப்பிறக்காக 1960ல் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு இவர் சென்ற காலம் ஈழத்து இலக்கியம் ஒரு எழுச்சியுடன் பீறிட்டுக் கிளம்பிய காலம். அந்த எழுச்சிமிக்க அறுபதுகளில் பேராதனை பல்கலைக்கழகத்துக்குள் இவருடன், செங்கை ஆழியான், துருவன், அங்கையன் கைலாசநாதன், செ. கதிர்காமநாதன், செ. யோகநாதன், கலாபரமேஸ்வரன், நவசோதி, குந்தவை, என்று இலக்கிய ஆர்வமும் எழுத்தாற்றலும் மிகக்தொரு இளையதலைமுறைப் பட்டாளமும் உள் நுழைந்திருக்கிறது. 

பட்டதாரி மாணவர்களாக பயின்று கொண்டிருந்த, செங்கையாழியான், நவசோதி, செம்பியன் செல்வன் ஆகியோர் இணைந்து பல்கலை வெளியீடு என்னும் அமைப்பை உருவாக்கி ஆண்டுக்கொரு சிறுகதைத் தொகுதியை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டனர். கதைப்பூங்கா, விண்ணும் மண்ணும், காலத்தின் குரல்கள், யுகம், என்னும் நான்கு தொகுதிகளையும் வெளியிட்டனர். 

விண்ணும் மண்ணும் என்னும் இரண்டாவது தொகுதி செம்பியன் செல்வனால் தொகுக்கப்பட்டது என்பது குறிப்பிடக்கூடியது. ஒரு புவியியல் பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய செம்பியன் செல்வன் திருகோணமலை சென் ஜோசப் கல்லூரியிலும் செட்டிக்குளம் மகாவித்தியாலயத்திலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். யாழ் செங்குந்தா இந்துக் கல்லூரியின் அதிபராக சிலகாலம் பணியாற்றிய பின் யாழ்ப்பாணம் கோட்டக்கல்வி அதிகாரியாகப் பதவியேற்று ஓய்வு பெறும்வரை கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். 

அறுபதுகளில் ஒரு சிறுகதைப் படைப்பாளியாகவே எழுத்துப்பிரவேசம் செய்த இவருடைய பன்முக இலக்கியச் செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெறுவது இவரது சிறுகதைகளே என்பது இலக்கிய உலகின் பொதுவான கணிப்பு.  

பேராசிரியர் கைலாசபதி கூட பல்வேறு ஆக்க முயற்சிகளில் ஈடுபடுபவர் அவர் எனினும் சிறுகதை எழுத்தாளர் என்றகோதா விலேயே அவரைப் பலரும் அறிவர். ஏறத்தாழ இருபது வருடமாக சிறுகதை எழுதிவருகின்றார். அவரது சிறுகதைகளில் நடையின் தனித்துவத்தை ஆங்காங்கே காணக்கூடியமாக இருக்கிறது...’ என்று குறிக்கின்றார். (நாணலின் கீதம் – முன்னுரை) 

இந்த நாணலின் கீதம் 1982ல் பாரதி நூற்றாண்டு விழா நினைவாக என்னும் குறிப்புடன் வெளிவந்த ஒரு வித்தியாசமான நூல். வசனகவிதையின் சாயலில் கவித்துவம் வாய்ந்த இச்சொற்சித்திரங்கள் ஒரு பரிசோதனை முயற்சி என்கின்றார் கைலாசபதி தனது முன்னுரையில். அபிராமி பதிப்பகம் செம்பியன் செல்வனின் இந்தச் சிறு நூலை 1982ல் வெளியிட்டிருக்கிறது. இந்த 50பக்கச் சிறுநூலுக்கான சிறப்புக்களில் ஒன்று பேராசிரியர் கைலாசபதியின் பத்துப் பக்கமுன்னுரை. 

ஈழநாடு தனது பத்தாண்டு நிறைவினையொட்டி நடத்திய சிறுகதைப் போட்டியிலும், கலைச்செல்வி சிறுகதைப் போட்டியிலும் முதற் பரிசு பெற்றுள்ள செம்பியன் செல்வனின் ‘சர்ப்பவியூகம்’ சிறுகதைத் தொகுதி 2003ஆம் ஆண்டுக்கான அரசசாகித்திய விருதினைப் பெற்றுள்ளது. ‘அமைதியின் இறகுகள் இவருடைய இன்னொரு சிறுகதை நூல். குறுங்கதைகள், உருவகக் கதைகள் ஆகியவற்றிலும் திறமை காட்டியவர் இவர். ‘குறுங்கதைகள் நூறு’என்னும் தொகுதி வெளிவந்திருக்கிறது. உருவகக் கதைகள் தொகுக்கப்பட்ட நிலையில் போர்க்காலச்சூழலால் அழித்து போயுள்ளது. 

நாவல்துறையிலும் பெரும் ஈடுபாட்டுடன் செயற்பட்டவர் இவர். வீரகேசரி நடாத்திய பிரதேச நாவல் போட்டியில் இவருடைய ‘நெருப்பு மல்லிகை’ யாழ்ப்பாணப் பிரதேசத்துக்கான முதல் பரிசு பெற்ற சிறந்த நாவலாகத் தெரிவானது. தாளகத்தின் கானம், நெருப்பு மல்லிகை, விடிவைத் தேடும் வெண்புறாக்கள், ஆகியவை நூலுருப்பெற்ற இவரது நாவல்கள். 

நாடகத்துறையில் கணிசமான அளவு பங்காற்றியவர் இவர். கலைக்கழநாடக எழுத்துப் போட்டியில் தொடர்ந்து நான்கு வருடம் முதற்பரிசு பெற்றவர் செம்பியின் செல்வன், இந்திரஜித் 1965. சின்ன மீன்கள் 1967, எரியும் பிரச்சினைகள் 1968, இருளில் எழும் பெருமூச்சு 1969, ஆகியவை கலைக்கழகப் பரிசு பெற்றவை. 

‘விடிய இன்னும் நேரமிருக்கு’ ஈழநாடு நடத்திய ஓரங்க நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. ‘மூன்று முழு நிலவுகள்’ இவருடைய நாடக நூல். 

இலங்கை கலாசாரப் பேரவையின் நாடகப் பிரிவின் செயலாளராக 5ஆண்டுகள் பணியாற்றியவர் செம்பியன் செல்வன். (1977--1983) 

இவருடைய இலக்கியப் பங்களிப்புங்களின் உச்சமாகத் திகழ்வது இவருடைய இதழியல் மற்றும் பதிப்புத்துறை செயற்பாடுகளே. 1966லிருந்த வெளிவரத்தொடங்கிய விவேகி குறுகிய காலத்தில் ஆற்றியுள்ள பணிகள் வரலாற்றுமுக்கியத்துவம் கொண்டவை. விவேகி மற்றும் அமிர்தசங்கை ஆகியவவை இவருடைய ஆசிரியத்துவத்தில் வெளிவந்து வரலாறு படைத்த இதழ்கள். ஈழத்தமிழ் சிறுகதை மணிகள் இவர் பதிப்பித்த நமது சிறுகதை முன்னோடிகள் பற்றிய வரலாற்று ஆய்வு நூல்.

தெளிவத்தை ஜோசப்

Comments