தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தருணத்தைப் பயன்படுத்துவார்களா? | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தருணத்தைப் பயன்படுத்துவார்களா?

"கூரை மீதேறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போகிறேன், என்றானாம்" இந்தப் பழமொழி இப்போதைக்குப் பொருத்தமானது என்பதும் எதற்குப் பொருத்தமானது என்பதும் எல்லோருக்கும் புரியும். எடுத்த எடுப்பில் இது முன்னாள் நீதியரசர் கனகசபாபதி விசுவலிங்கம் விக்ேனஸ்வரன் பற்றியதுதான் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், இந்தப் பழமொழியை அவருக்கு முதலில் பொருத்திச் சொன்னவர் வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா. அஃது இரண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டு, பொலிஸ் அதிகாரத்தைத் தமக்கு  (மாகாண சபைக்கு) வழங்கினால், வடக்கில் குற்றச் செயல்களை இரண்டு மாதங்களில் அடக்கிக் காட்டுவதாக முன்னாள் முதலமைச்சர்  சி. வி. விக்கினேஸ்வரன் அறிக்ைகவிட்டிருந்தார். அதற்குத்தான் தவராசா இந்தப் பழமொழியைக் கூறியிருந்தார்.

மாகாண சபையால் செய்யக்கூடிய சிறிய பணிகளைக்கூடச் செய்யாமல் காலத்தை வீணடித்தவர், பொலிஸ் அதிகாரம் கிடைத்தால் மட்டும் எதனைச் செய்யப்போகிறார் என்று தவராசா கேள்வி எழுப்பியிருந்தார்.

கடந்த நான்கு வருடங்கள் ஒன்பது  மாதங்களாக (2018) மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாடுகளை வினைத்திறனற்றதாகவும் அதன் உச்சக்கட்டமாக அதன் அமைச்சரவையின் செயற்பாடுகளைக் கூட நிறுத்தி வைக்கும் அளவிற்கு மிகவும் கெட்டித்தனமாக செயற்பட்ட முதலமைச்சர் நிச்சயமாக வன்முறையை அடக்கும் விடயத்திலும்   அவ்வாறுதான் செயற்பட்டிருப்பார்.

2016இறுதிப்பகுதியில் அரச அதிபரினால் முச்சக்கரவண்டிகளுக்கு தூரக்கணிப்பான் (மீற்றர்) பொருத்தப்படல் வேண்டும் என்ற ஒழுங்கு விதி முறையினைக் கொண்டு வரவிருந்த வேளையிலே போக்குவரத்து தொடர்பான விடயங்கள் மாகாண சபையின் அதிகார வரம்பிற்குள் வருவதால், அவ் விடயப்பரப்பு தொடர்பான விடயங்களில்  அரச அதிபரைத் தடையிட வேண்டாம் என்று கடிதம் எழுதப்பட்டதன் நிமித்தம் அரச அதிபர் அம் முயற்சியினைக் கைவிட்டார். கொழும்பில் 50ரூபாய் செலவில் செல்ல வேண்டிய தூரத்தை யாழில் முச்சக்கர வண்டியில் செல்வதானால் ரூ.250.00வரை செலுத்த வேண்டியுள்ளது என்று தெரிவித்திருந்த தவராசா, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைக்குத் தற்போதுள்ள அதிகாரங்களையே சரிவர செயற்படுத்தாமல் ஐந்து வருடங்களை வீணடித்தவர், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் விடயத்திலும் அவ்வாறுதான் செயற்படுவார் என்பதே தவராசாவின் வாதமாக இருந்தது.

மாகாண சபையில் ஐந்து வருடங்களை வீணடித்தவர் இப்போது பாராளுமன்றத்திலும் அதே கால வீணடிப்பைச் செய்யப்போகிறாரா? என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. மாகாண சபையில் முதலமைச்சராக இருந்தபோது தாம் சார்ந்த கட்சியை விமர்சிப்பதற்கே அவருக்கு நேரம் போதாமல் இருந்தது. இறுதியில் கூட்டமைப்பையும் பிளவுறச்செய்து எல்லோருமாகப் பூண்டுடன் இல்லாமற்போவதற்கு வழிவகுத்திருந்தார். நல்லவேளையாக, தமிழ் மக்கள் சுதாகரித்துக்ெகாண்டார்கள். சரி, மாகாண சபையில்தான் எதுவும் செய்ய முடியாமல் போனது என்றாலும், இப்போது பாராளுமன்றத்திற்கு வந்திருப்பவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

இலங்கையில் மூத்த குடிகள் யார் என்பதை அறிந்துகொள்வதற்கு ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்ைக விடுத்திருக்கிறார். விக்கினேஸ்வரனின் கூற்றுக்குச் சிங்கள அரசியல்வாதிகள் என்ன கருத்தைத் தெரிவித்து வந்தாலும், வடக்கிலும்  கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் வாழும் தமிழ் மக்களின் குறை நிறைகள் என்ன, அந்தக் குறைகளைப் போக்குவதற்குப் பாராளுமன்றத்தின் ஊடாக யாது செய்யலாம் என்பதையல்லவா முதலில் சிந்தித்திருக்க வேண்டும். அதனை விடுத்து தமிழ் மொழியை ஆராயும் நேரமா, இது? என்று எல்லோரும் கேட்கிறார்கள்.

உண்மையில் தமிழ் உறுப்பினர்கள் என்ன நோக்கத்திற்காகப் பாராளுமன்றம் வந்தார்கள்? உரை நிகழ்த்துவதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைக் காத்திரமாகப் பயன்படுத்திக்ெகாள்வதா, அல்லது சர்ச்சையை உருவாக்கி அதன் மூலம் ஊடகப் பிரபல்யத்தைத் தேடிக்கொள்வதா? சமஷ்டி, தீர்வுத் திட்டம், வடக்கு, கிழக்கு இணைப்பு, பதின்மூன்றாவது திருத்தம், பதின்மூன்று பிளஸ், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிரஸ்தாபித்துக்ெகாண்டு காலத்தை நகர்த்திச் செல்லும் நிலையில், இப்போது எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றித் தமிழ்க் குடியின் தொன்மையை ஆராய்வதற்கு ஆணைக்குழு கோருவதென்பது சிறுபிள்ளைத்தனமான வேடிக்ைகயேயன்றி வேறென்னவாக இருக்க முடியும்? வடக்கு கிழக்கிற்கு வெளியிலிருந்து சென்றிருக்கும் தமிழ் உறுப்பினர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தைத் தவிர வேறு தலைப்பே இல்லை. அதனைவிடக் காத்திரமான விடயங்களைப் பற்றிப் பேசிப் பாராளுமன்றத்தின் ஊடாகத் தீர்வு காணும் வழிமுறைகளை ஆராய்வதுதான் வாக்களித்த  மக்களுக்குச் செய்யும் கைமாறாக அமையும்.

இயலுமாயின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கு நன்மைபயக்கும் விடயங்களில் விளைதிறனுடன் செயற்படுவதற்காகக் கிடைத்திருக்கும் இந்தத் தருணத்தை உரியவாறு பயன்படுத்திக்ெகாள்ளட்டும்!

Comments