தமிழ் அரசியல் தலைமைகள் மாயை அரசியலை மறக்கட்டும் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் அரசியல் தலைமைகள் மாயை அரசியலை மறக்கட்டும்

அரசியலமைப்பின் இருபதாவது நகல் வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அடுத்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும்; நிறைவேற்றப்படும்! 

பத்தொன்பதாவது திருத்தத்திற்குக் கையுயர்த்திய அனைவரும் இருபதாவது திருத்தத்திற்கும் தமது ஆதரவை வழங்கியுள்ளனர். பத்தொன்பதைக் கொண்டு வருவதற்கு முன்னின்று பாடுபட்டவர்களில் பெரும்பாலானோர், அந்தத் திருத்தத்தில் தவறுகள் உள்ளதை ஒப்புக்ெகாண்டுள்ளார்கள். இப்போது இருபதிலும் குறை இருக்கிறது என்று குரல் எழுப்புகிறார்கள். இதில் முக்கியமானவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன். சிறுபான்மை மக்களைப் பாதிக்கின்ற; ஆபத்தை ஏற்படுத்துகின்ற சரத்துகள் அதிகம் இருபதில் காணப்படுவதாக அவர் சொல்கிறார். ஆனால், இருபதின் மூலம் ஏற்படும் நன்மையும் தீமையும் நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் சாரும். இதில் சிறுபான்மை பெரும்பான்மை என்று எதுவும் இல்லை என்கிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் அருளானந்தம் சர்வேஸ்வரன். 

உண்மையில் இருபதின் மூலம் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் மீள உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு இந்த நிறைவேற்றதிகாரம்தான் பாதுகாப்பானது என்று சொல்லப்பட்டது. எனினும், 1990ஆம் ஆண்டிலிருந்து அதனை நீக்குவதாகப் பலரும் வாக்குறுதி அளித்தார்கள். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கதான் முதன் முதலில் நிறைவேற்றதிகாரத்தை நீக்குவதாகக் கூறினார். ஆனால், நிறைவேற்றதிகாரத்தை நீக்குவதால் ஏற்படும் பாதிப்பைப் புரிந்துகொண்டதால், அவர் அதைச் செய்யவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவும் நிறைவேற்றதிகாரத்தை நீக்குவதாகச் சொல்லியிருந்தார். ஆனால், அதன் ஆபத்தைப் புரிந்துகொண்டதால், அவரும் செய்யவில்லை. இறுதியாக 2015இல் போட்டியிட்ட தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன, எந்தவிதமான பகுப்பாய்வுகளையும் மேற்கொள்ளமல், நிறைவேற்றதிகாரத்தை நீக்கினார். அதன் விளைவால்தான் நாடு அதலபாதாளத்திற்குச் சென்றது. நாட்டின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கும் இல்லாமல், பிரதமருக்கும் இல்லாமல் திரிசங்கு சொர்க்க நிலைக்குச் சென்றது. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளானது. பயங்கரவாதிகள் தேசிய பாதுகாப்பு வலையமைப்பைப் பலவீனப்படுத்திக் குண்டுத் தாக்குதலை மேற்கொள்ளவும் வழிவகுத்தது. நாட்டு நிர்வாகத்தில் சிக்கலை மாத்திரமன்றிப் புதிய புதிய நெருக்கடிகளையும் இந்தப் பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் உருவாக்கியது. எனவே, பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தில் சிறுபான்மையினருக்கென்று குறித்தொதுக்கப்பட்ட எந்தச் சட்டச் சலுகையும் கிடையாது. அதேபோல், இருபதாவது திருத்தச் சட்டத்தில் சிறுபான்மையினருக்குப் பாதிப்பான அம்சங்கள் இருப்பதாவும் சொல்ல முடியாது. அரசியல்வாதிகள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான ஒரு கருத்தியல் களமாகச் சில விடயங்களைப் பயன்படுத்திக்ெகாள்ள முயற்சிப்பதன் விளைவால்தான் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் உருவாகின்றன.  

உண்மையில் இருபதாவது திருத்தச் சட்டத்தில் உள்ளடங்கியிருக்கும் சில விடயங்கள் மாத்திரம் அர்த்தமில்லாமல் விமர்சிக்கப்படுகின்றன. அதில், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவருக்குப் பாராளுமன்றம் வர அனுமதித்தது தவறு என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், சிறுபான்மை தலைவர்கள் என்று சொல்லிக்ெகாள்கின்ற சிலரும் அதனை வரவேற்றிருக்கிறார்கள். அப்படி இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்ததால்தான், பிணைமுறியைக் கொள்ளையடித்த குற்றத்திற்காக சிலரைக் கைதுசெய்ய முடியாமற்போனது என்றும் விமர்சிக்கிறார்கள். அவ்வாறான விடயத்தைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனம் சார்ந்த துறைக்கு நியமனம் செய்கின்றபோது ஆற தீர ஆராய்ந்து செய்திருக்க வேண்டும். ஆனால், பாராளுமன்ற உறுப்பினராக வருபவர் மக்களின் வாக்குகளினால் வருபவர். ஆகவே, அர்ஜுன் மகேந்திரனையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து விமர்சிப்பது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுதற்குச் சமமாகும்.  

இருபதாவது திருத்தத்தில் நாட்டு நிர்வாகத்தைச் சீராக முன்னெடுப்பதற்குப் பல சரத்துகள் மீள உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒரு சில வாரங்களுக்கு முன்பு தமிழ் அரசியல்வாதிகள் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்து வந்தார்கள். தமிழ் மக்களுக்குத் தீர்வு காண்பதற்கு அதில் எதுவும் இல்லை, என்று குறைகளை மட்டுமே கூறி வந்த தமிழ் அரசியல் தலைமைகள் இப்போது இருபதாவது திருத்தம் பற்றியும் புளுகத் தொடங்கியிருக்கிறார்கள். பதின் மூன்றில் ஒன்றும் இல்லை என்று காலத்தை வீணடித்துக்ெகாண்டிருக்க, மற்றைய தரப்போ உள்ளதையும் பிடுங்கும் முயற்சியில் இருக்கிறது என்கிறார்கள். ஆக, தமிழ் தலைமைகள் மேலெழுந்தவாரியாக விடயங்களை அணுகாமல், அறிவுபூர்வமாகவும் ஆழமாகவும் விடய பரப்புகளைப் பற்றிச் சிந்தித்து மக்களுக்கும் நாட்டுக்கும் பயனுள்ளவர்களாக இனியாவது செயற்பட வேண்டும் என்பதுதான் எல்லோரினதும் எதிர்பார்ப்பு. ஆகவே, மக்களை இனியும் மாயைக்குள் மறைத்து வைத்து அரசியல் செய்யும் நடவடிக்ைககளைக் கைவிட்டு உண்மையான அரசியல் செல்நெறியை முன்னெடுக்க வேண்டும்! 

Comments