கண்டியை அதிரவைத்தவை நிலநடுக்கங்களா? | தினகரன் வாரமஞ்சரி

கண்டியை அதிரவைத்தவை நிலநடுக்கங்களா?

அண்மையில் கண்டியில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் அனைவரையும் பயப்பீதிக்குள்ளாக்கியது. ஆனால் ஆகஸ்ட் மாதம்  29ஆம்  திகதி இரவு  7.00மணியளவில் கண்டி பிரதேசத்தில் உணரப்பட்ட நில அதிர்வானது, பூமியின் அடியிலுள்ள நிலத்தட்டுகளின் அதிர்வினாலோ  அல்லது இயற்கையான நில நடுக்கத்தாலோ ஏற்பட்டதல்ல   என, புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்திருக்கின்றது. குறித்த நில அதிர்வு பள்ளேகலை மற்றும் மஹகனதராவ நில நடுக்க அவதான நிலையங்களில் சிறிய அளவில் பாதிவாகியுள்ளதாகவும், பணியகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 29.08.2020ஆம் திகதி ஏற்பட்ட நில அதிர்வு குருதெனிய, மாரகம, அநுரகம, மைலபிட்டி பகுதி பிரதேசவாசிகளால் உணரப்பட்டதோடு, 02.09.2020ஏற்பட்ட சிறியளவிலான அதிர்வு அம்பகோட்டை மற்றும் அலுத்வத்த ஆகிய பிரதேசங்களில் ஓரளவு உணரப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக  புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தைச் சேர்ந்த 06புவிச்சரிதவியலாளர்கள் மற்றும் நில அதிர்வு நிபுணர்களைக் கொண்ட இரண்டு குழுக்கள் ஆராய்ந்து வருகின்றன. 

இந்த நில அதிர்வு நிலைமைகள் புவியின் நிலத்தட்டுகள் மூலம் உருவானவை அல்ல என்பதை உறுதிப்படுத்துவதாகவும், விடோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகே பலவீனமான பாறைகள் அல்லது பாரிய சுண்ணாம்புக் கற்பாறைகள் வீழ்ந்தததால் அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் எனும் கோணத்தில் தற்போது ஆய்வு செய்யப்படுவதாகவும், புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது.  

திகனையை சுற்றி தெல்தெனிய விதியில் சுண்ணாம்பு கற்பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றிலிருந்தே அதிகளவு சுண்ணாம்பு எடுக்கப்படுகின்றது. பல டொலமைட் கம்பனிகள் இப்பகுதியிலேயே அமைந்துள்ளன. கம்பனிகள் அதிகமாக சுண்ணாம்பை எடுப்பதால் அங்கு ஏற்படும்  குழிகள் ஊடாக நீர்கசிந்து சுண்ணாம்புப் பாறை நிலத்தில் அரிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் அரிப்புக் காரணமாக ஏற்படும் குழியில் நிலத்தாழ்வு ஏற்பட வாய்புண்டு. அதே போல் விக்டோரியா நீர்த்தேக்கத்திலும் இவ்வாறு சுண்ணாம்பு பாறையில் நீர் கசிவதாலும் நில நடுக்கங்கள் ஏற்படலாம். அதுமாத்திரமல்ல மகாவலி கங்கையின்  மறுகரையில் விஹாரகம மாவத்தையின் பல இடங்களிலும் ரந்தெனிகல நீர்த்தேக்கம் வரைகருங்கல் உடைக்கும்  பாரிய நிறுவனங்கள் பல காணப்படுகின்றன. கருங்கல்லை  உடைக்கப் பயன்படும் டயனமைட் வெடி காரணமாகவும் அதிர்வுகள் ஏற்றபடலாம். இப்பகுதியில் இவ்வாறு  கல்உடைப்பது  தடை செய்யப்படவேண்டும். சிலர் களவாக இத் தொழிலை இன்னமும் மேற்கொண்டு வருகின்றனர்.  

நிலநடுக்கம் மூன்று வகையான புவித்தட்டு அசைவுகளால் ஏற்படும். சாதாரண முறை, மேற்தள்ளல் முறை மற்றும் சமாந்தர அசைவாகும். சாதாரண மற்றும் மேற்தள்ளல் முறைகளில் ஒரு புவித்தட்டு மேல் நோக்கியும் மற்றையது கீழ்நோக்கியும் அசையும். சமாந்தர அசைவில் இரண்டு புவித்தட்டுக்கள் சமாந்தரமாக உராய்வுடன் செல்லும். இவ் அனைத்து புவித்தட்டு அசைவுகளும் புவியின் மேலோட்டுக்ளுக்குக் கீழுள்ள உருகிய பாறைக் குழம்பின் அசைவுகளாலே இடம்பெறும். புதிதாக புவி மேலோடு உருவாகும் இடங்களான புவித்தட்டு விலகற் பிரதேசங்களில் சாதாரண முறை அசைவு இடம்பெறும். இம்முறையில் ஏற்படும் நிலநடுக்கம் பொதுவாக 7ரிக்டரைத் தாண்டாது. மேலெழும்பல் அசைவு முறையால் ஏற்படும் நிலநடுக்கங்களே அதிக ரிச்டர் அளவோடு அதிக அழிவை ஏற்படுத்துவனவாகும். புவித்தட்டு அசைவுகளைத் தவிர பாறைகளின் அசைவுகளால் சிற்சிறு நிலநடுக்கங்கள் ஏற்படும். நிலநடுக்கம் , பூகம்பம், அல்லது பூமி அதிர்ச்சி, என்பது   அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வாக இருக்கும்.  

இந்த அதிர்வு  அளவை மூலம் அளக்கப்படுவதோடு 7ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தும். இவ்வாறான அதிர்வு பள்ளேகலையில் ஏற்படவில்லை என்றே புவிச்சரிதவியலாளர்கள் மற்றம் காலநிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு காணப்படும்  ஐந்து காலநிலை அவதான நிலையங்களிலும் இவ்வாறு நில அதிர்வு பதிவு செய்யப்படவில்லை 

 பூமியின் மேற்பரப்பு பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் தட்டுக்களாக உள்ளன. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு தட்டுக்கள் மிகப் பெரியவையாகும், குறைந்தது ஒரு டசன் சிறிய தட்டுக்களும் உள்ளன. இந்த ஏழு பெரும் தட்டுக்களில் ஐந்து   சமுத்திரப் பகுதிகளும் அடங்குகின்றது. சுமார் 80கி.மீ. வரை தடிப்புக் கொண்டதாக இருக்கிறது. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் தட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது. இந்த தட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13செ.மீ. வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த தட்டுக்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை. ஒரு நிலநடுக்கம் நிலச்சரிவுகளையும் சிலசமயம் எரிமலையையும் ஏற்படுத்தும்

ஒரு நிலநடுக்கத்தின் அளவுக்கு வரையறை ஏதுமில்லை என்றாலும் வரலாற்றில் பதிவான மிக பெரிய நிலநடுக்கங்கள், 9.0ரிக்டருக்கும் கூடுதலானவையே பெரும் பாதிப்பை ஏற்படுத்துவன.  2011ஆம் ஆண்டு செண்டாய், ஜப்பானில் ஏற்பட்ட  நிலநடுக்கமானது இதுவைரை  பதிவான நிலநடுக்கங்களில் வலுவான நிலநடுக்கம் இதுவாகும். ஆழமற்ற நிலநடுக்கங்களே அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை ஆகும்.  

ஒவ்வொரு வருடமும் 5,00,000நிலநடுக்கங்கள் புவியில் ஏற்படுகின்றன. இவற்றில் 1,00,000நிலநடுக்கங்கள் மக்களால் உணரப்படுகின்றன. புவியின் அனைத்துப் பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

எனினும் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அரிதாகவே ஏற்படுகின்றன. உலகின் 90%இற்கும் அதிகமான பூகம்பங்கள் பசுபிக் சமுத்திரத்தை அண்டிய பகுதிகளிலேயே உருவாகின்றன. நிலநடுக்கத்தின் வீரியத்தை  பதிவு கருவி மூலம் அளவிடலாம். இதில் ரிக்டர் அளவீடு பயன்படும். கட்டடங்களும் ஏனைய பல செயற்கையான அமைப்புகளும் அழிவுக்குள்ளாகும். இதன் தாக்கமானது நிலநடுக்கத்தின் அளவு, மையத்திலிருந்துள்ள தூரம் மற்றும் பிரதேசத்தின் புவியியல் தோற்றப்பாடு போன்ற காரணிகளால் வேறுபடக்கூடியது. 

நிலநடுக்கத்துடன் கூடிய கடும் புயல், எரிமலை வெடிப்பு, சுனாமி, காட்டுத்தீ போன்ற இயற்கை அனர்த்தங்களால் நிலத்தினதும் பனிப்பாறைகளினதும் உறுதித்தன்மை பாதிக்கப்படுவதால் மண்சரிவோ குளிர் காலநிலையுடைய இடங்களில் பனிச்சரிவோ ஏற்படுகின்றது. 

விலங்குகள் மற்றும் பறவைகளின் நடத்தை எறும்பு, கறையான் நடத்தைகளை ஆராய்ந்து சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் ஆனால் அவ்வாறான எவ்வித மாற்றங்களும் இதுவரை உணரப்படவில்லை என இப்பகுதி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.   

 

ஆர். மகேஸ்வரன்

Comments