விடாக் கண்டனும் கொடாக் கண்டனுமாக கண்ணாமூச்சி காட்டும் உணவுப் பொருள் உற்பத்தியும் இறக்குமதியும் | தினகரன் வாரமஞ்சரி

விடாக் கண்டனும் கொடாக் கண்டனுமாக கண்ணாமூச்சி காட்டும் உணவுப் பொருள் உற்பத்தியும் இறக்குமதியும்

இறக்குமதிப் பதிலீடு இலங்கைக்குப் புதிய ஒரு விவகாரமல்ல. 1948ல் டி.எஸ் சேனாநாயக்க அரசாங்கம் இறக்குமதிப் பதிலீட்டு உபாயத்தை விவசாய உற்பத்திகள் தொடர்பில் நடைமுறைப்படுத்த ஆரம்பித்தது. அக்காலப்பகுதியில் உலக சந்தையில் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்தமையால் இலங்கையின் சென்மதி நிலுவையின் மீது அதிக அழுத்தங்கள் ஏற்பட்டன. இலங்கை உணவுத் தேவைக்கு இறக்குமதிகளிலேயே பெரிதும் தங்கியிருந்தது. சனத்தொகை அதிகரிப்பு காரணமாக உணவுப் பொருட்களுக்கான கேள்வியும் இக்காலப்பகுதியில் அதிகரித்தது. 

அத்துடன் காலனித்துவ அரசாங்கம் இரண்டாம் உலக மகாயுத்த காலப்பகுதில் இலங்கை மக்களின் உணவுப் பாதுகாப்பை (food security) உறுதிசெய்ய அறிமுகப்படுத்திய உணவுப் பங்கீட்டுத் திட்டம் (foods rationing scheme) யுத்தம் முடிவுற்ற பின்னரும் தொடர்ந்தது. இலங்கை வாசிகள் ஒவ்வொருவருக்கும் மானிய விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதனால் உலக உணவுப்பொருள் விலை அதிகரிப்பு இலங்கை அரசாங்கத்தின் உணவு இறக்குமதிச் செலவினங்களை அதிகரித்து கஜானாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.  

எனவேதான் உணவு இறக்குமதிகளை உள்ளூர்  உணவுப் பொருட்களை பதிலீடு செய்வதன் மூலம் கட்டுப்படுத்தி அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் குறைத்து உணவில் தன்னிறைவை அடையலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்புடனேயே பல் நோக்கு அபிவிருத்தித் திட்டமான கல்லோயாத்திட்டம் (Gal Oya project) செயற்படுத்தப்பட்டது.

இலங்கையில் அரிசி மற்றும் சீனி உற்பத்தியை அதிகரிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். எனினும் இம்முயற்சிகள் வெற்றியளித்ததாகவோ இலங்கை உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவடைந்ததாகவோ  எந்தவிதமான சாட்சியங்களும் இதுவரை கிடையாது. அதன் பின்னர் 1956இல் பதவிக்கு வந்த அரசாங்கமும் 1970இல் பதவிக்கு வந்த அரசாங்கமும் கடுமையான இறக்குமதிப் பதிலீட்டை விவசாயத்தில் மட்டுமன்றி கைத்தொழிற்றுறையிலும் நடைமுறைப்படுத்தின.  

குறிப்பாக 1956இன் பின்னர் இலங்கையின் காங்கேசன்துறை, பரந்தன், வாழைச்சேனை, ஒருவல போன்ற இடங்களில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சீமெந்து இரசாயனம் காகிதம் இரும்புருக்குத் தொழிற்சாலைகள் இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழில்களாகவே ஆரம்பிக்கப்பட்டன. இவற்றின் நோக்கம் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதாகும்.  

அதே போன்று 1970இல் பதவிக்கு வந்த அரசாங்கம் ஒட்டுமொத்தமாக இறக்குமதிகளில் பெரும்பாலானவற்றைத் தடைசெய்து உள்நாட்டில் அவற்றை உற்பத்திசெய்ய முனைந்தது. விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் வண்ணம் அரச வங்கிகள் ஊடாக விவசாயக் கடன்களும் வழங்கப்பட்டன. அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையை எதிர்கொண்டமை,   நாட்டில் நிலவிய நெடுவரட்சி,  உள்நாட்டுப் புரட்சி போன்ற காரணங்கள் உள்நாட்டு விவசாயத்துறை குறித்து 1970களில் அதிக கரிசனை எழக் காரணமாகியது. காணிச் சீர்திருத்தங்கள் ஊடாக நிலமற்றோருக்கு நிலத்தைப் பகிர்ந்தளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இதன் ஓரங்கமாகவே கருதப்பட வேண்டும். 

அதுமட்டுமன்றி விவசாய விரிவாக்க சேவைகள் ஊடாக வளமாக்கிப் பிரயோகம் பீடைக்கட்டுப்பாடு மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகளினதும் புதிய விதையினங்களின் அறிமுகம் போன்ற நடவடிக்கைகள் மூலம் விவசாயத்துறைக்கு அரசாங்கத்தின் ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டன. 

இந்நடவடிக்கைகளின் விளைவாக உள்நாட்டு நெல் உற்பத்தி உட்பட உப உணவுப் பயிர் உற்பத்திகளும் நாட்டில் அதிகரித்தன. குறிப்பாக வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், புகையிலை மற்றும் திராட்சை போன்றவற்றை வெற்றிகரமாகப் பயிரிட்ட இலங்கையின் வடபுல விவசாயிகள் இந்த இறக்குமதிப் பதிலீட்டுக் கொள்கையின் மூலம் நன்மைகளைப் பெற்றுக் கொண்டனர். ஆயினும் இவற்றை உற்பத்தி செய்வதற்கான செலவுகள் சார்பளவில் இலங்கையில் அதிகமாகவே இருந்தன. சிறியளவு நிலங்களில் சிற்றளவில் விவசாயம் மேற்கொள்ளபடுவதால் அறுவடை செய்யப்படும் ஒரு அலகுக்கான செலவுகள் உயர்வாக இருந்தன. சிற்றளவு நிலங்களில் இயந்திரப் பிரயோகமும் புதிய தொழில் நுட்பப் பிரயோகமும் செலவு கூடியதாக இருக்கும்.  

எனவே அளவுத்திட்டச் சிக்கனங்களை   அடையவோ அதன்மூலம் விளைபொருட்களின் விலைகள் குறையவோ சாத்தியமில்லை. மறுபுறம் நாட்டின் சனத்தொகைக்குத் தேவையானளவு விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்வதும் சாத்தியமானதாக இருக்கவில்லை. இதனால் உணவுப்பற்றாக்குறை என்பது தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்ட ஒரு பிரச்சினையாக இருந்தது. இவ்வுணவுப் பற்றாக்குறையானது இலங்கை அரசியலில் 1977ல் பெரிதும் பிரதிபலித்தது. இறக்குமதிப் பதிலீட்டை கடமையாகப் பின்பற்றிய அரசாங்கம் படுதோல்வியை எதிர்நோக்க நேர்ந்தது. 1977இல் பதவிக்கு வந்த அரசாங்கம் விவசாய விளைபொருள் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது.  

குறிப்பாக, வடபுல விவசாயிகள் உற்பத்திசெய்து வந்த உப உணவுப் பொருட்கள் தாராளமாக இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டன. தென்பகுதி விவசாயிகளின் உற்பத்தி செய்த பொருட்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் அவ்வாறு உடனடியாகத் தளர்த்தப்படவில்லை. துரித மாவலிகங்கை பல்நோக்கு அபிவிருத்திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் நெல் மற்றும் உப உணவு விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் வளமாக்கி பூச்சிக் கொல்லிகள் விவசாய ஊழியர்களின் கூலி போன்ற விவசாய உள்ளீடுகளின் விலையேற்றம் காரணமாக ஓரலகு வெளியீட்டின் செலவுகள் அதிகரித்தன. அரசாங்கங்கள் விவசாய மானியத்திட்டங்களை குறிப்பாக உரமானியத் திட்டத்தையும் விவசாயக் காப்பறுதித் திட்டத்தையும் அறிமுகப்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு அனுசரணை வழங்கி வந்தன. எவ்வாறாயினும் இலங்கை வாழ் மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் நோக்கம் இதுவரையில் சாத்தியப்படவில்லை.  

பதவிக்கு வருகின்ற அரசாங்கங்கள் உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அவ்வப்போது விதித்த போதிலும் இவற்றால் விளைந்த பயன் ஏதுமில்லை. மாறாக இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒவ்வொரு தடவையும் அப்பொருட்களுக்கு நாட்டில் செயற்கையானதொரு தட்டுப்பாடும் ஏற்படவே செய்தது. அத் தட்டுப்பாட்டின் காரணமாக அப்பொருட்களின் விலைகள் செயற்கையாக மிக உயர்ந்த மட்டத்திற்கு அதிகரிப்பதையும் சாத்தியமான விடத்து கலப்படங்கள் செய்யப்பட்டு சந்தைக்கு வருவதையும் காணமுடிகிறது.  

இத்தகைய சந்தர்ப்பங்களில் நுகர்வோன் அநியாயமாக அவற்றை அதிக விலைகொடுத்து வாங்க நிர்ப்பந்திக்கப்படுவதுடன் வாங்கும் பொருளும் தரமாக இருப்பதில்லை. சிறிய எண்ணிக்கையிலான உள்ளூர் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக மிகப்பெரும் எண்ணிக்கையிலான நுகர்வோரை வாட்டி வதைப்பது நியாயமானதன்று.  

இலங்கையில் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அண்மையில் மஞ்சள் இறக்குமதி தடைசெய்யப்பட்டமையும் அதனால் ஏற்பட்டுள்ள சந்தைத் தாக்கங்களையும் உதாரணமாகக் கொள்ளலாம். பெரும்பான்மை இலங்கையர்கள் தமது உணவில் சிறிதளவே மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மஞ்சள் நீர் ஒரு கிருமி நாசினியாகத் தெளிக்கப்படுகிறது. கொரோனா காலப்பகுதியின் ஆரம்பத்தில் மஞ்சள் நீரில் வேப்பிலையை கலந்து தெளித்து தமது வீடுகளைச் சுத்தம் செய்ய முற்பட்ட பலரைக் காணமுடிந்தது. இந்துக்களைப் பொருத்தமட்டில் மஞ்சள் ஒரு மங்களப்பொருள். அது இல்லாமல் பெரும்பாலான பூஜைகள் செய்யப்படுவதில்லை. இந்துப் பெண்கள் தாலியாகவும் மஞ்சள் கிழங்கினை முடிந்து கொள்வது சமய கலாசார ரீதியில் அதன் முக்கியத்துவத்தினைக் காட்டுகிறது.  

திடீரென மஞ்சள் இறக்குமதி தடைசெய்யப்பட்டவுடன் அதன் விலை எகிறியது. கலப்படமும் கண்முன்னே நடந்தது. கரையோரப்பகுதிகளில் கடத்தப்பட்ட மஞ்சள் கிலோ கணக்கில் பிடிபட்டது. கஞ்சா போதைப் பொருட்களின் ரேஞ்சுக்கு மஞ்சளின் நிலைமையும் வந்துவிட்டமை அபத்தம். துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவு மஞ்சள் சுங்க அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் தெரிகிறது.  

இவ்வாறு மஞ்சளில் திடீரென கைவைக்கக் காரணமென்ன? கொரோனாவைக் கையாள தொற்றுநீக்கி இரசாயனங்கள் பெருமளவில் இறக்குமதி செய்ய எவ்விதத் தடையும் இல்லாதபோது பக்கவிளைவுகளற்ற இயற்கைத் தொற்று நீக்கியான மஞ்சள் இறக்குமதி தடைசெய்யப்பட்ட மர்மம் என்ன? உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டுமாயின் மஞ்சள் விவசாயிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களையும் தொழில்நுட்பத்தையும் நிதி உதவிகளையும் வழங்கி உற்பத்தி இலக்குகளை நிர்ணயித்து அவர்களது உற்பத்திகள் சந்தைக்குவரும் நிலையில் மஞ்சள் இறக்குமதிகளைத் தடைசெய்திருக்கலாமே? குறைந்தபட்சம் எப்போது இறக்குமதி தடைவரப் போகிறது என்றாவது முன்கூட்டியே இறக்குமதியாளருக்கு அறிவித்திருக்கலாமே? மஞ்சளை உள்நாட்டில் உடனடியாக ஒருசில மாதங்களில் உற்பத்தி செய்துவிட முடியாதே. அதுவரை தட்டுப்பாட்டால் ஏற்படும் விலை அதிகரிப்பை தடுக்க அரசாங்கத்தால் முடியுமா? சில ஆயிரக்கணக்கான மஞ்சள் உற்பத்தியாளரைப் பாதுகாக்க இருபத்தியிரண்டு மில்லியன் நுகர்வோர்களும் மஞ்சளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டுமா? வர்த்தகம் செய்வதின் இலகுதன்மை பற்றிய குறிகாட்டியில் அரசாங்கக் கொள்கைகளில் நிச்சயமற்றதன்மையும் விட்டேத்தியாக அவ்வப்போது எடுக்கப்படும் தீர்மானங்களும் முக்கிய குறைபாடாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்குறைபாடே இந்நாட்டுக்குள் முதலீட்டாளர்களை வரவிடாமல் தடுக்கிறது. இப்போதைய மஞ்சள் விவகாரம் இதற்கு இன்னுமொரு சான்றாக இருக்கப்போகிறது.    

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்

 

Comments