சுற்றறிக்கையில் சுழலும் அரச உயர் அதிகாரிகள்! | தினகரன் வாரமஞ்சரி

சுற்றறிக்கையில் சுழலும் அரச உயர் அதிகாரிகள்!

நாட்டில் ஓர் அனர்த்தம் ஏற்படுகின்றபோது ஜனாதிபதியோ பிரதமரோ, அரச அதிகாரிகளுக்கு ஓர் உத்தரவைப் பிறப்பிப்பார்கள். அஃது என்னவென்றால், சுற்றுநிருபத்திற்காகக் காத்திருக்காமல், மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைப் பெற்றுக்ெகாடுங்கள் என்பதே! 

சுற்றுநிருபம் இன்னும் கிடைக்கவில்லை என்று சொல்லிச்சொல்லியே பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்ெகாள்வதில் நீண்டநாள் ஆகுவதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கின்றோம். இதற்குக் காரணம் அதிகாரிகளுக்கு மக்கள் மீது கரிசனையும் தொழில் மீதான அர்ப்பணிப்பும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு சுற்றுநிருபம் கிடைக்காவிட்டால், அதனைத் துரிதமாகப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிப்பதும் இல்லை. சுற்றுநிருபத்திற்கும் அதிகாரப் படிநிலைக்கும் (Protocol) உள்ள வேறுபாட்டினைக் கண்டறிந்துகொள்ள முடியாத அதிகாரிகளே அரச நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணிபுரிகிறார்கள் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நேரடியாகத் தெரிந்துகொண்டிருக்கிறார். 

ஒரு சந்தர்ப்பத்தில், சில காலத்திற்கு முன்பு குறித்த ஒரு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிபாரிசு செய்து அனுப்பிய கடிதத்தைப் பார்த்துவிட்டுக் கிராம சேவை அலுவலரிடமிருந்து கடிதம் கொண்டு வருமாறு கூறிய பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. கிராம சேவை அலுவலரைவிடப் பாராளுமன்ற உறுப்பினர் அதிகார படிநிலையில் உயர்ந்தவர் என்பதுகூட அந்த அதிகாரிக்குத் தெரிந்திருக்கவில்லை.  

அதனைவிடவும் கொடுமையான ஒரு சம்வம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்திருக்கிறது! பதுளை மாவட்டத்தின் ஹல்தும்முல்லை பகுதியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நேரடி கள விஜயத்தின்போது, பிரச்சினையொன்றைத் தீர்ப்பது பற்றி அரச அதிகாரி ஒருவருக்கு ஜனாதிபதி கட்டளையிடுகிறார். ஆனால், அந்த அதிகாரியோ "சுற்று நிருபம் வரவில்லை சேர்!" என்று ஜனாதிபதிக்ேக சொல்கிறார். அப்போது அவருக்கு உறைக்கும்படி எடுத்துரைக்கிறார் ஜனாதிபதி. "நான் சொல்வதுதான் சுற்றுநிருபம். எழுதி வைத்துக்ெகாள்ளுங்கள். ஒரு நிறைவேற்று அதிகாரமுள்ள; மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி சொல்வதைவிடவும் வேறு என்ன சுற்றுநிருபம் வேண்டும்?" என்று கேட்கிறார் ஜனாதிபதி. அதிகாரிகள் எந்தளவிற்குச் சுற்றுநிருபத்தில் கட்டுண்டு கிடக்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று.

"நாட்டுத் தலைவர் குறித்த இடத்தில் நடந்த குறித்த கூட்டத்தின்போது இவ்வாறு உத்தரவிட்டார், அதற்கிணங்க இந்த நடவடிக்ைக மேற்கொள்ளப்படுகிறது. தயவுசெய்து இதனை முன்னெடுக்கவும்" என்று ஒரு கடிதத்தை எழுதி; அதனை வேண்டுமானால், ஜனாதிபதியின் செயலருக்கும் ஒரு நகலிட்டு அனுப்பி, சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தீர்க்க முடியாத; தெரியாத அதிகாரிகள் இன்னும் எத்தனைபேர் அரச நிர்வாகக் கட்டமைப்பிற்குள் பணிபுரிந்துகொண்டிருக்கிறார்களோ தெரியாது.

அது மாத்திரமா? ஜனாதிபதி பதவியேற்றதிலிருந்து பல அரச நிறுவனங்களின் குறைபாடுகள் வெளிக்ெகாணரப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கியமானவை மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் பணிகள். சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு இரத்த மாதிரி பரிசோதனை செய்வதால், பொதுமக்கள் பெரிதும் துன்பப்பட்டார்கள். இப்போது அது தேவையற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, நாரான்பிட்டியில் உள்ள வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்திற்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அங்கு நடக்கும் அநீதிகளையும் கண்டறிந்து அவற்றைக் களைவதற்கு நடவடிக்ைக எடுத்திருக்கிறார்.

ஜனாதிபதி கண்டறிந்த இந்தச் சம்பவங்கள் போன்று நாட்டில் பரவலாக உள்ள அரச நிறுவனங்கள் பலவற்றின் நிலை இவ்வாறுதான் காணப்படுகிறது. இவற்றுள் மாவட்டச் செயலகங்கள், பிரதேசச் செயலகங்களும் அடங்கும். அங்கு அலுவல் நிமித்தம் செல்லும் பொதுமக்களை வரவேற்கவோ, அவர் என்ன தேவைக்காக வந்திருக்கிறார் என்று வினவுவதற்கோ எந்த அதிகாரியும் முனைவதில்லை. சில செயலகங்களில், சிற்றூழியர்களும் கீழ்மட்ட உத்தியோகத்தர்களும் என்னவோ தாங்கள்தான் அரச அதிபர் அல்லது உதவி அரசாங்க அதிபர் போன்று நடந்துகொள்கிறார்கள். அதிகாரிகளின் துரைத்தனப்போக்கின் காரணமாக, கீழ்மட்ட பதவிகளில் உள்ளவர்கள் பொதுமக்களைக் கண்டுகொள்ளாதவர்களாக உள்ளனர். இங்கு ஒரு விடயத்தைக் கவனிக்க ​வேண்டும். அதாவது; சுற்று நிருபங்களும் சட்டங்களும் வேண்டுமானால், பலமுள்ளவர்களுக்குச் சரியாகப் பயன்படுத்தப்படட்டும். ஆனால், அப்பாவி பொதுமக்களுக்குச் சற்று நெகிழ்வுப் போக்கில் பணியாற்றலாமே என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஹல்தும்முல்லையில் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த காலத்தில் எல்லாவற்றுக்கும் சுற்று நிருபத்தைப் பார்த்துக்ெகாண்டிருந்திருந்தால், இன்னும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும். எனவே, பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயமும் ஒரு யுத்தம் போன்றதுதான். எனவே, சுற்று நிருபத்தில் கட்டுண்டு கிடக்காமல், மக்களுக்குச் சேவையாற்றுங்கள். சுற்று நிருபத்தை உரிய வேளைக்கு அனுப்பாமல் தாமதப்படுத்தும் அதிகாரிகள் குறித்துக் கவனம் செலுத்தி நடவடிக்ைக எடுக்கப்படும்! என்ற ஜனாதிபதியின் அறிவிப்பை ஆமோதிக்கும் விதமாக அங்குக் கூடியிருந்த மக்கள் பலத்த கரகோஷம் செய்து ஜனாதிபதியுன் கூற்றினை அங்கீகரித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் எந்தளவிற்கு மனத்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை அரச அதிகாரிகள் இனியாவது புரிந்துகொள்ளட்டும்; புரிந்துகொள்வார்களா?

Comments