எங்கும் காணாத தனித்துவங்கள் நிறைந்த யாழ். பிரதேசம் | தினகரன் வாரமஞ்சரி

எங்கும் காணாத தனித்துவங்கள் நிறைந்த யாழ். பிரதேசம்

தினகரன் நாளிதழ் யாழ். மண்ணில் புதுப்பொலிவுடன் மீளவும் அறிமுகம் செய்யும் தினகரன் விழா கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அறுபதுகளில் இளந்தலைமுறையினராக விளங்கிய யாழ். மைந்தர்கள் அனைவருக்குமே தினகரன் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது யாழ். முற்றவெளியில் நடைபெறும் தினகரன் விழாவும் மாட்டு வண்டில் சவாரியும் தான். பெருங்காயம் தீர்ந்த பின்னரும் டப்பா மணக்கும் என்பார்கள். அன்றைய தினகரன் விழாவும் இன்றளவும் பேசப்படுகிறது என்றால் அது மிகச் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே பொருள்.   அக்காலத்தின் பின்னர் அனைவர் கண்களையும் ஈர்க்கும் வகையில் சிறப்பாக நடைபெற்ற குறிப்பிடத்தக்க ஒரு விழா என்று நேற்று முன்தின நிகழ்வைக் குறிப்பிட முடியும்.  

காலை ஏழரை மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பூஜைகள் நடைபெற்றன. காலை ஒன்பதரை மணியளவில் கைலாசபதி அரங்கில் விழா கோலாகலமாக ஆரம்பமானது.  

அக்டோபர் இரண்டாம் திகதி முதல் தினகரன் பத்திரிகை யாழ். மண்ணின் செய்திகள், புதினங்கள், மக்கள் பிரச்சினைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள், குறைபாடுகள் என சமூகம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் தொட்டும், ஆழமாக ஆராய்ந்தும் செல்லும் வகையில் நான்கு பக்கங்களை ஒதுக்கித் தந்துள்ளது. அதே போல கிழக்கு மாகாணத்துக்கு இரண்டு பக்கங்களையும் மலையக செய்திகளுக்காக இரண்டு பக்கங்களையும் ஒதுக்கித் தந்திருக்கிறது.  

இதற்கு விளம்பரம் தரும் வகையிலேயே அன்றைய தினகரன் இதழ் 92பக்கங்களுடன் சிறப்பு யாழ் மலராக வெளிவந்தது. யாழ் மண் மற்றும் மக்கள் சார்ந்த ஏராளமான பயனுள்ள பல கட்டுரைகளைத் தாங்கியதாக அவ்விதழ் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அன்று யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் பத்திரிகை இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் நடமாடும் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.  

கைலாசபதி அரங்கு விழாவுக்கு ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தபால் மற்றும் ஊடக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி சபைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, நல்லை ஆதீனம், பல்கலைக்கழக துணை வேந்தர் சற்குணராஜா, யாழ். ஊடகக் கற்கைப் பிரிவின் தலைவர் கலாநிதி ரகுராம், வட மாகாண சபைத்தலைவர் சிவஞானம் உட்பட பல யாழ். பிரமுகர்களும் லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யு. தயாரத்ன, நிறுவன பணிப்பாளர்கள், தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் உட்பட நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் பலர் விழாவில் பங்கேற்றனர்.  

இங்கு சிறப்புரையாற்றிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, நாட்டின் 25மாவட்டங்களிலும் ஒரு பாடசாலை ஊடகத்துக்கான பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டு அப் பாடசாலைகளில் ஊடகக் கற்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற செய்தியை சபையோரின் கரகோஷத்துக்கு மத்தியில் தெரிவித்தார். விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, நாடெங்கும் விளையாட்டுத் துறை அபிவிருத்தியை மனதில் கொண்டு விளையாட்டுத் துறைக்கான பாடசாலைகள் ஏற்படுத்தப்படவுள்ளதைப் போலவே இந்த ஊடகத்துறை பாடசாலைகளும் இயங்கும் என்றார்.  

ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கு இது உவப்பான ஒரு தகவல், ஏனெனில் அச்சு கோர்க்கும் காலத்தில் இருந்து, வானொலிப் பெட்டியைத் திருகி நிகழ்ச்சி கேட்கும் காலத்தில் இருந்த ஊடகத்துறை, இன்று வளர்ச்சி பெற்று இணையம், கைபேசி என்று வந்து விட்டது. இவ் வளர்ச்சி வேகம் இங்கே நின்றுவிடப் போவதில்லை. மேலும் பல பிரமிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. ஊடகத்துறை, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் சமூக, அரசியல் அரங்குகளில் பெரும் சொல்வாக்கு செலுத்தத்தான் போகிறது.  

எனவே நாம் கூட்ஸ் வண்டியில் பயணித்துக் கொண்டிருக்க முடியாது. ஜெட் வேகம் பிடிக்க வேண்டுமானால் ஊடகத்தை விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இளைய சமூகத்துக்கு அக் கல்வியை அளிக்கவும் வேண்டும். யாழ். பல்கலைக்கழக ஊடகப் பிரிவு வெகு சிறப்பாக செயற்பட்டு வருவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.  

இங்கே உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகத்தை இன்னொரு கோணத்தில் பார்த்தார். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லி வந்தால் அது உண்மை போலவாகிவிடும் என்று குறிப்பிட்ட அவர், ஊடகங்கள் அப்படியும் செய்கின்றன என்றார். ஒரு கட்சிப்பத்திரிகை கூறி வந்தவற்றை அப்படியே நம்பி ஆயுதபலத்தால் மட்டுமே உரிமைகளைப் பெறலாம் என தாம் நம்பி ஆயுதம் தூக்கியதாகவும் தற்போது உரிமைகளை ஜனநாயக வழிகளிலும் அடையமுடியும் என உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். செய்திகள் செம்மையாகவும், நேர்மையாகவும் அமையவேண்டும், புண்படுத்துவதாக அல்ல என்பதுதான் அவர் சொல்ல வந்த விஷயம்.  

இவ்விழாவில் வெகு சிறப்பான உரையை நிகழ்த்தியவர் யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் சற்குணராஜா. விழாவுக்கு பெருமளவில் தென்னிலங்கையில் இருந்து வந்தவர்களே அதிகம் என்பதை மனதில் இருத்தி அவர் தனது உரையை சரளமான ஆங்கிலத்தில் கம்பிரமாக நிகழ்த்தினார். யாழ். மண்ணின் பெருமைகளையும் தனித்துவத்தையும் ஆற்றோட்டமாகச் சொன்னார்.  

ஆசியாவின் முதலாவது மருத்துவமனையும் மருத்துவக் கல்லூரியும் யாழ். மண்ணிலேயே ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த நாட்டில் வேறெங்கும் காணப்படாத ஒரு பண்பு யாழ்ப்பாணத்தில் காணப்படுகிறது என்றார். அவை பிராந்திய பத்திரிகைகள். யாழ் மண்ணிலே பிராந்திய தினசரிகள் வேர் விட்டு வளர்ச்சி அடைந்துள்ளன என்றும் அவை இச் சமூகத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றன என்று உரைத்தார் உபவேந்தனர்.  

கலை கலாசாரமும் பற்றி பேசும்போது நாட்டில் வேறெங்குமே காணமுடியாத சங்கீத சபையை யாழ்ப்பாணத்தில் காணமுடியும். இச் சபை பாரம்பரிய கர்நாடக இசை மற்றும் நடனத்துறைகளில் அகில இந்திய ரீதியாக தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இதற்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த சான்றிழ்கள் இலங்கையில் மட்டுமின்றி சர்வதேச ரீதியாகவும் அங்கீகாரம் பெற்றவை. நாட்டில் வேறெங்கும் இவ்வாறான இசை, நடனத்தை மேலாண்மை செய்யும் ஒரு சுதந்திர அமைப்பைக் காண முடியாது. இவ்வாறு யாழ். பிராந்தியம் தனித்துவம் பெற்று விளங்குகிறது. கல்விக்கு முக்கியத்துவம் தரும் மண்ணாக இருப்பதால்தான் இலங்கையில் தரப்படுத்தல் அறிமுகமானபோது தமிழர்கள் அதை ஏற்காமல் போராடினார்கள்” என்று தனது உரையில் குறிப்பிட்டார் யாழ். உபவேந்தர்.  

தனது உரையின் இறுதிப் பகுதியில் தன் ஐநது விரல்களையும் விரித்துக் காட்டிய அவர், ஐந்தும் தனித்தனி விரல்கள்தான். ஒரு விரல் இன்னொரு விரலுடன் இணையக்கூடாது. இணைந்தால் குறைபாடான கையாகிவிடும். விரல்கள் ஐந்தும் தனித்தனியாக இருக்கும் அதே சமயம் அவை இணைந்து கை முஷ்டியானால் எதிரியைத்தாக்கும் ஆயுதமாகிவிடும். தனித்துவம் கொண்டவர்களாக இருப்போம். அவசியம் ஏற்படும் போது இணைந்து கைமுஷ்டியாக மாறி எதிரிகளைத் தாக்கி வீழ்த்துவோம் என்பதில் ஒரு அருமையான அரசியல் இருந்தது.  

இவ்விழா முடிவடைந்த பின்னர் யாழ். திண்ணை உணவகத்தில் லேக்ஹவுஸ் விற்பனை முகவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அருள் சத்தியநாதன்  

Comments