கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

வடதிசை யாழ் மாவட்டத்தில் ஒருவரது இறப்பின் நினைவேந்தலாகக் ‘கல்வெட்டு’ என்று அழைக்கப்படும் ஒரு நூல் முக்கியத்துவம் பெறுகிறது. மரணித்த 31அல்லது 33ஆம் நாளில் அந்தியேட்டிக்கிரியைகள் எனப்படுபவை நடத்தப்பட்டு உணவுபசாரமும் நிறைவெய்தபிறகு, பதிப்பிக்கப்பட்ட நூலை வழங்குவார்கள். அதில்! நிழற்படங்களுடன் வாழ்க்கை வரலாறும் பணிகளும் நிறைவாக இடம்பெற்றிருக்கும். கிழக்கிலும் இது ஓரளவு இருக்கலாம் எனக் கருதுகிறேன்.  

இருக்கட்டும். முஸ்லிம் சமுதாயம் எப்படி? இல்லவேயில்லை. 31-33என்பதெல்லாம் கிடையாது. எனினும் 40-ஆம் நாள் நினைவேந்தல் இல்லங்களில் உண்டு. அப்போது பிரார்த்தனைகள் (ஃபாத்திஹா), அல்-குர்ஆன் ஓதல்கள் மட்டும் நடக்கும். அபூர்வமாக சிலர் வைபவ முடிவில் அல் – குர்ஆன் பிரதிகளை அன்பளிப்புச் செய்வார்கள். தாளொன்றில், மரணித்தவர் பெற்றோர் விவரம், அவரது முழுப்பெயர், பிறந்த திகதி, இறப்பு நாள் மற்றும் முக்கிய குடும்ப உறுப்பினர் விவரங்கள் அச்சிடப்பட்டு ஓட்டப்பட்டிருக்கும் அவ்வளவே.  

ஆனால் பாருங்கள் அபிமானிகளே, இரண்டாண்டுகளுக்கு முன் அநுராதபுரம், கெக்கிராவைக்கு அண்மிய மரதன்கடவெலயில் அதிசயத்திலும் அதிசயமான அபூர்வ நிகழ்வு.  

புகழுக்குரிய முஸ்லிம் எழுத்தாளப் பெண்மணி ஒருவருக்குக் கல்வெட்டு!  

பிரபல இலக்கிய இதழான ‘மல்லிகை’ சஞ்சிகை வளர்த்து மிக விரைவாக இலக்கிய வானில் பளிச்சிட்டு மறைந்த ‘கெக்கிராவை ஸஹானா’ என்ற அநுராதபுர வட்ட இலக்கிய ஆளுமைக்கே இந்த 2018களில் கல்வெட்டு நூல்!  

முகலாய மாமன்னர் ஷாஜஹான் மகள், அவ்ரங்கஸேப் சகோதரி, கவிதாயினி ஜஹானாராவின் பெயரையே கொண்டிருந்தும் அதை மறைத்து ‘ஸஹானா’ என ஒருபிரபல இசை ராகப் பெயரில் இலக்கிய ரீங்காரம் செய்தார்.  

அவர் பற்றிய அந்தக் கல்வெட்டுக்கு, பங்களிப்புச் செய்தோராக, கல்வியாளர், எழுத்தாளர் அன்பு ஜவஹர்ஷா முதற் கொண்டு, திக்குவல்லை கமால், மாத்தளை பண்ணாமத்துக் கவிராயர், லெ. முருகபூபதி, நாச்சியாதீவு பர்வீன், பாத்திமா மைந்தன் (தமிழகம்) ஈறாக,

மேமன்கவி, கெக்கிராவை சுலைஹா, பரணீதரன் வரை நவமணிகள் ஒன்பதுபேர்!  

யாழ். ‘ஜீவநதி’ இலக்கிய சஞ்சிகை ஆசிரியர் க. பரணீதரன் பதிப்பாசிரியராகப் பொறுப்பெடுத்துப் பதிப்பித்துக் கொடுத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.  

அவர் எனக்கு வழங்கிய தகவலின்படி 250பிரதிகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இங்கேதான் நெருடல்! நெருடல்! இலக்கியம் சார் எத்தனை பேர் கரங்களுக்குக் கிடைத்தது என ஒரு பட்டியல் தரமுடியுமா? அனுப்பவில்லை என்றால் ஏன் அடித்தீர்கள்? யாருக்காக ?  

நான் சேகரித்த தகவலின்படி, அன்று 40ஆம் நாள் நினைவஞ்சலிக்கு சமூகமளித்த சுமார் 75பேருக்கு வழங்கப்பட்டது. உண்மையிலும் உண்மை! ஆனாலும் முழுச் சபையினரும் இலக்கியம் சார்ந்தோர் அல்லர். மேலும் ஒரு 25பிரதிகள் தமிழக மூதாதையர் ஊர்வாசிகளுக்கு (காயா மொழி) அனுப்பப்பட்டுள்ளன.  

அப்படியானால் எஞ்சிய 150பிரதிகளும் எங்கே எவர் வீட்டுப் பரணில்?  

முஸ்லிம் சமூகம் சார் மறைவில் முதல் தடவையாக (அப்படி வர்ணிக்கலாம் அல்லவா?) நாற்பதாம் நாள் நினைவேந்தல் மலர் ஒன்று வித்தியாசமான முறையில் யாழ். பரணீதரன் தம்பியால் பதிக்கப்பட்டு ‘காட்டில் எரித்த நிலா’ போல யார் கண்ணிலும் காட்டப்படாமைக்குக் காரணம்?  

எவ்வாறாயினும் பங்களித்த ஒன்பது பேரும் பாக்கியசாலிகள் எப்படியோ பெற்றுப் பாதுகாக்கின்றனர்!  

ஓர் அடிக்குறிப்பு:  

இது சம்பந்தமாக ஒரு விதண்டாவாத விளக்கம் வழங்கப் படலாம், “இலக்கியத்துறையினருக்காக பதிப்பிக்கவில்லை. ஒரு குடும்பச் சமாசாரம். கசப்புவில்லை கொடுக்காதீர்கள்” என்று!  

தீர்ப்பை அபிமானிகளிடமே விட்டு ஒதுங்கிக் கொள்கிறேன்.  

இனிப்பு

இந்தக் கிழமை கைநிறைய விதவிதமான இனிப்பு வகைகள். ஒன்றுடன் நிறுத்துவது கஞ்சத்தனம். ஆகவே கைப்பை’ (பத்தி எழுத்துப்பக்கம்) கொள்கிற அளவுக்குக் கொட்ட முயன்று பார்க்கிறேன்.  

முதல் இனிப்பு முக்கியமானது. அரசியல் ரீதியில் நம் சந்ததிகளுக்கு அன்னை தமிழ் காப்பாற்றிக் கொடுக்கப்பட்ட வரலாற்றுப் பதிவு.  

ஒரு தகவலைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போதைய நாடாளுமன்றத்தின் இயக்கத்திற்கு ஒரு முன்னோட்டமாக அமைக்கப்பட்டது. “இலங்கை சட்ட சபை” நன்கு நாமறிந்த ஜே.ஆர். ஜெயவர்தனா அச் சபையில் ‘பெரிய தலை’!  

அவர் 1943ஜூன் 22ல் மூன்று பிரேரணைகளைச் சமர்ப்பித்துத் தமிழ் பேசும் சமூகத்தினரைச் சங்கடத்திற்குள்ளாக்கினார்.  

* அனைத்துப் பாடசாலைகளிலும் சிங்களம் மட்டுமே போதனாமொழி.  

* பொதுப்பரீட்சைகளில் சிங்களமே கட்டாயம்.  

* சபை அலுவல்கள் யாவும் சிங்களத்திலேயே நடைபெற வேண்டும்!  

பிரேரணைக்கான விவாதங்களும் வாக்கெடுப்பும் கிட்டத் தட்ட ஓராண்டு வரையில் இழுத்தடிக்கப்பட்டு 1944மே மாதம் சபையில் இறுதியாக நடந்தது.  

‘நல்லையா’ என்றொரு உறுப்பினர் ஒரு குரலோசையாக உரத்துக்குரல் எழுப்பி பல நியாயங்களை எடுத்துச் சொல்லி “இது அநியாயம்” எனச் சீறினார்.  

“ ‘சிங்களம் மட்டும்’ என்பதை ‘சிங்களமும் தமிழும் போதனாமொழி’ எனத் திருத்துங்கள்” என்றார்.  

வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, தமிழன்னைக்கு 28ஆதரவுக்கரங்களும் 08எதிராகவும் உயர்ந்தன.  

ஆக, தமிழ்ப் போதனாமொழியாக இல்லாமல் போகவிருந்த மாபெரும் அபாயம் நீங்கியது. அன்று மட்டும் அவர் பிரேரணை வெற்றி பெறாது போயிருந்தால் தமிழ்ப்பேசும் மக்கட் செல்வங்களுக்கு தமிழ்க் கல்வி போயிருக்கும் தாய்மொழி அறியா ஒரு சமூகம் உருவாகியிருக்கும்.  

யார் அய்யா, இந்த நல்லையா? தேனகத்தின் (கிழக்கிலங்கை) திரு மைந்தர். மட்டக்களப்பு, சிங்கள வாழ்ப்பிரதேசம் பிறந்தகம். அவரே ஒரு தமிழ்ப் போதனா மொழிப் பாடசாலையை நிறுவினார். அதுவே ‘வந்தாறு மூலை மத்திய மகா வித்தியாலயமாகப் பரிணமித்தது. இன்றோ ‘கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக’ மாகப் பளிச்சிடுகிறது!  

அன்னவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ‘நல்லையா மண்டபம்’ காட்சியளிப்பதைக் கண்டதுண்டா, கேட்டதுண்டா?  

தமிழ்ப் போதனா மொழிக்கு சட்டத்தில் இடமளிக்க வைத்தவரை நாமும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.  

இனிப்பு

‘புத்தக வாசிப்புப் போச்சு!”  

போச்சு என்ற அவலக்குரல்களுக்கு மத்தியில் கொழும்பில் நடந்த புத்தகத் திருவிழாவில் புத்திசாலிகளாய் புத்திஜீவிகளாக நடந்து கொண்டோர் பெரும்பான்மைச் சமூகமே! பிள்ளை குட்டிகளுடன் குடும்பச் சமேதரர்களாக! நம்மவர்கள் பற்றிச் சொல்ல இனிப்பில் இடமில்லை. கசப்பில் தான்! அதற்கேற்றாப் போல் தமிழக இறக்குமதியும் அறவே இல்லாமல் அம்போ!  

போகட்டும் அந்தப் புலம்பல் ஒரு நல்ல சேதி கிழக்கே அக்கரைப்பற்றிலிருந்து!  

ஒரு தனிமனித முயற்சியாக, தன் தாயாரின் பாரம்பரிய வீட்டையே புத்தகக் கண்காட்சிக் கூடமாக மாற்றி, நூல் வெளியீடுகளும் நடத்தி புதுமையும் புரட்சியும் புரிந்திருக்கிறார் ஒரு சிராஜ் மன்சூர்!  

இவர், எழுத்தாளர், கவிஞர், நல்ல ஆய்வாளர். அத்தோடு ‘மீள் பார்வை’ இஸ்லாமிய சஞ்சிகையின் ஆசிரியர் அக்கரைப்பற்று மைந்தரான இவர், எந்த மண்டபத்தையும் தேடாமல், நாடாமல் தன் தாய் வீட்டையே மற்றொரு (தமிழ்) தாயின் மேம்பாட்டுக்குத் திறந்து விட்டு விட்டார்!  

இம்மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த ‘தனிமனித முயற்சி புத்தக விழா’ இன்று 04/10ஞாயிறு இரவு முற்றுப் பெற்றாலும், தொடர்ந்து தனது பாரம்பரிய வீட்டை புத்தக காட்சிக் கூடமாகவே மாற்றி அமைக்கும் இலட்சியத் திட்டத்தில் இருக்கிறாராம்.  

அவர் தம் முயற்சி பற்றி பலதும் பத்துமாகப் பகிர்ந்து கொண்ட பாவேந்தர் பாலமுனை பாறூக், இலக்கிய உலகில் நீங்கா இடம் பெற்றுள்ள அ.ஸ. அப்துஸ்ஸமத் பிறந்து பிரகாசித்த அக்கரைப்பற்றுவில் இம் முயற்சி நடப்பதையும், அதே கண்காட்சியில் அவரது மகனார் அகமது கியாஸ் நாவல் ‘இனி எல்லாம் சுகமே’ வெளியீட்டுவிழா கண்டிருப்பதையும் பெருமகிழ்ச்சியுடன் விவரித்தார்.  

அப்படியானால், கிழக்கிலங்கை இலக்கிய வளர்ச்சியை பொறுத்தளவில் விசேடமாக வாசிப்பு ‘இனி எல்லாம் சுகமே’ என இனிப்புகளை அள்ளிக் கொட்ட ஆசை, ஆசை! ஏற்றிடுக.  

இனிப்பு 

கனவா, நனவா என என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்! தமிழ் நாடக விழாவாம் தலை நகரில்! அதுவும், ஒருகாலப் படமாளிகையாக இருந்து அதி நவீன நாடக அரங்கமாக அரசே பரிபாலிக்கிற மருதானை எல்பின்ஸ்டனில்!  

இப்போதையப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒரு பெரிய அரசியல்வாதியாகப் பரிணமித்திருந்தாலும், ஒரு கால மேடை நாடக – திரைக்கலைஞர் என்பது தித்திப்பு. அந்த வகையில் கலைஞர்களின் கலைக்காவலராகவும் இருப்பதை வெகு சிலரே புரிவர், அறிவர்.  

‘டவர் மண்டப அரங்கியல் மன்றம்’ (டவர் பவுண்டேசன்) அவர் பரிபாலனத்திலேயே உள்ளது. பாருங்கள், கொரோனா கிருமித்தொல்லைக்கு மத்தியிலும் கடந்த மாதத்திலும் இம்மாதத்திலும், சிங்கள மொழியில் முழு நீள நாடகங்கள், குறு நாடகங்கள், சிறுவர் நாடகங்கள் என சுமார் 70நாடகங்களுக்கான அரங்கேற்றங்களை, டவர் மண்டபப் பணிப்பாளர் நாயகமாக நியமனமாகியுள்ள பிரபலக் கலைஞர் டக்ளஸ் சிறிவர்தன மூலமாக நிறைவேற்றிவிட்டார்!  

அவரே நீண்ட இடைவெளியில் ஒரு தமிழ் நாடகவிழாவுக்கும் ஏற்பாடுகள் செய்திருக்கிறார். அவரின் கீழ் தமிழ் நாடக வளர்ச்சிக்கான ஒரு துறையும் இயக்கம். அதன் பொறுப்பாளராக, தமிழ்நாட்டில் நாடக இயல் பயின்று பட்டம் பெற்றவரான வாலிபர் ஜெயப்பிரகாஷ் சண்முகசர்மா கடமை அவரது பக்க துணையுடன் ஒரு தமிழ் நாடக விழாவையே நேற்று (03/10/2020) எல்பின்ஸ்டனில் ஆரம்பித்து விட்டார் டக்ளஸ் சிறிவர்தன!  

பாராட்டுகளை அள்ளி வழங்குவது, என் போன்ற ‘வாழ்நாள் நாடகக் கீர்த்தி’யின் தலையாயக கடமையாகின்றது.  

இவ்விழா 13ஆம் திகதி வரை நிகழ்வுறும், ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கு மேற்பட்ட குறுநாடகங்கள். இறுதி, மூன்று நாட்களிலும் முழு நீள நாடகங்கள். மொத்தமாக பத்தொன்பது குறுநாடகங்கள், ஐந்து முழு நீள நாடகங்கள். (இவ்விவரங்கள் சிலவேளை வித்தியாசப்படலாம்)  

கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மலையகப் பகுதிக் கலைஞர்களின் ஆளுமை நலிந்து விடவில்லை என்பதை நேருக்கு நேர் பார்த்துப்பரவசப்பட நல்ல சந்தர்ப்பம்.  

கொழும்பு வாழ் கலாரசிக மணிகள் கொஞ்சம் தொ(ல்)லைக் காட்சிப்பெட்டிகளை மூடி விட்டு, ஆறுமணிக்கு சொகுசான எல்பின்ஸ்டன் இருக்கைகளில் அமர்ந்தீர்களானால் 08-,09 மணிக்கிடையில் இல்லம் திரும்பி விடலாம். திரையரங்குகளும் மூடிக்கிடக்கும் காலத்தில் ஒரு பழைய திரையரங்கு மிக நவீனமாகப் புனரமைக்கப்பட்டிருப்பதையும் ரசித்து மகிழலாமே!  

Comments