சட்டத்திற்கு அடிபணி | தினகரன் வாரமஞ்சரி

சட்டத்திற்கு அடிபணி

மையத்து வீடுமாதிரிக் கிடந்தது றசீனாவின் வீடு. மூர்ச்சையாகிக்கிடந்தாள் றசீனா. உறவு முறைகளும், அயலவர்களும் தூரத்து உறவுகளும் அவள் வீட்டுக்குப் படையெடுத்தனர். இவனுக்கு இது தேவைதான்? உருப்படாதவங்களோட கூடினா இதுவும் வரும் இதுக்கு மேலையும் வரும், புள்ள வளக்கிற செப்பம் என்று பலருடனும் பேசிக்கொண்டிருந்தான். அன்சாரின் சின்னப்பா. பாவம் அவன் வெளியில் கிடந்து சாகிறான். இவன் இஞ்ச நம்மட மானத்தையும் போக்கிறான். போங்க யாரும் அவன பாக்கவும் போகக் கூடா. நான் என்ர வேலய நான் பாக்கன், என்றவாறு அந்த வளவை விட்டு வெளியேறினார் அன்சாரின் சின்னப்பாவான அகமது. 

 இலங்கைத் திருநாடு கொரோனா கெடுபிடியில் கிடக்கின்றது. முப்படைகளினது அர்பணிப்புகளுக்குப் பூட்டு, மக்களை ஒன்று கூட வேண்டாம் என்ற அரசாங்கத்தின் கட்டளை மனிதர்களை தனிமைப்படுத்தி தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க எவ்வளவோ திட்டங்கள். 

இத்தனை கவலைகளுக்கு மத்தியில் தொழிலில்லை, படிப்பில்லை போக்கு வரத்து எதுவுமில்லை, வேலைக்குப் போக முடியாது, இருந்தும் மக்கள் காலடிக்கு உணவுப் பொருட்களை விநியோகித்து மக்களை வீடுகளிலே உட்காரவைத்து சகலவிதத்திலும் மக்களின் நலன்களையே கவனித்துக் கொண்டிருக்கும் எமது அரசாங்கத்துக்கு எவ்வளவு நன்றியுடையவர்களாக நாம் இருக்க வேண்டும், மக்களை வீடுகளிலே இருக்கச் சொல்லி பலவகைகளிலும் உதவும் அரசாங்கத்தின் கவலைகளிலுண்டான கற்பனைகளை பொதுமக்கள் சிதறிடிக்கச் செய்வதா? 

ஊரடங்குச் சட்டம் எமது நலனுக்குத்தானே! படைகள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும்போது சே... இவனுகள் நடந்துகொள்ளும் முறை கேடான விசயங்கள பாத்தீங்களா! அன்சாரின் ஒன்று விட்ட பெரியப்பாவான றஹீம் பிறின்சிபல் அவர் படித்தவர் என்பதால் மக்கள் முன் ஒரு பேருரையையே ஆழ்த்திவிட்டு, நம்மட வாலிபர்கள் இப்படி இருக்குமட்டும் எமது சமூகம் முன்னேறுமா? என்ற மனக்கேள்வியுடன் அவரும் அந்த வளவை விட்டு வெளியேறினார். 

உணர்வு வந்தவுடன் மைமுனா வாய்விட்டு கதறி அழுதாள். என்ர புள்ளைய காப்பாத்துங்கம்மா; என்ர ஒரேயொரு புள்ளம்மா; அவனுக்காகத் தான்மா அவரு வெளியில கிடந்து சாகிறாரு! சொன்னா கேப்பானா, எவள்ள புள்ளைகளோட கூடித்திரிந்தானே, என்ரபுள்ள அப்படிச் செஞ்சிரிக்க மாட்டான்மா, கூடுவாரோட கூடாதடா, மொட்ட பைசிக்கல வெளில எடுக்காதடா, என்னவும் என்டா என்னால தாங்க ஏலாடா என்று எத்தின தடவி சொன்னன் மா கேட்டானா ஆ... வென்று அழுது கொண்டேயிருந்தாள் அன்சாரின் தாய் மைமுனா. 

அவட வீட்டு முற்றம் நிறைந்த சனம், மச்சான் என்ர வீட்டடிய நேற்று இரண்டு ஆமிக்காறப் பொடியனுகள் வந்தாங்க. நானும் அவங்க பக்கத்தில போய் பேரு, ஊரக் கேட்டிட்டு அவங்களுக்கு ஒரு றிங்சையும் கலந்து கொண்டு வந்து கொடுத்தன். அவங்க ரொம்ப சந்தோசப்பட்டாங்க. சேர், இந்த சப்பாத்து மூன்று நாளைக்கு முன் போட்ட சப்பாத்து அவ்வளவுக்கு எங்களை வேலை வாங்குறாங்க, அப்படி மக்களுக்குச் சேவை செய்யும் போது உங்கட இளைஞர்கள், எங்கள கேலி செய்றாங்க, கல் அடிக்கிறாங்க, சொபிங்பேக்கில தண்ணீர் எடுத்து எங்கள் மீது வீசிறாங்க என்று அந்த இருவரும் மனஸ்தாபப்பட்டாங்க என்று பக்கத்து வீட்டு பரினாவின் புரிசன் சலீம் கிளாக்கர் கூறியதைக் கேட்ட அவ்விடத்தில் நின்று அனைவரும் வாயில் கையை வைத்துக் கொண்டிருந்தனர். 

அன்சார்! மைமுனாக்கு ஒரேயொரு பிள்ளை. அவனை நல்ல நிலமைக்குக் கொண்டுவரவேண்டும், தனது பிள்ளை உயர வேண்டும் என்ற கற்பனையில் சுலைமான் வெளிநாட்டில் இருந்து அவனுக்கு அப்பிள்போன், இரண்டு இலட்சம் கொடுத்து லெப்டோப், தொலைக்காட்சி, மோடபைசிகள் எல்லாவற்றையும் வாங்கி அனுப்பினார். ஆனால், நண்பர்களை மட்டும் அவனே தேடிக் கொண்டான். தனது பைசிக்களில் மூன்று பேர் பிரயாணம் செய்வதை அந்தக் கிராமத்தில் அறியாதவர்களேயில்லை. 

அன்றும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போது அன்சாரும் அவன் இரண்டு நண்பர்களும் வேகமாகச் செல்லும்போது, படையின் இரண்டு வீரர்கள் அவர்களை வழிமறித்து புத்திமதி செல்லி அனுப்பினர். அதற்காக அந்த இருவருடனும் கூட சண்டை போட்டுக் கொண்டு சென்றிருக்கின்றனர். மறு நாளும் வேறு ஒரு பாதையில் அன்சாரும் மற்ற நண்பர்களுமாக வேகமாகவே செல்லும்போது அதே இரண்டு இராணுவ வீரர்கள் வழிமறித்துள்ளனர். பின்பு மன்னித்து விட்டிருக்கின்றனர். இருந்தும் ஏதோ படைவீரர்கள் வயதில் குறைந்த இளம் வாலிபர்கள் என்பதாலோ என்னவோ, நடையாக வந்து அவர்களுக்கு மறைவில் இருந்து கல் எறிந்துள்ளனர். 

அவர்களை இராணுவ வீரர்கள் துரத்தியதில், பிடிபட்டது அன்சார்தான். மற்ற இருவரையும் இரவில் வீட்டுக்குச் சென்று அடயாளப்படுத்தினான் அன்சார். அவர்களை றிமான்ட் பண்ணியிருப்பதாக செய்திகள். எப்போது நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வார்களென்று யாருக்கும் தெரியாது. உரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதனால், எதுவும் செய்ய முடியாமல் மாணவர்களின் குடும்பங்கள் பெரும் துயரில் மூழ்கிக் கிடந்தன. யார் இதற்கு முன் நிற்பது? பூனைக்கு மணி கட்டுவது யார்? ஊர் முழுதும் பரவிய இச் செய்தியால் பெற்றார்கள் அதிர்ந்து போயினர். நாட்டின் சட்டதிட்டத்தை மதித்து இந்தப் பயங்கரமான நோயைப் பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டுமென்று அரசாங்கம் கேட்டுக் கொண்டுதானே இருக்கின்றது. இளைஞர்களைப் பாதுகாப்பதும் எம் கடமை என்பதை சமூகம் ஒத்துக்கொள்ளும். மைமுனாவின் நி​ைலமைதான் கவலைக்கிடம். 

நிந்தவூர் மக்கீன் ஹாஜி

Comments