இலங்கையின் முதலாவது உயிரியல் தொழில்நுட்ப உற்பத்தி ஆலையை நிறுவவுள்ள ரதெல்ல ஹோல்டிங்ஸ் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் முதலாவது உயிரியல் தொழில்நுட்ப உற்பத்தி ஆலையை நிறுவவுள்ள ரதெல்ல ஹோல்டிங்ஸ்

இலங்கையின் முதலாவது உயிரியல் தொழில்நுட்ப உற்பத்தி ஆலையை நிறுவ ரதெல்ல ஹோல்டிங்ஸ் முன்வந்துள்ளது. ரதெல்ல ஹோல்டிங்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான பிரீமியம் இன்டர்நஷனல் இன்ஜெக்டபிள் கம்பனி (பிரைவட்) லிமிடெட் மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் இணைப்பு உடன்படிக்கையின் பிரகாரம் இந்த ஆலையின் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படும். கொக்கல ஏற்றுமதி பதப்படுத்தல் வலயத்தில் இந்த ஆலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மருந்துப்பொருட்கள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, கிராமிய மற்றும் பாடசாலைகள் விளையாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி. ரமேஷ் பத்திரன ஆகியோர் கலந்து கொண்டனர். 

3.5பில்லியன் ரூபாய் பெறுமதியில் உயிரியல் தொழில்நுட்ப உற்பத்தி ஆலை நிறுவப்படவுள்ளது. இதற்கான முழு முதலீடும் உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆலையில் 200க்கும் அதிகமான விசேடத்துவம் வாய்ந்த பயிற்சிகளைப் பெற்ற நிபுணர்கள் பணியாற்றுவார்கள். இந்த ஆலையின் உற்பத்தி செயன்முறைகளில் பயன்படுத்தப்படும் சகல தொழில்நுட்பங்களும் நவீன மயப்படுத்தப்பட்டதாகவும், ஐரோப்பாவின் உயர் நியமங்களின் பிரகாரமும் அமைந்துள்ளன.

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாத காலப்பகுதியினுள், உள்நாட்டு தேவையை நிவர்த்தி செய்வதாக அமைந்திருக்கும். உள்நாட்டு தேவைக்கு மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பெறுமதி வாய்ந்த அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்ள வழிகோலும்.  

இந்த புதிய ஆலை, உலகப் புகழ்பெற்ற SCADA கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும் என்பதுடன், ஆலையின் சகல செயற்பாடுகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த நடவடிக்கை உயர்மட்ட தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்வதுடன், உற்பத்தி தொடர்பான சகல பதிவுகளும் முற்றிலும் தன்னியக்கமானவையாக அமைந்திருப்பதுடன், சீரான செயற்பாட்டையும் உறுதி செய்யும்.

Comments