கூட்டுச் சேர்ந்தே பொது எதிரியை எதிர்கொள்ள வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

கூட்டுச் சேர்ந்தே பொது எதிரியை எதிர்கொள்ள வேண்டும்

“ஒரு புறம் வேடன். மறுபுறம் நாகம். இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்” என்றொரு தமிழ்ச்சினிமாப் பாடல் உண்டு. இந்த நிலையில்தான் நாட்டில் மக்களின் நிலை இப்போதுள்ளது. ஒரு புறம் பொருளாதார நெருக்கடி. மறுபுறம் கொரோனா நெருக்கடி. இரண்டுக்கும் நடுவே மக்கள். ஏற்கனவே போரினாலும் சுனாமி, புயல், வெள்ளம் போன்றவற்றினாலும் நாடும் மக்களும் பெரும் அழிவுகளைச் சந்தித்தது போதாதென்று, அதிலிருந்து மீள்வதற்கு முன்பு கொரோனா வந்து சூழ்ந்திறுக்குகிறது.

தொடக்கத்தில் கொரோன அச்சம் பெரும் பீதியைக் கிளப்பியிருந்தாலும் இலங்கை அந்தப் பாதிப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியிருந்தது. முதற்கட்டத்தில் கொவிட் 19 ஐ இலங்கை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியிருந்தது. அதற்காக ஐ.நாவின் உலக சுகாதார ஸ்தாபனமே இலங்கைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தது. கொவிட் 19 ஐக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் முன்மாதிரி நடவடிக்கைகளை ஏனைய நாடுகள் கவனிக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறியிருந்தது.

இதனால் நாடு வெளித்தொடர்புகளை மட்டுப்படுத்தியிருந்தாலும் இயல்புநிலையுடன் இயங்கியது. சனங்கள் வழமையைப்போல இயங்கத் தொடங்கினார்கள். அபூர்வமாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக மாஸ்க்கை அணிவோர் தென்பட்டனர். அந்தளவுக்கு கொவிட் 19 அச்சம் நீங்கியிருந்தது. இதனால் ஆரம்பத்தில் அச்சமூட்டிய பொருளாதார நெருக்கடியைக் குறித்த பயமும் மெல்லத் தணியத் தொடங்கியது. அரசாங்கமும் உற்பத்தித்துறையை ஊக்கப்படுத்தும் விதமாக வேலைகளை ஆரம்பித்திருந்தது. துரித அபிவிருத்தித்திட்டம், துரித உற்பத்தி முயற்சிகள் என்று சனங்களும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினர். தேர்தலில் வெற்றியீட்டிய புதிய அரசாங்கம் தன்னைப் பலப்படுத்திக்கொண்டு நாட்டுக்கான புதிய பொருளாதாரக்கொள்கையை – நடைமுறைகளைக் குறித்து சிந்திக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது.

ஆனால், கண்பட்ட மாதிரி எட்டு, ஒன்பது மாதங்களுக்குள் கொவிட் 19 இன் இரண்டாவது அலை பூதத்தைப்போலக் கிளம்பியிருக்கிறது. இது எங்கேபோய் முடியும் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஆனாலும் நாடு முழுவதிலும் தொற்றாளர்களைப் பற்றிய சேதிகள் பரவிக் கொண்டிருக்கின்றன. தொற்றாளர்கள் குறித்த சந்தேகமும் கண்காணிப்புகளும் உச்சமடைந்திருக்கிறது. ஒரு வாரத்துக்குள் ஆயிரக்கணக்கானோர் தீவிர பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இது இப்படியே கட்டுப்பாட்டுக்குள் வந்தால் நல்லது. நாடு அதிக பாதிப்பின்றித் தப்பி விடும். பொருளாதாரத்தையும் ஓரளவுக்குச் சீர் செய்யக் கூடியதாக இருக்கும். எதற்கும் அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிகராக மக்களும் சுயபாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதலான கவனமெடுத்துச் செயற்பட வேண்டும். முக்கியமாகச் சனங்களின் சுய தற்காப்பு நடவடிக்கைகளும் விழிப்புணர்வுமே இதிலிருந்து மீள்வதற்கு உதவும்.

கொரோனா நெருக்கடியிலிருந்தும் அது உண்டாக்கும் பாதிப்பிலிருந்தும் உலக நாடுகள் மீள முடியாது அவதியுறுவதைத் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அயலில் உள்ள தமிழ்நாடே கொரோனாவினால் சுருண்டுபோய்க் கிடக்கிறது.

இந்த நிலையில் நம்முடைய நிலை பரவாயில்லை என்றே கூற வேண்டும். இந்த நிலையைக் காப்பாற்றிக் கொள்வதே நமக்கு முன்னுள்ள பிரதான பணியாகும். இதற்கு அரசியல் பேதங்களும் முரண்பாடுகளும் அவசியமற்றவை. யாரும் யாரையும் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதை விடவும் கூட்டுச் சேர்ந்து இந்தப்பொது எதிரியை எதிர்கொள்ள வேண்டும். ஏனென்றால் கொவிட் 19 ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்று பேதங்களைப் பார்ப்பதில்லை. அல்லது வடக்கு மக்கள், தெற்கிலுள்ளோர் என்று இனங்கண்டு தன்னுடைய விளையாட்டைக் காட்டுவதுமில்லை. அதற்கு எல்லோரும் ஒன்றுதான்.

ஆகவே முன்பு போரை எதிர்கொண்டதைப்போல இன்று இந்தக் கொரோனாப் போரை இனம், மதம், மொழி, பிரதேசம் பார்த்து நாம் எதிர்கொள்ளவும் முடியாது. வேலை செய்யவும் முடியாது. எனவே பொது எதிரிக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒருமுகப்பட்டுச் செயற்பட வேண்டிய தருணம் இது. இந்த அரிய வாய்ப்பு வரலாற்றுக்குரியதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால், சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோதும் வெள்ளப் பெருக்கினால் மலையகம் உள்ளிட்ட பிரதேசங்கள் பாதிக்கப்பட்டபோதும் மனிதாபிமான ரீதியில் பேதங்களைக் கடந்து இடர்தீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புலிகளும் அரசும் கூட அப்போது பரஸ்பரம் நெருங்கி அல்லது புரிந்துணர்வோடு செயற்பட்டனர். அப்படியொரு சந்தர்ப்பம் இப்பொழுது வந்துள்ளது. இதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு நாடு எதிர்நோக்கியிருக்கும் அத்தனை நெருக்கடிகளுக்குமான தீர்வைக் காண முன்வருவதும் முயற்சிப்பதும் நல்லது. இதற்கு ஆளை ஆள் பார்த்துக்கொண்டிருக்காமல் அனைத்துத் தரப்பும் தங்கள் காலடிகளை முன்வைக்க வேண்டும். அப்படிச் செய்யலாம்தான், ஆனால், இதற்கு அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் இடைஞ்சலாக இருக்கிறதே என்று சிலர் சொல்லக் கூடும். அத்துடன் இந்த இடர்காலத்தை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு பொது அழைப்பை விடுத்து, தன்னுடைய கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும் என்றும் இவர்கள் சொல்லக் கூடும். இவர்கள் சொல்வதைப்போல இதை அரசாங்கம் செய்யலாம்தான். அதாவது அரசாங்கம் பொறுப்போடு இதைப் பரந்த நோக்கில் அணுகுவது நல்லதே.

ஆனால், இலங்கையின் துயரம் என்னவென்றால், ஒவ்வொரு தரப்பும் அயலாரை நேசிப்பதை விடவும் நம்புவதை விடவும் வெளித்தரப்பை நெருங்குவதும் நாடுவதும் நம்புவதுமே வழக்கமாகி விட்டது.

அரசாங்கம் சீனா, இந்தியா, மேற்குலகம் என்று வெளியாருக்கான கதவுகளைத் திறக்கிறது. அதிலே ஆர்வத்தைக் கூடுதலாகக் காண்பிக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இந்த மாதிரி, வெளியாருக்கான கதவு திறப்பு அவசியமாக இருக்கலாம். ஆனால், அதே நேரம் உள்நாட்டிலுள்ள சக்திகளை ஒருங்கிணைப்பதற்கான கதவுகளையும் திறக்க வேண்டும். கதவைத் திறந்தால் மட்டும் போதாது, இடையில் தடையாகவும் இடைஞ்சலாகவும் உள்ள கல்லு முள்ளுகளையும் அப்புறப்படுத்தி வைத்திருப்பது அவசியம்.

இதைப்போல, எதிர்க்கட்சிகளும் தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் தலைமைகளும் மக்களும் வெளியாருக்காகக் காத்திருப்பதை விடவும் அரசாங்கத்தோடு எப்படி இணைந்து வேலை செய்வது? எந்த அடிப்படையில் வேலை செய்வது? பிரச்சினைகளை எப்படிக் கையாள்வது? என்று சிந்திப்பது அவசியம். ஏனெனில் எந்த விதமான உள்நாட்டு நெருக்கடியும் நேரடியாகப் பாதிப்பது மக்களையே. அதிலும் அடிநிலைச் சனங்களையே. ஆகவே அடிநிலை மக்களாகிய குரலற்ற மக்களே முதற்பலியாடுகளாக மாற்றப்படாமல் இந்தக் கொரோனா இடரிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். அதற்கான பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

எல்லா வகையிலும் புரிந்துணர்வுச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இது நல்லதொரு வாய்ப்பு என்பதையே மீண்டும் அழுத்திச்சொல்ல வேண்டியுள்ளது. போர் முடிந்து பதினொரு ஆண்டுகள் கடந்த பிறகும் இலங்கைச் சமூகங்கள் பிளவுண்டேயிருக்கின்றன. சர்வதேச சமூகம் இலங்கைச் சமூகங்களை நோக்கி, பகையை மறவுங்கள், புரிந்துணர்வை வளருங்கள், சமாதானத்தைக் கட்டியெழுப்புங்கள் என்று எவ்வளவுதான் வலியுறுத்திச் சொன்னாலும் பகையை வளர்ப்போம், புரிந்துணர்வை மறுப்போம், சமாதானத்தை விலக்குவோம் என்றே ஒவ்வொருவரும் அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் பொருளாதார நெருக்கடியும் கொரோனா இடரும் நாட்டைச் சூழ்ந்திருக்கின்றன. நீங்கள் பேதங்களோடிருந்தாலும் நம்முடைய தாக்குதலில் வேறுபாடுகள் கிடையாது என்றே இந்த இரண்டு நெருக்கடிகளும் உரத்துச் சொல்கின்றன.

அப்படியென்றால் நாம் என்ன செய்யப்போகிறோம்? நமது தலைவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

இதுவரையிலும் எந்தவொரு கட்சியும் எந்தவொரு தலைமையும் நாட்டின் நெருக்கடிகளைகளைப் பற்றிப் பொதுநோக்கோடு பேசியதாகத் தெரியவில்லை. பல கட்சிகளும் தங்களுடைய உள் வீட்டுப் பிரச்சினைகளையே (கட்சிகளுக்குள் உண்டாகியிருக்கும் பிணக்குகள், நெருக்கடிகளையே) தீர்க்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும்போது எப்படிப் பொதுப் பிரச்சினையில் கவனம் செலுத்த முடியும்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இது கூடப் பொதுப் பிரச்சினையில் இவை கவனம் செலுத்தத் தவறியதன் விளைவுதானே!

இப்போது வரலாறு ஒரு சேதியைக் குறித்து நிற்கிறது. குறிப்பாகத் தமிழ்ப் பரப்பில் நிகழ்வதைப்போல, மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தாமே போராடுவதைப்போல, சனங்கள் நாட்டின் நிலவரங்களைக் குறித்து தாமே முன்வந்து பேசவும் போராடவும் வேண்டியுள்ளது. இது தலைமைகளுக்கும் கட்சிகளுக்கும் மக்கள் உண்டாக்கும் நெருக்கடியாகும்.

அதாவது கட்சிகளையும் தலைமைகளையும் சனங்கள் வழிப்படுத்த வேண்டும். வழிக்குக் கொண்டு வர வேண்டும். வழமையாக தலைமைகளும் கட்சிகளுமே மக்களுக்கு வழிகாட்டுவன. கவசமாக இருப்பன. ஆனால், இலங்கையில் இது அப்படி நிகழவில்லை. இலங்கையில் கட்சிகளும் தலைமைகளும் மக்களைப் பலியிட்டே தம்மை வாழ வைத்துள்ளன. இந்தத் துயர வரலாற்றுடன்தான் இலங்கைச் சமூகங்களின் கடந்த காலம் கழிந்துள்ளது. நிகழ்காலமும் எதிர்காலமும் அப்படியிருக்கக் கூடாது. அது மாற வேண்டும்.

அப்படியென்றால், மக்களே இன்று தலைமையேற்க வேண்டும். முன்னணிப் பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்கிறீர்களா? என்றால், நிச்சயமாக என்பதே பதில். தங்களைச் சூழ்ந்திருக்கும் அத்தனை நெருக்கடிகளிலிருந்தும் அவர்கள் மீள வேண்டுமென்றால் வேறு மார்க்கமில்லை. அப்படி வேறு மார்க்கமிருந்தால் தயவு செய்து யாராவது அதைச் சொல்லுங்கள்.

எனவே சனங்கள் களமிறங்க வேண்டும். அவர்கள் முதலில் கொரோனாவுக்காக தங்கள் வாய்களையும் மூக்கையும் மூடிப் பாதுகாப்புத் தேடட்டும். அதேவேளை அகவிழிகளைத் திறந்து தங்களுக்குரிய புது வழிகளைக் காணட்டும். வரலாற்று நெருக்கடிகளை மக்களே எப்போதும் முறியடித்திருக்கிறார்கள். இதுதான் வரலாற்றுண்மை.

கொவிட் -19 இன் இரண்டாவது அலை பூதத்தைப்போலக் கிளம்பியிருக்கிறது. இது எங்கேபோய் முடியும் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஆனாலும் நாடு முழுவதிலும் தொற்றாளர்களைப் பற்றிய சேதிகள் பரவிக் கொண்டிருக்கின்றன. தொற்றாளர்கள் குறித்த சந்தேகமும் கண்காணிப்புகளும் உச்சமடைந்திருக்கிறது. ஒரு வாரத்துக்குள் ஆயிரக்கணக்கானோர் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இது இப்படியே கட்டுப்பாட்டுக்குள் வந்தால் நல்லது. நாடு அதிக பாதிப்பின்றித் தப்பி விடும். பொருளாதாரத்தையும் ஓரளவுக்குச் சீர் செய்யக் கூடியதாக இருக்கும்.

கருணாகரன்

Comments