அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை சரியான முறையில் பின்பற்றுங்கள் | தினகரன் வாரமஞ்சரி

அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை சரியான முறையில் பின்பற்றுங்கள்

கொவிட் 19 தொற்று நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டு வருகிறது என்கிறது சுகாதாரத்துறை. அப்படியென்றால் முழு முடக்கம் வந்துவிடுமா? என்பது பொது மக்களின் கேள்வி. ஆனால், எங்கெங்கெல்லாம் உச்சநிலை ஆபத்தான பகுதிகள் கண்டறியப்படுகிறதோ அங்கெல்லாம், முடக்கம் வரலாம் என்கிறார் இராணுவத்தளபதி. அதேநேரம், முடக்கம் வருவதும் தவிர்ப்பதும் பொதுமக்களின் கரங்களிலேயே தங்கியிருக்கிறது என்றும் அவர் வலியுறுத்தித் தெரிவித்திருக்கிறார்.

இருந்தாலும், அரசாங்கத்தின் சுகாதார அறிவுறுத்தல்களை மக்கள் இன்னமும் சரியாகப் பின்பற்றி ஒழுகுவதாகத் தெரியவில்லை. கொவிட் கண்டறியப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில், விசேடமாகக் கொழும்பில் இன்னமும் ஓர் அலட்சியப்போக்ேக மேலோங்கிக் காணப்படுகிறது. முகக்கவசம் அணிவதிலோ, ஒரு மீற்றர் சமூக இடைவௌியைப் பின்பற்றுவதிலோ பெரிதாகக் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

மினுவங்கொடை கொத்தணியில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகிறார்கள். எல்லோருமே ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றே அறியவந்துள்ளது. இருப்பினும், இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்பது மகிழ்ச்சியான தகவலே.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் 05 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி, இதுவரை 3,385 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்நிலையில் 13 பேர் மாத்திரம் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள்.

இலங்கையில் கொவிட் 19 மரணத்தை அத்தோடு முடிவுறுத்திக் ெகாள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் இப்போது மேற்கொண்டு வருகிறது. என்றாலும், சில புது இடங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். கம்பஹா மாவட்டத்தில் எஞ்சியிருக்கும் சில இடங்களிலும் நோய்த்தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. வத்தளை, கந்தானை ஆகிய பகுதிகளிலும் கொழும்பிலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் கடந்த வியாழக்கிழமை (15) நள்ளிரவு சுகாதாரத்துறை அமைச்சு புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருக்கிறது. அதாவது, கொவிட் 19 சுகாதார அறிவுறுத்தல்களைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக இந்த வர்த்தமானி அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது.

புதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களைச் செயற்படுத்தல் உள்ளிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையே வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து சட்டத்தை மீறும் நபர்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேற்படாத தண்டப்பணம். 6 மாத சிறைத்தண்டனை முதலான தண்டனைகள் இரண்டும் அல்லது ஒரு தண்டனையை வழங்குவதற்கு இதன் மூலம் நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வர்த்தக மற்றும் பணியிடங்களுக்குப் பிரவேசித்தல் மற்றும் பேணுதல் போன்ற விடயங்களும் இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பணியிடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்குள்ளும் பிரவேசிக்கும் அனைவரும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

இருவருக்கிடையில் ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் கட்டாயமாகும். பணியிடங்களுக்குப் பிரவேசிப்பதற்கு முன்னர் அனைத்து நபர்களினதும் உடல் வெப்பத்தை அளவிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்.

கிருமிநாசினி தெளிப்பதற்கும் போதுமான வகையில் கைகளைக் கழுவுவதற்கும் வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும்.

பிரவேசிக்கும் அனைத்து நபர்களினதும் பெயர், அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்பை ஏற்படுத்த கூடிய தகவல்களை உள்ளடக்கிய ஆவணப் பதிவை மேற்கொள்ள வேண்டும்.

பணியிடங்களில் ஆகக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஏனைய நபர்களின் எண்ணிக்கை மேற்படாத வகையில் பேணுதல் வேண்டும்.

இதேபோன்று பயண வரையறை, தனிமைப்படுத்தல் அலுவல்கள், போக்குவரத்து அலுவல்கள் போன்ற விசேட விடயங்களுக்கான சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதனை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதற்குப் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நாட்டிலிருந்து இந்தக் கொடிய நோய்த்தொற்றை முற்றாக இல்லாமற்செய்ய முடியும்.

அரசாங்கம் சட்டத்தைப் பிரகடனப்படுத்துவதன் மூலம் மாத்திரம் இதற்கான பரிகாரத்தைக் காண முடியாது. அந்தச் சட்டத்தைப் பின்பற்றிப் பொதுமக்கள் ஒழுகுவதன் மூலமாகவே அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் உரிய பலனைப் பெற்றுக்ெகாள்ள முடியும்.

எனவே, கொவிட் 19 தொற்று ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்வதற்குப் பொதுமக்களின் பங்களிப்பு மிக மிக அத்தியாவசியமானது என்பதைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். அதிகாரிகளின் செயற்பாடுகளும் மக்களை சுயமாக முன்வந்து உதவும் வகையில் அமைய வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியமாகும். அப்போதுதான், சட்டங்களும் அறிவுறுத்தல்களும் சரியாகப் பின்பற்றப்படும்.

Comments