வரவுசெலவுத் திட்டம்: பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சி | தினகரன் வாரமஞ்சரி

வரவுசெலவுத் திட்டம்: பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சி

இலங்கை அரசாங்கத்தின் இரண்டாயிரத்து இருபத்தோராம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் கடந்த பதினேழாந்திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 'கோவிட் 19' நோய்த்தாக்கத்தின் இரண்டாவது அலை சீறிக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டின் நிதி நிலைமைகள் மிகுந்த சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் புறச்சூழலில் இந்த வரவுசெலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் மத்தியில் வரவு செலவு திட்டம் பற்றிய பாரிய எதிர்பார்ப்புகள் இல்லாவிட்டாலும் அக்கொள்ளை நோய் காரணமாக தமது வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு அரசாங்கம் உடனடி நிவாரணங்களை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆயினும் பாரிய சலுகைகளை வாரி வழங்கக்கூடிய நிலையில் நாட்டின் நிதி நிலைமைகள் சாதகமாக இல்லை. ஒருபுறம் கோவிட் 19 காரணமாக சுற்றுலாத் தொழில் முடங்கிப்போயுள்ளது.

ஆடை தயாரிப்புத்துறையில் இரண்டாவது அலை உருவாகி அடிகொடுத்தது. தேயிலையை அடிப்படையாகக் கொண்ட பெருந்தோட்டத் துறையிலும் நோய்பரவ ஆரம்பித்தது. இவ்வாறு இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பிரதான துறைகளில் ஒரு முடக்கநிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ஏற்கெனவே நாடு பெற்றுள்ள கடன்களை ஆண்டுதோறும் தொடர்ச்சியாக மீளச் செலுத்தவேண்டிய கட்டாயம். அத்துடன் அரசாங்கத்தின் கனவுத் திட்டங்களுக்கு நிதிகளை ஒதுக்கவேண்டிய தேவைப்பாடு மற்றும் அரசுதுறை ஊழியர்களுக்கான வேதனங்கள் மற்றும் அரசதுறையில் புதிதாக வேலைவாய்ப்புகளை விரிவாக்கும் முயற்சி என்பன அதிக நிதித் தேவைப்பாடுகளை வேண்டி நிற்கிறது. வரிகளை உயர்த்துவதன் மூலம் அரசாங்கம் வருவாயை உயர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நோக்கர்கள் பலரும் எதிர்பார்த்தனர்.

ஆயினும் நேர்வரிக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளாமல் வரிகளை எளிமைப்படுத்தி எல்லை வரி வீதங்களைக் குறைத்து வரி அடிப்படையை விரிவாக்கி நவீன தொழினுட்பங்களை புகுத்தி வரி அறவிடலைச் செய்வதன் மூலம் வரி வருவாயை அதிகரிக்கலாம் என அரசாங்கம் நம்புகிறது. நேரில் வரிக்கட்டமைப்பில் ஒருசில மாற்றங்கள் தவிர 2020 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட வரித்திருத்தங்கள் மாற்றமின்றித் தொடர்கின்றன.

இப்போதுள்ள வரிமுறைமை அடுத்துவரும் நான்கு வருடங்களுக்கு மாற்றமின்றித் தொடருமென அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் ஏராளமான வரிச்சலுகைகளையும் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளாக அரசாங்கம் கருதும் சில துறைகளுக்கு வழங்கியுள்ளது.
வழமைபோலவே பாதுகாப்புத் துறைக்கே நிதி ஒதுக்கீடுகளில் அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் கோவிட் நெருக்கடியைக் கையாளும் செயற்பாடுகளில் பாதுகாப்புத் துறையின் அதிகரித்த ஈடுபாடு என்பன இதற்கான நியாயப்பாடுகளாகக் கூறப்படுகின்றன. அத்துடன் சுகாதாரத்துறையின் ஒதுக்கீடுகளும் விரிவாக்கப்பட்டுள்ளன.

பலத்த நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 2020ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டுக் கடன் தவணைகளை இலங்கை முற்றாகச் செலுத்தியுள்ளதாகப் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 2020 ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக தேய்வடைந்து சென்றதால் இலங்கை அரசாங்கத்தின் கடன் மீளச் செலுத்தும் ஆற்றலை மதிப்பிட்டுத் தரப்படுத்தும் பிரதான சர்வதேச கடன் தரமிடல் நிறுவனங்களான மூடீஸ் (Moody’s) பிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) மற்றும் ஸ்டான்டர்ட்ஸ் அண்ட் புவர் (Standard and Poor) ஆகிய நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்தின் கடன் மீளச் செலுத்தும் ஆற்றலை இடர்மிகு வகுப்புக்கு தர இறக்கம் செய்தன.

இந்த தர இறக்கத்தின் காரணமாக இலங்கை அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களை பெறச்செல்லும்போது உயர் வட்டி வீதங்களையும் ஏனைய செலவுகளையும் சந்திக்க நேரிடும். அதுமட்டுமன்றி ஏலவே பெற்ற கடன்கள் மீதான செலவுகளும் அதிகரிக்கும். மேற்படி இறைமைக்கடன் தரமிறக்கலை நியாயமற்றதெனவும் உரிய பொருளாதார பின்புலங்களைக் கருத்தில் கொள்ளாமலும் எடுக்கப்பட்ட முடிவெனவும் இலங்கை அரசாங்கம் குறை கூறிய போதிலும் மூன்று தரமிடல் நிறுவனங்களும் தரப்படுத்தலை கீழ்நோக்கி நகர்த்தியமை தன்னிச்சையான செயற்பாடாகக் கருத முடியாது. அத்துடன் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நியமங்களின் அடிப்படையிலேயே கடன் தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது என்பதுடன் மேற்படி தரப்படுத்தல் நிறுவனங்களுக்கு இலங்கைமீது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் ஏதும் ஏற்பட எவ்விதமான காரணங்களுமில்லை. அதேவேளை உரியமுறையில் 2020 ஆண்டிற்கான கடன் தவணையை இலங்கை அரசாங்கம் செலுத்தியதை மேற்படி நிறுவனங்களின் கீழ் நோக்கிய தரமிடலுக்கு இலங்கை வழங்கிய பதிலடியாகக் கொள்ளலாம்.

எனவே பொதுப்படுகடனில் வெளிநாட்டுக் கடன்படலைக் குறைத்து உள்நாட்டு மூலாதாரங்களிலிருந்து கடன்பெற முயற்சிக்கப்படுகிறது. 2021 இல் சுமார் 1.3 டிரில்லியன் ரூபாவை உள்நாட்டு மூலாதாரங்களிலிருந்து திரட்ட முன்மொழியப்பட்டுள்ளது. அதில் 300 பில்லியன் ரூபா உள்நாட்டு வங்கித்துறையிலிருந்தும் 1 டிரில்லியன் ரூபா வங்கியல்லா மூலாதாரங்களிலிருந்தும் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதிலுள்ள முக்கிய பிரச்சினை யாதெனில் உள்நாட்டுத் தனியார் சேமிப்புகளின் அளவு குறைவாக உள்ளதாகும்.
ஏற்கெனவே உள்நாட்டு வட்டி வீதங்கள் குறைவாக உள்ளமையால் உள்நாட்டு சேமிப்பு குறைவாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் உள்நாட்டு வங்கித்துறையிடம் மிகைத் திரவத்தன்மை உள்ளதனால் அதில் ஒருபகுதியை அரசாங்கம் உறிஞ்ச முடியும் என நம்புகிறது. அத்துடன் தனியார் துறையிடமிருந்தும் கடன்களைப் பெறலாம் என அரசாங்கம் நம்புகிறது. திறைசேரிக்கடன் கருவிகளைப் பயன்படுத்தி வெளிநாட்டுக் கடனைப் பெறுவதை குறைக்க முயல்வது தெரிகிறது.

சர்வதேச நாணய நிதியம் உலகவங்கி போன்றவற்றின் கடன்களைப் பெறுவதிலும் இலங்கை அரசாங்கத்தின் 2021 வரவு செலவுத்திட்டம் ஆர்வம் காட்டவில்லை. மாறாக உள்நாட்டு மூலாதாரங்களில் தங்கியிருப்பதையே பெரிதும் விரும்புகிறது. கொள்கை அடிப்படையில் இது விரும்பத்தக்க ஒன்றாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக குறைந்த வரி வீதங்களைக் கொண்ட நிலையான வரிக்கொள்கை அரச வருவாய் அதிகரிப்புக்கு இட்டுச்செல்ல வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது குறைந்த வட்டி வீதம் மற்றும் 2021 வரவு செலவுத்திட்டத்தில் முதலீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் பொருளாதார விரிவாக்கத்திற்கு இட்டுச் செல்வதன் மூலம் அரசாங்கத்தின் வரி வருவாய் கணிசமானளவு அதிகரிக்குமென அரசாங்கம் நம்புகிறது.

2020ஆம் ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம் 1.6 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்யுமென மத்திய வங்கி எதிர்பார்த்தாலும் 2021 இல் அது 5.5 சதவீத நேர்க்கணிய வளர்ச்சியாக மாறுமெனவும் அடுத்துவரும் நான்கு வருடங்களில் 6 சதவீத சராசரி பொருளாதார வளர்ச்சி வீதத்தைப் பேணமுடியுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதேவேளை 2021 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதமாக இருக்கலாமென உலக வங்கி கூறுகிறது. சர்வதேச நாணய நிதியம் அது 5.3 சதவீதமாக இருக்கும் எனக் கருதுகிறது. இவை ஊகங்கள் மாத்திரமே எய்தப்படும் வளர்ச்சிபற்றி காலமே பதில் சொல்ல வேண்டும்.

2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழுந்தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 8.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆகும்போது இதனை 4 சதவீதமாக குறைக்க இலக்கிடப்படப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது இலங்கை அரசாங்கத்தின் வெளிநின்ற கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 90 சதவீதமாக உள்ளது. அதனை 2025 இல் 70 சதவீதமாகக் குறைப்பதற்கும் இலக்கிடப்பட்டுள்ளது. இந்த நோக்கங்களை அடைவதற்காக 2021 வரவு செலவுத் திட்டத்தில் பல முன்மொழிவுகள் காணப்படுகின்றன. இந்த வரவு செலவுத்திட்டத்தை பொதுமக்களுக்கு சலுகை வழங்கும் ஒரு நலன்புரி வரவு செலவுத்திட்டமாகப் பார்க்க முடியாது. மாறாக நடுத்தர கால அடிப்படையில் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தி அதனூடாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எத்தனிக்கும் பல்வேறு திட்டங்களைக் கொண்ட ஒரு முயற்சியாகப் பார்க்க முடியும்.

இறக்குமதிப் பதிலீட்டைக் கையாண்டு உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தும் திட்டங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வாகன இறக்குமதித் தடை தொடர்ந்து நீடிக்கப்படுமென அரசாங்கம் கூறுகிறது. ஆயினும் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து நாட்டில் ஏற்கெனவே உள்ள வாகனங்களைத் திருப்திப் பயன்படுத்த சலுகைகள் வழங்கப்படுமென கூறப்படுகிறது. நாடு பெறும் கடன்களில் கணிசமானளவு நிதி வாகன இறக்குமதிகளின் பொருட்டு செலவிடப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. 2020 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதிகள் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் 16 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்ததாகத் தரவுகள் காட்டுகின்றன. எனவே நடைமுறையிலிருந்த இறக்குமதிப் போக்கில் கட்டுப்பாடுகளை விதித்து நாட்டிலிருந்து டொலரின் பாரியளவு வெளியேற்றத்தைத் தவிர்க்க வேண்டிய தேவையும் அதன் மூலம் இலங்கை நாணயத்தின் பெறுமதி தேய்வடைவதைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசிய நிலையும் ஏற்பட்டது.

இம்முறை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட அதே காலப்பகுதியில் இலங்கையின் இறக்குமதிப் பதிலீட்டு ஆர்வம் தொடர்பாகவும் இறக்குமதித் தடைகள் தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட கூட்டறிக்கை பலரது கவனத்தையும் ஈர்த்தது. இலங்கையுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக நிலுவை ஒரு பில்லியன் டொலர்கள் மிகைநிலையில் இலங்கைக்குச் சாதகமாக உள்ளதாகவும் வர்த்தகம் என்பது ஒரு வழிப்பாதையாக இருக்க முடியாதெனவும் இலங்கை சர்வதேச வர்த்தக நிறுவனத்திற்கு வழங்கியுள்ள கடப்பாடுகளை மீறி வர்த்தகத்தடைகளை விதிப்பதாகவும் அதுபற்றித் தாம் விசனத்துடன் கரிசனை கொள்வதாகவும் வெளிப்படுத்தியிருக்கிறது.

இலங்கையின் இரண்டாவது பெரிய முக்கிய ஏற்றுமதி முடிவிடம் ஐரோப்பிய ஒன்றியமாகும். அமெரிக்காவை அடுத்து இலங்கையின் ஏற்றுமதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கே செல்கின்றன. வாகனங்கள் இயந்திர சாதனங்கள் உலோகங்கள் போன்ற பொருள்களை இலங்கை இறக்குமதி செய்கிறது. தற்போது உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையை இலகுவில் உதாசீனம் செய்துவிட முடியாது. இறக்குமதிப் பதிலீட்டைக் கையாண்டு கொண்டு ஏற்றுமதிகளை அதிகரிப்பது சாத்தியமில்லை என்பதும் வர்த்தகப் பங்காளி நாடுகள் அதற்குரிய எதிர்வினையைக்காட்டும் என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது. இவ்வறிக்கைக்கு அரசாங்கத்தின் பதில் என்னவாக இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2021 வரவு செலவுத் திட்டத்தில் உள்நாட்டுக் கமத்தொழில், மீன்பிடி, பண்ணை வளர்ப்புத் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உணவில் சுயதேவையையும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதும் விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதும் இதன் நோக்கங்களாகும். கடன் வசதிகள் தொழில்நுட்பவசதிகள் சந்தைப்படுத்தல் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் இத்துறையை வலுப்படுத்த எத்தனிக்கப்படுகிறது. குறிப்பாக உள்நாட்டுப் பாற்பண்ணை உற்பத்திகளை ஊக்குவிக்க ஐந்து வருடகாலத்திற்கு நீடித்துச் செல்லும் வரிச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

வர்த்தக முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உள்நாட்டு தொழில் முயற்சிகளைப் பங்குச் சந்தையில் பட்டியலிடச் செய்வதற்கு ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் அவ்வாறு பட்டியலிடப்படும் நிறுவனங்களுக்கு 2020 -/ 2021 காலப்பகுதிக்கான வருமான வரிகளில் 50 சதவீத குறைப்புச் சலுகை வழங்கப்படுவதுடன் அடுத்துவரும் மூன்றாண்டுகளுக்கு 14 சதவீத வருமான வரி அறவிடப்படுமெனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நாட்டின் பங்குச்சந்தை நடவடிக்கைகளை விரிவாக்குவதுடன் முதலீட்டுத் தேவைகளையும் பூர்த்திசெய்து கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதி கைத்தொழில்கள், பாற்பண்ணைகள், கைத்தொழிலாக்கம், சுற்றுலாக் கைத்தொழில், விவசாய கைத்தொழில், தகவல் தொழினுட்பம் போன்ற 10 மில்லியனுக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு விசேட சலுகைகளை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டுக்குள் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கவர்வதற்கான துறைகளாக கைத்தொழில் உற்பத்தி ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், குடியிருப்புகள் மற்றும் காரியாலய கட்டடவாக்கம் தொலைத்தொடர்பு மற்றும் தொலைத் தொடர்புக் கட்டுமானங்கள் போன்றன இனங்கண்டு குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் விரிவாக்கமடைந்த வருமான வளர்ச்சிகண்ட துறைகளாக போக்குவரத்து, சுற்றுலாத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு பயணத்துறை சார்ந்த சேவைகள் காணப்பட்டன.

நிலையான ஒரு அரசாங்கம் அரசாங்கக் கொள்கைகளின் நிலைத்தன்மை, வெளிப்படையான வரிக்கொள்கைகள், நெகிழ்தன்மை வாய்ந்த தொழிலாளர் சட்டங்கள் வினைத்திறனான அரச சேவை போன்றவை ஒரு நாட்டில் வியாபாரம் செய்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. தற்போதைய சூழலில் கோவிட் 19 நோய் மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தாலும். நிலையான ஒரு அரசாங்கம் அமைந்துள்ளது. சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் பல்வேறு முன்னேற்றகரமான முன்மொழிவுகளைக் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவற்றை முறையாக நடமுறைப்படுத்த முடியுமா என்பதே மிகப்பெரிய சவால். திட்டங்களை வகுப்பதிலே இலங்கையர்கள் பலே கில்லாடிகள். ஆனால் அவற்றை கிடப்பிலே போடுவதில் அதைவிடக் கில்லாடிகள். எனவே முறையாக இவற்றை அமுல்படுத்துவதிலும் சரியான திசையில் முறையான கண்காணிப்புடன் அவற்றை மதிப்பீடுசெய்து வழிப்படுத்துவதும் மிக முக்கியமானதாகும்.

இம்முறை சிறுபான்மைச் சமூகங்களுக்கென்று விசேட திட்டங்கள் எதுவும் கண்ணிற்படவில்லை. பெருந்தோட்ட மக்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் முன்மொழிவு அம்மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு ஒர் ஆறுதல் பரிசாக அமையலாம்.

கலாநிதி எம். கணேசமூர்த்தி,
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்.

 

Comments