கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்புகள்

நான் நாற்பது ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் வாழும் மாளிகாவத்தை அடுக்குமாடி (N.H.S Flats) பீ – 54 ஆம் இலக்கத்திற்குப் பின்பக்கம் ஓர் அழகிய விகாரை உள்ளது. எனது அறையின் ஜன்னல் வழியாக நோக்கினால் அங்கு நடக்கும் நிகழ்வுகள் தெரியும்.  

ஒவ்வொரு நாளும் ஒரு சூத்திரம் ஒலிபெருக்கியில் ஒலிக்கும். “சுரா மேரய பமாதத்தானா வீரமணி சிக்காபதம்....” இந்த சூத்திரத்திலே மனிதன் செய்யக்கூடாத பஞ்ச மகா பாதகமான செயல்கள் பற்றிய போதனைகள் உள்ளடங்கி இருக்கும். முக்கியமாக, செய்யக் கூடாத சில ‘பாவங்களை’ உணர்த்துவார்கள். அதிலொன்று சுரா மேரய. சுரா என்பது மது. எனவே இந்த சூத்திரம் மதுபாவனையை தவிர்க்குமாறு வலியுறுத்துகிறது.

இலங்கையின் இந்த இன்றைய நிலைவரம் எப்படி? எங்கெங்கணும் தவறணைகள், குடி கெடுக்கும் குடி விற்பனைக் கடைகள்.  
ஒரு தகவல் கிடைத்து அதிர்ந்தேன். புத்த பெருமானின் புனித தந்தப் பல் பாதுகாக்கப்படுவதாகச் சொல்லப்படும் கண்டி மா நகர் தலதாமாளிகை அமைந்திருக்கும் தலதா வீதியிலும், அதற்கு அண்மையிலும் மட்டும் ஒன்பது (09) மது விற்பனைக் கூடங்களாம்! மொத்தமாகவே கண்டியில் மட்டும் 45 விற்பனை நிலையங்களாம்! அநுராதபுரம், சிவனொளிபாதமலை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புனித இடங்களின் பக்கத்திலும் உள்ளனவாம்.

முற்றும் முழுதுமாக அரச அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்ட 3332 மதுவிற்பனை நிலையங்கள் மத்தியில் அனுமதி பெறாத ‘கள்ள நிலையங்களின் கணக்கு லட்சங்களுக்குக் கிட்ட வருமாம்!  

ரொம்பவே அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் இலச்சினையை முகப்பட்டையில் பதித்து வந்துள்ள ஒரு வெளியீட்டில் கண்டு சிரித்துக் கொண்டு அழுகின்றேன், நான் வாழும் நாட்டின் நிலை கண்டு.  
****** 

இரண்டாம் கசப்பும் குடிகெடுக்கும் குடி பற்றியதே  
நாலே நாலு வரிகளில் நறுக்கென்று!

தீபாவளி அசுரன் கடந்த 14லில் வந்து கடந்து சென்றான் அல்லவா, அன்றைய தினமும் அதற்கு முதல் நாள் 13 லும் நம்ம அருமைத் தமிழ்நாட்டில் டாஸ்மார்க் கடைகளின் மொத்த விற்பனை நானுாற்று அறுபத்தாறு கோடி (466)யாம்! ஒரு கேவலத்தின் உச்சம் இதுவாகவே இருக்க முடியும். இதில் மதுரைக்கு முதலிடம் 106 கோடி. சென்னை 99 கோடி. அடுத்தடுத்து திருச்சி, கோவை இப்படி! தொடர் சாதனை தொட்டு நிற்கிறது தமிழகம் மது விற்பனையில்! இத்தனையும் கொரோனாக் கிருமிகள் சுற்றிச் சூழ! தமிழக இல்லத்தரசிகளின் வாழ்வும் தாழ்வும் இறையோன் அருட்கிருபையில்!! 
***** 

இன்னுமொரு தமிழக அவலத்தையும் கசப்பு வில்லையாகத் தருகிறேன்.  

இது அங்கே இயங்கும் தொலைக்காட்சி நாடகங்களைப் பற்றியது. எந்த நாடகத்தைப் பார்த்தாலும் ஆண் வில்லன்களை விடப் பெண் வில்லிகளே மிகக் கொடியவர்களாகக் காட்டப்படுகிறார்கள்! வில்லன் பாத்திரம் குறைவு. சகலதிலும் வில்லிகளே!  

பெண் திலகங்கள் பிறந்த நாடு. பெண்மணிகளைப் போற்றும் நாடு. இப்படியொரு சித்தரிப்பை ஏன் எழுத்தாளர்கள் சிருஷ்டிக்கிறார்கள்? அதையேன் இல்லத்தரசிகளும், கணவன்மார்களுக்கு தேநீரும் உணவும் கொடுக்காமல் பார்த்துத் தொலைக்கிறார்கள்? தொ(ல்)லைக்காட்சியே உன்னிடம் பதிலுள்ளதா?  
******  

சில கிழமைகளுக்கு முன்னால் “இதேவேளை” என்றொரு சொல்லை வானொலிச் செய்திகளில் செவிகள் புலனற்றுப் போகும் விதத்தில் பாவிப்பதைப் பற்றி புலம்பி இருந்தேன்.  

ஒரு பண்பலை வானொலிக்கு என் எழுத்தின் மீது அத்தனை கோபம், “இதேவேளை” என்பதை இரட்டிப்பாக்கிச் சொல்கிறது. இன்னும் எங்களை வெளிச்சமிடு! என்கிறது.  

மிக முக்கியமாக ஒரு பண்பலை வானொலி, அதன் இரவு 07 மணிச் செய்தியில் கடந்த ஓரிரு வாரங்களில் பாவித்திருப்பதைப் பட்டியலிட்டுத் தருகிறேன் பாருங்கள்.

26/10 : 13, 29/10 : 18,  
30/10 : 17, 31/10 : 16,
01/11 : 11,  
02/11 : 09, 04/11 : 12,
05/11 : 10,  
07/11 : 11, 10/11 : 19,
13/11 : 14,  
14/11 : 11, 15/11 : 18,
16/11 : 13  

ஒரு 15 – 20 நிமிடச் செய்தி அறிக்கையை “இதேவேளை” என்று சொல்லாமல், நகர்த்த முடியவில்லை என்றால் நம் தலைகளும், செவிகளும் செய்த பாவம் என்ன....?  

கடந்த முறை வானொலிப் பெயர்களைச் சொல்லாமல் கண்ணியம் காத்தேன். இம்முறை இயலாது அபிமானிகளே, நீங்களும் அனுமதிக்க மாட்டீர்கள்.  

இதோ பெயர் : “வசந்தம்” இரவு 07 மணிச் செய்தியை ஒருமுறை கேளுங்கள்.  
******

இனிப்புகள்
 
65 ஆண்டுகளுக்கு முன்பு குறுநாவலொன்று நூலாக ஒரேயொரு ரூபாய் விலையில் விற்கப்பட்டிருக்கிறது நம் நாட்டில்!  
அப்பொழுது வந்த விளம்பரமொன்றை இங்கே பாருங்கள்.  

டி.எம்.பீர் முகம்மது என்ற தமிழகத் திருநெல்வேலி மாவட்ட கல்லிடைக் குறிச்சி மண்ணின் மைந்தனை எட்டியாந்தோட்டை மேடையில் ஏற்றிப் பேசவைத்து ரசித்தார் அப்துல் அஸீஸ் என்ற பிரபல தொழிற்சங்கத் தலைவர்.  

அன்று ‘பீரங்கிப் பேச்சாள’ராகப் பரிணமித்த ‘டியெம்பீ’ இதழாளர், இலக்கியவாதி என மலையகத்தை மலைக்கச் செய்தார்.  
அந்த வகையில் மலையகப் படைப்பிலக்கியத்திற்கு 55ல் பிரசவித்த ‘கங்காணி மகள்’ விளம்பரமே மேலே காணப்படுவது.  
இந்த குறு நாவலே தோட்டத் தொழிலாளர் அவலத்தை படம் பிடித்த முதல் நாவல் என்பது என் ஆய்வு. எனினும் மெத்தப் படித்தவர்கள் வித்தியாசப்படுவார்கள்.  

ஓர் ஒப்பற்ற கவிஞராக மட்டுமின்றி பக்கச் சார்பற்ற ஒரு சிறந்த திறனாய்வாளராகவும் மிளிர்ந்த 'தான்தோன்றிக் கவிராயர்' சில்லையூர் செல்வராசன் , “ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி” (1967) யில் மூன்று இடங்களில் ‘டியெம்பி’யின் படைப்பாற்றல் பற்றிப் பதிவிட்டிருக்கிறார்.  
அதிலொரு பதிவு இப்படி அமைந்திருக்கிறது:  

குறு நாவல் பிரிவில் வருகிற ‘கங்காணி மகள்’ நாவலில் மலைநாட்டு மக்களின் பேச்சு வழக்குத் தமிழை பீர் முகம்மது கையாண்டிருப்பது போல் வெற்றிகரமாக வேறெவரும் எந்த நாவலிலும் கையாளவில்லை என்று சொல்ல வேண்டும்” என முத்திரை மோதிரம் அணிவித்துள்ளார்.  
நாவலைப் பற்றிய ஒரு நல்ல திறனாய்வையும் 'நண்பன்' என்ற இதழ் 18.06.55 இதழில் வெளியிட்டிருந்தது. அது இப்படி இரத்தினச் சுருக்கமாகவும் இருக்கிறது!  

* ஆசிரியர் கங்காணி மகளை ஓர் லட்சியப் பெண்மணியாகவும் தமிழ் மரபு குன்றா மங்கையாகவும் சிருஷ்டித்திருக்கிறார். அத்துடன் மங்கையர் குலத்தையும் உயர்த்த மல்லுக்கு நிற்கிறார். சோதிடங்களின் பித்தலாட்டம், மடமை வாழ்க்கையின் சீரழிவு, சமூகச் சீர்திருத்தம், காதல் வளர்வது, வளைவது, கடைசியில் வெற்றி பெறுவது இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அந்தந்தப் பாத்திரங்களுக்கேற்ற மொழிப் பேச்சு வழக்கிலேயே பேச வைத்து வெற்றி கண்டிருக்கிறார்.  

இத்தகையச் சிறப்புகள் கொண்ட மூவர்ண அட்டைப்படத்துடன்கூடிய குறுநாவல் ஒரேயொரு ரூபாய்க்கு விற்பனையானது தான் பெரிய அதிசயம்.  

இந்த எழுத்தாளரை நினைக்கிற நெஞ்சங்கள் இன்று விரல்விட்டு எண்ணக் கூடிய அளவினர் மட்டுமே. அவர் 1962 ல் இலங்கையைத் துறந்து தலைமன்னார் ராமானுஜம் கப்பல் ஏறி தன் தாயகம் நோக்கிப் புறப்பட்ட அடுத்த கணமே அவரைத் தலைமுழுகி விட்டது சமூகம். மலையகத்தில் நடக்காத இலக்கிய நிகழ்வுகள் கொஞ்ச நஞ்சமல்ல! எங்கேயாவது ஓரிடத்தில் இவர் பெயர் உச்சரிக்கப்பட்டிருக்கிறதா? கேவலம்!  
***** 
மலையாளக் கரையோரம் கேரளத்தின் உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் கடந்த 16 லிருந்து ஆரம்பம்.  
இலங்கையிலிருந்து பெருவாரியான பக்தர்கள் செல்வர். நம்ம கிருமி தடுத்திருக்கிறது. ஆன்மிக வழிபாடுகளில் இரு சமூக மக்களிடையே (இந்து – முஸ்லிம்) உள்ள இணக்கப்பாட்டுக்கு சபரிமலை பெரியதொரு உதாரணம்.  

ஐயப்பனை தரிசிக்கச் செல்லும் வழியில் எரிமேலி என்கிற இடத்தில் பிரபலமிக்க “நெயினார் மஸ்ஜித்” உள்ளது. இதனை “வாவர் மசூதி” என்றும் அழைப்பர்.  

பக்தர்கள் விசேடமாக இந்துக்கள் இந்தப் பள்ளிக்கும் செல்வார்கள். அதுவும் ‘வுழு’ (தண்ணீரால் கை, கால், முகம், சுத்தம்) செய்துவிட்டுப் போவார்கள். ‘பேட்டை துள்ளல்’ என்றொரு முக்கிய வைபவம் நடத்துபவர்கள் தவறமாட்டார்கள். அதுவும் ஆண்களுடன் பெண்களும்!  
பள்ளிவாசல் அறிக்கை ஒன்றில் இப்படி உள்ளது:  

* வாவர் மசூதியில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் ஆச்சாரங்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. மசூதிக்கு வயது வித்தியாசமின்றி ஆண்களும், பெண்களும் வருகிறார்கள். மசூதியை வலம் வந்து பிரார்த்தனை செய்து காணிக்கை செலுத்திவிட்டு சபரிமலைக்கு செல்கிறார்கள். பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்தும் இடத்திற்கு பெண்கள் செல்வது கிடையாது. நல்ல எண்ணத்துடன் இங்கு வர யாருக்கும் தடையில்லை.  

நானும் என் 'நிழலு'ம் மிகமிக விரும்பும் கேரளாவில் இனத்துவேசமோ, மதக் கலவரங்களோ ஏற்பட வாய்ப்பே இல்லை! எந்தச் சாமியார்களும் எந்த அரசியல் தலைவர்களையும் கைபொம்மைகளாக்கிக் காரியம் சாதித்துவிட இயலாது, இயலாது!   

Comments