ஜெய்சங்கரின் கொழும்பு வருகையும் புதுடில்லி வகுக்கும் புதிய வியூகமும்! | தினகரன் வாரமஞ்சரி

ஜெய்சங்கரின் கொழும்பு வருகையும் புதுடில்லி வகுக்கும் புதிய வியூகமும்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பிறகு கடந்து விட்ட ஒரு வருடத்திற்கும் சற்று அதிகமான காலகட்டத்திற்குள் கொவிட்19 தொற்று பரவலுக்கு மத்தியிலும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் கொழும்புக்கு அடிக்கடி விஜயங்களை மேற்கொள்வதை அல்லது வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் இணைய வழியூடாக பேச்சுவார்த்தைகளை
நடத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது. குறிப்பாக சீன, இந்திய மற்றும் அமெரிக்க இராஜதந்திரிகள் ஒரு குறுகிய காலகட்டத்திற்குள் இலங்கைக்கு அடிக்கடி விஜயங்களை மேற்கொண்டதை நாம் இதற்கு முன்னர் ஒருபோதும் கண்டதில்லை.

இந்த விஜயங்கள் எல்லாவற்றிலும் முக்கியமானதாக, பதவி விலகும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிருவாகத்தின் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் 2019 ஒக்டோபர் விஜயம் அமைந்திருந்தது எனலாம்.

தீவிரமான இந்த இராஜதந்திர ஊடாட்டங்களில் மிகவும் முக்கியமாக ஒரு அம்சத்தை கவனிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது, இந்திய அல்லது அமெரிக்க இராஜதந்திரிகள் கொழும்புக்கு வந்து சென்ற பிறகு உடனடியாகவே சீனாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இங்கு வருகை தருவது வழக்கமாக இருக்கின்றது.

கடந்த செவ்வாயன்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இலங்கை வந்தடைந்த அவர், அடுத்த இரு நாட்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

ஜெய்சங்கரின் இந்த கொழும்பு விஜயமானது தெற்காசிய மற்றும் இந்து சமுத்திர பிராந்தியங்களில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு புதுடில்லி வியூகங்களை வகுத்துச் செயற்படுவதன் பின்னணியில் நோக்குகையில், கேந்திர முக்கியத்துவ மற்றும் இராஜதந்திர காரணங்களுக்காக பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டதாக அமைந்தது.

அதேவேளை, ராஜபக்‌ஷ அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான செயன்முறைகளை முன்னெடுத்திருக்கும் தற்போதைய நிலையில் ஜெய்சங்கரின் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது. 1987 ஜூலை இந்திய_ -- இலங்கை சமாதான உடன்டிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட மாகாணசபைகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை தென்னிலங்கையில் தேசியவாத சக்திகள் மத்தியில் அதிகரித்திருக்கும் இன்றைய நிலையில், ஜெய்சங்கரின் இந்த விஜயம் இருதரப்பு உறவுகளுக்கு அடிப்படையாக காரணிகளாலும் பெரும் கவனிப்புக்குள்ளாகியிருந்தது.

கோட்டாபய ராஜபக்‌ஷ 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற உடனடியாகவே ஜெய்சங்கர் கொழும்பு வந்திருந்தார். புதுடில்லிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அப்போது அவர் கையளித்தார். அதையடுத்து, ஜனாதிபதியும் வெளிநாட்டுக்கான தனது முதலாவது அரசமுறை விஜயமாக புதுடில்லிக்குச் சென்றார். அதற்குப் பிறகு இப்போதுதான் ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 டிசம்பரில் ஜனாதிபதி கோட்டாபயவும், 2020 பெப்ரவரியில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் புதுடில்லிக்கு அரசுமுறை விஜயங்களை மேற்கொண்டு இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். பிறகு கொவிட் -19 தொற்று பரவலின் விளைவாகத் தோன்றிய பொதுச்சுகாதார நெருக்கடியை கையாளுவதில் இலங்கைக்கு இந்தியாவின் ஒருமைப்பாட்டை வெளிக்காட்டுவதற்காக 2020 மே மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அதற்குப் பிறகு 2020 செப்டெம்பரில் இந்தியப் பிரதமருக்கும் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் இணைய வழி உச்சிமகாநாடொன்று நடைபெற்றது. பிரதமர் மோடி அயல்நாடொன்றின் தலைவருடன் நடத்திய முதலாவது இணையவழி உச்சிமாநாடாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வெளிநாட்டுத் தலைவர் ஒருவருடன் நடத்திய முதலாவது இணையவழி உச்சிமகாநாடாகவும் அது அமைந்தது.

அதற்குப் பின்னர் முக்கிய இந்திய இராஜதந்திரியொருவரின் இலங்கை விஜயமாக 2020 நவம்பரில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலின் கொழும்பு வருகை அமைந்தது. கடந்த செவ்வாயன்று ஜெய்சங்கரின் வருகை புதுவருடத்தில் இலங்கைக்கு வெளிநாட்டு மூத்த இராஜதந்திரியொருவரின் முதலாவது விஜயமாக அமைந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

ஜெய்சங்கரின் கொழும்பு விஜயத்தின் முக்கியமான கேந்திரமுக்கியத்துவ காரணம் என்றால், அது கொழும்பு துறைமுகத்தின் புதிய கிழக்கு கொள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான செயற்திட்டம்தான். இந்தியாவும் இலங்கையும் கூட்டாக அந்த முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் குறித்தே தொடக்கத்தில் பேசப்பட்டது. ஆனால், அதற்கு தென்னிலங்கை தேசியவாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், அதில் ஜப்பானையும் இணைத்து முத்தரப்பு கூட்டுச் செயற்திட்டமாக 2019 ஆம் ஆண்டில் முன்னைய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. அதற்குப் பின்னரும் கூட அந்த செயற்திட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை.

2020 பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் அந்த முத்தரப்பு செயற் திட்டத்தை கைவிடவேண்டுமென்று கோரிக்கை விடுத்து கொழும்பு துறைமுக ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் குதித்தன. அந்தப் போராட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதியாக ஆதரித்தது. தேர்தலுக்குப் பிறகு பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததும் அந்த செயற் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், கைவிடப்படவில்லை.

சீனாவின் நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 150 கோடி டொலர்கள் செலவிலான பிரமாண்டமான கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு அருகாக கிழக்கு கொள்கலன் முனையம் அமைவதால், அதை இந்தியாவினதும் ஜப்பானினதும் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்வது சீனாவின் நலன்களுக்கு பாதகமாக அமைவதாக பெய்ஜிங் குறைபட்டுக் கொண்டதாலேயே அரசாங்கம் அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டதாகவே அவதானிகள் நம்புகிறார்கள்.

ஆனால், அந்த முத்தரப்பு செயற் திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கைக்கு நெருக்குதல்களை புதுடில்லி தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வந்தது. இந்தியாவுடனான கூட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதில் கொழும்புக்கு ஆர்வமில்லா விட்டாலும் கூட, 'வெட்டொன்று, துண்டு இரண்டு' என்று இந்தியாவுடனான விவகாரங்களை கையாளுவதற்கும் இலங்கையினால் முடியாது. அத்தகைய ஒரு பின்புலத்திலேயே, கடந்த வருட இறுதியில் அஜித் டோவாலினதும், இப்போது ஜெய்சங்கரினதும் விஜயங்கள் அமைந்திருந்தன.

இது இவ்வாறிருக்க, இந்தப் பிராந்தியத்தில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் " இந்தோ -- பசுபிக் மூலோபாயத் திட்டத்தில் இலங்கையையும் இணைத்துக்கொள்வதில் வாஷிங்டனும் புதுடில்லியும் அக்கறை காட்டுகின்றன.அந்த வியூகங்களின் பின்னணியிலும் இந்திய வெளியுறவு அமைச்சரின் கொழும்பு விஜயத்தை நோக்கவேண்டும்.

இதனிடையே, இதுகால வரையும் இலங்கைக்கு கூடுதல் நிதியுதவிகளை வழங்கி வந்த ஜப்பானையும் கூட இன்றைய அரசாங்கம் அலட்சியம் செய்யத் தயாராகியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஜப்பானின் பல ஆயிரம் கோடி டொலர்கள் உதவியுடன் கொழும்பின் பெருநகரப் பகுதியில் இலகு ரயில் திட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. இத்திட்டத்துக்கான முதற் கட்ட உதவித் தொகையை டோக்கியோ ஏற்கெனவே வழங்கியும் விட்டது. அவ்வாறிருந்தும் அந்த இலகு ரயில் திட்டத்தை கைவிடுமாறும் அதன் அலுவலகத்தை மூடி விடுமாறும் அரசாங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு உத்தரவிட்டிருக்கின்றது.

இந்தத் திட்டத்தை சீனாவுக்கு வழங்குவதற்காகவே அரசாங்கம் அவ்வாறு செய்ததாக அவதானிகள் சந்தேகிக்கிறார்கள். இவ்வாறாக, சீனாவுக்கு ஆதரவான அணுகுமுறைகளை அரசாங்கம் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வருவது இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பெரும் அசௌகரியத்தைக் கொடுக்கின்றது.

அதனால், பிராந்தியத்தில் ஒரு பனிப்போர் மூண்டிருக்கிறது. அதில் சீனாவுக்கு முற்றிலும் அனுசரணையாகச் செயற்படுவதிலிருந்து இலங்கை அரசாங்கத்தை தடுப்பதற்கான வியூகங்களில் முன்னணி பங்கை ஆற்ற வேண்டிய தேவை தனக்கு இருப்பதாக இந்தியா உணருகிறது. சீனாவைப் போன்று இலங்கையில் பிரமாண்டமான உட்கட்டமைப்பு செயற் திட்டங்களில் பாரிய முதலீடுகளைச் செய்ய இந்தியாவினால் முடியாது என்றாலும், இலங்கைக்கு தன்னாலான உதவிகளை புதுடில்லி வழங்கவே செய்கிறது.

அதேவேளை, இலங்கைக்கு அரசியல் ரீதியில் நெருக்குதலைக் கொடுப்பதற்கான காரணிகளாகவும் சில பிரச்சினைகளை இந்தியா கையாளுகிறது. அவற்றில் ஒன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை.

1987 ஜூலை இலங்கை-_இந்திய சமாதான உடன்படிக்கைக்குப் பின்னரான காலகட்ட கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு இந்தியா இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிர ஈடுபாடு காட்டுவதை தவிர்த்து வந்தாலும் கூட, மாகாணசபைகள் அமைவதற்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இலங்கையில் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் தலைவர்களிடமும் அதே வலியுறுத்தலை மோடி அரசாங்கம் செய்து வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவையும் சந்தித்த சந்தர்ப்பங்களில் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் இருவரும் அதற்கு நேரடியான பதில் சொல்வதில்லை. மாகாணசபைகளை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கை இன்றைய அரசாங்கத்திற்குள்ளேயே வலுவடைந்திருக்கும் அதேவேளை, மாகாணசபைகளை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு முயற்சியையும் இந்தியா தடுக்க வேண்டும் என்று தமிழ் அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுக்கின்றன. கொழும்பு வந்த ஜெய்சங்கருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது வியாழக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்த வேண்டுகோளை மீண்டும் விடுத்தார்கள்.

உத்தேச புதிய அரசியலமைப்பில் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் எத்தகைய ஏற்பாடுகள் இடம்பெறுமோ தெரியாது. ஆனால், மாகாணசபைகள் விடயத்தில் இந்தியாவின் அக்கறைகளை அரசாங்கத்தினால் புறந்தள்ளி விட முடியாது என்பதில் சந்தேகமில்லை.


 

Comments