ஆயிரம் ரூபா விவகாரம் கடந்து வந்த பாதை! | தினகரன் வாரமஞ்சரி

ஆயிரம் ரூபா விவகாரம் கடந்து வந்த பாதை!

இலங்கையைப் பொறுத்த வரையில் பெருந்தோட்டத் துறையென்பது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு மாத்திரமன்றி, கணிசமான அந்நிய செலாவணியை நாட்டுக்கு ஈட்டிக் கொடுப்பதில் பங்கெடுக்கும் துறையாகவும் விளங்குகின்றது. இலங்கையில் விளைவிக்கப்படும் பெருந்தோட்டப் பயிர்களின் உற்பத்தியான தேயிலை மற்றும் இறப்பர் ஆகியவற்றுக்கு சர்வதேச ரீதியில் காணப்படும் கிராக்கி அதிகம். அதன் காரணமாக இலங்கைத் தேயிலைக்கென்று சர்வதேச ரீதியில் இன்றும் தனித்துவமான நற்பெயர் உள்ளது.

இந்தியா, கென்யா உள்ளிட்ட நாடுகளின் உற்பத்தி காரணமாக இலங்கைத் தேயிலைக்குப் போட்டித் தன்மை அதிகரித்துள்ள போதும், தேயிலையின் தரம் தொடர்பில் காணப்படும் நம்பிக்கையால் இன்னமும் எமது தேயிலைக்கான கேள்வி காணப்படுகிறது. இந்தத் தேயிலை உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக கொண்டவர்களாக மலையக வாழ் பெருந்தோட்டத் தொழிலாள மக்கள் காணப்படுகின்றனர்.   

ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தின் போது இலங்கை பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்காக தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட அவர்களது வரலாறு இரு நூற்றாண்டைக் கடந்துள்ளது. ஆனால் அம்மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடையவில்லை.

தேயிலைத் தொழில் துறையை நம்பியே மலையகத்திலுள்ள ஏராளமான குடும்பங்கள் இன்னமும் வாழ்ந்து வருகின்றன. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துச் சென்றாலும், தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் அந்தக் குடும்பங்களின் வருமானத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லையென்பது பலருக்கும் தெரிந்த விடயம்.

இந்த மக்களின் வருமானம் குறித்து அவ்வப்போது தொழிற்சங்கங்களும், அரசாங்கங்களும் கவனம் செலுத்தி வரும் நிலையில், கடந்த சில வருடங்களாக தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வந்தது. தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள விவகாரம் இலங்கை அரசியலிலும் பேசுபொருளாக இருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சம்பள நிர்ணய சபையில் இது தொடர்பான தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்ட செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்த இறுதித் தீர்மானம் இன்னமும் எட்டப்படாத நிலையில், ஆயிரம் ரூபா விவகாரம் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்கள் மக்கள் மத்தியில் ஒருவிதமான நம்பிக்கை உருவாகியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் என்பது ஒரு தரப்பினால் மாத்திரம் நிர்ணயிக்கப்பட முடியாத ஒன்றாகவிருக்கும் நிலையில், 1000 ரூபா அடிப்படைச் சம்பளக் கோரிக்கையானது 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. மலையகத்தில் பலம் பொருந்திய தொழிற்சங்கமாகவும், அம்மக்களின் குறைநிறைகளில் பங்கு கொள்ளும் பிரதான அரசியல் சக்தியாகவும் காணப்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்த மறைந்த ஆறுமுகன் தொண்டமானே இந்தக் கோரிக்கையை முதன் முதலில் முன்கொண்டுவந்தவராவார்.

2014ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்து புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருந்த நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மறைந்த ஆறுமுகன் தொண்டமானால் முன்வைக்கப்பட்டது.

அந்த நேரத்தில், கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது இழுபறியில் இருந்தமை மற்றும் 2015ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு நாடு முகங்கொடுக்கவிருந்தமை போன்ற காரணிகளால் இந்தக் கோரிக்கை அரசியல் கோஷமாக மாறியிருந்தது.

அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி அப்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகத்தில் போராட்டங்களை ஆரம்பிக்க, அவ்விவகாரம் போட்டி அரசியலுக்கான துரும்பாகியது. மனோ கணேசன், திகாம்பரம், மற்றும் இராதாகிருஷ்ணன் போன்ற மற்றைய மலையகத் தலைவர்கள் இதே கோஷத்தை தமது கையில் எடுத்தனர்.

அரசியல் கட்சிகள் அப்போது ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாரானதால் கூட்டணி குறித்த பேரப் பேச்சுக்களில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற விடயம் பிரதான தேசியக் கட்சிகளிடம் நிபந்தனையாக சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை மஹிந்த அணியிடம் முன்வைக்க, மனோ,திகா,ராதா கூட்டணியான தமிழ் முற்போக்குக் கூட்டணி மைத்திரி அணியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதுடன் தோட்டத் தொழிலார்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துவோம் என்ற தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் பொறுப்பு தமிழ் மக்கள் முற்போக்குக் கூட்டணி வசம் சென்றது. அரசியல் ரீதியாக அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தாலும், சம்பளத்தை நிர்ணயிக்கக் கூடிய அதிகாரம் அவர்களுக்கு இருக்கவில்லை.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியனவே பெருந்தோட்டக் கம்பனிகளுடன் கைச்சாத்திடுகின்றன. நீண்ட இழுபறியின் பின்னர் 2017ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது அடிப்படைச் சம்பளத்தை 700 ரூபாவாகவும், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக 50 ரூபாவாகவும் மாத்திரம் வழங்கவே இணக்கம் காணப்பட்டது.

இந்த இணக்கத்துக்கு திரைமறைவில், அப்போதிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழுத்தம் காரணமாக இருந்தது. அரசின் அழுத்தத்தை ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பகிரங்கப்படுத்தியிருந்தார். கூட்டு ஒப்பந்தம் என்பது தொழிற் சங்கங்களுக்கும் தோட்டக் கம்பனிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்படுவதாக இருந்தாலும் பின்புலத்தில் அரசியல் அழுத்தம் இருக்கிறது என்பதை இது பகிரங்கப்படுத்தியிருந்தது.

நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றத் தவறியமையால், மனோ கூட்டணி தொடர்ந்தும் ரணில் தலைமையிலான அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை வழங்கும் வகையில் வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீட்டை வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. அமைச்சரவையின் அங்கீகாரம் இதற்கு வழங்கப்பட்ட போதும் அப்போது பெருந்தோட்டத்துறை அமைச்சராகவிருந்த நவீன் திஸாநாயக்க இதனை நடைமுறைப்படுத்துவதில் இழுத்தடிப்புச் செய்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவிருந்த காமினி திஸாநாயக்கவின் மகனான நவீன் திஸாநாயக்க நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியவராக இருந்தாலும், சம்பள விவகாரத்தில் தீர்வை வழங்க அவர் விரும்பவில்லை. சிறுபான்மை இனத்தவர்களுக்கு ஆதரவான தலைவர் என அவர் தன்னை அடையாளப்படுத்தினாலும் இனவாதம் மிக்க வகையில் அவருடைய செயற்பாடுகள் அமைந்திருந்தன. அது மாத்திரமன்றி, பெருந்தோட்டக் கம்பனிகளில் அவருக்குப் பங்கு இருப்பதாகவும் அப்போது குற்றச்சாட்டுக்கள் எழத் தவறவில்லை.

இது போன்ற ஒரு சிலரின் செயற்பாடுகளால் நல்லாட்சி அரசாங்கம் மீது பெருந்தோட்ட மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை இழக்கப்பட்டது. இதனால் 1000 ரூபா அடிப்படைச் சம்பள விவகாரம் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் கூட்டணிப் பேரத்துக்கான பேசுபொருளானது. இந்தக் கோரிக்கையை அடிப்படையாக வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்க, தமிழ் முற்போக்குக் கூட்டணியும் இதனைப் பயன்படுத்தி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்தது. இந்த நிலையிலேயே 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதால் அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு அப்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவிருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்குச் சென்றது. இதனை நிறைவேற்றுவதற்கு இறுதி மூச்சு வரை அமரர் ஆறுமுகன் தொண்டமான் செயற்பட்டிருந்தார் என்றால் அது மிகையாகாது. 2020ஆம் ஆண்டு மே மாதம் திடீர் சுகவீனம் காரணமாக ஆறுமுகன் தொண்டமான் உயிரிழப்பதற்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த போதிலும் கூட இவ்விடயம் பற்றியே கலந்துரையாடியிருந்தார். தொண்டமானின் மறைவையடுத்து அவருடைய கனவை நிறைவேற்றும் பொறுப்பு மகன் ஜீவன் தொண்டமானுக்குச் சென்றது.

2020 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்ததால், அவருடைய வெற்றிடத்துக்கு மகன் ஜீவன் தொண்டமான் களமிறக்கப்பட்டு அமோக வெற்றியும் பெற்றார். தந்தையின் மறைவினால் ஏற்பட்ட அனுதாபம் மற்றும் தொண்டமானின் கனவுகளை நிறைவேற்றுவோம் என்று அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி அவருடைய வெற்றியை உறுதிப்படுத்தின. ஆறுமுகன் தொண்டமான் மீது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருந்த அன்பின் காரணமாக அவருடைய மகன் வயதில் குறைந்தவராக இருந்தாலும், அவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியை வழங்கி இலங்கைத் தொழிலாளர் காங்கிரசை தொடர்ந்தும் பெருந்தோட்ட மக்களுடன் இணைந்து செயற்பட வழிவகுத்தனர்.

இவ்வாறான அரசியல் பின்னணியிலேயே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும் என்ற யோசனையை முன்வைத்தார். இதனை நடைமுறைப்படுத்தத் தவறும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பையும் விடுத்தார்.

‘மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது’ போன்று ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த பெருந்தோட்ட மக்களுக்கு கொவிட்19 சூழல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.

தற்போதைய சூழ்நிலையால் சம்பள அதிகரிப்புக்கு பெருந்தோட்டக் கம்பனிகள் மறுப்புத் தெரிவித்தன. இருந்த போதும் இதற்கான முயற்சிகள் தொடர்ந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சம்பள நிர்ணய சபையில் இருதரப்பு பிரதிநிதிகளுடனும் சந்திப்பு நடைபெற்றது. இதில் அடிப்படைச் சம்பளத்தை 900 ரூபா வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தொழிற்சங்கத் தரப்பும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் இந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததுடன், பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், 900 ரூபா அடிப்படைச் சம்பளமும், 100 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுமாக 1000 ரூபாவுக்கு சம்பள நிர்ணய சபை அனுமதி வழங்கியிருப்பதாக தொழில் அமைச்சு அறிவித்திருந்தது.

இருந்த போதும், குறித்த விவகாரம் தொடர்பில் ஆட்சேபனையைத் தெரிவிப்பதற்கு இரு தரப்புக்கும் 14 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபையில் குறித்த அனுமதி வழங்கப்பட்ட பின்னரும் பெருந்தோட்டக் கம்பனிகள் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை வழங்க முடியாது என்ற கருத்தையே தெரிவித்திருந்தன. அவ்வாறு வழங்குவதாயின் கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டு சலுகைகள் நிறுத்தப்படுவதுடன், 13 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என்ற விடயங்களை முன்வைத்திருந்தனர். பெருந்தோட்டக் கம்பனிகளின் இந்த நிலைப்பாட்டுக்கு மலையகத் தலைவர்கள் பலரும் பாராளுமன்றத்தில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

தோட்டத் தொழிலாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு விடயத்தில் தாம் வெற்றி கண்டுள்ளதுடன் கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட மாட்டாதென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

1,000 ரூபாய் சம்பள அதிகரிப்புடன் கூட்டு ஒப்பந்தத்தில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுமென தெரிவித்த அவர், கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படுவதாக எதிர்க் கட்சிகளே பிரசாரம் செய்து வருவதாகவும் அவ்வாறு எந்த முடிவும் கிடையாதென்றும் அவர் தெரிவித்துள்ளார். கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படும் என்பது எதிர்க் கட்சியினரின் பிரசாரம் என்றும், 1000 ரூபா சம்பள அதிகரிப்புத் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதும் உரிய சலுகைகளுடன் அது நடைமுறைக்கு வரும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எதுவாக இருந்தாலும் பெருந்தோட்டக் கம்பனிகள் உரிய சம்பள உயர்வை வழங்க முடியாது என சம்பள நிர்ணய சபைக்கு தமது ஆட்சேபனைகளை முன்வைக்கும் பட்சத்தில் இவ்விடயம் நீதிமன்றத்துக்குச் சென்றால் தொடர்ந்தும் இழுபறி நிலைமையே காணப்படும். நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாகவிருக்கும் பெருந்தோட்டத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கும் தோட்ட மக்களின் அடிப்படைச் சம்பள விவகாரம் இந்த அரசாங்கத்தின் காலத்திலாவது முடிவுக்குக் கொண்டு வரப்படுமா என்பது எதிர்வரும் சில நாட்களிலேயே தெரியும்.

Comments