கூட்டமைப்பு அஸ்தமிக்கும் வேளையில் உதயமாகின்ற தமிழ் தேசியப் பேரவை | தினகரன் வாரமஞ்சரி

கூட்டமைப்பு அஸ்தமிக்கும் வேளையில் உதயமாகின்ற தமிழ் தேசியப் பேரவை

இலங்கை அரசியலில் தமிழர் தரப்பின் பிரசன்னம் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலிருந்தே காணப்பட்டாலும், சுதந்திரத்துக்கு பின்னர் உக்கிரமடைந்த ‘கட்சி அரசியல்’ போக்கினால் தமிழர் அரசியலும் பல்வேறு பிளவுகளுடன் தொடர்ந்து கொண்டே வருகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவதொரு இலக்கை முன்னிலைப்படுத்தி தமிழ்த் தலைவர்களால் அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்ட போதும், காலப்போக்கில் பல பிளவுகளும் பின்னடைவுகளும் ஏற்பட்டமையே வரலாறு.

இலங்கையில் தமிழர்களின் ‘கட்சி அரசியல் வரலாறு’ 1944ஆம் ஆண்டு ஆரம்பமானது. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலேயே ஜீ.ஜீ.பொன்னம்பலத்தினால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டது.

சுதந்திரத்துக்கு முற்பட்ட அக்காலப் பகுதியில் தமிழர்களுக்கு அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பது என்ற நோக்கத்தில் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் போன்ற தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றாகவே செயற்பட்டனர். நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் நிலைப்பாடு ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பானதாக இருந்தமையாலும், மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்கும் ஐ.தே.கவின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத காரணத்தாலும் அதிருப்தியடைந்த செல்வநாயகம் உள்ளிட்டவர்கள், 1949ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழர் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று 'பெடரல்' கட்சியை உருவாக்கினர்.

தமிழ் மொழி பேசக் கூடிய இனங்களால் கூட்டாட்சியொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதே பெடரல் கட்சியின் அன்றைய கோரிக்கையாகவிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் கடும்போக்குவாத செயற்பாடுகள் பெடரல் கட்சிக்கு தமிழர்கள் மத்தியில் அமோக ஆதரவைப் பெற்றுக் கொடுத்ததும் இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அது வளரத் தொடங்கியது. பலமான அரசியல் பின்னணியுடன் 1965ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகவும் அது இணைந்து கொண்டது.

ஒரு சில வருடங்கள் இந்தக் கூட்டு நீடித்தாலும் ஐ.தே.கவின் நிலைப்பாட்டின் காரணமாக அரசிலிருந்து வெளியேறி தொடர்ந்தும் எதிர்க் கட்சியாக செயற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது அக்கட்சி. தொடர்ந்தும் நீடித்த கடும்போக்குவாத செயற்பாடுகளால் தமிழ்க் கட்சிகள் தமக்கிடையிலான வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்வதற்கான முயற்சிகளை 1970களின் ஆரம்பத்தில் தொடங்கியிருந்தன.

குறிப்பாக ஒன்றுடன் ஒன்று எதிராகவிருந்த தமிழ்க் கட்சிகளான தமிழ் காங்கிரஸ், பெடரல் கட்சி மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய சௌமியமூர்த்தி தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன இணைந்து ‘தமிழர் ஐக்கிய முன்னணி’ என்னும் அமைப்பை உருவாக்கி, அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.

இது எவ்வித பயனும் அளிக்காததைத் தொடர்ந்து 1976 இல் இலங்கையில் தமிழருக்குத் தனிநாடு கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், ‘தமிழர் ஐக்கிய முன்னணி’ என்னும் பெயர் ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ எனவும் மாற்றப்பட்டது. அமைதி வழியில் தமது இலக்கை அடைவதையே இம்முன்னணி நோக்கமாகக் கொண்டிருந்தது.

மாறி மாறி மத்தியில் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை கட்சிகளின் கடும்போக்கான அரசியல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. இந்த அமோக ஆதரவால் பிரதான எதிர்க் கட்சியாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியால் செயற்பட முடிந்தது. தனிநாட்டுக் கோரிக்கையில் உறுதியாகவிருந்ததால் 1983ஆம் ஆண்டு அக்கட்சியின் உறுப்பினர்கள் இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்து பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்யவில்லை.

பிரதான அரசியலில் தமிழர்களின் சார்பில் குரல் கொடுக்க உரிய பிரதிநிதித்துவம் இல்லாமையால் பல போராட்டக் குழுக்களின் தோற்றத்துக்கு அன்றைய நிலைமை வழியை ஏற்படுத்தியது. இதன் பின்னரான காலத்திலேயே தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து பல போராட்டக் குழுக்கள் உருவாகி, பின்னர் அவை ஆயுதக் குழுக்களாகவும் உருமாற்றம் பெற்றன.

இவ்வாறான நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி 1986ஆம் ஆண்டு தனது தனிநாட்டுக் கோரிக்கை என்ற நிலைப்பாட்டை சற்றுத் தணித்து, ‘பிரிக்கப்படாத நாட்டுக்குள் சுயாட்சி’ என்ற விடயத்தை வலியுறுத்தியது.

மறுபக்கத்தில் 80களின் ஆரம்பத்திலிருந்தே போராட்டக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடையத் தொடங்கின. இக்குழுக்கள் தமிழ் மக்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்தினாலும் தமது சிரேஷ்ட தலைவர்களையே விமர்சிப்பது, குழுக்களுக்கிடையில் சாதிய மற்றும் போட்டாபோட்டி அடிப்படையிலான வேறுபாடுகள் காண்பிப்பது போன்றவை திரைமறைவில் இடம்பெற்றன.

அது மாத்திரமன்றி, கோரிக்கைகளும் இலக்கும் ஒன்றாக இருந்திருந்தால் அனைத்துக் குழுக்களும் ஒன்றாக செயற்பட்டிருக்க முடியும். ஒற்றுமையும் அக்குழுக்களிடம் இருக்கவில்லை. மாற்று இயக்கங்களை வேட்டையாடுவதில் புலிகள் இயக்கம் மும்முரமாக இருந்தது. அதன் காரணமாக மற்றைய இயக்கங்களும் புலிகளுக்கு எதிராக செயற்படுவது தவிர்க்க முடியாததாக இருந்தது.

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் எனக் கூறிக் கொண்டு அவர்கள் தமக்கிடையில் நிழல் யுத்தத்தைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு போராட்டக்குழு மத்திய அரசுக்கு ஆதரவாக செயற்படும் நிலைமை காணப்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கும் துர்ப்பாக்கிய சூழலும் ஏற்பட்டது. இயக்க உறுப்பினர்கள் மாத்திரமன்றி அப்பாவி மக்கள் ஏராளமானோர் இயக்கங்களாலேயே கொல்லபட்டனர்.

80களில் ஆரம்பமான இந்த குழுக்களுக்கிடையிலான மோதல்கள் 1990 வரை தொடர்ந்ததுடன், இயக்கங்களுக்கிடையிலான மோதல்களில் எல்.ரி.ரி.ஈ இயக்கம் மாத்திரம் தன்னை பலமானதொரு அமைப்பாகக் காண்பிக்கத் தொடங்கியது. ஆயுதக் குழுக்கள் தம்மை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொண்டு அரசியல் செய்யத் தொடங்கின. புலிகளிடமிருந்து பாதுகாப்புப் பெற வேண்டிய தேவையும் மற்றைய இயக்கங்களுக்கு இருந்தது.

மக்களின் உரிமைக்காக சாத்வீக ரீதியில் ஆரம்பமான போராட்டம் பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியதால் ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக நாடு எதிர்கொண்ட நிலைமை நாம் அனைவரும் அறிந்த விடயம். தனிநாடு கோரி யுத்தம் இடம்பெற்ற சூழ்நிலையில் தமிழ் மக்களை அரசியல் ரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி அரசியலில் ஒரு மந்த நிலையே காணப்பட்டது. ஆயுதக் குழுக்களுக்குப் பயந்து செயற்படும் நிலை தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டது.

யுத்த காலத்தில் பல தமிழ் அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றிருந்தாலும், ஆயுதக் குழுவின் ஆதிக்கமே அதிகமாகவிருந்தது. இவ்வாறான சூழ்நிலையிலேயே 2001ஆம் ஆண்டு தமிழ்க் கட்சிகள் பலவற்றை ஒன்றிணைத்து பலமான கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட்டது. மறைந்த ஊடகவியலாளர் ‘தராக்கி’ சிவராம் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் எல்.ரி.ரி.ஈ தரப்பில் உள்ளோர் இணைந்து பல கட்சிகளை இணைத்து ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை’ உருவாக்கினர்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டது. பின்னரான காலப் பகுதியில் அதனுடன் புளொட் இணைக்கப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த வீ. ஆனந்தசங்கரி இணைத்துக் கொள்ளப்படாமையால், அதன் சின்னத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்த நீதிமன்றத்தில் அவர் தடையுத்தரவைப் பெற்றார். இவ்வாறான சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போதும் அது இன்னமும் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாதுள்ளது.

தமிழர்களுக்கான அரசியல் சக்தியாக உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டணி 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் சற்று ஆட்டம் காணத் தொடங்கியது என்றே கூற வேண்டும். குறிப்பாக எல்.ரி.ரி.ஈயினர் இல்லாதாக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் மேலோங்கத் தொடங்கியது. ஆயுதக் குழுக்களாக முன்னொரு காலத்தில் இருந்தவர்களை படிப்படியாக இதிலிருந்து நீக்கும் முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டதால், கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகளும் கட்சித் தலைவர்களுக்கிடையில் மனக்கசப்புகளும் ஏற்படத் தொடங்கின. இதனால் இன்னமும் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிய முடியாமல் உள்ளது.

இது இவ்விதமிருக்க, தமிழ்க் கட்சிகள் யாவும் ஒன்றாக இணைவதற்கு அவ்வப்போது பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், ஒரு சிலரின் பதவி மோகத்தினால் பலமான கூட்டணியொன்றை அமைக்க முடியாதிருந்தது. இருந்தாலும், தேர்தல் காலங்களில் ஒருசில அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டணிகளை அமைக்கின்ற போதிலும் அவை தேர்தலுடன் உடைந்து விடுவனவாகவே காணப்படுகின்றன.

தந்தை செல்வாவின் காலத்திலிருந்து இதுவரை போராட்டமொன்றை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றாலும் குறித்த போராட்டம் தொடர்ந்தும் முன்னுக்குக் கொண்டு செல்லப்படாது உருவாக்கியவர்களின் முரண்பாடுகளே முன்னோக்கிக் கொண்டு செல்லப்படுகின்றன. இது தமிழர் அரசியலின் மாற்ற முடியாத சாபக்கேடு என்றே கூற வேண்டும்.

இது போன்ற நீண்ட அரசியல் பின்னணியில், மீண்டுமொரு தடவை பாரிய தமிழ்க் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான முனைப்புக்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் கோரிக்கைகள் பலவற்றை முன்னிறுத்தி, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ வரையிலான கவனயீர்ப்புப் போராட்டத்தின் பின்னணியிலேயே பலமான கூட்டணியொன்றுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிவில் அமைப்புகளின் அழைப்பின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணிக்கு பொதுமக்கள் ஏராளமானோர் ஆதரவை வழங்கியிருந்ததுடன், தமிழ் அரசியல் கட்சிகள் பலவும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தன. அதேநேரம், தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்குமாறு தமிழ்க் கட்சிகள் ஒன்றாக கோரியுள்ளன.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் வெற்றியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில் 'தமிழ்த் தேசிய பேரவை' என்ற பெயரில் பலமான கூட்டணியொன்றை அமைப்பதற்கு ஆரம்ப கட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இணைந்து கொள்வதற்கு 10 அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகளும், சிவில் மற்றும் மத அமைப்புக்களும் இதில் அங்கம் வகிக்கின்றன. வெளியே இருக்கும் ஏனைய கட்சிகளையும் இதில் இணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் மத்தியில் இருக்கும் நிலையில் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அக்கட்சியில் உள்ளோர் கருதுகின்றனர். எனினும், தேசிய அரசியலில் அங்கம் வகிக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள் சிலர் இந்தக் கூட்டணி அமைக்கும் முயற்சிகளை விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த விமர்சனங்களுக்கான காரணம் அரசியல் போட்டாபோட்டிதான் என்பதை மறுப்பதற்கில்லை.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் இந்தக் கூட்டணியில் கலந்து கொண்டிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டணியில் கலந்து கொண்டவர்களிடம் அது பற்றி கடிந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது 1950களிலிருந்து இன்று வரை ஏதாவது ஒரு நோக்கத்துக்காக தமிழர் தரப்புக்களை ஒன்றிணைக்கும் போது அதனைப் பிரிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டே வருவதையும் அறிய முடிகின்றது.

Comments