வெள்ளப்பெருக்கு | தினகரன் வாரமஞ்சரி

வெள்ளப்பெருக்கு

(மலையாள சிறுகதை)

ஊரில் உயரம் கூடிய இடம் இறைவணங்கில்தான். அங்கே இறைவன் கழுத்துவரை நீரில் நிற்கின்றார். நீர்! எங்கும் நீர்! ஊரார் எல்லோரும் கரைதேடிப் போய்விட்டார்கள். வீட்டுக்குக் காவலாக ஓர் ஆள் இருப்பார் – வீட்டில் மிதவை இருக்குமாகில்.

மூன்று அறைகளுள்ள இறைவணங்கில்லின் அடுக்கத்தில் (மாடி) அறுபத்தேழு குழந்தைகள் இருக்கின்றார்கள். முந்நூற்றைம்பத்தாறு ஆட்கள், நாய், பூனை, ஆடு, கோழி முதலான வளர்ப்புயிர்களும். எல்லாரும் ஒட்டுறவாக இருக்கின்றார்கள். ஒரு குழப்பமும் இல்லை.

சேந்நப் பறையன் ஓர் ஒளிநாளும் (பகல்) ஓர் இருள்நாளுமாக (இரவு) நீரிலேயே நிற்கிறான். அவனுக்கு மிதவை இல்லை. அவனுடைய தலைவர் (தம்பூரான்) மூண்ணயி உயிரையும் கையில் பிடித்துக்கொண்டுகரை அடைந்துவிட்டார்.

குடிலுக்குள் முதலில் நீர்ப்பெருக்கு உள்வரத் தொடங்கியபோதே, ஓலையும் கழியும் கொண்டு ஒரு மேற்கட்டைக் கட்டியிருந்தான். நீர் விரைவில் இறங்கும் என்று நினைத்து, இரண்டு நாள்களாக அதில் நிலைத்திருந்து கழித்தாயிற்று, தவிர, நாலைந்து வாழைக் குலைகளும் வைக்கோற்போரும் கிடக்கின்றன. அங்கிருந்து போய்விட்டால், அவற்றெல்லாம் ஆளிகள் கொண்டுபோகவும் செய்வார்கள்.

இப்போது மேற்கட்டின் மேலாக முழங்கால் அளவுக்கு நீர் இருக்கிறது. மேற்கூரையின் இரண்டு நிரல் ஓலைகள் நீரின் அடியில் இருக்கின்றன.

உள்ளே கிடந்து சேந்நன் குரல் கொடுத்தால். அழைப்பை யார் கேட்பார்கள்? அன்மையில் யார் இருக்கின்றார்கள்?... வயிற்றுப் பிள்ளையான ஒரு பறைச்சி, நான்கு குழந்தைகள், ஒரு பூனை, ஒரு நாள் இவ்வளவு உயிர்களும் அவளைச் சாந்திருக்கின்றன.

குடிலுக்கு மேலால் நீர் பெருகுவதற்கு இன்னும் முப்பதே நாழிகைகள் (இரண்டரை நாழிகை ஒரு மணிக்கூறு) வேண்டும் என்றும், தனதும் தன் இல்லத்தாரதும் இறுதி நெருங்கிவிட்டதென்றும் அவன் உறுதிப்பட்டான். அச்சந்தரத்தக்க மழை பெய்யத் தொடங்கி மூன்று நாள்களாகின்றன.

கூரையின் ஓலையைப் பிய்த்துப் போதுமான அளவுக்கு வெளிப்பட்ட சேந்நன், நாலு புறமும் பார்த்தான். வடக்கே ஒரு கட்டுமரம் போகிறது. உயர்ந்த குரலில் சேந்தப் பறையன் கட்டு மரத்தினரைக் கூவியழைந்தான். நல்ல வேளையாகக் கட்டு மரத்தினருக்கு நடப்பு விளங்கியது. அவர்கள் இழுவையைக் குடிலுக்கு நேராகத் திருப்பினார்கள். குழந்தைகளையும் பொண்ணாளையும் நாயையும் பூனையையும் கூரைக் கழிகளுக்கிடையில் ஒவ்வோர் எண்ணிக்கையில் இழுத்தெடுத்து வெளியில் விட்டான் சேந்நன். இழுவையும் இதற்குள் வந்து சேர்ந்தது.

பிள்ளைகள் கட்டுமரத்தில் ஏறிக்கொண்டிருந்தார்கள். “சேந்தச்சோ!... போறியோ...” என்று மேற்கிலிருந்து யாரோ குரல் கொடுத்தார்கள். சேந்நன் திரும்பிப் பார்த்தான்.

“இங்கயும் வாயேன்!...”

அது மடியத்தரையன் குஞ்சப்பன். அவன் வீட்டுக்கு மேலிருந்து அழைத்துக்கொண்டிருந்தான்.

விரைவாக மனைவியைப் பிடித்துக் கட்டுமரத்தில் ஏற்றினான். அந்தக் கையோடு பூனையும் பாய்ந்து இழுவையில் ஏறியது. நாளைப் பற்றி யாரும் நினைக்கவில்லை. அது குடிலின் மேற்குப் புறத்தைச் சரிவில் அங்குமிங்குமாக மோப்பம் பிடித்து நடந்துகொண்டிருந்தது.

கட்டுமரம் அகன்றது. அது தொலைப்பட்டது.

நாய் முகட்டின் முன்புறமாகத் திரும்பி வந்தது. சேந்நனின் கட்டுமரம் தொலைவுக்குப் போய் விட்டது. அது பறந்து போகிறது. இறப்பின் நோவோடும் அவ்வுயிர் ஊளையிடத் தொடங்கியது. துணையற்ற ஒரு மனிதனின் குரலையொத்த ஒலியலைகளை வெளிப்படுத்தியது. யார் அதனைக் கேட்பார்?... குடிலின் நான்கு சரிவுகளிலும் அது ஓடி நடந்தது. சில இடங்களில் மோந்து பார்த்தது. ஊளையிட்டது.

கவலையற்றக் கூரையின் மேலிருந்து ஒரு தவளை, முன்பார்ப்பில்லாத இந்தக் குழப்பத்தைக் கண்டஞ்சி, நாய்க்கு முன்பாக நீர்ப்பெருக்கில் ‘துடீம்’ என்றொரு பாய்ச்சல் பாய்ந்தது. அந் நாய் அச்சமடைந்து நடுங்கிப் பின்னால் குதித்தது, நீரில் ஏற்பட்ட அசைவைச் சிறுபொழுது உற்றுப் பார்த்தவாறே நின்றது.

உணவு ஏதாவது தேடுவோமே என்பதாக அவ்வுயிர் அங்கிங்கெல்லாம் போய் முகர்ந்து பார்த்தது. ஒரு தவளை அதன் மூக்குத் துளைகள் மீது சிறுநீர் கழித்துவிட்டுத் தண்ணீருக்குள் பாய்ந்தது. நிலை குலைந்த நாய் சீறித் தும்மியது. தலையை அசைத்தசைந்து சீறியது. முன்னங் கால்களுள் ஒன்றால் முன்னிலை (முகத்தை)த் துடைத்தது.

அச்சமூட்டத்தக்க பேய் மழை மறுபடியும் தொடங்கியது. கூனிக் குறுகிக் குந்தியிருந்து அந் நாய் அதைப் பொறுத்தது. அதனுடைய தலைவன் அம்பலப்புழையை அடைந்திருந்தான்.

இருநாள் ஆகியது. ஒரு பகுதி நீரில் மூழ்கிக் கிடக்கின்ற குடிசையில் ஓரமாக உரசியவாறே வன்மையான முதலையொன்று மெள்ள மெள்ள மிதந்து சென்றது. நாய் அச்சம் மிகப் பெற்றதாகி வாலைக் கீழே போட்டபடியே குரைத்தது. எதையும் அறிந்துகொள்ளாத பண்பில் முதலை அங்கிருந்து மிதந்து சென்றது.

முன் முகட்டில் குத்தியிருந்தவாறே, இடர் சூழ்ந்த அந்த மிருகம் , இருளச்சம் கொண்டு வான்வெளியைப் பார்த்து ஊளையிட்டது. அந்த நாயின் துன்பக் குரல், மிகத் தொலைவான இடங்களையும் அடைந்தது. இரக்கம் உள்ளவனாக காற்றிறைவன் அதையும் ஏந்தியவாறே வீசிப் பறந்தான்.

வீட்டுக் காவல் ஏற்றிருந்த இரக்கமுள்ளோர் சிலர், “ஐய்யய்யோ... ஊட்டுக்கு மேலந்து நாய் ஊளையிடுது!...” என்று சொல்லிக் கொண்டார்கள்.

கடற்புறத்திலே அதன் தலைவன் இப்போது இரவுணவு உண்டுகொண்டிருப்பான். வழக்கப்படி உணவுண்ணும்போது இன்னும் ஓர் உருண்டை அடிசிலை அவன் அதற்காக உருட்டிக்கொண்டுமிருக்கலாம்...

இடைவிடாமல் சிறுபொழுதுக்கு அந் நாய் மிக உயர்ந்த குரலில் ஊளையிட்டது. வடக்கில் எங்கோ ஒரு வீட்டிலிருந்து வீட்டுக் காவலாளி இராமாயணம் படிக்கிறான். அதனை உன்னிப்பாகக் கேட்பதுபோல், நாய் வடக்குப் புறத்தே பார்த்து நின்றது.

நமது நாய் அம் மனிதக் குரலைச் செவியேற்று ஒரு சிறுபொழுதுக்கு அசைவின்றி நின்றது. குளிர்மையான வளிப்பெருக்கம் ஒன்றில், அந்த மகிழினிமையான பன் ஒன்றியது. காற்றின் ஒலியும் அலைகள் எழுப்பிய ‘ப்ளப் ப்ளப்’ எனும் ஒலியும் தவிர வேறொன்றும் கேட்பதற்கில்லை.

முன் முகட்டில் சேந்தனின் நாய் படுத்திருந்தது. பெரிதாக அது முச்செடுத்து விட்டது. இடைக்கிடை ஏக்கம் அடைந்ததால் முனகியதுமுண்டு. அவ்விடத்தில் ஒரு மீன் துடித்தது. குதித்தெழும்பி நாய் குரைத்தது. இன்னோரிடத்தில் தவளை பாய்ந்தது. பொறுமையற்றதாகி நாய் முணுமுணுத்தது.

பொழுது விடிந்தது. தாழ்ந்த குரலில் அது ஊளையிடத் தொடங்கியது. உள்ளத்தை உருக்கும் திறனுடைய ஒரு வகையான பன் பரவத் தொடங்கியது. தவளைகள் அதனை உற்றுப் பார்த்தன. நீரிற் பாய்ந்து, மேற்பகுதிக்கு வழுக்கியும் தவறியும் ஏறி, குடில் சரிந்து விழுவதை அது இமையாது பார்த்து நின்றது.

நீர்ப்பரப்பிலிருந்து உயர்ந்து காணப்படுகின்ற அந்த ஓலைக் குடிசைகளையெல்லாம் அது நம்பிக்கை விழைவோடு பார்வையிட்டது. எல்லாமே மக்களற்ற வீடுகள். உடம்பிற்கடித்து மகிழ்கிற ஈக்களை நாய் கடித்துக் கொரித்தது. பின்னங் கால்களை நீட்டி வாய்க்கீழ்ப் பகுதியில் மீண்டும் மீண்டும் சொரிந்து ஈக்களை விரட்டியது.

எரியோன் ஓரளவு தெளிவுபெறவே, அந்த இள வெய்யிலில் அது சிறுபொழுது கிடந்து உறங்கியது. மெல்லிய காற்றால் அசைகின்ற வாழையிலைகளின் நிழல், வீட்டுக் கூரையின் மீது ஆங்காங்கே விழுந்து அசைந்துகொண்டிருந்தது. நாய் பாய்ந்தெழும்பி ஒரு முறை குரைத்தது.

ஊரெல்லாம் இருண்டது. காற்று அலைகளை அசைத்தது. நீர்ப்பரப்பில் உயிரினங்களின் வெற்றுடல்கள் மிதந்து போகின்றன. அலைகளிற் பட்டு அசைவுற்று எகிறி மிதக்கின்றன. அவை தன்னியல்பில் எங்கெங்கும் அலைகின்றன. அச்சமில்லாது தொடர்கின்றன. அவற்றையெல்லாம் நாய் பார்த்தது. நமது நாய் முணுமுணுத்துக்கொண்டது.

சிறிது தொலைவில் ஒரு சிறிய மிதவை விரைவாகப் போகிறது. அது எழுந்து நின்று வாலாட்டியது. அந்த இழுவையின் செல்கையை உன்னித்தது. மிதவை அங்கே தாழைக் கூட்டத்துக் கிடையே மறைந்தது.

மழை தூறத் தொடங்கியது. பின்னங்கால்களை மடக்கி முன்னங்கால்களை ஊன்றிக் குத்தியிருந்தது அந்நாள் நாற்புறமும் பார்த்தது. அதனுடைய கண்களில், யாரையும் அழ வைக்கக்கூடிய துணையிலா நிலை வெளிப்பாடாகி இருந்தது.

மழை நின்றது. வடக்கு வீட்டிலிருந்து ஒரு சிறிய இழுவை வந்து ஒரு தென்னையின் அடியை அடைந்தது. நம்முடைய நாய் கொட்டாவி விட்டு முனகியது. இழுவையாள் தென்னையிலேறி இளநீர் பிடுங்கிக் கொண்டு கீழே இறங்கினான் அவன் இழுவையில் வைத்தே காயில் துளையிட்டுக் குடித்துவிட்டு துடுப்பு எடுத்து வழித்துக் கொண்டு அப்பால் போனான்.

தொலைவிலிருந்து மரக் கிளையினின்றும் ஒரு காகம் பறந்து வந்து, அழுகி மிதந்த ஒரு வலிய எருமையின் உடலில் விழுந்தது. சேந்நனின் நாய் பெருவிழையோடு குரைத்தும் காகம் எதனையும் பொருட்படுத்தாது புலாலைக் கொத்தி இழுத்துத் தின்றது. அது நிறைவடைந்ததும் பறந்து அப்பால் போனது.

ஒரு பச்சைக் கிளி குடிசைக்கு அண்மையிலிருந்த வாழையின் இலை மீது வந்திருந்து ஒலி எழுப்பியது. நாய் பொறுமையற்றதாகிக் குரைத்தது. அந்தப் பறவையும் பறந்துபோனது.

நீர்ப்பெருக்கால் அள்ளுப்பட்டு மிதந்து வந்த எறும்புக் கூடொன்று, அக் குடிசையின் மேற்புறத்தில் ஒதுங்கியது. எறும்புகள் தங்களைக் காத்துக்கொண்டன. உணவுப் பொருளோ என்று நன்றியோடு, நம்முடைய நாய் அவற்றுக்கு முத்தம் கொடுத்துச் சீறித் தும்மியது. அதன் மென்மையான மூக்கு சிவந்து வீங்கியது.

நடு நாளாகி ஒரு சிறிய இழுவையில் இருவர் அவ்வழி வந்தனர். நாய் நன்றியுடன் குரைத்தது. வாலாட்டியது. எதையெல்லாமோ, மனித மொழிக்கு இணக்கமான மொழியில் சொல்லியது. அது நீரில் இறங்கி இழுவைக்குள் பாய்வதற்குரிய ஏற்பாட்டில் இருந்தது.

“ந்தா...! ஒரு நாய் நிக்கிது!” என்று ஒருவன் சொன்னான். அவனுடைய கழிவிரக்கம் விளங்கியதைப்போல், நன்றியறிதலோடு அது ஒரு முறை ஊளையிட்டது.

“அங்கேயே இரிக்கட்டும்!” என்று மற்றைய ஆள் சொன்னான்.

எதையோ உண்டு இறக்குவதைப்போல் அது வாயைத் திறந்து மூடியது. ஒலியெழுப்பியது, வேண்டுகோள் விடுத்தது... அது இரண்டு முறை இழுவைக்குள் பாயவும் முயற்சி செய்தது.

ஓடம் அங்கிருந்து போய்விட்டது. மீண்டும் நாய் ஊளையிட்டது. ஓடத்தில் இருந்தவர்களுள் ஒருவன் திரும்பிப் பார்த்தான்.

“ஐயோ!”

மறுபடியும் அலைகளின் ஒடுங்காத ஒலி. யாருமே பிறகு திரும்பிப் பார்க்கவில்லை.

அந்த நிலையிலேயே நாய் இழுவை மறையும் வரையில் நின்றது. வையத்திடம் இறுதிப் பயணம் சொல்வதைப் போல முணகிக்கொண்டு அது குடிலில் மேற்புறத்துக்கு ஏறியது. இனி ஒரு போதும் மனிதனை நட்பாக்குவதில்லை என்று அது சொல்வதாக இருக்கலாம்.

சிறிதளவு தண்ணீரை நக்கிக் குடித்தது. அந்த மென்மையான வானில் பறந்து போகிற பறவைகளைப் பார்த்தது.

அலைகளுக்கிடையில் மிதந்து அலைந்த ஓர் நீர்பாம்பு பாய்ந்து அருகில் வந்தது. நாய் பாய்ந்து குடிலின் மேற்புறத்தில் ஏறியது. சேந்நனும் இல்லத்தாரும் வெளியிறங்கிய ஓட்டையினூடே அத் தண்ணீர்ப்பாம்பு குடிலுக்குள் ஊர்ந்து இறங்கியது. நாய் அந்த ஓட்டையினூடாக உள்ளே எட்டிப் பார்த்த்து. கிளர்ச்சி வெறிகொண்ட அது குரைக்கத் தொடங்கியது.

பின்னர் நாய் உறுமியது. உயிரச்சமும் ஊண் வேட்கையும் அதில் நிறைந்திருந்தன.

இருள் நாளாகியது. அச்சமுறத்தக்க வன்மையான காற்றும் மழையும் தொடங்கின. மேற் கூரை அலைத்தாக்கம் பெற்று ஆடி அலைகிறது. இரு முறை அந் நாய் உருண்டு கீழே விழத் தொடங்கியது. ஒரு நீண்ட தலை நீருக்கு மேல் உயர்ந்தது. அது ஒரு முதலை. நாய் உயிர்த் துன்போடு குரைக்கத் தொடங்கியது. அருகில் மனித ஒலிகள் கேட்கலாகின.

“நாய் எங்கர்ந்து கொலைக்கிது?.... இங்கர்ந்து ஆளுக போகல்லியோ?...”

வாழைமரத்தினடியில் வைக்கோல், தேங்காய், வாழைக்கலை – இவற்றைக் கொண்ட ஓர் இழுவை அண்மியது.

நாய் இழுவையில் இருந்தவர்களுக்கு நேராகத் திரும்பிநின்று குரைப்பைத் தொடக்கியது. சிளத்தனாகி வாலை உயர்த்திக் கொண்டு நீரின் அருகில் நின்று குரைக்கத் தொடங்கியது.

இழுவையில் இருந்தவர்களுள் ஒருவன் வாழை மரத்தில் ஏறினான்.

“ஐயா!... நாய் பாயும்போலத் தோணுதே!”

நாய் முன்னால் ஒரு பாய்ச்சல் பாய்ந்தது. வாழையில் ஏறியவன் உருண்டு துடித்து நீருக்குள் விழுந்தான். மற்றைய ஆள் அவனைப் பிடித்து இழுவைக்குள் ஏற்றினான். நாய் இவ்வேளையில் நீந்திக் குடிசைக்கு மேலாக ஏறி உடலை உதறி ஆட்டிவிட்டுச் சினத்தனாகிக் குரைப்பைத் தொடர்ந்தது.

கள்ளர்கள் வாழைக் குலைகளையெல்லாம் வெட்டினார்கள்.

“ஒனக்கு வச்சிரிக்கிறேன்டா!...’ என்று, தொண்டை கிழியும்படியாகக் குரைக்கிற நாயிடம் அவர்கள் சொன்னார்கள். பிறகு அவர்கள் வைக்கோல் முழுவதையும் இழுவையில் ஏற்றினார்கள். இறுதியில் ஒருவன் குடிசைக்கு மேலாக ஏறினான். அவனுடைய காலில் நாயின் கடியும் விழுந்தது. ஒரு வாய் நிறையப் புலால் அந்த நாய்க்குக் கிடைத்தது!

அவன், “ஐயய்ஓஓஓ!” என்று கதறி அழுதபடியே பாய்ந்து இழுவையில் ஏறினான்.

இழுவையில் நின்ற ஆள் கூரைக் கழியால் நாயின் வயிற்றில் ஓர் அடி அடித்தான். “ங்யாவூ ங்யாவூ ங்யாவூ” என்ற ஒலி படிப்படியாகக் குறைந்து வெறும் வலுவற்ற முணகலில் தேய்ந்து இறுத்தது.

நாய்க்கடியேற்ற ஆள் இழுவையிற் கிடந்து அழுதான்.

“சத்தம் போடாம இருடா!... யாராச்சும்...” என்று மற்றைய ஆள் தேறுதல் கூறினான். அவர்கள் அப்பால் போனார்கள்.

ஓரளவு பொழுது கழிந்திருந்தும், நாய், இழுவை போன இடத்தைப் பார்த்து வன்மையாகக் குரைத்தது.

நள்ளிருள் நெருங்கியது. ஒரு பெரிய இறந்த ஆடு மிதந்த வந்து குடிலில் ஒதுங்கியது. நாய் முன் முகட்டிலிருந்து அதைப் பார்த்தவாறே நின்றுகொண்டிருந்தது. கீழே இறங்கவில்லை. அந்த வெற்றுடல் மெல்ல மெல்ல இடம் மாறியது. நாய் முணுமுணுத்தது.

பிடி கிடைக்காமல் அது சிறிது அப்பால் போகத் தொடங்கவே, நாயானது. ஓலையைப் பிறாண்டி, வாலாட்டி மெதுவாக மெதுவாகக் கீழே இறங்கிக் கடித்து, இழுத்து அருகிலாக்கி உள நிறைவோடு தின்னத் தொடங்கியது. வலிய ஊண் வேட்கைக்கு வேண்டிய மட்டிலுமாக உணவு!

“டே!” என்று ஓர் அடி! நாயைக் காணுமாறில்லை. ஒரு முறை குதித்துத் தாழ்ந்துவிட்டு ஆடு அங்கிருந்து மிதந்து அகன்றது.

அப்போது முதல் – வலிய காற்றின் அலறலும் தவளைகளின் துடிப்பும் அலைகளில் ஒலியும் அல்லாமல் ஒன்றையும் கேட்பதற்கில்லை.

உள்ளமுள்ள வீட்டுக் காவலனான நாயின் துணையற்ற நிலை வெளிப்படும் ஊளையொலி பிறகு கேட்கவே இல்லை. அழுகி நாறும் வெற்றுடல்கள் அந்த தீர்ப்பரப்பில் ஆங்காங்கே மிதந்து சென்றன. காகங்கள் கொத்தித் தின்பதுமுண்டு. அவற்றின் உரிமையை ஓர் ஒலியும் பாழ்படுத்தவில்லை. கள்ளர்களுக்கும் அவர்களுடைய தொழிலுக்கும் தடை ஏற்படவில்லை.

எல்லாம் வெறுமை...

சிறுபொழுது கழிந்தபோது அக் குடிசை விழுந்தது; நீருக்குள் அமிழ்ந்தது. முடிவற்ற அந்த நீர்ப்பரப்பில் எதுவும் உயரமாகக் காணும்படியாக இல்லை.

தலைவனின் வீட்டை இறப்பு வரையிலும், தலைவனன்பு மிக்க அந்த நாய் காத்தது. அது போய்விட்டது. அந் நாய்க்காகவேண்டி என்பதைப் போலவே, அக் குடில், நாயை முதலை பிடிக்கும் வரையிலும் நீரின் மேலேயே உயர்ந்து நின்றது. அது தாழ்ந்து விட்டது. முழுமையாகவே நீருக்குள் தாழ்ந்துவிட்டது.

நீரிறக்கம் தொடங்கியது. சேந்நன் நீந்தித் துடித்து நாயைத் தேடிக் குடிசைக்கு வருகிறான். ஒரு தென்னையின் கீழே நாயின் வெற்றுடல் ஒதுங்கிக் கிடக்கிறது. அலைகள் அதனை மெதுவாகத் தாலாட்டுகின்றன.

பெருவிரலால் சேந்தன் அதனைப் புரட்டியும் திருப்பியும் உற்றும் பார்த்தான். அது அவனுடைய நாய்தான் என்பதில் ஐயம் உண்டாகியது. ஒரு காது துண்டாடப்பட்டிருக்கிறது. தோல் அழுகிப்போய் இருந்ததால் நிறம் என்னவென்று அறிய முடியவில்லை.

தகழி சிவசங்கரன் பிள்ளை
தமிழில் - அல் அஸூமத்

Comments