சர்வதேசம் ஒருபோதுமே தீர்வு தரப் போவதில்லை! | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேசம் ஒருபோதுமே தீர்வு தரப் போவதில்லை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை விவகாரம் சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் பரபரப்பான விடயமாகவே நோக்கப்படுகின்றது. பிரித்தானியா உள்ளிட்ட ஆறு நாடுகளால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கான வரைபு மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இப்பிரேரணை வரைபுக்கு ஆதரவை உறுதிப்படுத்துவதற்கும், இதனை எதிர்ப்பதற்கும் இருதரப்பிலும் கடுமையான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை தொடர்பான பிரேரணை வரைபு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதுடன் இதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைகள் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. இலங்கை அரசாங்கம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்திருப்பது மாத்திரமன்றி, தமக்கெதிராகக் கொண்டு வரப்படும் எந்தவொரு பிரேரணையையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென  திட்டவட்டமாகக் கூறி விட்டது.

அது மாத்திரமன்றி, தனக்கு நட்பான நாடுகளின் உதவியுடன் இப்பிரேரணை வரைபை நிராகரிக்கச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் அங்கத்துவ நாடுகளுடன் தொடர்பு கொண்டு முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகையில் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் ஜெனீவா தொடர்பில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.

இலங்கையின் நட்பு நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் சர்வதேச ரீதியில் முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கைக்குப் பெற்றுக் கொடுக்க கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

கொவிட்19 தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் கொண்டிருந்த நிலைப்பாடு மாற்றம் பெற்றிருப்பதானது, பாகிஸ்தான் ஊடாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியின் ஒரு அங்கம் என அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதற்கிடையில், இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைபு தமிழ் மக்கள் நீண்ட காலமாக முன்வைத்து வருகின்ற குற்றச்சாட்டுக்கு தீர்வு காணும் வகையில் கடுமையானதாக அமையவில்லையென்று தமிழ் அரசியல் தரப்புகளும், புலம்பெயர் அமைப்புகளும் கூறி வருகின்றன.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நீர்த்துப் போகச் செய்யும் விதத்தில் பிரேரணை அமைந்துள்ளது என புலம்பெயர்ந்து வாழ் தமிழர்களின் அமைப்புக்களும், இங்குள்ள தமிழர் தரப்பின் சில அரசியல் பிரதிநிதிகளும் குற்றஞ் சாட்டி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ஒரு விடயத்தை நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, எந்தவொரு சர்வதேச நாட்டினதும் வெளியுறவுக் கொள்கை என்பது மற்றொரு நாட்டினது குறித்த இனமொன்றின் மீதான முழுமையான அக்கறையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்காது என்பதே உலக வரலாற்றில் பெறப்பட்டுள்ள அனுபவமாகும்.

இதனை வைத்துப் பார்க்கின்ற போது, இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சார்பானதாக இருந்தாலும், அதனை ஆதரிக்கும் விடயத்தில் சர்வதேச நாடுகள் தமது சொந்த நலன் சார்ந்த முடிவுகளையே எடுக்கும் என்பதுதான் உண்மை.

பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நன்மைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே ஒவ்வொரு நாட்டினதும் நிலைப்பாடுகள் அமைவதுதான் வழமை.

எனவே, தமிழர் தரப்பினரின் முழுமையான எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் பிரேரணை வரைபொன்றை எந்தவொரு உலக நாடும் தயாரிக்கும் என தமிழர் தரப்பு நம்பிக்கை கொள்வது விவேகம் அல்ல.

ஒரு சில தமிழர் தரப்பு அரசியல்வாதிகளும், வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்து வாழ் அமைப்புகளும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சாத்தியமற்ற நம்பிக்கையை ஊட்டி விடுகின்ற போதிலும், இவ்விவகாரத்தின் பின்னணியில் உள்ள களநிலைமைகளை தமிழர் தரப்பு கசப்புடனாவது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

சர்வதேசம் தமிழர்களுக்கு நேரடியான தீர்வைப் பெற்றுத் தரப் போவதாக   கண்மூடித்தனமான நம்பிக்கையை தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு வழங்குவது வெறும் அரசியல் நாடகமே தவிர வேறெதுவும் இல்லை. சர்வதேச போக்கின்படி பார்க்கையில் கள யதார்த்த நிலைமையானது முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கின்றது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டாலும், சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையைச் சார்ந்தவர்களை நிறுத்த வைப்பது சில தரப்பினர் கூறுவதைப் போன்று இலகுவானதோ அல்லது சாத்திமானதோ காரியமல்ல. அவையெல்லாம் நடைமுறைச் சாத்தியத்துக்கு இலகுவான விடயங்கள் அல்ல.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைகளை மேற்கொள்வதுடன், அது குறித்து கண்காணிப்புகளை மேற்கொள்ளவே முடியும். சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வது குறித்த தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையே எடுக்க வேண்டும். ஐ.நா பாதுகாப்புச் சபையில் உள்ள உறுப்பு நாடுகளின் ஒட்டுமொத்த சம்மதத்துடனேயே அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பாதுகாப்புச் சபையில் இலங்கையின் மிகவும் நெருங்கிய நட்பு நாடான சீனா காணப்படுவதால் சிலர் எதிர்பார்ப்பதைப் போன்று சர்வதேச நீதிமன்றம் என்ற விடயம் எவ்வளவுக்கு சாத்தியமாகும் என்ற முக்கிய வினா இங்கே எழுகின்றது.

அப்படியாயின், தமிழர்களின் நீண்ட கால எதிர்பார்ப்புகளுக்கு நடக்கப் போவது என்ன என்ற மற்றொரு வினா பலருக்கு எழக் கூடும். தமிழர்களின் எதிர்பார்ப்புகளுக்கு சர்வதேசத்திடமிருந்து முழுமையான தீர்வு கிடைக்குமா என்பது பற்றி முன்கூட்டியே கூற முடியாதிருந்தாலும், தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றை வழங்குமாறு அழுத்தமொன்றை இலங்கை அரசாங்கத்துக்கு நிச்சயமாக வழங்க முடியும்.

ஆகக் கூடியதாக ‘பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வருவோம்’ என்ற மிரட்டல்களுடன் கூடிய அழுத்தம் சர்வதேசத்திடமிருந்து வழங்கப்படலாம். கடந்த காலங்களில் இலங்கைக்கு பொருளாதார தடைகள் பற்றிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கா விட்டாலும், சர்வதேசத்திலிருந்து தொடர்ச்சியான அழுத்தங்கள் கடந்த 12 வருடங்களாக வழங்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.

சர்வதேசத்தின் அழுத்தம் என்பது மேலைத்தேய நாடுகள் சார்ந்த நலனுடன் ஒன்றுபட்டது என்ற விடயம் கடந்த நல்லாட்சி காலத்தில் அந்நாடுகள் எடுத்த நிலைப்பாட்டிலிருந்து தெளிவாகப் புலனாகிறது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் மீது இறுக்கமான பிடியொன்றைக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகின்ற சில சர்வதேச சக்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன என்றே கூறலாம்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிடி தளர்ந்ததும், ராஜபக்ஷக்களின் ஆட்சி இலங்கையில் அமையும் போது சர்வதேசத்தின் பிடி இறுகுவதும் 2009ஆம் ஆண்டிலிருந்து மாறி மாறி நிகழும் காட்சிகளாகும். இவ்வாறான பின்னணியிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் மீண்டும் ஒருமுறை இப்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது ஒருபுறத்தில் சரியாக இருப்பினும், தமிழர்கள் எதிர்பார்க்கின்ற எதிர்பார்ப்புகளுக்கு சர்வதேசத்தினால் முழுமையான தீர்வைப் பெற்றுக் கொடுத்து விட முடியுமா என்ற கேள்வியும் இங்கு உள்ளது.

தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இருந்திருந்தால், ஒவ்வொரு முறையும் ஜெனீவா கூட்டத்தொடரின் போது தம்மை மனித உரிமை காவலர்கள் போன்று காண்பிக்கும் தமிழ் அரசியல் தரப்பினர் சிலர் கடந்த நல்லாட்சியின் காலத்தில் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.

குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்துக்கு தோள் கொடுத்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பல சந்தர்ப்பங்கள் அன்று கிடைத்தன. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக் கவிழ்ப்பை சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தோள்கொடுத்தது என்னவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான்.

இதன் அடிப்படையில் ஒவ்வொருமுறை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் போதும் தமிழ் மக்களின் ஒவ்வொரு பிரச்சினைக்குத் தீர்வை நிபந்தனையாக வைத்திருந்தால் பலவற்றை இப்போது அடைந்திருக்கலாம்.

இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணையொன்றைக் கொண்டு வர வேண்டும் எனக் கோரி தற்பொழுது வெளிநாட்டு தூதுவர்களைச் சந்தித்த அதே அரசியல்வாதிகள்தான், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரசின் ஆயுளை நீடிப்பதற்காக வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர்.

பொது வெளியில் தமிழர் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாகக் காண்பிக்கப்பட்டாலும் அதற்காக செயற்படும் பலரின் பின்னணியில் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல் இருப்பது துரதிர்ஷ்டமானது. அப்பாவித் தமிழ் மக்கள் இம்முறையாவது தமக்கு தீர்வு கிடைக்கும் என நம்பி ஏமாந்து போவதே தொடர்ச்சியாக நாம் காணும் விடயங்கள்.

சர்வதேச அழுத்தங்களுக்கு அப்பால், இனமொன்றை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் அரசியல் கலாசாரம் மாற்றமடைந்தாலே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உள்நாட்டில் தீர்வொன்றை வழங்குவது இலகுவானதாக அமையும். தாம் சார்ந்த இனத்தின் அடையாளத்தைப் பயன்படுத்தி அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் வேளையில் மற்றைய இனத்தவர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்பது கடினமானதாகவே இருக்கும்.

குறிப்பாக இனவாதமே இலங்கையின் அரசியல் போக்காக மாறியுள்ளது.  ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் சிறுபான்மை இனத்தவர்கள் மீதான வெறுப்புக்களைத் தூண்டும் வகையிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது இலங்கையின் அரசியல் போக்காகக் காணப்படுகிறது. எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகிச் செல்வதைக் காண முடியாதிருக்கின்றது.

இவ்வாறான அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் நீடிக்குமாயின் இனங்களுக்கிடையே நிரந்தர ஐக்கியம் ஏற்படுமா   என்ற கேள்வி பலமாகக் காணப்படுகிறது.

இலங்கையர்கள் அனைவருமே இந்நாட்டுப் பிரஜைகள் என்ற சிந்தனை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே எவ்வித சர்வதேச அழுத்தங்களும் இன்றி உள்நாட்டிலேயே இப்பிரச்சினையை தீர்க்க முடியுமென்பது உறுதி. இல்லாத பட்சத்தில் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதமும், செப்டெம்பர் மாதமும் இலங்கை விடயம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்களில் பேசப்படும் விடயமாகவே இருக்கும்.

Comments