இலங்கை மீது இந்தியாவின் புதிய கரிசனை! | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை மீது இந்தியாவின் புதிய கரிசனை!

இந்து சமுத்திர பிராந்தியத்தில் பலம், செல்வாக்கு மிக்க நாடாக எமது அயல் நாடான இந்தியா காணப்படுகிறது. பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் உட்கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவின் பலம் இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் சக்தி மிக்கதாகவே விளங்குகிறது.

பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் எல்லைப் பிரச்சினை காணப்பட்டாலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறப்பு வாய்ந்தது. எல்லைப் பிரச்சினைகள் அவ்வப்போது தீவிரமடைந்தாலும், யுத்தத்தை தவிர்த்து தனது இராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளின் ஊடாக அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்தியா எப்பொழுதும் சாதுரியமாகவே நடந்து கொள்கிறது.

குறிப்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே நிலவி வருகின்றன. மதம், கலாசாரம், பண்பாடுகள் என பல்வேறு விடயங்களில் இரு நாட்டுக்கும் இடையிலான சமமான தன்மையானது இரு நாட்டு உறவுகளுக்குப் பாலமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

இலங்கையின் 'பிக் பிரதர்' என அழைக்கப்படும் இந்தியாவானது இலங்கை மீது எல்லா சந்தர்ப்பங்களிலும் கரிசனை கொண்ட நாடாகவே நடந்து கொண்டுள்ளது. எமது நாட்டில் 1983 ஜூலையில் இனவன்செயல் இடம்பெற்ற காலம் வரை இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவு மிகவும் நெருக்கமானதாகவே இருந்து வந்தது. இந்தியாவின் அரவணைப்பை பல்வேறு வழிகளிலும் இலங்கை நாடியிருந்தது. அதேசமயம், இலங்கையை தாமாகவே அரவணைத்துச் செல்கின்றதொரு போக்கை இந்தியா அன்றைய காலத்தில் கடைப்பிடித்து வந்தது. இருந்த போதும் இலங்கையில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டங்கள் வலுப்பெற்று, பின்னர் பயங்கரவாத செயற்பாடுகளாக மாறிய பின்னர் இந்தியாவின் அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருந்தன. இருந்த போதும் இறுதிக் கட்ட யுத்த காலத்திலும் சரி, அதன் பின்னரான அபிவிருத்திக் கட்டத்திலும் சரி இந்தியா எப்பொழுதும் இலங்கையின் நண்பராகவே செயற்பட்டு வந்துள்ளது.

இருந்த போதும், காலப்போக்கில் இலங்கையில் சீனாவின் தலையீடுகள் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியமை இந்தியாவுக்கு நெருடலைக் கொடுக்கத் தொடங்கியது என்பதே உண்மை. ஆனால் இலங்கை- சீன உறவு எவ்வாறானதாக இருந்தாலும், இலங்கை- இந்திய உறவில் என்றும் குறிப்பிடத்தக்களவு விரிசல் வந்ததில்லை.

இவ்வாறிருக்கையில், இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போட்டித்தன்மை திரைமறைவில் உள்ளதை தொடர்ச்சியான சில சம்பவங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தன. குறிப்பாக இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான காலப் பகுதியில் இப்போட்டித் தன்மை அதிகரித்திருப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது.

அண்மைய  மாதங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இலங்கை- இந்திய உறவில் தோன்றியிருக்கும் சிறு மாற்றங்களை கோடிட்டுக் காட்டும் வகையில் அமைந்தன. குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஒப்பந்தம் செய்திருந்ததுடன், இதனை நடைமுறைப்படுத்த புதிய அரசு எடுத்த முயற்சிகள் தொழிற்சங்கம் உள்ளிட்ட தரப்புக்களின் எதிர்ப்பினால் கைவிடப்படும் நிலைக்குச் சென்றன.

இந்த எதிர்ப்புகளின் பின்னணியில் சீனா இருப்பதாக இந்தியா குற்றஞ் சாட்டியிருந்த நிலையில், எதிர்ப்புகள் வலுத்தமையால் முன்வைத்த காலை பின்வைக்க வேண்டிய நிலைக்கு இலங்கை சென்றது. இருந்த போதும், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் தற்பொழுது இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரம், யாழ் குடாநாட்டில் உள்ள மூன்று தீவுகளில் புதுப்பிக்கத்தக்க சக்தியில் அதாவது காற்றாலைகளை அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டமொன்றை சீனாவுக்கு வழங்க இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. எனினும், தமிழகத்திலிருந்து குறுகிய தூரத்திலேயே இருக்கும் குடாநாட்டு தீவுகளில் சீனாவின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை இந்தியா தனது நாட்டின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகப் பார்த்தது. இதனால் தானே அத்திட்டத்தை இலவசமாக முன்னெடுப்பதாக உறுதியளித்தது இந்தியா.

இது போன்ற அபிவிருத்திச் செயற்பாடுகளில் இந்தியா தனது பிரசன்னத்தை அதிகரித்திருந்த நிலையில், இரு நாட்டுக்கும் இடையிலான கலாசார ரீதியான உறவுகளை பலப்படுத்தும் வகையில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சமீபத்தில் வடக்கு, கிழக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டார்.அவருடைய வடக்கு, கிழக்கு விஜயம் கடந்த சிவராத்திரி தினத்தில் மன்னார் திருக்கேதீஸ்வர் ஆலய தரிசனத்துடன் ஆரம்பமாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் பாலமான ராம்சேது (ஆதாம் பாலம்) பகுதியில் அவர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டார். இலங்கையில் யுத்த சூழல் உருவெடுத்த பின்னர் அங்கு சென்ற இலங்கைக்கான முதலாவது இந்திய உயர்ஸ்தானிகராகவும் இவர் விளங்குகின்றார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன் ஆகியோரின் பிரசன்னத்திற்கு மத்தியில் மன்னார் புனித மடுமாதா ஆலயத்தில் யாத்திரிகர்களுக்கான 144 இடைத்தங்கல் வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான  அடிக்கல்லை,  சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் இணைந்து உயர் ஸ்தானிகர்  நட்டு வைத்தார். இந்த வீட்டு அலகுகள் இந்தியாவினால் வழங்கப்படும் 300 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்த உயர் ஸ்தானிகர் அங்கு பலமட்ட சந்திப்புகளை நடத்தியிருந்தார். அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முன்னணி பிரமுகர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் அதிகளவான முதலீடுகள் போன்றவற்றினூடாக வடமாகாணத்தின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு தொடர்பாக இச்சந்திப்புகளில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி, கைத்தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை இந்தியா முன்னெடுத்துள்ளது. இவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இக்கலந்துரையாடல்களில் ஆராயப்பட்டுள்ளது.

இவற்றுக்கும் அப்பால், இந்திய உயர்ஸ்தானிகர் பாக்லே வடக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தனித்தனியாகச் சந்தித்திருந்தார். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரைச் சந்தித்து அபிவிருத்தி செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடியிருந்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்ட 8 கட்சிகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்தார்.

இவை தவிரவும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோர் உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் பிந்திய அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. கௌரவம், சமாதானம், நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றுக்கான தமிழ் சமூகத்தின் நியாயபூர்வமான அபிலாசைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் ஈடுபாடு தொடர்பில் நினைவூட்டியிருந்த அவர், ஓர் ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஒன்றின் ஊடாக அவற்றினை உறுதிப்படுத்துவது நாட்டின் சமாதானம், நல்லிணக்கம், வினைத்திறன் மிக்க முன்னேற்றம் மற்றும் ஐக்கியம் ஆகியவற்றிற்கு பங்களிப்பு வழங்குமெனவும் குறிப்பிட்டார்.

வடக்கின் விஜயத்தை முடித்துக் கொண்டு கிழக்கு மாகாணத்துக்குச் சென்று இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட அரசியல்வாதிகளை சந்தித்து தற்போதைய நிலைவரங்கள் குறித்துக் கலந்துரையாடியிருந்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிலையமொன்றை அமைப்பதற்கும் இந்தியா முன்வந்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகரின் இந்த வடக்கு, கிழக்கு விஜயம் வழமையான சந்திப்புகளுக்கும் அப்பால், இலங்கை மீதான இந்தியாவின் புதிதான அதீத கரிசனையின் வெளிப்பாட்டை காண்பித்துள்ளது என்றே கூற வேண்டும். சீனாவின் தலையீடுகளால் இந்தியா ஒரு பக்கம் அதிருப்தியடைந்திருந்தாலும், உயர் ஸ்தானிகரின் வடக்கு, கிழக்கு விஜயத்தில் அனைத்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடியுள்ளமை இங்கு அவதானிக்கப்பட வேண்டியதாகும்.

குறிப்பாக ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு பிரித்தானியா உள்ளிட்ட இணை நாடுகள் முயற்சிக்கும் தருணத்தில், இந்தியாவின் ஒத்துழைப்பு இரு தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே உயர்ஸ்தானிகரின் விஜயம் இடம்பெற்றுள்ளது. பொருளாதார, கலாசார ஒத்துழைப்புக்கு அப்பால், பாதுகாப்பு ஒத்துழைப்பிலும் இந்தியா அக்கறை காண்பித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

இலங்கை விமானப் படையின் 70வது ஆண்டு நிறைவையொட்டி கூட்டுப் பயிற்சிகளில் இரு நாட்டு விமானப்படையினர் ஈடுபட்டிருந்ததுடன், விமானப் படையினரின் பங்களிப்புடன் விமான சாகசக் கண்காட்சியொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இது மாத்திரமன்றி, உயர் ஸ்தானிகரின் வடக்கு விஜயத்துக்கு சமாந்தரமாக உயர் ஸ்தானிராலயத்தில் உள்ள இந்தியப் பாதுகாப்பு அதிகாரி சமீபத்தில் வன்னி கட்டளைத் தளபதி உள்ளிட்ட இராணுவத் தளபதிகளை நேரடியாகச் சந்தித்திருந்தார்.

அண்மைக் கால முன்னேற்றங்களின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும் போது இலங்கை மீது இந்தியாவின் கரிசனை அதிகரித்திருப்பதாக தெரிகிறது. அதுவும் வடக்கு, கிழக்கு மீதான கரிசனை புதிதாக உருவாகியுள்ளதையே நிகழ்வுப் போக்குகள் புலப்படுத்துகின்றன.

பூகோள அமைவிடம் காரணமாக இலங்கை மீது பல்வேறு உலக நாடுகள் அக்கறை கொண்டிருக்கும் நிலையில், அயல் நாடானா இந்தியாவின் அக்கறை இரு நாட்டுக்கும் இராஜதந்திர ரீதியிலான நன்மைகளை வழங்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே இணக்கப்பாட்டை விரும்புவோரின் எதிர்பார்ப்பாகும்.

Comments