ஜெனீவா பிரேரணையின் அடுத்த கட்ட எதிர்பார்ப்பு! | தினகரன் வாரமஞ்சரி

ஜெனீவா பிரேரணையின் அடுத்த கட்ட எதிர்பார்ப்பு!

சுமார் ஒரு மாத கால பரபரப்பான காத்திருப்புக்குப் பின்னர், இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றத்துடன் ஜெனீவாவில் நடைபெற்று வந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடர் முடிவுக்கு வந்துள்ளது.

2009ஆம் ஆண்டின் பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட மற்றுமொரு தீர்மானமாக இது அமைகிறது.

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்'  என்ற தலைப்பில் கடந்த 23ஆம் திகதி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொவிட்-19 சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்நிலையிலான இலத்திரனியல் வாக்கெடுப்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமையைக் கொண்டுள்ள 47 நாடுகளில் 22 நாடுகள் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.

11 நாடுகள் இப்பிரேரணையை எதிர்த்தும், 14 நாடுகள் நடுநிலை வகித்தும் வாக்களித்திருந்தன. பிரேரணைக்கு ஆதரவு திரட்ட இணை நாடுகளுடன் சேர்ந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் அமைப்புக்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த அதேநேரம், இலங்கை அரசாங்கம் பிரேரணையைத் தோற்கடிக்கும் வகையில் உலக நாடுகளின் ஆதரவைத் திரட்ட கடைசி நேரம் வரை கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது.

இருந்த போதும், இலங்கை தொடர்பான பிரேரணைக்கு கூடுதலான வாக்குகள் அளிக்கப்பட்டமையால் அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
ஆரம்பம் தொடக்கம் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்து வந்திருந்ததுடன், ஐ.நா சாசனத்தை மீறும் வகையிலும், இலங்கையின் இறைமையை பாதிக்கும் வகையிலும் திட்டமிட்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டிருப்பதாக  இலங்கை அரசாங்கம் குற்றஞ் சாட்டுகிறது.

பிரேரணைக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் உலக நாடுகளின் ஆதரவைக் கோரியிருந்தது. பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், எரிடேரியா, வெனிசுவெலா, பங்களாதேஷ், பொலீவியா, சோமாலியா, உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் கியூபா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தன.
இந்நாடுகளில் அநேகமானவை இடதுசாரிக் கொள்கையைக் கொண்டுள்ளவையாகும்.

இவ்வாக்கெடுப்பில் அவதானிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் நடுநிலை வகித்த நாடுகளைப் பற்றியதாகும். குறிப்பாக இலங்கையின் 'பிக் பிரதர்' என வர்ணிக்கப்படும் இந்தியா இரு பக்கமும் இன்றி நடுநிலை வகித்திருந்தது. இந்தியா மாத்திரமன்றி 14 நாடுகள் நடுநிலையாக வாக்களித்திருந்தன.

இந்த நடுநிலை வாக்குகள் தமக்குத்தான் கிடைத்தாக இரு தரப்பும் உரிமை கொண்டாடுகின்றன. ஐ.நா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற இலங்கை குறித்த வாக்கெடுப்பில் தமக்கு மொத்தமாக 24 வாக்குகள் கிடைத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார்.

பிரேரணையை ஆதரிக்க முடியாத காரணத்தாலேயே அந்த நாடுகள் நடுநிலை வகித்ததாகவும், எனவே இந்த நாடுகளின் ஆதரவு தமக்கே இருப்பதாகவும் அமைச்சருடைய விளக்கம் அமைந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கிலேயே இவ்வாறான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று எனவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சுட்டிக் காட்டியுள்ளார். இவ்விவகாரம் குறித்து பாராளுமன்றத்திலும் அவர் விளக்கவுரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.

அவர் குறிப்பிடுகையில், 'மனித உரிமைகள் பேரவை ஐ.நா. சாசனத்திற்கு மாறாக செயற்பட முடியாது. மனித உரிமைகள் பேரவையை நிறுவுவதற்கான உண்மையான பிரேரணைக்கு மாறாக அவர்களால் செயற்பட முடியாது. ஐ.நா. சாசனத்தின்படி, அவர்கள் விரும்பியபடி தனிப்பட்ட நாடுகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது’ என்று சுட்டிக் காட்டினார்.

‘அந்த அடிப்படைக் கொள்கைக்கு மாறாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 22 நாடுகள் மட்டுமே பிரித்தானியா, ஜேர்மனி, கனடா மற்றும் பல நாடுகளால் கொண்டு வரப்பட்ட எமது நாட்டிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இதனால், அவர்கள் பெரும்பான்மையை இழந்துள்ளனர். இது தெற்கு அல்லது காலனித்துவ நாடுகளிடமிருந்து கடுமையாக வெற்றி கொண்ட சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி வடக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பமாகும்.

குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர், எமது அரசாங்கம் மற்றும் நாட்டை நேசிக்கும் முக்கியமானவர்கள் ஒன்றுகூடி இதை உலகிற்கு உணர்த்தியுள்ளனர். கொவிட் தொற்றுநோயால் இந்த மாநாட்டில் நாங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. மெய்நிகர் மாநாடுகளை நடத்தி, எம்மைப் போன்ற நாடுகளில் செல்வாக்குச் செலுத்திய போதிலும், எம் நாட்டின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கும், எங்களுக்கு எதிரான தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் அப்போது வாக்குறுதியளித்தபடி, மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது, அதன் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன' என தினேஷ் குணவர்த்தன அரசாங்கத்தின் நிலைப்பாட்டை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மறுபக்கத்தில், இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை புலம்பெயர் வாழ் தமிழர் அமைப்புக்கள் மற்றும் ஒரு சில மனித உரிமை அமைப்புக்கள் வரவேற்றுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் இதற்கு முன்னரும் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு அவை எதுவும் நடைமுறைக்கு வராத நிலையில், மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

இம்முறை நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பச்லெட்டின் இலங்கை குறித்த சமீபத்திய அறிக்கையை வரவேற்றிருப்பதுடன்,  'கடந்த கால விடயங்களைக் கையாழும் போது ஒரு விரிவான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வலயுறுத்துகிறது.

நீதித்துறை சார்ந்த மற்றும் நீதித்துறை சாராத நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவது, நீதியை நிலைநாட்டுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வுகளை வழங்குதல், மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழாமல் தவிர்ப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பது, நல்லிணக்கத்தை மேம்படுத்துவது' என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.
போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்குத் தொடரும் நோக்கத்தில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் நிர்வகிக்கும் ஆதாரங்களின் மைய தரவுத்தளத்தை நிறுவ இந்த தீர்மானம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

முன்மொழியப்பட்ட பொறிமுறைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை எனவும் பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. எதுவாக இருந்தாலும், பிரேரணையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்திருப்பதுடன், உள்ளூர் பொறிமுறையின் ஊடாக நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் அது உறுதியாக உள்ளது.

அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது ஒருபுறமிருக்க, அரசுக்கு ஆதரவு வழங்குவதில் உலகின் பலம் வாய்ந்த சில நாடுகளும் துணையாக இருப்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மறுபக்கத்தில், இலங்கை அரசாங்கம் சரியான முறையில் விடயங்களைக் கையாளவில்லை என்பதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. குறிப்பாக யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்களுக்கு அப்பால் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுபான்மையினர் மீது மேற்கொண்டுள்ள அடக்குமுறைகள் குறிப்பாக கொவிட்-19 இல் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வது உள்ளிட்ட விடயங்கள் போன்ற மனித உரிமை விடயங்களில் சரியான நிலைப்பாட்டைப் பின்பற்றாமையே இந்த நிலைமைக்குக் காரணம் என பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளது.

இவ்வருட இறுதிக்குள் நாடு மாகாணசபைத் தேர்தல்களை எதிர்கொள்ளவிருப்பதால் ஜெனீவா பிரேரணை நிச்சயமாக அரசியல் அரங்கத்தில் பேசப்படும் ஒரு விடயமாக இருக்கப் போகிறது. இது அரசியல் ரீதியான பேசுபொருளுக்கு அப்பால் இனங்களுக்கிடையிலான விரிசலை ஏற்படுத்துவதற்கான ஆயுதமாக மாற்றப்படக் கூடாது என்பதுதான் முக்கியம்.

கடந்த காலங்களில் ஜெனீவா விவகாரம் உள்நாட்டில் ஆட்சி அதிகார மாற்றத்துக்கு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. இது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படக் கூடாது. அதேநேரம், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் தமது அரசியல் நிலைத்திருப்புக்கு இதனை நிச்சயமாகப் பயன்படுத்தப் போகின்றனர். இலங்கை விவகாரம் என்பது சர்வதேச நாடுகளின் பூகோள அரசியலின் ஒரு பகுதி என்பதே உண்மை.

எனினும், தமிழ் மக்கள் மீது சர்வதேச நாடுகள் அதீத அக்கறை கொண்டிருப்பது போலவும், இதனைப் பெற்றுக் கொடுப்பதற்காக தாம் சர்வதேச அரங்கில் போராடியது போலவும் பிம்பங்களைத் தோற்றுவிப்பதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிப்பார்கள். இதன் உண்மைத் தன்மையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளின் வரிசையில் மற்றுமொரு பிரேரணையே இதுவாகும். உண்மையில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் சர்வதேசம் உறுதியாக இருந்திருந்தால் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களில் ஏன் இதனைச் செய்யவில்லையென்ற கேள்வி உள்ளதல்லவா?

Comments