பருப்பும் செருப்பும் | தினகரன் வாரமஞ்சரி

பருப்பும் செருப்பும்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டதென்ற செய்தி ஊடகங்களில் அறிவிக்கப்பட்டது. மக்கள் பரவலாக தெருக்களில் கூடி நின்று கதைத்தனர். அரசியல்வாதிகள் ஆளுக்காள் தொலைபேசிகளினூடாக சாதகபாதகமான கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். அடுத்த நாளைய அச்சு ஊடகங்களில் கொட்டை எழுத்துக்களில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் பிரதான இரண்டு கட்சிகள் கடந்த பல வருட காலமாக செயற்பட்டுக்கொண்டிருந்தன. ஒன்று ஜனநாயக மறுமலர்ச்சிக் கட்சி. மற்றது ஜனநாயக சீர்திருத்தக் கட்சி.

இனங்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்வான் பேர்வழி என நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து இயங்கிக்கொண்டிருக்கும் கட்சிகள் சில. தத்தமது கொள்கைகளுக்கு ஏற்றவாறாக நாட்டை மாற்றவேண்டுமென கங்கணம் கட்டியவாறு இயங்கிக்கொண்டிருப்பவை வேறு சில.

ஒவ்வொரு பொதுத் தேர்தலும் இடம்பெறவுள்ள காலங்களில் பிரதான இரண்டு கட்சிகளுக்குமான பெரிய பிரச்சினையே எந்த உதிரிகளுடன் கூட்டுச் சேர்வது என்பதுதான். கொள்கைகள் அடிப்படையிலா, கொடுக்கல் வாங்கல் அடிப்படையிலா, தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கம் அமைத்தால் உதிரிகளுக்குக் கொடுக்கவேண்டிய அமைச்சர்களின் எண்ணிக்கையிலா என்பவை செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக அமையும்.

பிரதான கட்சிகளின் அவ்வப்போது இருக்கும் தலைவர்கள் ‘கம் ஈசி கோ ஈசி’ என்ற அடிப்படையில் உதிரிகள் கேட்கும் சகலதையும் தருவதாக உடன்படிக்கை உடன்படிக்கையாக கையொப்பமிட்டுத் தள்ளுவர். அவற்றில் காட்டப்பட்டுள்ள நிபந்தனைகளில் தருவதாக அல்லது செயற்படுவதாக ஏற்றுக்கொள்ளப்படுபவைகளில் நியமன அங்கத்தவர்கள் மற்றும் அமைச்சர்கள் தொகை தவிர்ந்த ஏனையவை நிறைவேற்றப்படாமலே போய்விடும் என்பது கையொப்பமிடும்போதே இரு தரப்பாருக்கும் தெரிந்தே இருக்கும்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதான செய்தி அறிவிக்கப்பட்ட பின்னர் அது காலம் வரை ஆளும் கட்சியாக செயற்பட்டுக்கொண்டிருந்த ஜனநாயக சீர்திருத்தக் கட்சியின் தலைமையகத்தின் கேட்போர்கூடத்தில் கூட்டமொன்று நடைபெற ஆயத்தங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. கட்சியின் பா.உ.க்களாக செயற்பட்டவர்கள் வரி விலக்குப் பெற்று தங்களால் கொள்வனவுசெய்யப்பட்ட அல்லது வரிவிலக்கு அனுமதிப்பத்திரத்தை கொள்ளை விலைக்கு விற்றுவிட்டு சிறிய தொகைக்கு வாங்கப்பட்ட மோட்டார் வாகனங்களில் துருத்திய தொந்திகளுடனும் கொழுத்த முகங்களுடனுமாக வந்து மண்டபத்துக்கு சமீபமாக இறங்கிக்கொண்டிருந்தனர். பா.உ.க்களல்லாத தொகுதிகளின் அமைப்பாளர்கள் எதிர்வரவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்றால் எந்தெந்த சலுகைகளையும், வரப்பிரசாதங்களையும் அனுபவிக்கலாமென்ற பற்பல கனவுகளுடன் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். கூடிக்கூடி நின்று கதைத்தனர். ஹாஸ்ய வெடிகளை உதிர்த்து உரத்துச் சிரித்தனர். முன்னாலும் பின்னாலும் துருத்திய அவயவங்களையும் ஒப்பனை செய்யப்பட்ட முக அழகையும் பிதுங்கிய இடுப்புச் சதையைக் காட்டியவாறும் நடை பயின்ற சில நாரிமணிகளை பலர் கண்களால் தோலுரித்து ரசித்தனர்.

கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டதும் ஜ.சீ.கட்சியின் தலைவர் எழுந்து நின்றார். தேசிய ஆடை அணிந்திருந்தார். வருகை தந்தவர்களை விளித்துவிட்டு நேராக விடயத்துக்கு வந்தார்.

“எந்த யுக்தியையாவது செயற்படுத்தி ஆட்சி அமைத்தே தீரவேண்டும். இதுவரை ஆளும் கட்சியாக இருந்துட்டு இனிமேல் எதிர்க்கட்சியாக செயற்படுவது நமக்கெல்லாம் அவமானமானது. எந்தப் பேயுடன் கூட்டுச் சேர்ந்தாவது, அல்லது எந்தச் சலுகைகளை மக்களுக்குத் தருவதாக வாக்களித்தாவது ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டும். அதற்காக நீங்களெல்லாம் உங்களின் பரிபூரண ஒத்துழைப்பைத் தரவேண்டும்.” எனக் கூறிவிட்டு நிறுத்தினார்.

அவரைத் தொடர்ந்து முக்கிய நபர்கள் சிலர் பேசினர். தலைவர் மீண்டும் எழுந்து நின்றார். “நமது கட்சி ஆட்சி அமைத்தால் மக்களுக்கு ஒன்றையோ அல்லது பலதையோ இலவசமாகத் தருவதாக நாம் வாக்களிக்கவேண்டும். அத்தகைய இலவசங்கள் கிடைக்குமென்ற நம்பிக்கையில் மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள். முன்னரெல்லாம் இலவச அரிசி தருவதாகக் கூறி வாக்குகளைப் பெற்றுள்ளார்கள். அந்த அரிசிக் கதை இப்போது வேகாது. ஆகவே, மாற்றீடாக எந்த உணவுப் பொருளைக் கொடுப்பதாக அறிவிக்கலாமென்ற ஆலோசனையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்” என்றார்.

கூட்டத்திலிருந்தவர்கள் சிந்திக்கத் தொடங்கினர். ஒருவர் எழும்பினார். “சார். எனக்கொரு யோசனை படுது” என்றார்.

“சொல்லுங்க.”

“நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் அரிசிச் சோறு அல்லது கோதுமை மாப் பண்டங்களை பிரதான உணவுகளாகக் கொள்கின்றனர். சோறு, ரொட்டி, பாண், தோசை போன்றவற்றைச் சாப்பிட பொதுவாகப் பயன்படுத்துவது பருப்புக் கறிதான். பருப்புக் கறி சமைக்காத வீடுகளோ, ஹோட்டல்களோ இல்லையென்றே கூறலாம். ஆகவே மாதாமாதம் ஒரு தொகை பருப்பு இலவசமாகத் தருவதாக வாக்களித்தால் இலகுவாக வெற்றிபெறலாம் என நான் நினைக்கிறேன்” என்றார்.

அவரது சிபாரிசைக் கேட்டதும் சிலர் மனதினுள்ளும் அல்லது வாய்விட்டும் சிரித்தாலும் பலர் சிந்திக்கத் தொடங்கினர். பலரும் இது சிறந்ததொரு யோசனை என்ற அடிப்படையில் தத்தமது கருத்துக்களை முன் வைத்தனர். ஒரு சிலர் வேறு உணவுப் பொருட்களை சிபாரிசு செய்தனர். நீண்ட நேர ஆலோசனையின் பின்னர் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் குடும்பங்களுக்கு மாதாமாதம் பருப்பு இலவசமாக வழங்குவதென்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

அடுத்த நாள் தினச்சுடர் பத்திரிகையில் ‘ஆட்சியமைத்தால் பருப்பு தருவோம்’ என்ற தலைப்பில் ஜ.சீ.கட்சியின் தீர்மானம் கட்டமிட்ட செய்தியாக கொட்டை எழுத்துக்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

சில தினங்களில் அதே போன்றதொரு கூட்டம் ஜனநாயக மறுமலர்ச்சிக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

தனது ​பெயருக்குப் பின்னால் சில அறிவியல் பட்டங்களைப் பெற்றிருந்த கட்சியின் தலைவர் எழுந்து ஒலிவாங்கிக்கு முன்னால் நின்றார். மெலிந்திருந்தார். பரட்டையான பாணித் தலை. பணத்துக்கு ஆசைப்படாத நேர்மையான அரசியல்வாதியென ஏற்கனவே பெயர் பெற்றிருந்தார்.

“கடந்த சில வருடங்களாக ஆட்சிசெய்தவர்கள் நாட்டு மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக நின்று நிலைக்கக்கூடிய எந்த வித அபிவிருத்தித் திட்டங்களையும் செயற்படுத்தவில்லை….” எனத் தொடங்கி அந்த ஆட்சியாளர்களின் ஆட்சிமுறை பற்றி சொற்ப நேரம் உரையாற்றினார்.

“நாம் நமது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். விவசாய ஊக்குவிப்பாலும், கைத்தொழில் உற்பத்திப் பொறிமுறைகளாலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும். பிற நாடுகளிடம் பிச்சையோ கடனோ கேட்காத நிலைக்கு நாட்டை மாற்ற வேண்டும். வயதான ஆண் பெண் என சகலரும் தாம் விரும்புமிடத்து தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக நானாவித செயற்றிட்டங்களை ஏற்படுத்த வேண்டும். அரசாங்கமும், தனியாரும் கூட்டாகவோ தனித்தனியாகவோ ஆயிரக்கணக்கானோருக்கு தொழில் வாய்ப்பை வழங்கக் கூடியவாறான திட்டங்கள் நாட்டின் நானா பக்கங்களிலும் அமைக்கப்படுதல் வேண்டும். எந்த வித சொந்த இலாபமும் கருதாத, மக்களின் நல் வாழ்க்கையை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயற்படக் கூடியவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வரக் கூடியவாறு பொருத்தமானவர்கள் தேர்தலுக்கு நிற்கவேண்டும். இந்த உயரிய சிந்தனையை செயற்படுத்த நீங்களெல்லாம் தயாரா?” என்ற கேள்வியுடன் அவர் உரையை இடையில் நிறுத்தினார்.

கூட்டத்தில் பங்குகொண்டிருந்தவர்கள் ஏகோபித்த குரலில் ‘ஆம்’ என்று கூறினர்.

“நீங்களெல்லாம் நாட்டின் நானா திசைகளிலிருந்தும் இங்கு வந்துள்ளீர்கள். உங்களின் பகுதிகளில் எத்தகைய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்தலாம் என்பதைக் கூறுமாறு உங்களிடத்திலேயே விட்டுவிடுகிறேன். உங்களது பகுதிகளில் காணப்படும் மூலப்பொருட்கள், மனித வளம், கூடுதலானோர் பெற்றுள்ள பயிற்சிகள் என பலதையும் நீங்கள் சிந்திக்கலாம். ஏதாவது உற்பத்தி தொடர்பாக நவீன பயிற்சி தேவைப்படின் வெளிநாடுகளிலிருந்து மிகச் சிறந்த பயிற்றுவிப்பாளர்களை நாட்டுக்கு அழைக்க கட்சியால் ஏற்பாடுகள் செய்ய முடியும். தொகுதிவாரியாக அல்லது கூட்டிணைந்த தொகுதிகள் வாரியாக எத்தகைய அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்தலாம் என நீங்கள் உங்களது மக்களுடன் ஆலோசித்து கூடிய சீக்கிரம் தலைமையகத்துக்கு அறிவிக்க வேண்டும்.” கூறிவிட்டு தலைவர் அமர்ந்தார்.

சிலர் எழுந்து தங்களின் பகுதிகளில் அமைக்கப்பட வேண்டுமென நீண்ட நாட்களாக முயற்சித்துக்கொண்டிருந்த திட்டங்களை விபரிக்கத் தொடங்கினர்.

அநுராதபுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் எழுந்து நின்றார். “சேர் எனது பகுதியில் தூர்ந்து போன நிலையில் பல கிராமக் குளங்கள் உள்ளன. இவற்றை இனங்கண்டு புனர்நிர்மாணம் செய்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் இரண்டு போக வேளாண்மை செய்ய முடியும்” என்றார்.

“வெரி குட். கிராமக் குளங்கள் தொடர்பாக மூன்று விதமான பட்டியல்கள் தயாரிக்க வேண்டும். ஒன்று பாவனையில் உள்ளவை. அவற்றின் அணைக்கட்டுகளை உயர்த்துவது போன்ற வேலைகளைச் செய்தால் மேலும் ஒரு தொகை வயல்களுக்கு நீர்ப்பாசனம் அளிக்கமுடியுமா என அடையாளம் காண்பது. இரண்டாவது பாவனையில் இருந்தும் நீர் ஏந்தும் பகுதிகள் தூர்ந்து போயுள்ளவை அல்லது ஆழமாக்கி அணைக்கட்டுக்களை உயர்த்தவேண்டியவை, மற்றது குளத்துக்குரியதான காணிகளை விவசாயிகள் அடாத்தாகப் பிடித்து விவசாயம் செய்பவை, என ஆராய்ந்து இதனுடன் புதிய குளங்களை அமைப்பதால் வானம் பார்த்த காணிகளை இரண்டாம் போகம் செய்யக்கூடியவாறு மாற்றமுடியுமா என ஆராயலாம். எப்படி இருந்தாலும் உங்களது தொகுதியில் சிறு குளங்களை புனர்நிர்மானம் செய்யும் திட்டத்தை செயற்படுத்துவதாக பிரசாரம் செய்வோம்.”

கரையோரப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் எழுந்து நின்றார். “சேர், எனது பகுதியில் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பவர்கள் நிறையப்பேர் வசிக்கிறார்கள். அவர்களில் கணிசமானோருக்கு ஆழ் கடல் மீன்பிடியில் பயிற்சிகொடுத்து, படகு போன்றவற்றை வாங்க உதவி செய்தால், அந்த மக்களின் குடும்ப நிலைமையை மேம்படுத்தக்கூடியதாயிருக்கும்” என்றார்.

அவரது சிபாரிசு செயற்படுத்துவதற்காக குறித்துக்கொள்ளப்பட்டது.

இன்னொருவர் எழுந்தார். “சேர், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் நெய்னாகுடி தொகுதியில் செருப்புத் தயாரிக்கும் தொழிலில் அனுபவமுடையவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நவீன முறைகளில் பயிற்சிகொடுத்து, பாரிய அளவில் செருப்புத் தயாரிக்கும் நிலையமொன்றை ஏற்படுத்தினால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு உண்டாக்கலாம்” என்றார்.

“நல்ல யோசனை. வெளிநாடுகளிலிருந்து பயிற்றுவிப்பாளர்களை அழைத்து வரலாம். பாதணிகள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருட்கள் எவையென அறிந்து முடிந்தால் அவற்றைத் தயாரிக்கக் கூடியதான தொழிற்சாலைகளையும் நிறுவலாம். பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் வளம் உள்ளமை ஒரு பிளஸ் பொயின்ட். சந்தை வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டால் இந்த உற்பத்தித் தொழிற்சாலை நாட்டு மக்களுக்கான ஒரு பாரிய தொழிற்சாலையாக அமையும்” என்றார் தலைவர்.

தேர்தல் நடைபெறப் போகும் திகதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் பா.உ.வாக ஆவதற்காக போட்டி போடும் அரசியல்வாதிகள் தத்தமது வெற்றிக்கான முயற்சிகளில் மும்முரமாயினர். பத்துப் பதினைந்து ஒலிபெருக்கிகளைப் பூட்டி இரவின் அமைதியைக் கிழித்தவாறும், பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் வீட்டுப் பாடங்களைப் படிக்க முடியாமலும் நள்ளிரவு வரை கரடிகளாக கத்தி பிரசாரம் செய்தனர்.

ஒரு நாள் பிற்பகல் ஜ. சீ. கட்சியின் பிரசாரக் கூட்டமொன்று நெய்னாகுடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற ஏற்பாடானது. நெய்னாகுடி தேர்தல் தொகுதிக்குள் வரும் பதினெட்டு கிராமங்களிலிருந்தும் வாக்களிக்கத் தகுதிபெறாத சிறுவர்கள் உட்பட தொகையானவர்கள் பஸ்களில் கொண்டுவரப்பட்டிருந்தனர். கட்சியின் ஆதரவாளர்கள் வெவ்வேறு தொகுதிகளிலிருந்தும் தருவிக்கப்பட்டிருந்தனர். காலையிலிருந்தே நகரின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரை பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் சினிமாப் பாடல்களையும், இடைக்கிடை அபேட்சகரின் புகழ் பாடும் பாடல்களையும் ஒலித்துக் கொண்டிருந்தன. கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக வந்திருந்தவர்கள் கலைந்த கேசக் கற்றைகளுடன் நகரப் பாதைகளில் அலைந்து திரிந்தனர். கொழும்பிலிருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்ட பருப்புக் கறி, மீன் குழம்பு போன்றவற்றுடன் கூடிய உணவுப் பொதி பரிமாறப்பட்டது.

தலைவர் மேடைக்கு வந்ததும் இரு பக்கங்களிலும் பருப்பு மணிகள் ஒட்டப்பட்ட ஆயிரம் ரூபா தாள்களைக் கொண்ட மாலை அணிவிக்கப்பட்டது. தலைவரின் உரையில் தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசமாக பருப்பு வழங்கும் செயற்திட்டத்தை பெருத்த தொனியில் கூறியதுதான் தாமதம் கூடி நின்றவர்கள் வானை முட்டும் சப்தத்தில் கரகோசம் செய்தனர்.

இதே சமயம் நெய்னாகுடி கடற்கரை மைதானத்தில் ஜ.ம.கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. மேடை சிறியதாயிருந்தாலும் நிறைய பொதுமக்கள் நின்றனர். கட்சித் தலைவரை எந்தவித பந்தாவும் இல்லாமல் மேடைக்கு அழைத்து வந்தனர். தனது கட்சியின் கொள்கை பற்றி அவர் விலாவாரியாக விளக்கினார். கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடடையக்கூடியவாறான திட்டங்களை அமுல்படுத்தப் போவதாகக் கூறினார். நெய்னாகுடித் தொகுதியில் செருப்பு, சப்பாத்து போன்ற பாதணிகள் தயாரிக்கக் கூடிய பாரிய தொழிற்சாலைகளை நிறுவ உத்தேசித்துள்ள விடயத்தையும் கூறினார்.

தேர்தல் நடைபெறுவதற்கான திகதி நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நெய்னாகுடி கடற்கரை மணலில் ஓய்வு நிலையடைந்த கிழங்களும், மத்திய வயதானவர்களுமான சிலர் வட்டமாக உட்கார்ந்து கதையளந்துகொண்டிருந்தனர். அவர்களுக்குள் ஓட்டைவாயன்ட மகன் உமறும் காணப்பட்டான். உமறு ஓட்டைவாயன் உதுமானின் இரண்டாவது மகன். தகப்பனைப் போலவே ஹாஸ்யத் துணுக்குகளை அவிழ்த்துவிட்டு மற்றவர்களை சிரிக்க வைப்பவன். சந்தர்ப்பங்களுக்குப் பொருந்தாத கேள்விகளைக் கேட்டு தன்னை முன்னிலைப்படுத்த முயல்பவன். கூட்டத்தில் மக்களன்பன் நடுநாயகமாக வீற்றிருந்தார். அவர் ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வுபெற்றவர். நடமாடும் பல்கலைக்கழகமென பலராரும் மதிக்கப்படுபவர்.

“என்ன மக்களன்பன் சேர், நாங்களெல்லாம் கதைக்கிறோம். நீங்க வாயைத் திறக்கிறீங்களே இல்லையே. ஊரிலே என்ன நடக்குது? சொல்லுங்களேன்” என்றான் உமறு.

“எதைக் கேக்கே?”

“இவ்வளவு நேரமும் காதுக்குள்ளே பஞ்சையா வைச்சுக்கொண்டிருந்தீங்க? நடக்கப் போகும் தேர்தலைப் பற்றித்தானே இவ்வளவு நேரமா கதைக்கோம். இலவசமா பருப்பு கொடுக்கப் போறாங்களாமே. அதைப்பத்தி உங்க அபிப்பிராயம் என்ன?”

“இலவசங்களைக் கொடுத்து அடுத்த ஐந்து வருசத்துக்கு மக்களை ஏழைகளாகவே வைத்துக்கொள்ளப் போறாங்க. ஒரு வகையில் பார்க்கப் போனால் வாக்குகளைப் பெறுவதற்காக இது மக்களுக்குக் கொடுக்கப்படும் லஞ்சம். மக்களும் காலங்காலமாக தன்மானம், சுயகௌரவம் என எதுவுமே இல்லாம வாழுறாங்க. ஏற்பது இழுக்கு என்பதை மறந்தேவிட்டாங்க. சுயமாக உழைத்து தன் கால்களில் நின்று வாழவேண்டுமென்ற சிந்தனையில்லாம இருக்காங்க. யார் எதைத் தந்தாலும் பிச்சைக்காரனைப்போல வாங்கிச் சாப்பிட தயாரா இருக்காங்க. இதை நினைக்கும்போது வேதனையா இருக்கு” கூறிவிட்டு வயதான மக்களன்பன் மெதுவாக மூச்சிரைத்தார்.

வாழ்க்கைத் தரம் மேம்பாடடைதல் என்பது பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியம் ஆகிய மூன்றையும் குறிக்கும். அவ்வாறு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடடைய அத்திட்டம் உதவாது போனால் அதை அபிவிருத்தித் திட்டம் எனக் கொள்ள முடியாது.”

“கிராம வீதிகள் மற்றும் பெருந்தெருக்களை புனர் நிர்மாணம் செய்தல், மதகுகள் , கழிவு நீர் கால்வாய்கள் அமைத்தல் போன்றவற்றைச் செய்து விட்டு அபிவிருத்தித் திட்டங்கள் எனக் கூறுகிறார்களே?”

“அவர்கள் கூறலாம். ஆனால் அவை அபிவிருத்தித் திட்டங்கள் அல்ல. உட்கட்டமைப்புகளை மேம்பாடு அடையச் செய்தல். மக்களின் நீண்ட கால தேவையொன்றை நிறைவேற்றியதாகவும் கொள்ளலாம்.”

கடற்கரையை அண்டிய வீதியில் பலர் நடை பயின்றனர். சிலர் தொங்கோட்டம் ஓடினர். கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதற்காக தோணிகள் தள்ளப்பட்டன. மெதுமெதுவாக இருள் கௌவ, நிலவு எட்டிப் பார்க்கத் தொடங்கியது. “அந்தக் காட்சியைப் பாருங்களேன்” என்றான் உமறு யாரையோ நோக்கி சுட்டு விரலை நீட்டியவாறு.

முன்னாள் பா.உ. ஒருவர் தனது பெருத்த தொந்தியைத் தூக்கிக்கொண்டு மெதுமெதுவாக தொங்கோட்டம் ஓடிக்கொண்டிருக்க, அவருக்குப் பின்னால் துப்பாக்கி ஏந்திய பொலிஸ்காரர் இருவர் பாதுகாப்புக்காக ஓடிக்கொண்டிருந்தனர். காட்சியைப் பார்த்தவர்கள் குபீர் எனச் சிரித்தனர்.

“ஏன் சிரிக்கிறீங்க? இது நம்ம நாட்டின் தலையெழுத்து. சமுகத்துக்கு சேவை செய்வதாக முன் வருபவன், தன்னை மக்கள் தலைவன் எனக் கூறிக்கொள்பவன் தேகப்பயிற்சிக்காக நடக்கும்போது கூட பொலிஸ்காரர்களை பாதுகாப்புக்காக வைத்துக்கொள்கிறான். போலிஸ்காரர்களுக்கான வேதனம் பொதுமக்களாகிய நாம் கொடுக்கவேண்டியுள்ளது. இந்தக் கருமத்தை யாரிடம் சொல்லி அழலாம்?” என்றார் வேதனை கலந்த குரலில் மக்களன்பன்.

“அது சரிய்யா நம்ம நெய்னாகுடித் தொகுதியிலே எந்தக் கட்சி வெல்லும் என நினைக்கிறீங்க? பருப்பா அல்லது செருப்பா?” சிரித்தவாறே உமறு கேட்டான்.

“மக்கள் தன்மானம் இழந்து கை நீட்டியவாறே வாழவேண்டுமென நினைத்தால் பருப்பு வெல்லும். தமது வாழ்க்கை நிலை அபிவிருத்தியடைய வேண்டும் என மக்கள் நினைத்தால் செருப்பு வெல்லும். பொறுத்திருந்து பார்ப்போம்.”

அவர்கள் தேர்தல் முடிவை எதிர்பார்த்திருந்தனர். பொதுத் தேர்தல் நடைபெற்ற மறுநாள் காலையில் ஜனநாயக மறுமலர்ச்சிக் கட்சியை விட ஜனநாயக சீர்திருத்தக் கட்சி கூடிய ஆசனங்களைப் பெற்றுள்ளதாக இறுதி அறிவிப்பு கூறிற்று. பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கு வாக்களித்த மக்கள் இனிமேல் பிரதி மாதமும் இலவசமாக ஒரு தொகைப் பருப்பு தமக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கையில் சீனவெடிகளை கொளுத்தியும், பாற்சோற்றுடன் கட்ட சம்பலுக்குப் பதிலாக பருப்புக் கறி கொடுத்தும்….. வெற்றியைக் கொண்டாடினர்.

சில நாட்களில் ஜ.சீ.கட்சி சில உதிரிக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைத்தது. ஆட்சியமைத்த கையுடன் கட்சித் தலைவர் ஊடகவியலாளர்களின் கூட்டமொன்றை நடாத்தினார். கூடிய சீக்கிரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படப்போகும் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் இலவச பருப்பு விநியோகம் தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்யப்போவதாகத் தெரிவித்தார். நெய்னாகுடியின் முச்சந்தியிலுள்ள சுல்தான் ஹோட்டலுக்கு சமீபமாக நடைபெறும் மாலை நேர சந்தையில் பலர் பொருட்கள் வாங்குவதற்காக அலைந்தனர். ஹோட்டலின் ஒலிப்பெட்டியினூடாக பெரிய சப்தத்தில் சினிமா பாடல்கள் ஒலித்தன. அப்போதுதான் இடைநிறுத்தற் செய்தியாக அச்செய்தி வானொலியில் ஒலிபரப்பாகியது. “கடந்த தேர்தலுக்கு முன்னர் வாக்களித்தவாறு மாதாந்தம் மூவாயிரXம் ரூபாவுக்குக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பிரதி மாதமும் தலா ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.”

மீண்டும் அறிவிக்கப்பட்ட அச்செய்தியைக் கேட்ட பலர் ஆளையாள் ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டனர்.

“பிச்சைக்காரன் கூட ஒரு நாளைக்கு நூறு ரூபா வருமானம் பெறுவானே. அப்படியிருக்க யாருக்கு இவங்க பருப்பு கொடுக்கப் போறாங்க?”

பலர் இக்கேள்வியைக் கேட்டவாறே ஹோட்டலுக்கு முன்னால் கூடினர். அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டதாக ஆதங்கப்பட்டனர். சந்தையில் வாங்கிய பொருட்களுடன் சற்றுத் தூரத்தே நிறுத்தப்பட்டிருந்த இற்றுப்போன தனது சைக்கிளை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்த உமறை அவனது நண்பனொருவன் இடைமறித்தான். வானொலியில் சற்று முன் கேட்ட செய்தியைச் சொன்னான்.

“என்னடா மச்சான் அரசாங்கம் இப்படி ஏமாத்திப் போட்டுது?” என்றான்.

“இலவசமா பருப்புக் கறியும், பருப்பு வடையும் தின்ன ஆசைப்பட்ட அத்தனை ஏமாளிகளினதும் வாய்களில பருப்புடா!” என உரத்த சப்தத்தில் கூறிவிட்டு உமறு நகர்ந்தான்.

ஜுனைதா ஷெரீப்

Comments