தேங்காய் எண்ணெயும், சீனியும் அரசியல் தாக்குதல் ஆயுதங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

தேங்காய் எண்ணெயும், சீனியும் அரசியல் தாக்குதல் ஆயுதங்கள்!

உள்நாட்டு சந்தையில் சீனியின் விலையை குறைக்கும் நோக்கில் கடந்த ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட சீனி வரி மறுசீரமைப்பு அரசாங்கத்தை அரசியல் ரீதியாக குழப்பத்துக்குள் தள்ளிவிட்டுள்ளதென்றே கூற வேண்டும். வரி மறுசீரமைப்பினால் அதாவது இறக்குமதிக்கான வரியைக் குறைத்த போதும் அதனால் ஏற்பட்ட நன்மை நுகர்வோரை சென்றடையாது அரசாங்கத்துக்கு நெருக்கமான பாரிய சீனி இறக்குமதி வியாபாரிகளுக்கே இலாபத்தை ஈட்டிக்கொடுத்திருப்பதாக எதிர்க் கட்சியினர் போர்க்கொடி தூக்கியமையே அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளியமைக்குக் காரணமாகும்.

இந்த சீனி வரிக்குறைப்பினால் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாகவும், இது கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற திறைசேரி பிணைமுறி மோசடியை விட அதிகமானது என்றும் எதிர்க் கட்சிகள் குற்றச்சாட்டுக்களை அடுக்கத் தொடங்கின.
அரசாங்கத்தின் இந்த வரி மறுசீரமைப்பிற்கு அமைய ஒரு கிலோ சீனியை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா வரி 25 சதமாகக் குறைக்கப்பட்டது. வரியின் பெறுமதி குறைக்கப்பட்ட போதும், அதன் நன்மை நுகர்வோருக்குப் பெற்றுக் கொடுக்கப்படவில்லையென்பதே எதிர்க் கட்சியின் பாரிய குற்றச்சாட்டாகும்.

எனினும், இது விடயத்தில் எந்தவிதமான முறைகேடுகளும் இடம்பெறவில்லையென அரசாங்கம் மறுத்திருந்தாலும், வரிக்குறைப்பிலான நன்மை உண்மையில் நுகர்வோருக்குச் சென்றடைந்ததா என்பதை அரசாங்கத்தினாலும் உறுதியாகக் கூற முடியாதிருப்பதையே அவதானிக்க முடிகிறது.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமன்றி, ஜே.வி.பியும் இந்த விடயத்தில் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்தது. ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆரம்பம் முதலே இவ்விடயத்தை பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்து வந்தார். இதற்கும் அப்பால் ஜே.வி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி சீனி வரிக் குறைப்பில் மோசடி இடம்பெற்றிருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இது மாத்திரமன்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் அரசாங்கம் மீது பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் குற்றச்சாட்டுக்களை அடுக்கத் தொடங்கினர்.

எனினும், தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை சரியான முறையில் கையாள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழு இந்த சீனி விவகாரம் குறித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தது மாத்திரமன்றி, நிதி அமைச்சிடமிருந்து அறிக்கையொன்றைக் கோரி அதனை தமது குழுவின் ஊடாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையில் எந்தவித புள்ளிவிபரங்களோ அல்லது உண்மைகளோ மறைக்கப்படாமல், உள்ளதை உள்ளபடியே பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா நடவடிக்கை எடுத்திருந்தார். பொது நிதி மீதான பாராளுமன்றத்தின் அதிகாரத்தை அரசாங்கம் மதிக்கிறது என்பதையும், சம்பந்தப்பட்ட விடயங்களை மூடி மறைப்பதற்கு அரசு முயற்சிக்கவில்லையென்பதையும் இந்த செயற்பாடு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
அதேநேரம், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்த நிதி அமைச்சின் செயலாளரும், திறைசேரியின் செயலாளருமான எஸ்.ஆர்.ஆர்ட்டிக்கல, 'சீனி இறக்குமதிக்கான வரி 25 சதமாக குறைக்கப்பட்டமையால் 1.59 பில்லியன் நிதி இழப்பு அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றதாகும். அரச வரிக் கொள்கையின் பிரகாரம் எவ்வித இழப்பும் ஏற்படவில்லையென்பதுடன் மக்களுக்கே வரி குறைப்பின் பயன் கிடைக்கப் பெற்றுள்ளது' எனக் கூறியிருந்தார்.

கடந்த ஓக்டோபர் 13ஆம் திகதிமுதல் பெப்ரவரி 10ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 65,000 மெற்றிக் தொன் சீனியே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தினமும் 55 மெற்றிக் தொன் சீனி நுகரப்படுகிறது. ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி சீனி ஒரு கிலோவின் விலை 135 ரூபாவாகவிருந்தது. ஆனால், இன்று 114 ரூபாவாகவுள்ளது. வரி குறைப்பின் பயன் மக்களுக்கே சென்றடைந்துள்ளது என்றும் அவர் விளக்கியிருந்தார்.

அதுமாத்திரமன்றி, வரி குறைப்பு இடம்பெறுவது இது முதல் தடவையல்ல. பல சந்தர்ப்பங்களில் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் திகதி 30 ரூபாவாகவிருந்த சீனியின் வரியை 25 சதமாக குறைத்திருந்தனர். மீண்டும் இரண்டு மாதங்களில் சீனியின் வரியை 15 ரூபாவாக உயர்த்தியுள்ளனர். அத்தருணத்திலும் இந்த இறக்குமதியாளர்களே இருந்தனர்.

ஆகவே, சில சந்தர்ப்பங்களில் இறக்குமதியாளர்கள் பயனடையக் கூடும். அல்லது வரி குறைப்பு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதிகமாக சீனியை இறக்குமதி செய்யக் கூடும் என்றும் திறைசேரியின் செயலாளர் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் விளக்கமளித்தார்.

அரசாங்கம் சீனியின் வரியைக் குறைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நள்ளிரவு வெளியிடும் போது, இலங்கையிலுள்ள களஞ்சியங்களில் 8,200 மெற்றிக் தொன் சீனி சுங்கத்தின் கிடங்குகளில் காணப்பட்டது. வரி குறைப்பின் பின்னர் அவை விடுவிக்கப்பட்டமையால் பாரியளவில் சீனியை இறக்குமதி செய்யும் ஒரு நிறுவனத்துக்கு பல மில்லியன் ரூபா ஏறத்தாழ 1.59 பில்லியன் ரூபா இலாபம் ஏற்பட்டிருப்பதாக ஜேவி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தமது கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த மோசடியானது திறைசேரி பிணைமுறி மோசடியை விட மோசமானது என்பதுடன், அரசாங்கத்துக்கு நெருக்கமான நிறுவனம் என்பதால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இருந்த போதும் அரசாங்கம் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுத்துள்ளது.

அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல குறிப்பிடுகையில், மக்களுக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்பதற்கே வரிக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டது. எனினும், எதிர்க் கட்சியினர் அரசியல் ரீதியில் பலம் பெறுவதற்காக அல்லது தமது இருப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசு மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக சுட்டிக் காட்டியிருந்தார்.

அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் எவ்வாறானதாக இருந்தாலும், மக்களுக்குச் செல்ல வேண்டிய நன்மை அவர்களுக்குச் செல்வதே முறையானதாகும். குறிப்பாக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி போன்ற மற்றுமொரு தவறு இடம்பெறுவதை மக்கள் விரும்பவில்லை.

அரசு இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மறுபக்கத்தில் சீனி வரிக் குறைப்பு விவகாரம் குறித்து கணக்காய்வாளர் நாயகத் திணைக்களம் விசேட கணக்காய்வொன்றை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கணக்காய்வு அறிக்கை குழுக்களின் ஊடாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் போது யாராவது தவறிழைத்திருந்தால் நிச்சயமாக அது வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படும்.

சீனி வரி விடயம் ஒருபுறம் இருக்க, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளமை குறித்த சர்ச்சை அரசியல் அரங்கங்களிலும், சமூக அரங்கங்களிலும் பெரிதும் பேசப்படுகிறது.

நாடு சிங்கள, தமிழ் புத்தாண்டை கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், பலகாரங்கள் செய்வதற்கு எண்ணெய் நுகர்வு அதிகமாகவிருக்கும் காலகட்டத்திலேயே இப்புதிய சர்ச்சை உருவெடுத்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 13 கொள்கலன்களில் உள்ள தேங்காய் எண்ணெய் மனிதப் பயன்பாட்டுக்கு ஏற்றது அல்ல என சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

இரசாயனம் சேர்க்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விடுவிக்கப்பட்டிருப்பதாக எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். எனினும், அரசாங்கம் இதனை மறுத்திருப்பதுடன், மனிதப் பாவனைக்கு உதவாத எந்தவொரு எண்ணெயும் சந்தைக்கு விடுவிக்கப்படாது என வர்த்தகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய எண்ணெயை இறக்குமதி செய்த நிறுவனத்தின் களஞ்சியம் சீல் வைக்கப்பட்டிருப்பதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

‘அல்பாடொக்ஸின்’ எனப்படும் புற்றுநோயை உருவாக்கக் கூடிய கூறு இந்த எண்ணெயுடன் கலக்கப்பட்டிருப்பது ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக எண்ணெய் இறக்குமதி செய்யும் மூன்று நிறுவனங்களால் தற்போது இரசாயனப் பதார்த்தம் கலக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி இடம்பெற்றுள்ளது. குறித்த எண்ணெய் சந்தைக்கு விடுவிக்கப்படாது என்றும் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயை மீண்டும் மீள்ஏற்றுமதி செய்யுமாறும் சம்பந்தப்பட்ட கம்பனிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயத்தில் அரசாங்கம் விரைந்து செயற்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பது காலத்தின் தேவையாகும்.

Comments