கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1

கடந்த ஞாயிறு இலங்கை அபிமானிகள் அவரவர் வார இதழ்களை வாசித்துக் கொண்டிருக்கையில், தமிழ்நாட்டின் வாசகர்களும் அதைச் செய்து கொண்டிருக்க -
அவர்களுக்கு அதிர்ச்சி! ‘ஒன்னும் புரியலையே சாமி’ என்கிற மலைப்பு! ஒரே தலைப்பில் முதல் பக்கத்திலிருந்து நான்கு பக்கம் வரையில் ‘பொய்ப் புராணம்’ போடப்பட்ட நீண்ட செய்தி ஒன்று!

“தி.மு.க. ஆட்சியில் 14,523 ஏக்கர் நிலங்கள் அபகரிப்பு.

இப்படி ஆகப் பெரிய எழுத்துக்களில் ஆறு இதழ்களில்.

தமிழகத் தேசிய இதழ்கள் மூத்த இதழ்கள் எனச் சொல்லிக் கொள்கிற ‘தினத்தந்தி’ – ‘தினமணி’ – ‘தினமலர்’ – ‘இந்து தமிழ்’ – ‘THE HINDU’ “D NEXT’ ஆகிய அனைத்து இதழ்களிலும் ஒரே மாதிரியாக தலைப்புச் செய்தி! இதை ஆங்கிலத்தில் ‘LEAD NEWS’ என்பார்கள்.

இந்த ஆறு இதழ்களுடன் ஏழாவதாகச் சேரவேண்டிய ‘தினகரன்’ (ஆம்! நம் மூத்த இதழின் பெயர் களவாடல்)! அணியில் சேரவில்லை!

மாபெரும் அதிசயம்! ஆங்கில ஏடுகளான ‘THE HINDU’ – ‘D NEXT’ தமிழில் முன் பக்கச் செய்தி போட்டது!

இங்கே பிரசுரமாகியுள்ள படம் பார்த்து ரசியுங்கள்!

உண்மையில் 04.04.2021 ஞாயிறு தமிழக ஏடுகளுக்கு என்ன தான் நடந்தது?

ஒன்றும் நடக்கவில்லை! பெரிய வியாபாரம்! அவர்களது பண வைப்புப் பெட்டியில் லட்சம் லட்சமாக கோடி வரை பணம் கொட்டப்பட்டது.

ஏடுகள் விலை போயின! விளம்பர விபசாரம்’ பகிரங்கமாக நடந்தேறியது.
தமிழகத் தேர்தலின் இறுதி நாள் பிரசாரத்தன்று இப்படியொரு நூதனப் ‘பொய்ப் புளுகு’ ஒரு கட்சியினால் இன்னொரு கட்சிக்குப் புனையப்பட்டது – இதழ்களை விலைக்கு வாங்கி.

ஞாயிறு காலை இளம் பொழுதில் கோப்பி, தேநீர் பருகி வார இதழ்களைக் கையிலெடுத்தவர்கள், ‘இது ஒரு விளம்பரம்’ என அறியாதவர்களாக பரபரப்புடன் படித்தார்கள் பின் முகத்தைச் சுளித்தார்கள். காரித் துப்பினார்கள். அன்று எவற்றையுமே பார்க்காமல் வாசிக்காமல் சுருட்டி குப்பைத் தொட்டியில் போட்டார்கள்.

என் தமிழக வாசக அன்பர், நாகர் கோவில் பகுதி குளச்சல் அஸீம், தான் பெற்ற இதழ்களை எப்படி சித்திர வதைக்குள்ளாக்கி உள்ளார் என்பதை படத்தில் பாருங்கள்.

மற்றொரு வாசகர் திருநெல்வேலி கே.எம். ரஹ்மத்துல்லா, ஒரு சிற்றிதழ் ஆசிரியருங்கூட, எனக்கு இட்டிருக்கும் இடுகை, ‘பணம், பதவிக்காக எதையும் செய்யும் ஆளும் அரசின் அடிமைகளுடன் ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய தூண்களான இதழ்களும் விலை போயினவே!”

கையில் எடுத்தவர்கள், சரி, சரி! இன்றையப் பொழுதில் ஜீரணிக்க முயற்சிப்போம். நாளையப் பொழுதில், எதிர்வரும் மே 02ல், உதய சூரியன் உதிர்த்தெழுகையில், தேர்தல் முடிவுகள் நமக்குத் தெரிவிக்கப்படும். தகவல்களுக்காகக் காத்திருப்போம்.காலமகளே, காத்திருப்பு போதுமம்மா தமிழ்நாட்டவருக்கு நல்ல மாற்றம். கொடுத்தருள் அம்மா!

கசப்பு-2

கசப்பு -1ஐ வழங்கி விட்டு சற்றே இந்தியத் தொ.கா.களை ஒரு பறவை பார்வை பார்த்தால் மனம் மிகவும் கசந்து போகிறது.

நடந்து முடிந்த தமிழகத் தேர்தலில் வாக்குகள் புதியப்பட்ட இயந்திரங்களின் திருகுதாளங்களை எக்கச் சக்கமாகக் காட்டுகிறார்கள்.

* சில இடங்களில் இடைநடுவில் பழுது பட்டு இயங்கவில்லை..

* இன்னும் சில இடங்களில் எந்தக் கட்சிச் சின்னத்தைப் பதிந்தாலும் அதில் பதிவாவது ‘தாமரை மொட்டு’! (பிஜேபி ஆகிய பாஜக. சின்னம்)

* வேறு சில இடங்களில் நள்ளிரவில் இயந்திரங்களைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள்! பிடிபடுகிறார்கள்!

இந்த இயந்திரங்களைக் கண்டுபிடித்த நாடுகளே ‘சனியனே’ என்று கைவிட்டு விட்டன.

இந்த இயந்திரத்திற்கு ‘மைக்ரோசிப்’ கண்டுபிடித்த ஜப்பானே அதனைப் பயன்படுத்தவில்லை.

இப்போதைக்கு இந்தியாவும் நைஜீரியாவுமே இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன.
இதையெல்லாம் அறிந்து புரிந்த, சென்னை, திருவெற்றியூர் தொகுதி 03, வேட்பாளர் சீமான், (நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்) “வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதாகும் நிலையிலும், ஒரு கட்சிச் சின்னத்தை மட்டும் பதிவிடும் கேவலத்தைச் செய்வதாலும் இந்த முறையைக் கைவிடக்காட்டுக் கூச்சலிடுகிறேன்” என்கிறார்.

என் பேனைக்கு ஓர் அச்சம். எதிர்காலத்தில் இலங்கையில் நடக்கும் தேர்தல்களுக்கு, முக்கியமாக, எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தல், இந்த இயந்திரங்களை இந்தியா இலவசமாக அனுப்புகிறது என்று வைத்துக் கொண்டால்....? முடிவுகள் இப்போதே கண்கள் முன் காட்சியோ காட்சி!

கசப்பு-3

‘எவன்’ ஆண்டால் எனக்கென்ன? எந்தக் குடி கெட்டால் எனக்கு என்ன கவலை, நான் தினமும் குடித்து வெறித்துக் கும்மாளமிட்டு, என் குடும்பத்தைச் சீரழிக்க, டாஸ்மார்க் கடைகளில் குடி தர ஆட்சியாளன் அனுமதிக்க வேண்டும். நான் மடக் மடக்கென்று குடித்து தெருவில் விழுந்து புரள வேண்டும்” என்று ஒரு கும்பல் தமிழகத்தில்!
தேர்தலையொட்டி மூன்று நாட்கள் டாஸ்மார்க் கடைகளில் மது விற்பனையில்லை என்றதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்றுத் தீர்த்த மது வகைகளின் மொத்த விற்பனைத் தொகை 260 கோடி!
கிழிஞ்சிது போ!

இனிப்பு

படத்தில் ஓர் அருமையான உருளி. (சைக்கிள்) அழகான தம்பி! ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி...? கேள்விக்குறி எதற்கு, இளைய தலைமுறைகளின் இனிய சினிமா நாயகன்.

இந்த விஜய், நடந்து முடிந்த தமிழகத் தேர்தலுக்கு வாக்களிக்கச் சென்ற விதமே பலர் வாய்மெல்ல வைத்து விட்டது. தன் நீலாங்கரை பங்களாவிலிருந்து வாக்குச் சாவடிவரை உருளியில் உருண்டு போய் பதிவு போட்ட அவர், படித்தவர்களுக்கும் பாமரர்களுக்கும் இந்த உருளி மூலமே தன் வாக்கு யாரைச் சேரும் என்பதை உணர்த்திவிட்டார்.
உருளியை நன்றாகப் பார்த்தீர்களானால் அதன் முக்கியப் பாகங்கள் கறுப்பாலும் சிவப்பாலும் கலக்குகின்றன.

அது, தி.மு.க.வின் உதயசூரியன் கொடியில் காணப்படும் முக்கிய நிறங்கள்.
உருளியில் சென்ற நோக்கம், இந்திய அரசின் சமீபத்திய பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மறைமுகமான எதிர்ப்பைத் தெரிவிக்க அவர் கையாண்ட நடிப்புக்கலை!
ஆஹா! விஜய் தம்பி, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெயர் பெற்றுக் கொடுக்க பிறந்த பிள்ளை நீங்க. நல்லா சவாரி செய்யுங்க....!-

Comments