பெரிய குற்றம் | தினகரன் வாரமஞ்சரி

பெரிய குற்றம்

தேவநேசன் திருமலை சவேரியார் பாடசாலையில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பிள்ளைகள் உத்தியோகமாகவும் வெளிநாடாகவும் இருந்து செல்வாக்குடனேதான் வாழ்ந்து வருகின்றனர்! இவர் இனசனத்துள் நிறைவாக வாழ்ந்து வருபவர் என்றும் சொல்லலாம். இதனால் பலரின் எரிச்சல் பொறாமைக்கும் ஆளானவர் என்றும் சொல்லலாம். கஷ்டப்பட்டவர்களுக்கு உதவிசெய்வதால்தான் ஆண்டவன் இந்த நல்வாழ்வை எனக்கருளினார் என்று நினைத்துக் கொள்வார்! ஆனாலும், உதவி பெறுவதற்காக பல்ளித்துக்கொண்டு வருவோரிடம் இவர்களுக்கொரு அழிவுவராதா என்ற மனப்பாங்கே நிலைத்திருக்கும்!.... தேவநேசன் பாட நூல்களை மட்டுமல்ல அறிவு ஞானம் சார்ந்த பல புத்தகங்களை வாசித்து அறிவுபெற்றவர். எல்லாம் விளங்கும் அவருக்கு! யாரையும் வெறுப்பதில்லை. புன்னகையை மட்டும் உதிர்ப்பார்.

அன்று ஒரு சாவீட்டுக்குப் போயிருந்தார் மனைவியோடு. பாலையூற்றுக்கு போய் சாவீட்டை அடைந்தார்கள். இறந்தவர் இவருக்கு ஒன்றுவிட்ட சகோதரி - பெரியம்மாவின் மகள். இன்னும் எழுபதாகவில்லை. சாகும் வயதில்லை. இவரை விட பத்து வயது குறைவாய் இருக்கும். அவ்வளவாக நோய்வாய்ப்பட்டிருக்கவில்லை. திடீரென்று இறப்பு ஏன் ஏற்பட்டது?.... இவளுடைய கணவன் ஏற்கனவே இறந்துவிட்டான். மகள் ஒருத்திதான். அவளை கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்து ஆளாக்கி மணமாக்கியும் வைத்தாள். அவளுக்குப் பிறந்த பெண்பிள்ளையையும் (பேத்தி) பாசநேசத்தோடு வளர்த்தெடுத்திருந்தாள். ஒரு நிறுவனமொன்றில் நல்ல வேலையில் சேர்ந்து நல்ல சம்பளமும் பெற்றுவந்தாள். முதல்மாதச் சம்பளப்பணத்தை தன் அம்மம்மாவிடமே கொடுத்தாள்! இவ்வாறு அந்நியோன்யமாக இருக்கையில் தான் அந்தப் பேரதிர்ச்சி நடந்துவிட்டது..... வேலை செய்த இடத்தில் யாரோ ஒரு விடுகாவாலியோடு பேத்தி ஓடிவிட்டாளாம்! அந்த அதிர்ச்சியை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை உண்ணவோ உறங்கவோ மனமில்லாமல் யோசித்து யோசித்து மனதையும் உடலையும் வருத்தி உயிரையே விட்டுவிட்டாள். பேத்தியின் செயலால் இவள் பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கிறாள் என்பதை அறிந்து தேவனேசன் ஆறுதல் வார்த்தகைள் கூற வந்திருக்கிறார். இதற்கு முன்னமும் துன்பங்களுக்கு உதவியிருக்கிறார். தன் சகோதரி மரித்ததை கேள்வியுற்றதும் அதிர்ந்துபோனார்.!

இப்போது சவப்பெட்டியில் கிடக்கும் அவளைப் பார்த்து மௌனமாக அழுதுகொண்டிருந்தார். அவர் அறிந்தவரையில் வாழ்வுபூராகவும் கஷ்ட சீவியம் நடத்துபவள்தான் அவள்! இறுதிக்காலத்திலயாவது மன ஆறுதல் பெற்று வாழ வழி தெரியவிலலையே இவளுக்கு!... இப்போதுதான் நித்திய நித்திரையில் நிம்மதியாக உறங்குகிறாள்! இவ்வளவு அழகாக அமைதியாக தெளிவான தோற்றம் காட்டியதை இதற்குமுன் அவர் பார்த்ததே இல்லை! பெரும்பாலான மனிதரின் வாழ்வின் முடிவு இப்படித்தானா? காலம் முழுக்க அவலப்படுவது, மரணத்தில்தான் நிம்மதி காண்பதா?

மகள் அருகில் நின்று கண்ணீரோடு ஒப்பாரி பாடினாள். புலம்பிக்கொண்டே இருந்தாள் அவள். தேவனேசன் கலங்கிய கண்களுடன் அவள் அருகில் சென்று அவள் தலையைக் கொடுத்தார். சொன்னார் இப்படி, 'பிள்ள அழுதழுது உன்ர உடலையும் வாழ்க்கையையும் பழுதாக்கிப் போடாத! உன்னை நம்பி பிள்ளைகள் குடும்பம் இருக்கு. இதே கவலையில கிடந்து எல்லார்ர வாழ்க்கையையும் பாழாக்கிப்போடாத!... மரணம் மட்டும்தான் நிச்சயமானது! மற்றெல்லாம் நிச்சயமில்லாதது. ஆனால் என்ன நடக்கிறது என்றால், நிச்சயமான மரணத்தைப்பற்றி ஒருவரும் சிந்திப்பதில்லை! இறப்பு எப்போதும் வரும், ஆறிலும் சாவு நூறிலும் சாவு இதை உணர்ந்து எல்லோரோடும் நல்லுறவுபூண்டு சமாதானமாய் வாழவேண்டும்... இனியாவது சமாதான வழியில் செல்லப்பார்!'என்று சொல்லிவிட்டு வெளியேறினார். மனைவி பெறாமகளை அணைத்தபடி அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.

வெளிப்பந்தலுக்கு வந்தார் அவர். கண்களை துழாவி ஒரு பார்வை பார்த்தார் எல்லோரையும். அனேகமானோர் நெருங்கிய உறவினராயும் அயல்வீட்டுக்காரராயுமே இருந்தனர். ஓடியாடி அலுவலாயிருந்தனர். பெரும்பான்மையார் வட்டமாக இருந்து கதைபேசிக் கொண்டிருந்தனர். குசுகுசுப்பாய், ஏன் வெடிச் சிரிப்பாயுமே பெரும்பாலும் உரையாடிக்கொண்டிருந்தனர். நடிப்புக்காகவேனும் சோகத்தைக் காட்டவில்லை யாரும்! அவர்களுக்கென்ன முகத்தைக் காட்டியாச்சு, இனி ஒருபிடி மண்ணைப் போட்டால் சரி . தங்கள் கடமை முடிந்தது என்ற நிலைப்பாடுதான்! நமக்கும் இந்த நிலைவருமே என்று எண்ணுவார் யாருமில்லை! தனக்குள் சிரித்துக்கொண்டே காலியாக இருந்த நாற்காலியில் போயமர்ந்து கொண்டார்.

மரித்துக்கிடக்கும் சகோதரியைத்தான் கண்களை மூடி தியானித்துக்கொண்டிருந்தார். ஏன்தான் சிலருக்கு மட்டும் வாழ்வுபூராவும் துன்பமாகவே இருக்கிறது?! அவருக்கு விளங்கும் அதைச் சொன்னால் கல்லாலடிப்பார்! யாருக்கும் சொல்லாமல் மனதுள் இருக்கும் கருத்து இதுதான்.

மனம் போல்வாழ்வு என்பதே சரி. எப்போதும் நல்ல நினைவோடு இருந்தால் வாழ்வில் நல்லதுதான் நடக்கும்! எதிரிகளில் கவலை கஷ்டங்களில் எரிச்சல் பொறாமையில் மனதை விட்டார்க்கு நல்லவரானாலும் வீழ்ச்சிப்படலம்தான்!

மீண்டும் சுற்று வட்டாரத்தை நோட்டமிட்டார். அங்கே இன்னொரு ஒன்றுவிட்ட சகோதரியைக் கண்டார். இவள் இறந்தவளின் கூடப்பிறந்த அக்கா. ஆணும் பெண்ணுமாக பத்துப்பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கிவிட்டு பெருவாழ்வு கண்டவள் இவள். தன்கூடப் பிறந்தவளின் பிரிவு அவ்வளவாக அவள் முகத்தில் தென்படவே இல்லை! பக்கத்திலிருக்கும் பெண்டுகளோடு குசுகுசுப்பாய் பேசிக்கொண்டிருந்தாள். இடைக்கிடை இளநகையும் வந்தபடியிருந்தது.

அவளை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தார். தான் முன்னால் இருப்பது அவளுக்கு நன்றாகவே தெரியும் வேண்டுமென்றே இப்படிச் செய்கிறாளே - வெறுப்பை புறக்கணிப்பை காட்டுகிறாளே என்று மனதுள் சிரித்துக்கொண்டார் தேவநேசன். இவள் இன்று மட்டுமல்ல, பல சந்தர்ப்பங்களில் தன் வெறுப்பை கக்கியே வந்திருக்கிறாள். ஏன் இப்படி ஆனாள்? அதுவும் ஒரு தனிக் கதைதான்:..............

மூன்று வருசத்துக்கு முன்னார் இவருக்கு எண்பதாவது பிறந்தநாள் வந்தது. வெளிநாட்டிலிருந்து மகள் சொன்னாள்: இதைச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தேவநேசன் தனிநபருக்கான விழாக்களை விரும்புவதில்லை. ஆனாலும் மகளின் வற்புறுத்தலால் எளிமையாக இதைச் செய்வதற்கு ஒருவாறு சம்மதித்தார். என்ன இருந்தாலும் பிள்ளைகளையும் சமாதானப்படுத்தத்தானே வேண்டும்.

சின்னதாக ஒரு ஹோல் எடுத்து ஐம்பது பேருக்கு மட்டாக இதைச் செய்வோம் என்பது அவர் ஏற்பாடு. அயலுக்கு மிக நெருக்கிய உறவினருக்கும் மட்டாய் சொல்லி ஏதோ சிறப்பாய்த்தான் பிறந்தநாள் கொண்டாடி முடிந்தது. மிகநெருங்கிய உறவாக - சகோதரியாக இருந்தும் இவளுக்குச் சொல்லவில்லை! ஏனென்றால் பத்துப்பிள்ளைகளும் மணமாகி பெரும் குடும்பஸ்தர் ஆகிவிட்டார்கள். கொடி கோத்திரங்கள் கூட. இவவுக்கு சொன்னால் ஐம்பதைத்தாண்டி பெரும் கூட்டமாகிவிடும்! ஆகையால் இவளுக்கு அழைப்புவிடுவதை தவிர்த்தார். இதைப் பெரிய குற்றமாக எடுத்துக்கொண்டு ஏன் எனக்குச் சொல்லவில்லை என்று பேசித்திரிந்தாளாம்!

அன்றிலிருந்து எங்கு கண்டாலும் முகத்தை திருப்பிக்கொண்டு போவாள் வெறுப்பைக் காட்டுவாள்! முன்னரெல்லாம் இவர் உந்துருளியில் போகும்போது பேருந்துதரிப்பிடத்தில் இவளைக் கண்டால் இறங்கி சுகநலன் விசாரித்துத்தான் செல்வார். உடம்புக்கு அவ்வளவு நல்லாயில்லை, ஆசுபத்திரிக்கு போகலாமென்டால் கனனேரமா நிற்கிறன் இன்னும் பஸ் வருகுதில்லை! என்பார். இவர் ஏற்றிக்கொண்டு அங்கே இறக்கிவிடுவார்...... இவளோ கணவனோ சுகவீனமாக இருப்பதாக அறிந்தால் போதும், உடனேயே அங்கு புறப்பட்டு பார்வையிட்டு ஆறுதல்கூறி கைக்குள் ஆயிரம் ரூபாயாவது திணித்துவிட்டுத்தான் வருவார். நத்தார் வருசம் என்று கொண்டாட்டங்களிலும் இருபகுதி வீடுகளுக்குச் சென்று கொண்டாடி மகிழ்வர்! வருடப்பிறப்புக்கு பெரியண்ணாச்சியிட்ட கைவியளம் வாங்கவேணும் என்று வருபவர்களில் இவளும் ஒருவர். இப்படியாக பாசநேசத்தோடு பழகிவந்த அருமைச் சகோதரி அற்பாதி அற்ப விசயத்துக்காக வேண்டாவெறுப்பாக நடக்கிறாளே என்று மனம் நொந்தார்!

இப்போது சகோதரி என்று இவள் ஒருத்திதான் இருக்கிறாள்!

இரண்டு வருடங்களுக்கு முன்னம் தேவனேசன் தம்பதிகளுக்கு ஐம்பதாவது கல்யாண பொன்விழா. மகள் வெளிநாட்டிலிருந்து வந்து சிறப்பாய் கொண்டாடினார். அழைப்புக் கொடாதவர்களும் வந்து சிறப்பித்தார்கள். ஆனால் இவளுக்கு முறைப்படி வீடு தேடிப்போய் அழைப்புக் கொடுத்தும் இவள் மட்டும் வரவேயில்லை!.... இப்படியே சகோரியின் குணபேதங்களை சிந்தித்து நொந்துகொண்டிருந்தார்! செய்கிறார்கள் இவர்கள் பாவங்களை மன்னியும் என்று இயேசு சொன்னதுபோல் இந்தப்பேதைகள் அறியாமல் செய்வதை பொறுத்துக்கொண்டு, அறிவு பெற்ற நான் அவர்கள்போல் வீண் அகம்பாவம் பாராட்டாமல் சமாதானமாகும் வழியைக் காண்போம் என்று எழுந்தார்.

சகோதரியண்டை சென்றார் பக்கத்தில் அமர்ந்துகொண்டார். அவளையே புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தார். அவள் மறுவளமாக திரும்பிக்கொண்டு வேண்டாவெறுப்பைக் காட்டிக்கொண்டு இருந்தாள்! இவர் அவள் கையைத் தொட்டு பெயரைச்சொல்லி அன்பாக அழைத்தார். இவள் கையை உதறிவிட்டு கண்களை அகலவிரித்துக்கொண்டு 'என்ன?' என்று அதட்டுவது போல ஏதோ அந்நியன் தொட்டுவிட்டதுபோல கேட்டாள்! “ஏன் கோபிக்கிறாய்? இன்னும் உன் கோபம் தீரவில்லையா? ஒரு சின்னத் தவறுக்காக இவ்வளவு பெரிய கோபத்தைக் காட்டுறியே இது சரியா?” “என்ன சின்னப்பிழை! எத்தனையோ பேருக்கு சொல்லியிருக்கிறீங்க என்னோட கூடப்பிறந்த சகோதரம் மாதிரி உறவாடிவந்தனீங்க! ஏன் என்ன மட்டும் விலக்கினனீங்க? சொல்லுங்கபார்ப்பம்!” “அது தற்செயலாக நடந்த ஒரு சின்னப்பிழை, இதுக்குப்போய் பெரிய கோபத்த வெறுப்ப புறக்கணிப்ப காட்டுறியே!” “இது சின்னப் பிழை இல்லை, பெரிய குற்றம்,!”

“பெரிய குற்றமா? சாவான பாவமா!.... சரி நீ பைபுளும் கையுமா, கோவிலும் நடையுமா நெடுகத்திரியுற பெரிய பக்தசிகாமணி! எங்கள் வேதத்தில் சாவான பாவங்களாக பத்துக்கட்டளைகளை படைத்துள்ளார். நான் புரிந்தது எத்தனையாவது கட்டளைக்கு விரோதமான பாவம் என்று சொல்லு பார்க்கலாம்!?”

இந்தக் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல இயலவில்லை. தன் முட்டாள்தனத்தை ஒத்துக்கொள்ள இயலவில்லை! ஏன் தோல்வியை தாங்கிக் கொள்ள இயலவில்லை! கையையும் காலையும் உதறிக்கொண்டு எழுந்தமு வேகமாக உள்ளே போனாள். அழுது ஒப்பாரி பாடுவாரோடு அவள் குரலும் சேர்ந்தொலித்துக்கொண்டிருந்தது!

சூசை எட்வேட்
திருகோணமலை

Comments