எத்தனை காலம் கடந்தாலும் என்றுமே நீங்காத மனத்துயர்! | தினகரன் வாரமஞ்சரி

எத்தனை காலம் கடந்தாலும் என்றுமே நீங்காத மனத்துயர்!

மனித வாழ்க்கையின் ஒரு பகுதி நினைவுகள் ஆகும். துரதிர்ஷ்டவசமாக சில நினைவுகள் விரும்பத்தகாதவையாகவும், வேதனை மிக்கவையாகவும் அமைந்து விடுகின்றன.

அவ்வாறு வேதனை மிகுந்த நினைவாகவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் எம் அனைவருக்கும் அமைந்து விட்டன. பல அப்பாவி மக்களின் உயிர்களுடன் தொடர்புபட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் இரண்டாவது வருட நிறைவு நாட்டின் பல்வேறு பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டாலும், இத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் யார் என்பது இன்னமும் வெளிப்படாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மனிதநேயம் மிக்கோருக்கும் வேதனையை அதிகமாக்கியுள்ளது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்குத் தயாராகவிருந்த கிறிஸ்தவர்களுக்கு அன்றைய தினம் மிகவும் சோகம் நிறைந்த நாளாகவே அமைந்து விட்டது.

அன்றைய தினம் காலை கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், கட்டுவாபிட்டிய சென்.செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், கொழும்பு சங்கிரில்லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், சினமன்ட் கிரான்ட் ஹோட்டல் உள்ளடங்கலாக எட்டு இடங்களில் ஒரு சில நிமிட நேரத்துக்குள் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களால் நாடே அதிர்ந்தது.

அன்றைய தினம் தெஹிவளை விருந்தினர் விடுதியொன்றிலும், தெமட்டகொடையில் அமைந்துள்ள சொகுசு வீடொன்றிலும் தற்கொலைக் குண்டுதாரிகள் தமக்குத் தாமே குண்டுகளை வெடிக்கச் செய்து கொண்டனர்.

கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியமானதொரு நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற இந்தக் குண்டுத் தாக்குதல்கள் எமது நாட்டு மக்களை மாத்திரமன்றி உலக நாடுகளில் உள்ள பலரையும் உறையச் செய்திருந்தன.

வழிபாடுகளுக்குச் சென்ற பக்தர்கள், மகிழ்ச்சியான நாளைக் கொண்டாட ஹோட்டலுக்குச் சென்றவர்கள் என 270 உயிர்கள் பறிக்கப்பட்டதுடன், 500 இற்கும் அதிகமானவர்கள் இந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் இன்னமும் இயங்க முடியாது சக்கர நாற்காலிகளிலும், கட்டில்களில் படுத்த படுக்கையாகவும் இருக்கும் சோகம் தொடர்கிறது.

இத்தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியிருந்தாலும், இலங்கையைச் சேர்ந்த அடிப்படைவாத முஸ்லிம் குழுவினரே இத்தாக்குதல்களை நடத்தியிருந்தனர் என்பது விசாரணைகளில் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

இழப்புக்கள் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், முக்கிய சூத்திரதாரிகள் எவரும் இதுவரை அடையாளம் காணப்பட்டு நீதியின் முன்னிலையில் நிறுத்தப்படவில்லையென்பதே நேரடியாகப் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்தினரின் ஒட்டுமொத்த கவலையாகவுள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என புலனாய்வுப் பிரிவினர் முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்கியிருந்த போதும், கடந்த ஆட்சியிலிருந்த அரச உயர்மட்டம் அசமந்தமாக இருந்தமையும், தேசிய பாதுகாப்புக்கான முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டமையுமே இதற்கான காரணம் என பரவலான குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.

அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதே உயிரிழந்தவர்களுக்கு அளிக்கும் மரியாதையாகவிருக்கும். இருந்த போதும் இரண்டு வருடங்களாகியும் இதுவரை எவர் மீதும் உறுதியான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமலிருப்பது துரதிஷ்டமானதாகவே பார்க்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டதுடன், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இதற்காக விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றும் அமைக்கப்பட்டு அதனூடாக பகிரங்க விசாரணைகள் நடத்தப்பட்டன.

இதற்கும் அப்பால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றையும் நியமித்திருந்தார். பாராளுமன்ற விசாரணை ஆணைக்குழு பல்வேறு தரப்பினரின் வாக்குமூலங்களைப் பதிவு  செய்து தனது இறுதி அறிக்கையை வெளியிட்ட போதும், தாக்குதல்களின் சூத்திரதாரிகளோ அல்லது அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதோ புலப்படவில்லை.

மாறாக அப்போது அரசாட்சியில் தொடர்புபட்டிருந்த இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன பொறுப்புக் கூறுவதிலிருந்து தப்பிக் கொள்வதற்காக ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை சுமத்தினரே தவிர, சூத்திரதாரிகளைக் கண்டுபிடிப்பதற்கான உண்மை நோக்கம் இருக்கவில்லையென்றே கூற வேண்டும்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே நாடு பொதுத் தேர்தலுக்கும் முகங்கொடுத்தது. பொதுத் தேர்தல் மேடைகளிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் கணிசமான தாக்கத்தைச் செலுத்தியது என்பதை எவரும் மறுக்க முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய அறிக்கையை வெளியிடாமல் எவரும் என்னிடம் ஆதரவு கேட்டு வர வேண்டாம் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த அறிவிப்பு இதற்குக் காரணம் எனலாம்.

இவ்வாறான நிலையிலேயே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை துரிதப்படுத்தியது. இதன் அடிப்படையில் குறித்த ஆணைக்குழுவினால் ஏறத்தாழ 214 நாட்களில் 457 பேருடைய சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆணைக்குழு முன்னெடுத்த விசாரணைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு 472 பக்கங்கள் 215 இணைப்புக்களைக் கொண்ட இறுதி அறிக்கை கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கை தற்பொழுது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதமும் நடத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் முக்கிய சூத்திரதாரிகள் என அடையாளம் காணப்பட்ட சிலருக்கு எதிராக குற்றப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். எனினும், அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை திருப்தியடையவில்லையென்பது கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் தெரிவித்த கருத்துக்களிலிருந்து புலப்பட்டது.

“உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை சாதாரணமாகப் பார்த்து அதனை மறந்து விட்டு செயல்படக் கூடாது. இத்தகைய தாக்குதல்கள் கத்தோலிக்க மக்களை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல. நாட்டில் அனைத்து மக்களையும் இலக்காகக் கொண்ட ஒரு பேரழிவுக்கான திட்டம் என்பதை எவரும் மறந்து விடக் கூடாது. எதிர்காலத்தில் ஏனைய மதங்களுக்கு எதிராக தாக்குதல் நடைபெறலாம். மிகவும் எச்சரிக்கையாக நாம் செயல்படுவது முக்கியம். அடிப்படைவாத அரசியல்வாதிகள் உள்ளிட்ட தரப்பினரிடம் இருந்து நாட்டைப் பாதுகாப்பது முக்கியம்” என கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  குறிப்பிட்டிருந்தார்.

“இவ்வாறான நபர்கள் தொடர்பில் காத்திரமான வியூகம் தயாரிக்கப்பட்டு முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தவறினால் எதிர்காலத்தில் நாடு பெரும் அழிவை சந்திக்க நேரிடும். இது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் முக்கியமான விடயம். அது தொடர்பில் நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அதனை விடுத்து ஓரிருவரை பெயருக்காக சிறையில் அடைத்து வைப்பதும் பின்னர் அவர்களை விடுவிப்பதும் சிறுபிள்ளைத்தனமான செயல்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

'கத்தோலிக்க சபையானது தவறிழைப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாகும். பழிவாங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை திருப்திப்படுத்த முடியாது. பழிவாங்குவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை' என புனித பாப்பரசர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருப்பதாக கடந்த புதன்கிழமை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதற்கான போராட்டம் தொடரும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அந்நிகழ்வில் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்வில் மும்மதங்களின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

'இனம், மதம், பிரதேசம் என்ற பாகுபாடின்றி முழு மனித குலமும் ஓர் அணியில் திரள வேண்டும். குண்டு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குழப்பங்கள் ஏற்படாமல் நாம் பார்த்துக் கொண்டாலும் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு இன்னும் முடியாமல் உள்ளது. அது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் முழுமையாக ஈடுபடவில்லை. அதற்கு அரசியல் ரீதியான மோசடி தன்மைகளே காரணம்.

குறிப்பாக நாம் முஸ்லிம் மக்களிடம் கேட்டுக் கொள்வது, அடிப்படைவாத தீவிரவாதத்தை நிராகரிப்பதற்கு முன்வாருங்கள். மதத்தின் பெயரில் படுகொலைகள் ஏற்றுக் கொள்ள முடியாதது. அத்தகைய அமைப்புக்களுக்கு எதிராக முன்வாருங்கள் . ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக எமக்காக காத்திரமான குரல் எழுப்புவதற்கு நீங்கள் இன்னும் கூட முன்வரவில்லை. அவ்வாறு நீங்கள் எம்மோடு இணைந்திருந்தால் அதற்கான சாத்தியங்களை எட்டியிருக்கலாம்.

முழு நாடும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. இனம், மதம், மொழி என்றில்லாமல் கட்சி தராதரம் பார்க்காமல் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு நீதியை பெற்றுக் கொள்ள அனைவரும் ஓர் அணி திரள வேண்டும்' என இங்கு உரையாற்றிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

இது இவ்விதமிருக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாவது நினைவு தினத்தன்று பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதையே காணக் கூடியதாகவிருந்தது.

அன்றையதினம் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடையை அணிந்து சபைக்கு சமுகமளித்திருந்தனர். அவர்களின் இந்த ஆடையானது சஹரானை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாக ஆளும் தரப்பு உறுப்பினர்கள் குற்றஞ் சாட்டினர்.

எனினும், கிறிஸ்தவர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்தே தமது சோகத்தை வெளிக்காட்டுவர். அதற்கமையவே தாம் கறுப்பு நிற ஆடையில் வந்ததாக எதிரணி விளக்கமளித்தது. மறுபக்கத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தமது கைகளில் கறுப்பு நிற பட்டியொன்றை அணிந்து தமது சோகத்தை வெளிப்படுத்தினர்.
ஆளும் கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகள் சஹரானை கொண்டாடும் வகையில் அமைந்திருப்பதாக எதிர்க் கட்சியினர் குற்றஞ் சாட்டினர்.

ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பதாகைகளைத் தாங்கியவாறு ஆசனங்களிலிருந்து எழுந்து நின்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையில் வாய் தர்க்கம் முற்றி கைகலப்பு நிலைக்குச் சென்றது.

அன்றைய தினம் இடம்பெற்ற இச்சம்பவத்துக்கு மறுநாள் பாராளுமன்றத்தில் அதிருப்தி வெளியிடப்பட்டது. ஆளும் கட்சி எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இந்த செயற்பாட்டைக் கண்டித்திருந்ததுடன், இதனை விசாரிக்க சபாநாயகர் ஏழு பேர் கொண்ட குழுவையும் நியமித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், உண்மையான சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படாதிருப்பது ஒருபக்கம் இருக்க, அரசியல் தரப்பில் உள்ளவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ் சுமத்துவதையே தொடர்ந்தும் செய்து வருகின்றனர். இவ்வாறான அரசியல் ரீதியான செயற்பாடுகளை கைவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

அதேசமயம் மதத்தின் பேரிலான அடிப்படைவாதமும், காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளும் நாட்டில் இருந்து முற்றாக களைந்தெறியப்பட வேண்டுமென்பதே அமைதியையும் மனிதநேயத்தையும் விரும்புகின்ற மக்களின் எண்ணமாக உள்ளது.

Comments