கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1

‘மூன்றாவது கலைவாணர் ஒருவர்’ நமக்குக் கிடைக்காத நிலையிலேயே இரண்டு கலைவாணர்களும் (என்.எஸ். கிருஷ்ணன், விவேக்) காற்றோடு காற்றாக.... 

அதுவும் இரண்டாவது சின்னக் கலைவாணர். அக்னியில் கலந்து அப்புறம் காற்றுடன் சங்கமித்து இன்று ஞாயிறு (25.04.2021) எட்டாம் நாள். 

கடந்த வாரத்து (18.04) இந்தப் பத்தி எழுத்துப்பக்கம் 17.04 சனி காலை வேளையில் அச்சுக்குப்போகாதிருந்தால் ஆசிரியபீடத்துக் ‘கலைஞர்’ ஒருவரின் (ஈஸ்வரலிங்கம்) உதவியால் சின்னக் கலைவாணருக்கு அஞ்சலி செலுத்தும் முதலாவது பத்தி எழுத்தாளனாக ஆகியிருப்பேன். 

“உங்களது வயது ரகசியம் என்ன?” என என்போருக்கு, -

“வெள்ளை மனம்! வெடிச் சிரிப்பு!” என்பேன். விவேக் எனக்குப் பெரிய உதவி! சதா சர்வ காலமும் தொ.கா. நிகழ்வுகளை மாற்றிய வண்ணம் அவர் வருவாரா, வந்திருக்கிறாரா’ என எதிர்பார்ப்பேன். அழவைப்பதற்கு வரிசையாக ஆட்கள் நம்மைச் சுற்றி இருப்பார்கள். யாரோ சிலர்தான் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்கள்.  

விவேக் என்ற மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவன் (முதுகலை – எம்.காம்) அப்படிப்பட்ட ஒருத்தர். 

அங்கே பாருங்கள், மரங்கள் இந்தக் கோடை வெயிலில் அவருக்காக விடுகின்ற பெருமூச்சுகளை!  

எமது மூச்சுகளும் இரண்டறக் கலக்கட்டும் முடிந்தால், மரக்கன்று ஒன்று நட முடிவெடுப்போம். 
வசதிப்பட்டால் முருங்கை! அது கொரோனாவுக்கு அலர்ஜியாம்! 

கசப்பு-2

நெஞ்சில் நிலைத்திருக்கும் சின்னக் கலைவாணர் தன் அகால மறைவுக்கு முதல் நாளில் முன்மாதிரியாக காட்டி போட்டுக் கொண்ட தடுப்பூசியே முக்கிய காரணம் என்றொரு பெரிய குற்றச்சாட்டு எழுந்தது. 

ஆயினும், மறைந்த விட்டவருடன் கூடவே போய் ஊசி போட்டுக் கொண்ட நடிகர் மனோ பாலாவுக்கு ஒன்றும் நடக்கவில்லையே என்று ஒரு புறவிவாதமும், ‘இதெல்லாம் இலட்சத்தில் ஒரு சம்பவம், இறைவன் விரும்பினான், அழைத்துக் கொண்டான்’ என்று இன்னொரு சமாதானமும் தத்துவமும் தினம் தினம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

எவ்வாறாயினும், எதிர்மறையாக உரத்து தன் குரலை ஒலிக்கச் செய்து கொண்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான் மீது பொலிஸ் புலிகள் பாய்ந்து விட்டனர். மொத்தமாக ஐந்து வழக்குகள் பதிவு செய்து குற்றக் கூண்டிற்குள் கொண்டு போகின்றனர். 

இதே நேரம், சில அதிகாரபூர்வமான தகவல்களை இந்தப் பத்தி எழுத்தில் பதிய வேண்டியுள்ள கடமை இந்தியாவுக்கு மிகவும் பக்கத்தில் நாம் இருப்பதால்..  அந்த அகில பாரதம்,-  

கிருமிப் பாதிப்பில் உலகிலேயே இரண்டாம் இடம் என்ற பதிவுக்கு உட்பட்டு விட்டது. (முதலிடம் அமெரிக்கா மூன்றாம் இடம் பிரேசில்)  

விழுங்க மிகவும் கஷ்டந்தான்! 

கடந்த வியாழன் வரையான ஒரு விவரத்தைத் தேடிய பொழுது ஒரே நாளில் மூன்று இலட்சம், எழுபத்து மூவாயிரம் பேருக்குத் தொற்று. 

இந்தியாவில் இதுவரை மொத்த பாதிப்பு ஒன்றரைக் கோடி. மொத்த பலி ஒரு கோடி,86 இலட்சம். நமக்கு மிகவும் அண்மிய சகோதர நாட்டிலிருந்து ஒலிக்கிறது எச்சரிக்கை மணி! நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளப் பழகுவோம். 

இனிப்பு-1

இவ்வாரத்தில் இனிப்புகளை அதிகமதிகமாக அளித்து கடந்தவார ஏமாற்றத்தைத் தீர்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த சமயம், வட – இந்தியப் பகுதிகளிலிருந்தே இரண்டு கிடைத்து விட்டது! 

இந்த ரமழான் நோன்புப் பொழுதுகளில் ஒரு பெரிய முன்மாதிரியை ‘குஜராத்’ மாநிலம் காட்டி நிற்கிறது. 

ஒரு பொழுது, இந்த குஜராத் பெரிய இனக்கலவரங்களால் கஷ்டப்பட்டு துன்பம் அடைந்த இடம். இப்பொழுது இன, மத பேதம் எதுவும் பாராமல் கிருமி ஆக்கிரமிப்பு.  இந்த நோன்பு காலத்தில், வதோதாராப் பகுதி, ஜஹாங்கீர்புர முஸ்லிம் சமூகம் மேற்கொண்டிருக்கும் காரியம் பெரும் மலைப்பு! 
அப்படியே தங்கள் ஜூம்ஆப் (வெள்ளிக்கிழமைகளில் கூட்டுத் தொழுகை நடக்கும் இடம்) பெரிய பள்ளிவாசலை கிருமித் தொற்று நீக்கும் சிகிச்சை நிலையமாக மாற்றி விட்டனர்! 

* ஐவேளைத் தொழுகை நின்று போனது.  
* விசேட, ‘தராவீஹ்’ தொழுகை இல்லை! 
* அதிகாலைப் பொழுது ‘ஸஹன்’ நோன்பு வைத்தல் ஏற்பாடு கிடையாது. 
* ஆக, மாலையில் நோன்பு துறப்பு ‘இஃப்தார்’ நிகழ்வும் நடக்காது போனது. 

அவர்கள் செய்தகாரியம் விசாலமான தொழுகை மண்டபத்தில் ஐம்பது படுக்கைகள் போடப்பட்டு தொற்றாளர்களுக்கு சிகிச்சை! 

நோயாளர்கள் முஸ்லிம் மாத்திரம் என்று இருக்க வேண்டிய அவசியமில்லை யாரும்! எவரும்!! 

“புனித ரமழான் நோன்பு காலத்தில் எங்களுக்குச் செய்யக் கிடைத்த பெரிய நற்காரியம்” என்றுரைக்கிறார்கள் வட்டார முஸ்லிம் சமூகத்தினர். 

“இத்தகைய குணங்களைக் கொண்டவர்களுடனா வீணாகக் கலவரம் செய்தோம்” என வேதனைப்படுகிறார்கள் சகோதர சமுதாயத்தினர். 

ஒரு கிருமி கெட்டதைச் செய்ய வந்து நல்லதையும் சொல்லிக் கொடுக்கிறதா? புதிர்!  (இங்கே பார்வைக்குத்தரபபட்டுள்ள படம் குளச்சல் (நாகா கோவில் வாசக அன்பர்)

“குளச்சல் அஸீம்” அனுப்பி உதவியது. நன்றி நவில்கின்றேன்.)

இனிப்பு-2

இந்த இனிப்பு கிடைப்பதும் வட – இந்தியப் பக்கத்திலிருந்தே! 

இது அங்கே வழங்கப்பட்டது 2007லில் 14 ஆண்டுகளுக்கு முன. 

ஆனால் பாருங்கள், எக்காலத்திலும் கெடாத ஓர் இனிப்பு. 

இனிப்பு தயாராவதற்கு மிக முக்கிய காரணியாக அமைந்து போனது, வாரணாசி என்ற உத்தரபிரதேச சங்கத் மோச்சன் கோவிலில் நடந்த குண்டு வெடிப்பு. 

முஸ்லிம்களே அதைச் செய்தனர் எனப் பலத்த குற்றச் சாட்டு. 

அச்சமயம் அங்கே இயங்கி வந்த ‘வீஷால் பாரத் சன்ஸ்தான்” என்ற பொதுநல அமைப்பில், நஸ்னீன், ரேஷ்மினா ஃபர்வீன், நஜ்மா, பர்ஸானா என முஸ்லிம் கன்னியர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். 

குண்டு வெடிப்பும், முஸ்லிம்கள் குற்றவாளிகளாக ஆக்கப்படுவதும் பெரும் மன உளைச்சலைக் கொடுக்க ஒரு புரட்சிகரமான முடிவெடுத்தனர்! 

மத ஒற்றுமை நல்லிணக்கம் விரும்பி அனுமானைப் புகழ்ந்து பாடும் பாடல்களை கோஷ்டி கானமாக வீதி தோறும் பாடத் தொடங்கினர். அத்தோடு, குண்டு வெடிப்புக்குள்ளான கோவிலுக்கும் சென்று பாடினர். 

அறிவு சார்ந்த அந்த முஸ்லிம் கன்னியர் சகலரிடமும் கூறினார்கள் இப்படி:   “காலம் காலமாக வாரணாசியில் இந்துக்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். எனவே, அமைதி மற்றும் மத ஒற்றுமைக்காக இந்து சகோதரர்களுடன் சேர்ந்து பாடுபட வேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம். சங்கத் மோச்சன் கோவிலில் அனுமான் சாலிசா பாடலை பாடிய போது, எங்கள் உடலிலும், உள்ளத்திலும் ஒருவித   புத்துணர்வு ஏற்பட்டது. 

அனைவரும் ஒரு தாய் மக்களே, என்ற நம்பிக்கை உறுதிப்பட்டது. நாங்கள் தோழியர் நால்வரும், எங்கள் தாய் மொழி உருதுவில் இந்துப் புனித நூல்களை மொழியாக்கம் செய்யத் தீர்மானித்துள்ளோம். முதல் நூலாக ‘அனுமான் சாலிசா’ என்ற அனுமான் புகழ் மாலையைக் கொண்டுவரப்போகிறோம்” 

இவ்வாறு தெரிவித்தார்கள். அப்படியே செயலிலும் நிறைவேற்றினார்கள். நூலின் உருது மொழியாக்கம். நஸ்னீன்! ஏழை நெசவுத் தொழிலாளியின் பெண்! (படத்தில் பார்த்து பாராட்டுத் தெரிவியுங்களேன்.!) 

இந்த நஸ்னீனும், அவள் தோழியரும் ‘ராம சரித மானசம்” காவியத்தையும் உருதுவில் வழங்க சூளுரைத்தனர் 14 ஆண்டுகளுக்கு முன்!
இப்படி ஒன்றையே நமக்கே உரிய காப்பியகோ ஜின்னாவும் செய்துள்ளார்.  

அவர்களைப் பாராட்ட வாரணாசிக்கே போயிருப்பேன் இந்தக் கிருமி ஊடாட்டம் மட்டும் இல்லாதிருந்தால்!  

Comments