ஒரு டீச்சர் மாற்றலாகிச் செல்கிறார் | தினகரன் வாரமஞ்சரி

ஒரு டீச்சர் மாற்றலாகிச் செல்கிறார்

மூக்குக் கண்ணாடிக்குக் கீழோ இளம் ஆசிரியையின் உருவத்தை உச்சிமுதல் உள்ளங்கால்வரை தனது கூர்மையான பார்வையால் அளந்த அதிபர், தனது கறுத்த உதடுகளுக்குள் மறைந்திருந்த காவியேறிய பற்கள் தெரிய புன்னகைத்தார். அவளது கண் புருவங்களில் தீட்டப்பட்டிருந்த மையும், விரல் நகங்களில் பூசப்பட்டிருந்த மென்னிறப் பூச்சும் அவரது பார்வையில் இருமுறை விழுந்தன.

“பேர் என்ன சொன்னீங்க?”

“சாரதா தேவி!”

“ம்.... முதல் நியமனம்...?”

“ம்...!” தலையால் கூறினாள்

“சயன்ஸ் ட்ரெய்ண்ட் நல்லது. எனக்கும் விஞ்ஞானத்துக்கு ஆள் இல்லாமத்தான் இருந்திச்சி. இங்க வர்றவங்க ஆறு – ஏழு மாசத்துக்குமேல இருக்கிறதில்ல!”

“நான் இங்க விரும்பியே வந்தேன் சேர்!”

“வர்றவங்க எல்லோருமே அப்படித்தான் சொன்னாங்க”

ஆனா, வந்ததுல இருந்து ட்ரான்பருக்குத்தான் ட்ரை பண்ணு வாங்க...! சரி... தங்குறதுக்கு...?”

“போன சனிக்கிழமையே எங்கப்பா வந்து பேசி முடிச்சிட்டாரு!”

“சரோஜினி டீச்சர் வீடா இருக்கும்...?”

“ம்!”

“இது ரொம்ப கஷ்டமான பிரதேசம். போக்குவரத்து – சாப்பாடு எல்லாமே கஷ்டம். ஆனா ஒரு மாசம். ரெண்டு மாசம் போனா எல்லாம் பழகிடும்!”

மீண்டும் தொடர்ந்தார் அதிபர்.

“சாரதா! நீங்க பழைய டைம் டேபலுக்குத்தாள் வேல செய்யணும். முதலாம் தவணை முடியறதுக்கு முந்தியே சயன்ஸ் படிப்பிச்ச டீச்சர் போயிட்டா. மாகாணசபை மெம்பரோட உறவு. அவருக்கு தரம் ஒன்பது கொடுத்திருந்தேன். அதையும் சாரதா பொறுப்பெடுக்கணும்!”

அதிபரின் அறையிலிருந்து வெளியேறி தனது வகுப்பறையை நோக்கி நடந்து சென்றபோது சாரதா சற்று கூச்ச சுபாவமுடன் காணப்பட்டாள். பாடசாலையையும், அதிபரையும் பார்த்தபோதே, தாம் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும், ஒருவருட பாடசாலை கற்பித்தல் பயிற்சியிலும் அடைந்த அனுபவங்களையும் தனது திறமையையும் இழக்க நேர்ந்துவிடலாமென்னும் ஐயம் அவள் மனதில் எழ ஆரம்பித்தது.

வகுப்புகளில் நிறைந்திருந்த மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் பார்வை தன்மீதே பதிந்துள்ளதையும் உணர்ந்தாள். கால்தடுக்கி கீழே விழுந்து விடுவோமோ  என அஞ்சி தலை நிமிராமல் அடியெடுத்து வைத்தாள்.

வகுப்புக்குள் நுழையும் போது தன்னை வரவேற்பதற்காக எழுந்து நின்று கொண்டிருந்த பிள்ளைகளுக்கு காலை வணக்கம் கூறிவிட்டு முழு வகுப்பறையையும் நோட்டம் விட்டாள். கடுங்கோடையில் அகப்பட்ட தாவரங்கள் போன்றும், கறுத்தும், மெலிந்தும் காணப்பட்ட வகுப்புப் பிள்ளைகளின் மீது ஏற்பட்ட அனுதாபத்தோடு அவர்களின் பெயர்களைக் சொல்லச் சொன்னாள்.

“இன்று உங்களுக்கு நான் எடுக்கும் பாடம்; திண்மம், திரவம், காற்று இவை விரிவடைதல் பற்றியதாகும். உங்கள் பழைய டீச்சர் இதுபற்றி சொல்லிக் கொடுத்தாரா?”

“இல்லை, இல்லை!”

கேள்விக்கு பதிலளித்துவிட்ட திருப்தியோடு புதிய ஆசிரியையின் தோற்றத்தையும், பேசும் சுபாவத்தையும் மாணவர்கள் இரசித்துக் கொண்டிருந்தனர். சுடு மூஞ்சிகளுக்குப் பழகிப் போயிருந்த மாணவர்கள். அன்பாகவும், அனுதாபம் பார்வையுடனும் காணப்படும் புதிய ஆசிரியையுடன் குதூகலமாக நடந்து கொண்டனர். வகுப்பறை அமைதியாக தன் பணியில் ஈடுபட்டிருந்தது. பாடசாலையை விட்டு தனது தங்குமிடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் போது சாரதாவின் மனம் மகிழ்ந்திருந்தது. புதுத்தெம்பு உடல்பூராவும் பரவியிருப்பதாக உணர்ந்தாள். அறையில் அமர்ந்து டயறியில் குறிப்பு எழுதினாள்.

மே மாதம் 02ம் திகதி

இன்று நான் முதன் முதலாக பாடசாலை நியமனம் பெற்று வந்துள்ளேன். சிறுவயதுமுதல் நான் கண்ட கனவு இன்றுதான் நிறைவேறியது. அம்மாவின் பழைய சாரியை அணிந்து கொண்டு கையில் பிரம்போடு நான் போட்ட கூத்துகள் அப்பப்பா!
இது கஷ்டப் பிரதேசம். இன்னும் பழைய தோட்டப் பாடசாலையின் சூழல் மாறியதாகத் தெரியவில்லை.

தோட்ட குடியிருப்புகளைச் சுற்றி அடர்ந்த காடுகள். சிறுத்தைகளும், கரும்புலிகளும் இங்கு நடமாடுவதாகவும் அஞ்சப்படுகின்றது.

பிள்ளைகளைப் பார்க்கும்போது நெஞ்சு வலிக்கிறது. விறகு சிறாய்கள் போல காட்சியளிக்கின்றார்கள். முகத்திலும், உடம்பிலும் வடுக்கள் இல்லாத பிள்ளைகளே இல்லை, கால்களில் காயங்களும், பழைய புண்களும், தழும்புகளும் காணப்படுகின்றன. அட்டை கடியினால் இரத்தம் வடியும் கால்களோடு வருகிறார்கள். என்னை ஏதோ அதிசயப் பிறவியைப் பார்ப்பது போல பார்க்கின்றார்கள். இன்று பாடம் நடாத்த ஆரம்பித்தேன்.

மே -03

நடுத்தர வயது ஆசிரியர்களும், ஆசிரியைகளும் என்னோடு அதிகம் பேசுதில்லை. அபூர்வ பிராணியைப் போல என்னைப் பார்க்கிறார்கள். இன்றைக்கு தொண்டையில் தண்ணி வற்றிப் போகும் அளவுக்கு கத்திப் படிப்பித்தேன்.

தண்டவாளங்களுக்கிடையில் விரிவாக்கத்திற்காக இடைவெளி இருப்பது பற்றி கூறியதும் பிள்ளைகள் மேலும் கீழும் பார்க்கிறார்கள். வகுப்பில் உள்ள மாணவர்களில் ஓரிருவர் மாத்திரமே ரயில் தண்ட வாளங்களைப் பார்த்திருக்கிறார்கள். வேலையில்லாத பீரியட் ஒன்றில் மூன்றாம் தர வகுப்பறைக்குச் சென்றேன். சிறியவர்களுக்கு இரண்டு கதைகள் சொல்லிக் கொடுத்தேன். அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துப் போனார்கள். என்னைச் சுற்றி வளைத்து நின்று கொண்டார்கள். பிள்ளைகளின் சுத்தம்பற்றி கூறத்தேவையில்லை.

மாதக் கணக்காக நகம் வெட்டவில்லை. முறையாக பல்துலக்கிய பிள்ளைகள் கிடையாது. காலையில் முகம் கழுவாமல் பாடசாலைக்கு வரும் பிள்ளைகளும் உண்டு. வகுப்புக்கு பொறுப்பாக இருக்கும் ஆசிரியை இந்த தோட்டத்து கிளார்க்கின் மகள் சரோஜினி. இந்த பச்சைக் குழந்தைகளுக்கு வகுப்பாசிரியையின் அன்பு எப்போதுமே கிடைத்த தில்லையென நினைக்கிறேன்.

மே 04

இன்று வெள்ளிக்கிழமை. கன்னத்தோட்டையிலிருந்தும், மாவனெல்லையிலிருந்தும் வரும் ஆசிரியைகளும், நாப்பாவளையிலிருந்து வரும் ஆசிரியரும் நேரத்தோடு போய் விட்டார்கள். பிள்ளைகளின் அரைவாசிப்பேர் பாடசாலைக்கு வரவல்லை. சில ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை காரணமாக தமது ஊர்களுக்குப் போயிவிட்டார்கள்.

மே-05

இன்று சனிக்கிழமை ஓய்வு. எனக்கும் ஓடையில் குளிப்பதற்கு ஆசையாக இருந்த படியால் பள்ளத்து ஓடைக்குச் சென்றேன். அருவருப்பாக இருந்தது. இந்த தண்ணீரிலும் குளிப்பதா என எண்ணத் தோன்றியது. வேகமாக பள்ளத்துக்கு ஓடாமல் குட்டைகளில் தேங்கி நிற்கும் நீர் அழுகிய இலை – குலைகளும், சோப்பு கலந்த நீருமாக நிறம்மாறி காட்சி தந்தது. லயத்து மாட்டுத் தொழுவங்களின் கழிவுநீரும் நீரில் கலந்து காணப்படுகின்றது. போதாக் குறைக்கு ரப்பர் தொழிற்சாலையிலிருந்து அசிட் கலந்த பால் நீரும், குளிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். வகுப்பு மாணவியொருத்தியின் தாய் அங்கு என்னைச் சந்தித்தாள். திவ்யாவின் தாய் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். மிகவும் அன்பாகவும், பணிவாகவும் பேசினாள்.

“மகள் வீடு வந்ததிலிருந்து மிஸ்ஸைப் பற்றியே தான் கூறுவாள்!” என்றாள். மூன்று பிள்ளைகள் படிக்கட்டுகள் போல.வயிற்றில் இப்போதும் ஒன்று. கைகால்கள் காய்ந்து போன ரப்பர் குச்சிகள் போல இருபது வயதுக்கு மேல் இருக்காது.

மே 06

இன்று எதுவுமே செய்யவில்லை. அறைக்குள்ளேயே முடங்கியிருந்தேன். ஒரு மாணவி அடிக்கரும்பு கொண்டுவந்து கொடுத்தாள். சுவையோ சுவை! ஒரு மாணவன் விறலிபழங்கள் கொண்டுவந்து கொடுத்தான். பற்களில் கூச்சம் வரும் வரை உண்டு மகிழ்ந்தேன்.

மே-07

இன்று பிள்ளைகளின் நோட் புத்தகங்களைப் பார்த்தேன். இரண்டு மூன்று பேர் மாத்திரமே ஒழுங்காக குறிப்பு எழுதியிருந்தார்கள். எவ்வளவு சொல்லியும் பிரயோசனம் இல்லை. கற்பித்த பாடங்களிலிருந்து கொடுத்த வினாக்களுக்கு ஒருசிலர் மாத்திரமே விடை எழுதியிருந்தார்கள்.

மே -08

இதென்ன அநியாயம்? பிள்ளைகளுக்கு இப்படி எவ்வாறு விஞ்ஞானம் படிப்பிக்க முடியும்? இன்று பாடம் நடாத்தப்போய் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டேன்.

ஒரு மாணவி காற்றின் ஈர்ப்புச்சக்தியென்றால் என்னவென கேட்டாள். கொப்பர் சல்பைற் நீல நிறமானது. நன்றாக சூடாக்கினால் வெள்ளை நிறமாக மாறும். வளியில் உள்ள நீராவியின் மூலம் அது மீண்டும் நீல நிறமாகும். என்றெல்லாம் கூறிக் கொண்டே போனேன். பிள்ளைகள் மகாபாரத கதை கேட்பது போன்று வாயைத்திறந்து கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

மினி சயன்ஸ் லேப் கூட கிடையாது. சிறு சிறு ஆய்வுகளுக்குத் தேவையான சாதாரண உபகரணங்கள் கூட கிடையாது. பரிசோதனை உபகரணங்களும், இரசாயனப் பொருட்களும் இல்லாமல் எப்படி விஞ்ஞானம் படிப்பிக்க முடியும்? எதுவுமே படிப்பிக்காமல் இருப்பதைவிட இப்படியாவது சொல்லிக் கொடுப்பது மேலானதென நினைக்கின்றேன்.

மே -09

இன்று ஓப் பீரியட் ஒன்று கிடைத்தது.

ஆசிரியர்களின் ஓய்வறைக்குள் சென்றேன். அனுபவம் மிக்க ஓர் ஆசிரியை என்னுடன் கதைத்தார்.

“நாங்களும் வந்த புதிதில் இப்படித்தான் வேலை செய்தோம்.” என்றாள். மற்றவர்கள் பற்றி புறம் பேசுவதில் அவள் கில்லாடி. படித்தவர்களாகவிருந்தும் இப்படி மற்றவர்களின் விடயங்களில் ஏன் மூக்கை நுழைக்கிறார்கள் என எனக்கு விளங்கவில்லை. இன்று எனது வகுப்பு மாணவர்களின் வருகை மிகவும் குறைவு. அதிபர் இதனையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதேயில்லை.

மே-10

நேற்று பாடசாலைக்கு வராத மாணவர்களிடம் காரணம் கேட்டேன். பொதுவாக ஒரேமாதிரியான காரணங்களே வெளிவந்தன. தோட்டத்தில் தொழில் செய்பவர்களாகிய பெற்றார்கள் தம் கையுதவிக்காக இப் பிள்ளைகளை வைத்துக் கொள்கிறார்கள்.

ரப்பர் பால் சீவும் தொழிலாளர்கள் அந்தி வெட்டு நாட்களில் பிள்ளைகளின் உதவியை கட்டாயமாக்கிக் கொள்கிறார்கள்.

ஜூன் -02

சில நாட்களின் பின்னர் மீண்டும் எனது டயறியை கையில் எடுக்கின்றேன். இன்றுடன் நான் இந்த பாடசாலைக்கு வந்து ஒரு மாத காலமாகிவிட்டது. இந்த ஒருமாத காலத்தில் ஒரு நாள்கூட நான் லீவு எடுக்கவில்லை. இப்போதெல்லாம் சக ஆசிரியர்கள் என்னோடு சகஜமாக பழகுகிறார்கள். திவ்யா ஒருவார காலமாக பாடசாலைக்கு வரவில்லை. விசாரித்துப் பார்த்தேன்.

அவளது தாய்க்குக் குழந்தை பிறந்துள்ளதாம். அவளுக்கு உதவி செய்வதற்காக நின்று விட்டதாக அறிந்தோன். ஏதுமறியாத பச்சிளம் பாலகர்களையும் இச்சமூகம் முதியவர்களாக்கி வேடிக்கைபார்க்கின்றது.

ஜூன்-03

நான் இங்கு வந்து ஒரு மாதமாகிவிட்டது. பாடசாலைக்கு ஓர் ஆங்கில ஆசிரியர் கூட இல்லை. ஆங்கில அரிச்சுவடியே தெரியாத பிள்ளைகள் இங்கு இருக்கிறார்கள். இன்று இன்னொரு வகுப்புக்கு பதில் ஆசிரியையாக போனேன். நேர சூசியின் பிரகாரம் அது ஆங்கில பாடத்துக்கான நேரம். நான் ஆங்கில புத்தகத்தைக் கையில் எடுத்துப் படிப்பித்தேன். மாணவர்களின் ஆங்கிலக் கல்வி நிலை பூஜ்ஜியம்.

மாலை நேரத்தில் ஆங்கில வகுப்பொன்றை நடாத்துவது நல்லது என நினைத்தேன். இதுபற்றி அன்றே அதிபரிடம் கூறினேன். இலவசமாக பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் எனது கருத்தைச் செவி மடுத்த அவர் சிரித்தார். மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கையில் எடுத்தார். எதுவும் பேசவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஜூன் 04

இன்று என்னுடைய பிறந்தநாள் வயது ஏறுகிறது.

ஆசிரியர் குழாமுக்கு தேனீர் விருந்து கொடுத்தேன். எனது வகுப்புப் பிள்ளைகளுக்கு இனிப்பு கொடுத்தேன்.

என் மனம் இப்போது ஒரு நிலையில் இல்லை. இந்த பிள்ளைகளுக்கு என்னால் சரிவர சேவைபுரிய முடியவில்லையென என் உள்மனம் கூறுகிறது. தொண்டை வலிக்கும்வரை சத்தமிட்டு மாணவர்களுக்கு படிப்பிக்கின்றேன். சரியாக புரிந்துகொள்ளும் இரண்டு, மூன்று பிள்ளைகள் மாத்திமே இருக்கிறார்கள்.

குறிப்பு எடுத்துக்கொள்வது மிகமிக மோசமாகவுள்ளது. இன்று சொல்லிக் கொடுத்தவை நாளை ஞாபகத்தில் இல்லை. ஒரு பிள்ளையும் படிப்பதில்லை. இது என்ன வாழ்க்கை! எனது முயற்சி விழலுக்கு இரைத்த நீராகி விடுகிறது. இப்போதெல்லாம் நானும் இந்த சூழலுக்குள் சங்கமமாகிவிடுவது போல் தோன்றுகின்றது. முன்னர் போலன்றி, உதாசீனப் போக்கும், வெறுப்பும் எனக்குள் வந்திருப்பதாகத் தெரிகிறது.

எனது பொன்னான பொழுதையும் துடிப்பான பணிகளையும் வேறெங்காவது பயன்படுத்துவது நல்லதென கருதுகிறேன்.

ஜூன்-05

இன்று ஆசிரியர் குழுக் கூட்டம் (ஸ்டாப் மீட்டிங்கில்  எவருமே அதிகம் பேசவில்லை. அதிபர் என் முகத்தைப் பார்த்து எனக்குள்ள பிரச்சினைகள் பற்றிக் கேட்டார். நான், விஞ்ஞான பாடத்திற்குத் தேவையானவை பற்றி விளக்கத்துடன் கூறினேன். நீண்ட நாட்களாக என் மனதில் பதிந்திருந்த விடயங்கள் பற்றி மிக தெளிவாக கூறிவிட்டதாக நினைக்கின்றேன்.

கல்விச் சுற்றுலா ஒன்றுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வது பற்றி கூறினேன். கடல், கப்பல், புகையிரதம், தண்டவாளம், மிருகக்காட்சிச்சாலை, விமான நிலையமென பிள்ளைகளுக்கு காண்பிப்பது நல்லதென கூறினேன். அதிபர் கண்ணாடிக்கு அடியில் என் முகத்தைப் பார்த்தார்.

“அவரவர் வேலைகளை மட்டும் செய்தால் போதும் அதிக பிரசங்கம் தேவையில்லை” என்று இரத்தினச் சுருக்கமாக பதில் தந்தார் அதிபர்.

“புதுசா வந்த டீச்சர்மாருக்கு இப்படியெல்லாம் யோசனைகள் வருவது சகஜம்” என்று உதவி அதிபர் கூறிவிட்டு சத்தமாக சிரித்தார். மற்றவர்களும் சிரித்தார்கள்.

ஜூன்-06

மண்டைவெடிக்கும் போல் இருக்கிறது. தலைவலி! நேற்று பகல் ஆரம்பித்த வலி இன்னும் நிற்கவில்லை இன்று பாடசாலைக்குப் போகவில்லை. இப்படிப்பட்டவர்களுடன் எப்படி வேலை செய்வது? எப்பக்கத்திலிருந்தும் திருப்தி கொள்ளவே முடியவில்லை. இப்போது வெறுப்பின் உச்சக்கட்டத்தை நான் அடைந்துவிட்டேன். இவற்றையெல்லாம் யாரிடம் போய் சொல்வது?

எவருடனாவது மனம் விட்டுப்பேசி மனச்சுவையைக் குறைத்துகொள்ளவும் வழியில்லை. எனக்குள்ள ஒரேயொரு நிம்மதி,  எப்போதாவது டயறி எழுதவது மட்டுமே. முன்னர் தினசரி எழுதினேன். இப்போது அதுவும் குறைந்துவிட்டது.

எதன் மீதும் பற்று இல்லாமல் போய்விட்டது. முடிவு தெரியவில்லை. சம்பளத்தை மாத்திரம் எதிர்பார்க்கும் ஆசிரியையாக நான் இருக்க விரும்பிவில்லை. கற்பித்தல், உளவியல், மாணவர்களின் தேவையறிந்து சேவை செய்தல் என ஆசிரியர் பயிற்சியின்போது கற்றுக்கொண்டவையென அனைத்தும் இங்கு பாழாகிப் போகின்றன. எதுவுமே நடைமுறையில் பேணப்படுவதில்லை.

இன்று அப்பாவுக்கு போன்பண்ணினேன். இங்கு கடைத்தெருவில் தொழிற்சங்கத்தில் பணி புரியும் ஒருவர் இருக்கிறாராம். ஒரு மாத சம்பளத்தை அப்படியே அவரிடம் கொடுத்துவிட்டால் நமக்கு வேண்டிய பாடசாலைக்கு மாற்றலாகிப் போக உடனடியாக உதவி செய்வார் என்பதைச் சொல்லி அவரைச் சந்திக்குமாறு கூறினேன். அப்பா அவருடன் தொலைபேசியில் கதைத்துவிட்டார்.

இனி, இந்த பாடசாலையை விட்டு வேறெங்காவது போவதே நல்லது என முடிவு செய்து விட்டேன்.

சி.கே. முருகேசு

Comments