வரலாற்று ரீதியாகவே தொடருகின்ற தவிர்க்க முடியாத இருதரப்பு நட்புறவு | தினகரன் வாரமஞ்சரி

வரலாற்று ரீதியாகவே தொடருகின்ற தவிர்க்க முடியாத இருதரப்பு நட்புறவு

ஒரு நாட்டினுடைய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையிலேயே அந்நாடு ஏனைய நாடுகளுடன் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுவது வழக்கம். இந்தக் கொள்கையானது ஒவ்வொரு நாட்டுக்கும் அமைய வேறுபடுவதுடன், பூகோள அமைவிடமும் வெளியுறவுக் கொள்கையில் தாக்கம் செலுத்தும் காரணியாக அமைந்து விடுகிறது.

இந்து சமுத்திரத்தின் சர்வதேச கப்பல் பாதையில் இலங்கை அமைந்திருப்பதால், பல்வேறு நாடுகள் இலங்கையுடன் கூடுதலான நட்பு பாராட்டுவதை நெடுங்காலம் தொட்டே காணக் கூடியதாகவுள்ளது. இலங்கையின் நீண்ட கால நட்பு நாடுகளில் சீனா குறிப்பிடக் கூடியதாக விளங்குகின்றது.

இலங்கை_ சீன நட்புறவு வரலாற்று ரீதியானதாகும். ஆனாலும் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக இலங்கையுடன் கூடுதல் நெருக்கமான உறவுகளைப் பேணி வரும் நாடுகளில் ஒன்றாக சீனா அமைந்து விட்டது. இந்த விடயத்தில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் எதிரும் புதிருமான விமர்சனங்கள் நிலவுவதையும் இங்கு குறிப்பிடாமலிருக்க முடியாது. இருந்த போதிலும் இவ்விரு நாடுகளினதும் நட்புறவு விசேடமானதாகும்.

இவ்வாறான நிலையில் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பென்ஹி இவ்வாரம் மேற்கொண்டிருந்த இலங்கை விஜயமானது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களில் மாத்திரமன்றி, பாதுகாப்பு ரீதியான உறவுகளிலும் மேலும் வலுவான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய கொரோனா பெருந் தொற்று உச்ச நிலைமைக்கு சென்று தணிவடைந்த பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சீனாவின் இரண்டாவது முக்கியஸ்தராக பாதுகாப்பு அமைச்சர் வெய் பென்ஹி காணப்படுகிறார். இதற்கு முன்னர் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சீனாவின் வெளியுறவுக் கொள்ளையின் பிரதானி ஜங் ஜிச்சி விஜயம் மேற்கொண்டிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பென்ஹிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இச்சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், மறுதரப்பில் இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங், சீன மக்கள் இராணுவத்தின் ஒன்றிணைந்த பணிக்குழாம் திணைக்களத்தின் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமுமான ஷாஓ யென்மின்ங், மேஜர் ஜெனரல் சீ கோவை உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தனக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக சீன பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. இச்சந்திப்பின் ஊடாக இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடைந்திருப்பதாகவும் சீன பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சீன பாதுகாப்பு அமைச்சர் சந்தித்தார். அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில் இரு தரப்பு உறவுகள் பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டிருந்ததாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்தன.

இச்சந்திப்புகளுக்கு அப்பால் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்னவுடனான சீன பாதுகாப்பு அமைச்சரின் சந்திப்பு இடம்பெற்றது. இரு நாடுகளுக்குமிடையே நடைமுறைச் சாத்தியமான  ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும்  இலங்கையுடன் தொடர்ந்து  இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பென்ஹி குறிப்பிட்டிருந்தார்.

சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளமும் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான  இராணுவ ஒத்துழைப்பு உதவிகள் தொடர்பான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டன.

சீன பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம் பல தசாப்தங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் உறவுகளுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாகவே அமைந்துள்ளது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் 1957ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் அதற்கு முன்னர் வரலாற்று காலம் முதலே இருதரப்பு நல்லுறவுகளும் தொடர்புகளும் பேணப்பட்டு வந்துள்ளன.
 
குறிப்பாக கி.பி 4 ஆம் நூற்றாண்டிலிருந்து இரு தரப்பு உறவுகள் காணப்பட்டதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. 20 ஆம் நூற்றாண்டில், 1950 ஜனவரியில் சீன மக்கள் குடியரசை இலங்கை அங்கீகரித்ததைத் தொடர்ந்து சீனாவுடனான இலங்கையின் உறவுகள் புதுப்பிக்கப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவின் அணுகுமுறையை இலங்கையும் ஆதரித்தது. இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பே, இலங்கையும் சீனாவும் 1952 ஆம் ஆண்டில் வரலாற்று சிறப்புமிக்க இறப்பர்- அரிசி பண்டமாற்றுக்குள் நுழைந்ததுடன், கம்யூனிசம் இல்லாத ஒரு நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகவும் இது அக்காலகட்டத்தில் பார்க்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் 1957 இல் ஆரம்பிக்கப்பட்டன. அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சீன விஜயத்தைத் தொடர்ந்து 1962ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும்  இடையில் முதலாவது ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பற்றியதாக அமைந்தது. இந்த ஒப்பந்தமே இலங்கையில் பல உட்கட்டமைப்பு ஒத்துழைப்புக்களை சீனாவிடமிருந்து பெற உதவியாக அமைந்தது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தை இதற்கான ஒரு சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம். அதன் பின்னரான ஒவ்வொரு காலகட்டத்திலும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் பலப்படுத்தப்பட்டதுடன், படிப்படியாக அவ்வுறவுகள் முன்னேற்றம் கண்டு வந்தன என்றே கூற வேண்டும்.

1963 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் வணிக கடல்சார் உறவுகள் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை, 1982 இல்  சீனா- இலங்கை கூட்டு வர்த்தகக் குழு உருவாக்கப்பட்டமை, 1984 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் போன்ற பல நிகழ்வுகளை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிட முடியும்.

இவ்வாறு பேணப்பட்டு வந்த இலங்கை சீன நட்புறவு 21ஆம் நூற்றாண்டில் முக்கியதொரு இடத்துக்குச் சென்றுள்ளது என்றே கூற வேண்டும். சீன அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'வன் பெல்ட் வன் ரூட்' பட்டுப்பாதைத் திட்டத்தின் ஒரு அங்கமாக இலங்கையுடனான உறவுகளை சீனா மென்மேலும் வலுப்படுத்தத் தொடங்கியது.
சீனாவின் பட்டுப்பாதையில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள இலங்கைக்கு பல்வேறு அபிவிருத்தி உதவிகளை மேற்கொள்ள சீனா முன்வந்தது. குறிப்பாக இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளில் பாரிய அபிவிருத்திகளைச் செய்வதற்கு சீனா தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க_ கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை, நுரைச்சோலை அனல் மின்நிலையம், மொரகஹாகந்த நீர்த்தேக்கம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு துறைமுக அபிவிருத்தி என பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் பங்களிப்பு அதிகமாக அமைந்தது.

இந்து சமுத்திரத்தில் பொருளாதார கேந்திர நிலையமாக மாறும் இலங்கையின் இலட்சியத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்தப் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அமைந்தன என்று கூற வேண்டும்.

அபிவிருத்தித் திட்டங்களுக்கு அப்பால் 2017ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பாரிய வர்த்தகப் பங்காளராகவும் சீனா காணப்படுகிறது. இரு நாளுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை மேற்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட போதும், அது இன்னமும் இறுதிப்படுத்தப்படவில்லை.
பொருளாதார ஒத்துழைப்புகள் மாத்திரமன்றி, இலங்கையில் மூன்று தசாப்த காலமாகத் தொடர்ந்த தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதி யுத்தத்தின் போதும் சீனாவின் பங்களிப்பு பலமானதாக அமைந்தது.

பல தசாப்த கால நட்பைக் கொண்ட சீனா, மனிதாபிமான விடயங்களிலும் உடனடியாக ஒத்துழைப்பு வழங்கும் நாடாகக் காணப்படுகிறது. தற்பொழுது இலங்கை எதிர்கொண்டுள்ள கொவிட்-19 சவால்களுக்கும் தன்னாலான உதவிகளை சீனா வழங்கி வருகிறது.கொரோனாவுக்கான தடுப்பூசி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள் எனப் பல்வேறு உதவிகள் சீனாவிடமிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் நெருக்கமான நட்புகள் இலங்கையின் அயல்நாடான இந்தியா மற்றும் சீனாவுடன் நெருக்கமான உறவை கொண்டிருக்காத நாடுகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது.

இதனால் கடந்த காலத்தில் ஒரு சில சந்தர்ப்பங்களில் இந்தியா தனது அதிருப்தியை நேரடியாக வெளிப்படுத்தியும் உள்ளது. குறிப்பாக யாழ் குடாநாட்டில் உள்ள மூன்று தீவுகளில் காற்றாலை மின் நிலையங்களை அமைப்பதற்கு சீனா உதவத் தயாராக இருந்தது. எனினும், இதற்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்த இந்தியா, அத்திட்டத்தை நன்கொடையாக தானே முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளது.

அதேபோன்று, கொழும்பு துறைமுகத்தில் ஒரு முனையம் இலங்கை-சீன கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு முனையத்தைப் பெற்றுக் கொள்ள இந்தியா கடும் முயற்சி எடுத்தது. எனினும், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட உள்நாட்டுத் தரப்பினரின் எதிர்ப்புக் காரணமாக இந்தியாவுக்கு அம்முனையம் வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக மேற்கு முனையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், சீனப் பாதுகாப்பு அமைச்சரின் இப்போதைய இலங்கை விஜயமானது இந்தியாவுக்கு ஒரு நெருடலைக் கொடுத்துள்ளதென்பதே சர்வதேச அவதானிகளின் கருத்தாக உள்ளது. சீனாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலயத்தை ஆணைக்குழுவாக அங்கீகரிப்பது குறித்த சட்டத்தை இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்த்திருக்கும் நிலையிலேயே, சீன அரசாங்கத்தின் உயர் மட்டத்தின் இந்த விஜயம் அமைந்திருந்தது.

குறித்த சட்டமூலத்துக்கு உள்நாட்டில் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்ததுடன் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனு விசாரணைகள் பூர்த்தியடைந்து தீர்ப்பு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் எதிர்வரும் 05ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளது.

இவ்வாறான அரசியல் பின்னணியிலேயே சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அமைந்தது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான   இருதரப்பு உறவுகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் விமர்சனங்களுக்குரியதாக இருந்த போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு தவிர்க்க முடியாததென்பதே உண்மை.

Comments