தமிழகத்துடன் நல்லுறவை பேண வேண்டியது அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

தமிழகத்துடன் நல்லுறவை பேண வேண்டியது அவசியம்

இலங்கை மற்றும் இந்திய அரசியல்வாதிகளும் அரசு உயர் அதிகாரிகளும் இராஜதந்திரிகளும் அடிக்கடி கிளிப்பிள்ளையைப் போல ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கலாசார, பாரம்பரிய மற்றும் வரலாற்று ரீதியான நெருங்கிய தொடர்புகள் நிலவி வந்திருப்பதாகவும் அந்த உறவு மென்மேலும் இறுக்கமடைந்து வருவதாகவும் குறிப்பிடுவார்கள். ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கு இத்தகைய அறிக்கைகள் புளித்துப்போன ஒன்று. உண்மையாகவே அத்தகைய சினேகபூர்வமான இறுக்கமும் பிணைப்பும் மிகுந்த ஒரு உறவு இரு நாடுகளுக்கும் மத்தியில் இல்லை என்பதால்தான் இத்தகைய முகமன் கூறும் வார்த்தைகள் பாவிக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகமும் ஊடகவியலாளர் மத்தியில் இருக்கவும் செய்கிறது. இந்தியா தொடர்பான இலங்கையின் அரசியல் மற்றும் சமூகப் பார்வையும் அதேபோல இந்தியாவின் இலங்கை மீதான அரசியல் மற்றும் சமூக பார்வையும் எவ்வளவு தூரம் யதார்த்த தளத்தில் பொருள் பொதிந்தவையாக இயங்குகின்றன என்பது ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டிய ஒன்று. நெருக்கம், சகோதரத்துவம் பற்றி எவ்வளவு பேசப்பட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கனதியான திரை என்றென்றும் காணப்படுவதை உணர முடிகிறது.

சிங்கள சமூகத்துக்கு வரலாற்று ரீதியான ஒரு சந்தேகம் இந்தியா மீது எப்போதும் இருந்து வந்திருக்கிறது என்பதோடு அச் சந்தேகம் அவ்வப்போது புதுப்பிக்கப்படவும் செய்கிறது. சோழர் கால படையெடுப்பில் இருந்து ஆரம்பமாகும் இச் சந்தேக பார்வைக்கு, இந்தியத் பெருந்தோட்டங்களில் பணியாற்ற தொழிலாளர்கள் பிரிட்டிஷ் அரசினால் வரவழைக்கப்பட்டு குடியேற்றப்பட்டமை, வட கிழக்கு ஆயுத போராட்டத்துக்கு இந்தியா உதவி வழங்கியமை, இலங்கை – இந்திய சமாதான உடன்படிக்கை, இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவில் வகிபாகம், தமிழகத்தில் உமிழப்படும் வெறுப்புணர்வு, உலகத் தமிழர்கள் இந்தியாவை பூர்விக நாடாக கருதுதல் என்பன தீனி போடுகின்றதாக உள்ளன. இலங்கையின் வட புலத்துக்கு அண்மையில் தமிழகம் அமைந்திருப்பதும் இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான ஊடுருவல் என்பனவும் இச் சந்தேகத்துக்கு வலு சேர்க்கின்றன.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் சிங்கள சமூகத்தை சந்தேகக் கண் கொண்டு அந் நாட்டுத் தமிழர்கள் பார்க்கும் வகையிலேயே தமிழகம் வாழ் தமிழர்களுக்கு செய்திகளும் தகவல்களும் தயாரித்து வழங்கப்படுகின்றன. தமிழகத்துக்கும் இலங்கை சிங்கள சமூகத்துக்கும் இடையிலான தொடர்பு குறைபாடுகளைக் கொண்டதாகவே இருந்து வருகிறது. தமிழக ஊடகவியலாளர்களை இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளச் செய்தல் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் தமிழக சுற்றுப்பயணமொன்றில் ஈடுபடுத்துவது காத்திரமான பலன்களை உருவாக்கக் கூடியதாக இருப்பினும் ஏதோ காரணங்களினால் இத்தகைய உடனடி பலன்தரக் கூடிய ஆக்க பூர்வமான யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தமிழகத்தின் புதிய முதலமைச்சராக 68 வயதான மு.க.ஸ்டாலின் கடந்த ஏழாம் திகதி பதவியேற்றார். இச் சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இவ் வெற்றியையடுத்து இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த அதே சமயம் சிங்கள அரசியல் கட்சிகள் இதைக் கண்டு கொள்ளவில்லை. சிங்கள, ஆங்கில ஊடகங்களும் ஒரு செய்தியாக வெளியிட்டதோடு நிறுத்திக் கொண்டன. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின்னரும் இலங்கை உயர் மட்ட அரசியல்வாதிகள் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க முன்வரவில்லை.

அரச நடைமுறைகளின் பிரகாரம், இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழக மாநிலத்துக்கான முதல்வரே மு.க. ஸ்டாலின் என்பதால் ஒரு அரசு அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும் அல்லது தமிழக அரசு நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கலந்துகொள்ளவும் வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்குக் கிடையாது என்பது உண்மை.

ஆனால் புவியியல் பிரகாரம் கலாசார ரீதியாகவும், தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே நெருங்கிய உறவு காணப்படுகிறது. இலங்கையில் நடைபெறும் அரசியல் நகர்வுகளை தமிழகம் உற்றுக் கவனிக்கிறது. கருத்துகளைத் தெரிவிப்பதோடு இந் நகர்வுகளுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மூலமும் பதில் தர முற்படும் சந்தர்ப்பங்களையும் நாம் பார்த்திருக்கிறோம். இலங்கை தொடர்பில் குறுக்கீடு செய்யுங்கள், அழுத்தம் கொடுங்கள், தலையிடுங்கள் என்றெல்லாம் தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தந்த தருணங்களையும் பார்த்துள்ளோம்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற போது தமிழகம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் அரசாங்கம், தமிழகம் ஒரு மாநிலம் என்ற வகையில் தமிழகத்துடன் நேரடியான தொடர்புகளை பேண வேண்டிய அல்லது தமிழக அரசுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்குக் கிடையாது என்றும் இலங்கை ஒரு சுதந்திரமான இறைமை கொண்ட நாடு என்ற வகையில் இந்திய மத்திய அரசுடன் மாத்திரமே தொடர்பு வைத்துக் கொள்ளும் என்பதாக இலங்கை அரச ஒரு கொள்கையை பின்பற்றி வந்தது. அரசு கோட்பாட்டியல் முறைப்படி இது சரியானதே.

ஆனால் உலக அரசியலில் அரசு நடைமுறைகள் பிரகாரம் மட்டுமே அனைத்தும் நடைபெறுவதில்லை. மக்கள் நலன், சமூக நலன், நாட்டு நலன் முன்னிட்டும் பிரச்சினைகளின் தீவிரம் கருதியும் அரசு நடைமுறைகள் மீறப்படுவதுண்டு. இலங்கையின் தீர்க்கப்பட வேண்டிய தமிழர் அரசியல் அதிகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசு தொடர்ந்து அக்கறையும், தலையீடும் செய்து வருகிறது என்றால் அதற்கான காரணத்தை தமிழகத்திலேயே தேட வேண்டும். அங்கே வாழும் எட்டு கோடி தமிழர்கள் இலங்கை வாழ் தமிழர்கள் குறித்து கரிசனை கொண்டிருப்பதே இலங்கை மீது இந்தியா செல்வாக்கு செலுத்துவதற்கான காரணம். எனவே இலங்கையை ஆளும் எந்தத் தேசிய கட்சியானாலும் அது மத்திய அரசுடன் நல்லுறவு பேணுவதைப் போலவே தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க மற்றும் தி.மு.கவுடனும் நல்லுறவு பேண வேண்டியது அவசியம். சிங்கள சமூகத்துக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையே எப்படி புரிந்துணர்வில் கோளாறோ அவ்வாறே தமிழக அரசியல் கட்சிகளுக்கும் சிங்கள தேசிய கட்சிகளுக்கும் இடையே எந்த புரிந்துணர்வும் காணப்படுவதாகத் தெரியவில்லை.

சிங்கள அரசியல்வாதிகள் ஸ்டாலின் பதவியேற்பை ஒரு புரிந்துணர்வுக்கான நல் ஆரம்பமாகக் கருதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கலாம். அரசு மட்டத்திலும், அது அரசு நடைமுறையல்ல என்பதாக இருந்தாலும், வாழ்த்து தெரிவித்து புதிய நட்பு அத்தியாயத்தை ஆரம்பித்திருக்கலாம். இதுவும் ஒரு இராஜதந்திர நகர்வு என்பதும் இதன் மூலம் சாதகமான பலன்களை அறுவடை செய்ய முடியும் என்பதும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும். இலங்கைத் தமிழ்ப் பிரச்சினை தீர்க்கப்படுமானால் இந்தியாவின் இலங்கை மீதான செல்வாக்கு குறையும். எவ்வகையில் பார்த்தாலும் இலங்கை அரசு தமிழக அரசுடன், கட்சிகளுடன், மக்களுடன் வெளிப்படையாக நல்லுறவைப் பேணுவதே பொருத்தமான இராஜதந்திர நகர்வாக இருக்கும்.

Comments