கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

இவ்வாரத்து இலங்கைத் தமிழ் இதழ்கள் அனைத்திலும் இடம் பெற்றிருக்கக் கூடிய ஓர் அம்சம், தமிழக ஆட்சி மாற்ற அலசல், ஆய்வுக் கண்ணோட்டம், கழுகுப் பார்வை என்பன.  

நானும் இதைவிட்டு கடந்துபோக இயலாது. நானே ஏழு நாட்களுக்கு முன், இப்படிப் பதித்துள்ளேன்.  

“இன்றைய தமிழகத்  
தேர்தல் முடிவுகள்  
கசக்குமா? இனிக்குமா?  
இனிக்கும்!  
ஆனாலும் கசக்கும்!  
கிருமி ஒன்றினால்!”  
- இனிக்கும்’ என்றது, தந்தையார் (கலைஞர் முத்துவேல் கருணாநிதி) வீற்றிருந்த அரியாசனத்தில் தனயன் (ஸ்டாலின்) வீற்றிருக்கும் கட்சி. அதுவும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக ஆட்சிப் பொறுப்பு மீண்டும் தி.மு.க. கட்சியிடம். காட்சியை தமிழ்நாட்டவருடன் இணைந்து நாமும் காண்கிறோமே!  

பலருக்கும் முன்னைய முதல்வர் ‘ஏனா பானா’ வோ (எடப்பாடி பழனிச்சாமி அல்லது இந்தியப் பிரதமரின் கட்சியான பாஜக வேட்பாளப் பிரமுகரோ வந்திருந்தால் இனித்திருக்காது. அது உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிச்சம்.  
ஆனால் ‘கசக்கும்’ எனப் போட்டிருப்பதும் சரியே, சரியே!

ஆகக் கூடுதலாக யாருக்குக் கசக்கும் என்றால் தமிழக மூத்தத் தமிழ் ஏடுகள் மூன்றுக்கும், ஓர் இளம் இதழுக்கும்.   இரண்டு ஆங்கிலத்துக்கும்!

இதைத் துணிவாகவே பதிக்கிறேன். அவற்றினிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் எனக்கில்லை. எந்த வாய்ப்பும் வேண்டாம்!  

‘தினத்தந்தி’ தினமணி’ , ‘தினமலர்’ ஆகிய (03) மூத்தவைகளுடன் நேற்று முளைத்த தி இந்துவும் இணைவு! (தமிழ் இதழுக்கு ஆங்கிலம் கலந்த பெயர்).  

‘உலகத்தின் நான்காவது தூண்’ என வர்ணிக்கப்படுகிற, மதிக்கப்படுகிற ஊடகங்கள், தனக்கு அள்ளி வீசப்பட்ட பல இலட்சக் கணக்கான பண நோட்டுகளுக்காக (இறுதி நேரத்தில், வாக்களிக்க ஓரிரு நாட்கள் இருக்கையில்) முதல் பக்கம் கொட்டை எழுத்துக்களில் தி.மு.க கட்சிக்கு எதிராக பொய்ச் செய்தி” ஒன்றைப் பிரசுரித்து அதன் தொடர்ச்சிக்கு மேலும் சில பக்கங்களை ஒதுக்கின.  

குறிப்பிட்ட ஆறு இதழ்களும் “ஒரே தலைப்பில்” ஒரே செய்தியை ஈயடிச்சான் காப்பியாக பிரசுரித்தன.  

ஞாயிறன்று காலை கோப்பி, தேநீருக்குப் பிறகு கையிலெடுத்த நீண்ட நாள் வாசகர்கள் படிக்கப் பிடிக்காமல் குப்பைக் கூடையில் கசக்கிப் போட்டார்கள். (இந்தச் செய்தியை, முன்னைய கசப்பு ஒன்றிலும் உங்களை விழுங்க வைத்திருக்கிறேன்).  

இப்பொழுது இந்த ஊடகங்களின் நிலை என்ன? பயங்கர கசப்பே! ஆனால், இனிப்பது போல் ‘பாவ்லா’ பண்ணிக்கொண்டு, போட்டே தீர வேண்டும் என்பது போல் செய்திகள், படங்கள் தலையங்கங்கள் இனிப்பு,  
இனிப்பாக, கேவலம் கேவலம்.  

ஆக என் எழுத்தில் ‘இனிக்கும். ஆனாலும் கசக்கும்’ என்று பதித்தது ரொம்பச் சரி!  
மேலும், இது மற்றொரு விதத்திலும் புதிதாய் ஆட்சிக்கு வந்திருப்பவர்களுக்கும் பொருந்தும்.  

காரணம் உலகையே ஆட்டிப் படைக்கும் கிருமியே.  

கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகிவிட்டது. முதல் அமைச்சராக 7ந் திகதி பொறுப்பேற்க இருந்த நிலையில், “என் வேளை இன்னும் வரவில்லை. என்று காத்திருக்காமல் 4ம் திகதியே அதிகாரிகளை அழைத்து கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம்? என்று தீவிரமாக ஆலோசனை நடத்தினார். அதிகாரிகள், “முழு ஊரடங்கை அமுல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. நீதிமன்றம் கூட அதைத்தான் வலியுறுத்துகிறது” என்று முழு ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான பரிந்துரைகளை கூறினர்.   ஆனால் பக்கத்து மலையாளக் கரையோரக் கேரளம் 16 ம் திகதி வரை முழு ஊரடங்கைப் பிறப்பித்து விட்டது. இந்த பத்தி எழுத்தை அச்சுக்கு அனுப்பும் வெள்ளிக்கிழமை காலை ஸ்டாலின் பதவியேற்ற மாலை விசேட அமைச்சரவை கூட்டம் கிருமியை விரட்டுவது எப்படி என்று, 25 ஆயிரத்தை தாண்டி விட்டது.  

‘வெற்றி விழா’ என்று ஒரு பெரிய கொண்டாட்டமாக நடத்தாது, ஆளுநர் மாளிகையிலேயே ஒரு கூடாரம் அமைத்து இருநூறு முக்கியப் பிரபலங்களை மட்டும் அழைத்து மிகமிக எளிமையாக முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டு விட்டார் கலைஞரின் மகன்.  

சரி! பதவியேற்றதும் கொரோனா சுமை மட்டுமா? “கடன் சுமை” என்று மகா பயங்கரமாக இன்னொன்று!  

மிகப் பரிதாபம் புது முதல்வரது நிலைமை!  

இன்னொரு புறத்தில், அகில பாரத நாட்டையும் ஆண்டு கொண்டிருக்கிற பிரதமர் நரேந்திர மோடியால், தனது (பாஜக) கட்சி மூலம் நாலே நாலு பேரையே, தமிழ்நாட்டு சட்ட சபைக்கு அனுப்ப முடிந்திருக்கிறது.  

அந்தப் பெரிய மனிதர் அந்தக் கவலையில் முதல்வருக்கு அன்புக் கரம் நீட்டி அரவணைத்து இடுக்கண் களைவாரா? அல்லது சில ‘ஷா மார்களின்” ஆலோசனைகளக் கேட்டு கசப்பு வில்லைகளை மட்டும் விஷேட விமானத்தில் அனுப்பி வைப்பாரா? ஓரிரு மாதங்கள் பொறுத்தே பூனை, குட்டி போடும்!  
அப் பொழுது இனிப்புகள் கிடைத்தால் அள்ளி வழங்குவேன், அபிமானிகளுக்கு!  

இனிப்பு-1

பரந்த பாரதநாட்டில் பல மாநிலங்கள் உள்ளன. நமக்குத் தமிழ் மாநிலத் தமிழகத்துடன் மட்டுமே தொப்புள் கொடி உறவு. அந்தத் தமிழகமே சில காலங்களுக்கு முன்பு ஒரு பெண் முதலமைச்சரை இந்தியாவுக்கு சம்பாதித்துக் கொடுத்தது  
(ஜெயலலிதா).  

அவருக்குப் பிறகு இந்தியாவில் யாராவது இருக்கிறாரா என்றால் மேலே படத்தில் உள்ளவர் தான்.

கால் முறிவோடு சக்கர வண்டியில் தேர்தல் பிரசாரம் செய்தவர்! (இந்த முறிவு எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவரது ஆதரவாளரால் ஏற்படுத்தப்பட்டதாம்!)  

அந்தக் காட்சிப் படம் மட்டுமல்ல, இன்றைக் ‘கசப்பு’ப் பகுதியில் தமிழக முதல்வருடன் காணப்படுபவரும் அவரே!  

ஆனால் இருவருமே முதல்வர்களாகும் முன்பே சந்தித்த வேளையில் ‘கிளிக்’கானது’.  
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு என்ன தீர்க்கதரிசனம் பாருங்கள்? 

‘மம்தா மாதரசியே, தாங்களே மூன்றாவது தடவையாகவும், வடக்கே, மேற்கு வங்க முதலமைச்சராவீர்கள். இப்ப போர்த்துக்கிறேன் புகழாடை!  
பரிசளிக்கின்றேன் அய்யன்!”  

வள்ளுவன் உருவச் சின்னத்தை...!” எனக் கௌரவப்படுத்துகிறார்.  

இந்த மம்தா (பானர்ஜி) மாதாவை கொஞ்சம் கொஞ்சமே தெரியும் எம்மவர்களுக்கு என்று கருதுகிறேன். (பெயரளவில் மட்டும்!)  

ஆனால் பின்னணி? ஒரு சில முக்கியத்தகவல்கள் மட்டும் பிரத்தியேகமாக.  

வட இந்தியாவில் நாமெல்லாம் அறிந்திருக்கிற கல்கத்தா என்கிற கொல்கத்தா பகுதியை இரு தடவை ஆட்சி, செய்து விட்டு இப்போது 03 ஆவதாக அரியாசனத்தில். அவர் வெற்றி சாதாரண வெற்றியல்ல. பயங்கர வெற்றி.  

பிரதமர் மோடியின் ‘பாஜக’ கட்சி அவர்தம் வலதுகரத்தின் தலைமையில் அவர்  பெயர் 'ஷா' என்று முடியும். அவர் இயக்கிய “இந்துத்துவா”  (இந்து மதம் மட்டுமே இந்தியாவுக்கு) பிரசாரம் மேற்கு வங்காளம், கொல்கத்தாப் பகுதி சிறுபான்மை மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவிட்ட நிலையில் ‘பெண் சிங்கம்’ மம்தா சீறிப்பாய்ந்து 213 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளார்.

ஆட்சி அமைக்க மம்தா மாதாஜிக்குத் தேவைப்பட்டது 148 இடங்களே! கிடைத்ததோ 213. அவற்றில் 42 இடங்களை முஸ்லிம் வேட்பாளர்களைக் கொண்டு நிரப்பி ‘பச்சைக் கொடி’ பறக்கச் செய்தார்!  

இது எப்படி இருக்கு? அதிலும் மாதாஜி ஒரு பிராமணப் பெண். அவருடைய சமூகம் அங்கே முஸ்லிம்கள் மீது படுமோசமான துவேசத்தை அள்ளிக் கொட்டுவது.  

ஆயினும், அவரது பாடசாலை காலத்தில் அவர் ஒரு பாடமாக எடுத்துப்படித்தது இஸ்லாமிய நாகரிகமும் வரலாறும்! அவர் ஒரு பன்னூல் ஆசிரியரும் கூட.

முன்பு சட்டசபையில் இருந்த போது எந்த ஊதியமும் பெற மறுத்தவர்.
நம்ப முடியாமல் இருக்கிறது!  

“இந்தியாவின் மேற்கு வங்காளம் ஒற்றுமையின் இடம். அதை எந்தக் கொம்பனாலும் அசைக்க விடமாட்டேன்!” என தன் பதவியேற்பு விழாவில் முழக்கம் விட்டிருக்கிறார்.   அவருக்கு 66 அகவை! நீடு வாழட்டும் பெண் சிங்கம்!  

நாமும் அப்படியொரு (பெண் சிங்கத்திற்கு ஏங்குவது குற்றமில்லையே! ஏங்குவோம்.  

முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சிகட்டிலில் அவரது முன்னோர் வளர்த்த தி.மு.கவிற்கு 125 இடம். கூட்டமைப்புடன் சேர்ந்ததால் 159. அதில் 3 இடங்களில் முஸ்லிம்களையே நிறுத்தி வெற்றி கண்டிருக்கிறார். அவர் எதிர்பார்த்தபடி பழம்பெரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு இடம் கூட இல்லாமல் போனது.  

ஆக மொத்தம் 07! தி.மு.க ஆட்சியில் கைகோர்ப்பு. படத்தைப் பார்த்து மேலும் விபரங்களை அறிக.

இவர்களில் சா.மு.நாஸர் பால்வளத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் வளத்துறை அமைச்சர்.
 

Comments