பெறுங்கை.... வெறுங்கை... தருங்கை... பெருங்கை... | தினகரன் வாரமஞ்சரி

பெறுங்கை.... வெறுங்கை... தருங்கை... பெருங்கை...

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ். ஆனால்... அதனால்தான் இந்த ஊரின் அழகு பாழ். நாமல் உயன. மாஜி வயல். தற்போது சிற்றூர். 

நூற்றுஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், புறாக் கூடுகள் மாதிரி சின்னச் சின்னப் பலகை வீடுகள். கூடுதலானோர் கூலித்தொழில் செய்பவர்கள். 

பேலியகொட மீன் சந்தையைத் தாண்டித் தொடரும் கட்டுநாயக்க விமான நிலைய அதிவேக நெடுஞ்சாலையை அண்மித்த பகுதி. பாலத்தின் கீழ் ஓடிக்கொண்டிருக்கிறது களனி ஆறு. வருஷா வருஷம் தொடர்மழை வெள்ளத்தில் ஸ்ரீ சித்தார்த்த ம.வி.யில் இரண்டு வாரங்கள் தஞ்சமடைவார்கள். 

‘இந்தக் காணி விற்பனைக்குண்டு’ என்ற அறிவித்தல் பலகை சாய்ந்து கிடக்கும் சற்றே புல் படர்ந்த சேற்று நிலம்தான் சிறுவர்களின் விளையாட்டு மைதானம். 

ஆற்றங்கரையோரம் பெயர் தெரியாத பெரிய மரம் ஒன்று அதன் வேரில் அமர்ந்திருந்தார், புலவர் வெறுங்கையோன். 

அகங்காரம், சுயவிருப்பம்... அற்றவர்கள் சித்தர்கள்... சருகுகளுக்கு அவர்களை ஒப்பிடலாம். பலத்த காற்றினால் சருகுகள் குப்பை மேட்டுக்கும் சில வேளைகளில் சுத்தமான இடங்களுக்கும் அடித்துச் செல்லப்படுகின்றன. சித்தர்களின் வாழ்வும் இப்படித்தான். 

புலவர் வெறுங்கையோனும் சித்தர் மாதிரித்தான்... வழிப்போக்கனாய்த் திரிவார். பூமிக்கே பாரமானவர் போன்றே தெரிவார். 

‘அழாதே சிரி! எல்லாமே விதி!’ என்பார், இந்தக் கலாபூஷண வயதுக்காரர். மாலை நேரங்களில் சிறுவர்களுக்குக் கதைகள் கூறி மகிழ்விப்பார். பலருக்கு விதி விளங்கு. 
இவருக்கு அது விதிவிலக்கு. 

ஈற்றில் எது நிகழும்? நீங்கா தெதுதிகழும்? 

காற்றில் அடைபட்ட கட்டைக்கு?  

சில புகழும்... தாளாத் துயர்ப்பொழுதும் நாற்றப் புழுக்கூட்டுக் கென்ன புகழ்?... என்று, 
வெண்பாவில் வேதாந்தம் பேசுவார். 

வாய் சிவக்க வெற்றிலை போட்டு வலம்வரும் இந்தத் தமிழ்ப் பித்தர் – சித்தர், நையாண்டிச் சிறார்கள் ‘புலத்மாமே’ 

இளங்- கை எப்போதும் இரத்தத்தில் கிடந்தால்... 

இலங்கை எப்போது வெள்ளையாகும்...? 
என்ற கவலைதான் அவருக்கு! 

நான், நீயாய் நாமானால் பாழாவோம். நாமாவோம்; ஆளாவோம் என்று ஒற்றுமையை வலியுறுத்துவார். 

வாசிக்காத சமூகம்; நன்கு வசிக்காத சமூகம் என்பார். சிறுவர்கள் அறநெறியில் வாழ்வதற்குத் தூண்டுவார். பத்தில் ஒன்று தேறும் என்ற நம்பிக்கை. 

நேர்மைதான் ஜெயிக்கும் என்பார். 

ஆஷிக், அஜீத், தருஸ, அஸீஸ், பிரவின், கவிஷ்கர், சந்தோஷ், ரோய், லக்ஷ் அன், ரிஸ்கான் என்று சிறுவர்கள் எல்லோரும் புலவரின் சிஷ்யர்களாயினர். 

சில ‘அக்கினிக் குஞ்சு’ களை இனங்கண்ட சந்தோஷம் அவருக்கு. 

நாமல் உயனவில் கடைசியாக... சேற்று நீர் தேங்கிக் கிடக்கும் சகதி நிலத்தில் பெரிய கம்புகளால் மேடையமைக்கப்பட்டு அதன்மேல் பரண் போன்ற சிறு கூடு, இதுதான் மீன்விற்கிற காசிம் காக்காவின் வீடு, இதை யாராவது கட்டிக்கொடுத்தாலே போதும்...சொர்க்கம் போக வாய்ப்புக் கிடைக்கும். 

காசிம் காக்காக விபத்தாகி... வபாத்தாகி நான்கு வருடங்களாகின்றன. ஆஷிக், ரஸ்னா, மன்சூர், என்று மூன்று பிள்ளைகள் அவருக்கு. அவருடைய மரணத்திற்குப் பிறகு... அவருடைய மனைவி மர்ழியா... விற்கிறாள், விறகு. 

வாழ்க்கைக் குருவிக்கு உழைப்புத்தானே சிறகு. 

பாவம் மர்ழியா, கொரோனா என்று கொண்டு போனார்கள். அவள் தலைநோன்பிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாள். இல்லாத ஏழைக்குத்தான் இழப்புகள் அதிகமாச்சு. 

தராவீஹ் தொழுகைக்கும் போக முடியாத நாட்டின் சமகாலச் சூழ் நிலையில் இந்த வருஷத்து ரமழான் மாதத்தின் பர்ளான நோன்பை ஆர்வமாக நோற்றாலும் என்ன யாருக்கும் மனது ஒரு நிலையிலில்லை. பெருநாள் என்ன கதியோ...? இதுவும் கடந்து போகும். நம்புவோம். 

நம்பிக்கைதான் வாழ்க்கை.. 

இப்படி, ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொன்றையும் யோசித்தபடி இஷாத் தொழுகையை முடித்து விட்டு, நடந்து வந்து கொண்டிருந்தான், காசிம் காக்காவின் மூத்தமகன், ஆஷிக். அடுத்த காலடியில் தட்டுப்பட்ட மஞ்சள் நிற சின்ன என்வலப்பைக் குனிந்து எடுத்தான். 
பிரித்துப் பார்த்தான். 

இரண்டு ஐயாயிரம் ரூபாய்த் தாள்கள்! 
ஒரு காகிதத் துண்டும் உள்ளே இருந்தது. 

அதில் மாணிக்கம் என்பவருடைய வீட்டு விலாசம் எழுதப் பட்டிருந்தது. சிலாபத்தைச் சேர்ந்தவர். 

‘அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது’. 

புலவர் வெறுங்கையோன் ஐயா சொன்னது ஞாபகம் வந்தது. வீட்டுக்கு வந்தான். 
கண்டெடுத்து வந்த காசு என்வலப்பைத் தங்கச்சி ரஸ்னாவிடம் காட்டினான், ஆஷிக். 

‘வாணாம் நானா... ஊராவூட்டுக் காசி நமக்கு வாணாம்... 
குடுத்திருங்க...’ என்றாள், ரஸ்னா. 

உம்மாவின் அதே குணம்! 
‘யார்ட பணம்?’  
‘அந்தத் துண்டில மாணிக்கம்னு இருக்கு...அவர்டயாத்தானிருக்கும்’  
‘தேடிப் போய்க் குடுங்க நானா’ 
‘புலவர் ஐயாக்கிட்ட ஐடியாக் கேட்பம்...’ 
‘அதுவும் நல்லதுதான்’ 

மறுநாள் 

புலவர் வெறுங்கையோனிடம் வந்தான் ஆஷிக். 

நீண்ட நேரமாக யோசித்தார், புலவர். 

‘மாணிக்கத்தைத் தேடிப்போய் இத அவருக்கிட்ட ஒப்படைப்பம்...’ 

அதற்கடுத்த நாள். சனிக்கிழமை. 
சிலாபம் நோக்கிப் புறப்பட்டான் ஆஷிக், வெறுங்கையோனோடு. 

வெறுங்கையோடு அல்ல; மாணிக்கத்தின் பணத்தோடு.  

‘ஆஷி, அம்மாக் கெப்படியிருப்ப?’ கேட்டார், புலவர். 
‘இன்னம் ஒம்பது நாளாவுமாம்...’ சோகமாய்ச் சொன்னான். 
‘அம்மாவ அன்பாப் பாத்துக்கணும்... சொகமாயிடும்’ என்றார். 
‘தாயப்பத்திக் கவித சொல்லுங்களே...’ கேட்டான், ஆஷிக். 
‘சொந்தம் பலநூறு சேர்ந்தாலும் தாயைப்போல் 
வந்துவாய்க் காது வரம்’ என்று புதுக்குறள் சொன்னார். 

அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த சிலாப பஸ் இப்போது  
ஜா- எல யைத் தாண்டிக் கொண்டிருந்தது. 

‘ஐயா, நீங்க எப்புடிக் கவித எழுதத் தொடங்கினீங்க...?’ 

‘ஒருத்தரப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னா அவரோட ஒரு ராவு தங்கணுமாம்.... இல்லாட்டி... அவரோட நீண்ட பயணம் போவணுமாம்... சிலாபம் கிட்டத்தான். சரி சொல்றன் கேளு’ என்று சொல்லத் தொடங்கினார், புலவர் வெறுங்கையோன்;  

‘என்னக் கவிஞனாக்கினதே எங்கே அப்பாதான். அவரு கண்ணதாசன்ட தத்துவப் பாட்டு ரசிகன். அந்தப் பாட்டெல்லாம் எழுதியெடுக்கச் சொல்லுவாறு. நானும் எழுதி எடுப்பேன். வரிவரியா விளக்கம் சொல்லுவாறு.. இப்படி ஒனக்கும் எழுத முடியும்னாரு... கவிதப் புத்தகங்கள் வாங்கித் தந்தாரு... பாரதியார்ட குயில்பாட்டப் பாடமாக்கச் சொன்னாரு... 
மாங்கனி- கண்ணதாசன், யூசுப் சுலைஹா –சாரண பாஸ்கரன், பாண்டியன் பரிசு- பாரதி தாசன்... இதையெல்லாம் சத்தமாப் படிக்கச் சொன்னாரு... எல்லாங் கவித இல்ல... எல்லாருங் கவிஞரில்ல... கவிநயம்னு ஒண்ணு இருக்கு...அத மட்டுங் கண்டுபுடின்னாரு... பிறகென்ன...நீயும் கவிஞன் தான்னாரு..’  

‘நல்ல அப்பா’... என்றான் ஆஷிக். 

இருவரும் சிலாபத்தில் வந்திறங்கினார்கள். 

‘இங்க எனக்குத் தெரிஞ்சவங்க இருக்கிறாங்க. அஷ்ரஃப் கான் சேர், சாதிகுல் அமீன் சேர்... ரொம்ப நல்லவங்க’ என்றார், வெறுங்கையோன்.  

‘நீங்கதான் முழு சிலோனையும் சுத்தி வர்றவராச்சே...’ என்றான், ஆஷிக்  
‘ஆஷி... வா டீ குடிச்சிட்டு நடப்பம்...’ 
‘நீங்க குடிங்கய்யா... நான் நோம்பு’ 

டீ குடித்து விட்டு, வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினர். 

‘இந்த எவனியூவான்னு பாருங்க ஐயா’ ஆணி கழன்று மேலிருந்து கீழாகத் தொங்கிக் கொண்டிருந்த தெருப்பலகையைக் காட்டினான். 

‘இது இல்ல ஆஷி... இன்னும் உள்ள போகணும் போல...’ 

தெருப் பெயர்கள் வாசித்துத் தொடர்ந்தார்கள். 

அரை மணி நேர அலைச்சலுக்குப் பிறகு... சரியான விலாசத்தைக் கண்டு பிடித்து விட்டார்கள். 

அது சிங்களவர் ஒருவருடைய பெரிய பங்களா. 

ஆளுயர வெள்ளை மதிலோரமே நாலைந்து கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 
பூட்டியிருந்த ‘கேற்’ –‘மைக்’ மீண்டும் கேட்டது: ‘கவ்த?’ வெறுங்கையோன் விபரம் சொன்னார். 

தானாகத் திறந்து கொண்டது கதவு. கதவா அது’ ஹும்...  

நாமல் உயனவில் நான்குவீடு கட்டலாம். 

கொச்சைத் தமிழில் அன்பாக அழைத்தார் முதலாளி; ‘உள்ள வாங்கே’...  

முதலில், தண்ணீரும், பழங்களும், குளிர்பானமும் பரிமாறினார். 

இப்போது – அவர் கூப்பிட்டதும் அவசர அவசரமாக ஓடிவந்தான் மாணிக்கம்.  ‘மெயாத்தமாய்’- கிவ்வினார். 
‘வத்தளையில ஒரு ஐயா இருக்கார். அவருக்கு ஒவ்வொரு மாசமும் ‘பொஸ்’ பத்தாயிரம் குடுப்பாரு... அன்னிக்கு என்ட அத்தைட மகனுக்கு என்ட விலாசத்தையும் குடுப்பம்னு அதயும் குறிச்சி வைச்சிருந்தன் காசோட... அந்த என்வலப்புத்தான் இது... வத்தளையில இருக்கிற மச்சானோட... எல்லா இடமும் தேடினன்..என் வலப் கெடய்க்கல... தம்பிக்கிட்டக் கெடய்ச்சிருச்சி...’ 

‘நீங்க இங்க...?’ புலவர் கேட்டார். 

‘பொஸ்ட பெக்டரீல ட்றைவராயிருக்கன்...’ என்ற மாணிக்கம்,  

விழி நீர் துடைத்துச் சொன்னான். 

‘இவரு தங்கமான மனுஷன்...’ என்று முதலாளியைக் காட்டினான். 

ஒரு மாணிக்கத்திற்குத்தான் ஒரு தங்கத்தைத் தெரியும். 

இவர்களது உரையாடல் முடிந்ததும், முதலாளி பேச ஆரம்பித்தார். 
‘மம ஜினதாஸ’ என்று சிங்களத்தில் தொடங்கியவர்... தமிழில் தொடர்ந்தார்; நான் பொரின்ல ஜப்பான்ல வேலை செஞ்ச நேரம். லங்கா வட்ட... வந்த... இரிக்கிற நேரங்தான்... 

கொச்சிக்கடே பாலம லங்க... எக்ஸிடண்ட் உனா... அப்பதாங்... பழங் விக்கிற மோகன் மல்லித்தமாய்... எனய...ஹொஸ்லிடல் சேர்த்தது... என்னோட மூணு நா... ஹொஸ்பிடல் நிண்டது... ஹரீம... ஹொந்தாய்...அவனு... இப்ப கஷ்டத்துல... தெங்... அவுறுது விஸ்ஸக்கட்ட வெடி... நான்... எக்ஸிடண்ட்...ஆவினது...’ 

நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட...? 

ஏடென்ன எழுத்தென்ன எண்ணங்கள் பரிமாற? என்று புலவரின் உதடுகள் மௌனமாய் உச்சரித்தது. 

அன்று முதலாளி போட்ட விருந்தில் ஆச்சரியப்பட்டுப்போனார் புலவர் வெறுங்கை ​யோன். இறுதியாக முதலாளி ' தம்பி நீ நல்லா வருவே! ' என்று கூறி செக் புக்கில் அவர்களுக்குத் தெரியாமல் எழுதிக் கையெழுத்திட்டு தபாலுறையில் வைத்து ஆஷிக்கின் கையில் திணித்தார். அவர்களை வத்தளைக்கு தனது காரில் அனுப்பி வைத்தார்.  

பொய். செத்துவிடும். அழியாதது மெய் அதனால்தான் ‘மெய்’ என்று உடம்புக்குப் பெயர் வந்தது. 

மெய்யாக வாழ்வோர்தம் மெய் அழிந்தாலும் – அவர்கள் மெய்யாக வாழ்ந்தவர்கள் அதனால்... காலத்தால் அழியாத காவியமாணவர்கள் அவர்கள். 

அப்படியானவர்களும் இல்லை என்றால், மழையே பெய்யாது கொடுப்பவர்கள் கூடக் கூடக் கொரோனா குறையும்... குறையும், பொய்யும், களவும் கூடக் கூடத்தான் குறையாமல் இன்றும் கூடிக் கொண்டே போகிறது கொரோனா... இப்படியெல்லாம் ‘ஏதேதோ’ தனக்குள்ளே... சிந்தித்துக் கொண்டே வந்தார் வெறுங்கையோன். காரில்... முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த ஆஷிக்... அந்தச் ‘செக்’ கில் ஜினதாஸ முதலாளி எவ்வளவு எழுதியிருப்பார் என்ற கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான். 

‘நேர்மைதான் ஜெயிக்கும்’ என்று புலவர் ஐயா சொல்வது எவ்வளவு பெரிய உண்மை. 
என்வலப்பை வீட்டுக்குப் போய்த்தான் திறந்து பார்க்கணும்... 
என்று ஜினதாஸ முதலாளி... மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டற்கிணங்க... வந்தளைக்கு வந்து சேரும்வரை ஆஷிக், அந்த என்வலப்பைத் திறக்கவேயில்லை. 

ஆனாலும்... அவனது உள்மனசு... பரபரத்தது. 
‘மாணிக்கமண்ணே...’ செக்’ல சாதாரணமா எவ்வளோ இருக்கும்...?’ 
‘பொஸ்ஸுக்குப் பெரிய மனசு... நிறையத்தான் குடுப்பாரு’.. 
கை என்வலப்பை உடனே பிரிக்கத் துடித்தது. 

வத்தளையில் கார் வந்து நின்றது. 

‘ஐயா நீங்களே பிரிங்க...’ என்று புலவரிடம் என்வலப்பைக் கொடுத்தான், ஆஷிக். 
பிரித்தார்! 
‘ஆஷி... ஒரு லட்சம்!’ 
‘நான் சொன்னன்...’ என்றான் மாணிக்கம். 
ஆஷிக்... மயக்கம் போட்டு விழாத குறை. 

வெறுங்கையோன் சொன்னார்; ‘நேர்மைதான் ஜெயிக்கும்..!... 

‘உம்மாவுக்கு...செலவழிக்கலாம்... பெருநாளைக்கு உடுப்பு 
வாங்கலாம்... எல்லாத்துக்கும் உதவியாயிட்டுது...’அழுகையை அவனால் நிறுத்த முடியாமல் போயிற்று. 

‘ஜினதாஸ முதலாளி நல்லா இருக்கணும்...’ 

வினாடிக்கு வினாடி பிரார்த்தித்தான். 

‘அவன் கொடுக்க நினைத்ததை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுத்ததை யாராலும் கொடுக்க முடியாது’ என்றார். 
வெறுங்கையோன். 

‘ஆஷி... நீ முஸ்லிம். இந்த நோன்பு நேரம்... நீ செய்த நன்மை. உனக்குப் பெரிய நன்மையைத் தந்திருக்கு. ஒரு தமிழிச் சகோதரனைப் போய்ச் சேர வேண்டிய பணத்தைக் கொண்டு போய்க் கொடுத்தாய். அதற்குக் கூலியாக... ஒரு சிங்களச் சகோதரன் மூலம்... இறைவன் எவ்வளவு இரக்கம் காட்டியிருக்கின்றான்... பார்த்தாயா?’ என்றார், புலவர் வெறுங்கையோன். ‘கொடுத்து மகிழ்’ என்று நீங்க சொல்றது...பெரிய விஷயம் ஐயா...’ சிரித்தார். ‘வெறுங்கை பெறுங்கை தருங்கை பெருங்கை” என்றார். 

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து... ஒழுக்கமாக வாழ்ந்து... செல்வச் செழிப்புடன் ஒருவன் படிப்படியாக முன்னேறி வருகிற போது, வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கிறது. 

குடிசையில் வாடிய பேரர்கள்தான். ஒரு காலத்தில் பெரும் குபேரர்களாகின்றனர். 
மீன் விற்ற காசிம் காக்காவின் மகன் ஆஷிக் விண்மீன் சிரிக்கும் ஆகாயத்தில் விமானத்தில் பறக்கும் காலம் வெகு தூரத்திலில்லை... 

புலவர் வெறுங்கையோன் போன்றவர்களால் ஊருக்கொரு...தலைவர்களை உருவாக்க முடியும்.

அமீர் அலி
 

Comments