நமது உடல் ஒரு கொம்ப்யூட்டர் | தினகரன் வாரமஞ்சரி

நமது உடல் ஒரு கொம்ப்யூட்டர்

தானியங்கி சாதனங்கள் இருந்து தொழிற்சாலையை இயக்குவது என்பது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால், நம் உடலில் இதனைக் காட்டிலும், அதிசயமான தானியங்கி (கம்ப்யூட்டர்) அமைப்பு செயலாற்றுகின்றது.

விழித்திருக்கும் நிலையிலும், உறக்க நிலையிலும், அல்லும் பகலும் ஒவ்வொரு வினாடியும் பல விடயங்கள் இந்த அமைப்பினால் நடந்தவண்ணமே உள்ளன.

இந்தச் செயல்களின் விளைவைச் சில சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவும் நாம் காணமுடிகின்றது. அலுவலகத்தில் அதிகாரி சுவாரஷ்யமாக கதை சொல்லும்போது, பணியாளர்களுக்கு கொட்டாவி வருகின்றது. சுட்டு விரலை நீட்டி விலாவில் தொட்டதும் குழந்தை கலகலவென்று அட்டகாசமாகச் சிரிக்கிறது. இவை யாவும் உள்ளே நிகழும் மறுவினைகளின் மெய்ப்பாடுகளாகும். ஆபத்தை விலக்கி உயிர் வாழவும், நிதானம் குலையாமல் இருக்கவும், உடல் மேற்கொள்ளும் காரியங்கள் இவற்றில் பெரும்பாலானவை.

கோபமோ, அச்சமோ உண்டானால் இதற்கு காரணம் என்னவென்று மதிப்பிடுவதில் நரம்பு மண்டலம் வீண்பொழுது போக்குவது கிடையாது. மாறாக எதிர்வரும் தொல்லைகளைச் சமாளிக்க நம்மை அது உடனே ஆயத்தப்படுத்தி விடுகின்றன.

இதயம் வேகமாகத் துடிக்கின்றது. மூச்சு வேகமாக வருகின்றது. கல்லீரலிலிருந்து சர்க்கரைச் சத்து விடுவிக்கப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலக்கின்றது. அதிக ஆற்றல் வேண்டும் என்பதற்காக இவை யாவும் நிகழ்கின்றன. நம் உடல், இந்த வகையில் ஓட்டத்துக்கோ, போராட்டத்துக்கோ தயாராகி விடுகின்றது. ஓட்டமும் போராட்டமும் அவசியமில்லை என நம் மனதுக்கு பட்டாலும் இவை நடந்தே தீரும்.

ஐப்போத்தலாமசு அல்லது முன்மூளை கீழுள்ளறை (hypothalamus) என்பது பல்வேறு செயல்களைச் செய்யக்கூடிய, பல சிறிய உட்கருக்களைக் கொண்ட, மூளையின் ஒரு பகுதியாகும். அகச்சுரப்பித் தொகுதியுடன் நரம்புத் தொகுதியை கபச் சுரப்பியின் வழியாக இணைப்பது ஐப்போத்தலாமசின் முதன்மையான பணிகளில் ஒன்றாகும்.

உறக்கம், இதய இயக்கம், மூச்சு, ஜீரணம் இதர முக்கியமான வேலைகளை நிர்ணயித்து இயக்குவது இச்சுரப்பிதான். உடலில் உஷ்ணம் குறைந்துவிட்டால் உடல் குளிரில் நடுங்குகின்றதே. உஷ்ணம் உடலில் பிறக்கத்தான் இது இவ்வாறு செயலாற்றுகின்றது.

அசாதாரண மறிவினைகளில் பெரும்பாலானவை தற்காப்பிற்காக நிகழும் காரியங்களே. சூடான பாத்திரமொன்றில் விரல் பட்டதும், சருமத்தில் இருக்கும் சூடு உணரும் நரம்புகள் எண்ணிக்கையில் மிகுந்தவை எச்சரிக்கை விடுகின்றன. நரம்புப் பாதைகள் வழியாகச் செய்தி பறக்கின்றன.

மூளைக்குச் செய்தி தெரிந்து காரியம் நடக்க வேண்டும் என்றால் இதற்கு அதிக நேரம் பிடிக்கலாம். காலம் கடத்த இதுவா வேளை? தண்டுவடம் செயலாற்ற முந்திக்கொள்கின்றது. தசைச் சுருக்கத்திற்கு உடனே உத்தரவு போடுகின்றது. விரல் பின்னால் இழுக்கப்படுகின்றன.

ரப்பர் சுத்தியால் டாக்டர் தட்ட நாம் முழங்காலை இழுத்துக்கொள்வது மிகச் சாதாரணமாக நிகழ்கின்றது. நரம்புப் பாதைகள் விழிப்பாக, ஒழுங்காக இருக்கின்றனவா என்று கண்டறியப் பயன்படும் உத்தி இது.

உமிழ்நீர்ச் சுரப்பிகள் யாவிலும் தினந்தோறும் 1000 முதல் 1500 மிலி உமிழ்நீர் சுரக்கப்படுகிறது. இது மிகக் கச்சிதமாக நிகழும். மறிவினைகளில் ஒன்று, உடலில் தண்ணீர் குறைந்தால் உமிழ்நீர்ச் சுரப்பிகள் இயங்க முற்படும். அதன் விளைவாகத் தாகம் எடுக்கும். உட்கொண்ட உணவை ஈரப்படுத்தி மழுமழுப்பாக்குவது உமிழ்நீரின் முக்கியமான வேலை, ஜீரண விடயத்தில் முன்னோடி இது செயற்படும்.

இறைச்சியை சுடும்போது ஏற்படும் வாசனையோ அல்லது அதைப் பார்க்கும்போதோ வாயில் நீர் ஊறும். பயம் அல்லது கவலை ஏற்பட்டால், நான்கு வறண்டு போகும். பயந்து நடுங்கும் பேச்சாளர் மேசையில் தண்ணீரைக் கொண்டுவந்து வைப்பதும் இதனால்தான்.

பொய்யைக் கண்டறிய உமிழ்நீரை ஒரு கரடுமுரடான கருவியாக, ஒரு காலத்தில் பயன்படுத்தினார்கள். இடைக்காலத்தில் பொய் சொல்பவன் வாயில் மாவைத் திணிக்கச் சொல்வார்கள் நீதிபதிகள்.

கொட்டாவி விடும்போது எத்தனை திருப்தியாக இருக்கின்றது. கொட்டாவி வரும்போது சிலவேளைகளில் சங்கடமாகக் கூடப் போய்விடுவதுண்டு.

இந்தக் கொட்டாவியும் ஒரு மறிவினைக் காரியம்தான். மூளையின் களைப்பைத்தான் கொட்டாவி தெரிவிக்கின்றது என்ற விளக்கம். பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

தூக்கக் கலக்கத்தில் மூளையில் இரத்த ஓட்டம் மந்தப்பட்டு பிராண வாயு சப்ளை குறைபடுகின்றது. விழித்திருக்க வேண்டுமானால் மூளைக்கும் பிராணவாயு அதிகமாகப் போயாக வேண்டும். இதற்கு ஒரே வழி கொட்டாவி. நிறையக் காற்று உள்ளே புகுவதனால் இந்தக் காரியம் நடந்தேறுகிறது.

பயத்தினால் பீதி ஏற்படும்போதும் மறி வினைகள் நிகழ்கின்றன. முகத்தில் இருக்கும் இரத்தக் குழாய்கள் இறுகி முகம் வெளுத்துப் போகிறது.

அதிர்ச்சியான, கொடுமையான செய்தியைக் கேட்கும்பொழுதும் சங்கடமான நிலைமையைச் சந்திக்க நேரும்போதும் முகத்தின் இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் இந்தச் சூழ்நிலையில் இரத்தக் குழாய்கள் தளர்ந்து இரத்தம் குபுகுபுவென புகுந்து முகம் சிவந்து போகின்றது. சிவப்பு முகத்திலும் கழுத்திலும் மட்டும் ஏன் ஏற்படுகின்றது. உடல் முழுவதும் ஏன் ஏற்படுவதில்லை? யாருக்கும் தெரியாத ஒரு புதிர் இது. இவ்வாறே முகம் சிவப்பது வயது ஏறஏறக் குறைந்து போகின்றது. அல்லது மறைந்து விடுகின்றது. தும்மல், கொட்டாவி, நடுக்கம், முகம் சிவத்தல் போன்ற மறிவினைகளைக் கண்டு நாம் குழப்பமடையத் தேவையில்லை. உடல் தன்னைத்தானே கவனித்துக் கொள்ள முற்படுவதற்கு இவை அடிப்படையாகும்.
 

Comments