மைக்கேல் ஆகிய நான் | தினகரன் வாரமஞ்சரி

மைக்கேல் ஆகிய நான்

ஆரம்பித்தவுடன் சிவப்பு நிற டூ பீஸ் உடையில் கவர்ச்சியாக ஒரு பெண்ணுருவம் தோன்றும்.நீங்கள் உன்னிப்பாக கவனிப்பீர்களாயின்(அந்த உருவத்தையல்ல அது தோன்றும் விதத்தை) நீங்கள் தனியே இருக்கும் போது அவ்வுருவம் உடனே மறைந்து விடும். உங்களுடன் யாராவது இருக்கும் சந்தர்ப்பத்தில் அவ்வுருவம் மறைய சில நிமிடங்கள் நேரமெடுக்கும். அது உங்களையும் உங்களுடன் இருப்பவரையும் ஒரு சேர சங்கடத்திற்கு உட்படுத்திவிடும். ஒரு அமெரிக்க  நடிகை அந்த பெண் உருவம் தன் சாயலை ஒத்திருப்பதாகவும் ஆனால் அதை காட்சிப்படுத்த  தன்னிடம் அனுமதி பெறப்படவில்லை எனக் கூறி அந் நிறுவனத்திற்கு எதிராக வழக்குக் கூட தொடுத்திருந்தாராம். அதன் பின் இன்னொரு உருவம் தோன்றும் அது எனக்கு ஜேக்குளின் பிரணாண்டசை ஞாபகப்படுத்தும்.

நான் இப்போது பிரம்மாண்டமான இந்த நகரத்தில் உயர்ந்த கட்டடங்களை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். வித்தியாசமான பல வடிவங்களில் எத்தனை எத்தனையோ கட்டடங்கள்! சுழன்று வீசும் காற்றுக்கே ஆடையில் புழுதி அப்பிக் கொள்ளும் நிலையிலிருக்கும் ஒரு வறண்ட கிராமத்திலிருந்து வந்தவனுக்கு இத்தனை ஆண்டுகளின் பின்பும் இந்நகரம் இன்னும் பிரமிப்பை தந்து கொண்டு தானிருக்கிறது. நான் எனது காரில் ஏறி வீடு நோக்கி செல்லவிருக்கிறேன். இந்த பயண இடைவெளியில் நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். நான் மைக்கேல். அதாவது இப்போது நான் மைக்கேலாக இருக்கிறேன். என்னால் பிராங்கிளினாகவும் இருக்க முடியும். அல்லது இன்னும் கொஞ்சம் காலம் கழித்து ட்ரவராகவும் இருக்க முடியும்.

நான் மைக்கேலாக இருப்பதால் மைக்கேலாகிய எனது கதையை சொல்கிறேன். எனது கடந்த காலத்தில் நான் ஒரு திருடன், கொள்ளைக்காரன், கொலையாளி, கடத்தல்காரன். பணம் சம்பாதிப்பதற்காக அத்தனை அயோக்கியத் தனங்களையும் செய்த ஒருவன். சுமாராக ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதே போல ஒரு நாளில் நானும் ட்ரவரும் அவனது கூட்டாளி ஒருவனுமாய் சேர்ந்து ஒரு திட்டத்தைப் போட்டோம். பல மாதங்களாக படிப்படியாகப் போடப்பட்ட திட்டம் அது. அன்று தான் இறுதியான வடிவடிவத்தை பெற்று உறுதியானது. அதன்படி ஒரு வங்கியை கொள்ளையடித்துவிட்டு அதே ஊரில் பதுங்கியிருந்து பிரச்சினைகள் தீர்ந்த பிறகு தமக்குரிய பங்குகளை பிரித்துக் கொண்டு ஆளுக்கொரு திசையில் சென்றுவிடுவதே எங்கள் திட்டம். எனினும் எனக்கு திடீரென்று ஒரு யோசனை வந்தது. ட்ரவரும் அவன் கூட்டாளியும் அறியாத வகையில் எப்.ஐ.பீ அதிகாரி ஒருவரை சந்திக்கும் அவசியத்தை அவ் யோசனை எனக்கு ஏற்படுத்தி விட்டது.

அடுத்த நாள் எங்கள் கொள்ளை சம்பவம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. எனினும் வழியிலேயே எப்.ஐ.பீ அதிகாரிகள் எங்களை வளைத்துக் கொண்டனர். அவர்களின் முதல் தோட்டா ட்ரவரின் கூட்டாளியை சுட்டுக் கொன்றது. பின் அடுத்த தோட்டா என் வலது காலில் பாய்ந்தது. நான் ட்ரவரை பார்த்து 'ஓடி விடு' என கத்தினேன். கண நேரத்திற்குள் நடந்து கொண்டிருந்த அடுத்தடுத்த சம்பவங்களால் ட்ரவர் என்ன செய்வதென்று புரியாமல் நின்றிருந்தான். தன் முன்னால் இரையை வைத்துக் கொண்டு பாய்வதற்காக காத்துக் கொண்டிருக்கும் வேட்டை நாய்க்கு, அதன் உரிமையாளர் பிறப்பிக்கும் முதல் குரல் கொடுக்கும் உந்துதலைப் போல என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்த ட்ரவருக்கு நான் ஓடு என கத்தியது ஒரு வழியையும் ஏதோவொரு உந்துதலையும் தந்திருக்க வேண்டும். அவன் பணப் பையை அப்படியே கீழே போட்டு விட்டு ஓட்டெமெடுத்தான். அவனது கால்களே அவன் தலையில் மண்ணை வாரியிறைக்குமளவிற்கு காட்டுத் தனமாக ஓடினான். எப்.ஐ.பீ அதிகாரிகளும் அவன் பின்னாலேயே ஓடினர். பின் ஓரிரு நிமிடங்களில் ஒரு தோட்டா பாயும் சத்தம் கேட்டது. அதற்கடுத்த நிமிடத்தில் மீண்டும் ஒன்று. எல்லாம் முடிந்து விட்டது.

இரண்டு நாட்கள் கழித்து எனக்கும் இட்ரவரின் கூட்டாளிக்கும் இறுதி சடங்கு நடந்தது. ட்ரவர் உடம்பில் இரண்டு தோட்டக்களை வாங்கிக் கொண்டு தப்பித்திருந்தார். எப்.ஐ.பீ அதிகாரிகள் அவன் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை ஆனாலும் எல்லா இடமும் அவனை தேடி கொண்டு தானிருக்கிறோம் என்றனர். எனது கல்லறையில் நடப்படும் சிலுவையை நானே தூரமாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். பின் என் அடையாளத்தை மாற்றி கொண்டு கொள்ளையடித்த பணத்தையும் எடுத்துக் கொண்டு ஊரை விட்டு தூரமாய் இருக்கும் இந்த நகரத்திற்கு வந்துவிட்டேன்.

எப்.ஐ.பீ அதிகாரிகள் என்னுடன்  போட்டுக்கொண்ட உடன்படிக்கைக்கு நியாயமாக நடந்து கொள்ளவில்லை. மேலதிகமாக இன்னும் பணம் கேட்டனர். எனக்கும் கொடுப்பதை தவிர்த்து வேறு வழி இருக்கவில்லை. ட்ரவருக்கும் அவன் கூட்டாளிக்கும் பங்கு பிரித்து கொடுக்கும் பணத்தை விட இது எனக்கு எல்லா விதத்திலும் இலாபகாரமானது தான். எனினும் அவர்கள் ட்ரவரை தப்பி செல்ல விட்டுவிட்டார்கள். ட்ரவர் இப்போது ஒரு அடிபட்ட புலி. அவன் உயிருடன் இருந்தால், அவனுக்கு இந்த உண்மைகள் தெரிய வந்தால் நான் எங்கிருந்தாலும் தேடி வந்து பலி வாங்கி விடுவான். டர்வர் குறித்த இந்த அச்சம் மனதின் ஓரத்தில் எப்போதுமிருந்தாலும், அந்த அச்சத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் எதுவும் நடைபெறாமலிருந்தது கொஞ்சம் நிம்மதியை தந்தது.

இதோ இது தான் என் வீடு. கீழ் மாடியில் விசாலமான வரவேற்பறையும், சமயலறையும் மட்டும் தான்.மேல் மாடியில் நான்கு படுக்கையறைகள். ஒன்று எனக்கும் மனைவி அமென்டா வுக்கும். இன்னுமொன்றை மகனும் மற்றையதை மகளும் எடுத்துக் கொண்டனர். மிகுதியாக இருப்பது விருந்தாளிகள் யாராவது வந்தால் பயன்படுவது. அத்துடன் வீட்டிலேயே குடித்துக் கொள்வதற்காக ஒரு மினி பாரும் மேல் மாடியிலே உண்டு. முற்றத்தில் ஒரு பெரிய நீச்சல் குளம்.பக்கவாட்டில் பெரிய கராஜ் ஒன்றும் இருக்கிறது. நவீன வசதிகள் உள்ள  கொஞ்சம் ஆடம்பரமான வீடு தான். கொள்ளையடித்த அந்த பணத்தில் முதலாவதாக வாங்கிக்கொண்ட சொத்து இந்த வீடு.நான் காரை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைகிறேன்.

"அமென்டா"
"ஜிம்மி"
"ட்ரெசி"

வீட்டுக்குள் இருந்து எவ்வித பதிலுமில்லை. பெரும்பாலும் இந்த நேரத்தில் யாரும் வீட்டிலிருக்க மட்டார்கள். எனினும் ஏதோவொரு நம்பிக்கையில் குரல் கொடுத்தேன். சிகரட் ஒன்றை புகைத்துக் கொண்டே வெளியே வருகிறேன். அப்போது தான் வாசலில் இருந்த  இரண்டு டென்னிஸ் மட்டைகள் என் கண்ணில் பட்டன. ஒன்றன் மீது இன்னுமொன்றாக இரண்டு மட்டைகளும் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.

இளஞ்சிவப்பு நிறம் அமென்டாவுடையது. நீல நிறம் அமென்டாவின் பயிற்சியாளருடையது.என் மூளையில் ஏதோ ஒரு பொறி தட்டியது.வாயிலிருந்த சிகரைட்டை எடுத்து  எறிந்து விட்டு அமென்டா என கத்திக் கொண்டே படிகளில் ஏறி மேல் மாடி நோக்கி விரைகிறேன்.

தான் நினைத்தது சரி.நீண்ட நாட்களாக எனக்கு இருந்து வந்த சந்தேகமும் சரியாக இருந்தது. பூட்டப்பட்ட அறையின் கதவை மறைத்த வாறு அமென்டா நிற்கிறாள்.அவள் உடம்பை டவல் ஒன்று மட்டுமே சுத்திக் கொண்டிருக்கிறது. சரி தான் அவசரத்திற்கு இது மட்டும் தான் கிடைத்திருக்கிறது போலும். அமென்டா நடுங்கி கொண்டிருக்கிறாள். அவள் ஏதோ பேச வருகிறாள்.  எனினும் வார்த்தைகள் அவள் வாயை விட்டும் கீழிறங்கவில்லை.  அவள் பாதங்கள் கூட முழுமையாக தரையில் படவில்லை. இத்தனை வருடங்களில் பார்த்திராத ஏதோவொரு அழுத்தமான உணர்ச்சி அவள் முகமெங்கும் படர்ந்திருக்கிறது. நான் அவளை நெருங்குகிறேன். அவளை விலக்கி விட்டு கதவை திறக்க முயற்சிக்கிறேன். என் கை கதவின் பிடியிலிருக்கிறது.அவளது கை கதவின் பிடியிலிருக்கும் என் கையை பிடித்துக் கொண்டிருக்கிறது.உண்மையில் தடுத்துக் கொண்டிருக்கிறது. நான் அவளை பார்க்கிறேன். அவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நீ நினைப்பது போல் எதுவுமில்லை அவசரப்பட வேண்டாமென கெஞ்சும் குரலில் மெதுவாக பேசுகிறாள். நாள் அவளை முழுமையாக விலக்கி விட்டு அறைக் கதவை திறக்கிறேன்.

மீண்டுமொரு முறை நான் நினைத்தது சரியாக இருந்தது. உள்ளே நுழைந்த என்னைக் கண்ட மாத்திரத்தில் படுக்கையின் மேல் துள்ளி குதித்து அந்த டென்னிஸ் கோச் எழுந்து நிற்கிறான். எனக்கு உடம்பெல்லாம் பற்றிக் கொண்டு எரிந்தது. கட்டுக்கடங்காத கோபம்.என் கன்னங்கள் துடித்துக் கொண்டிருக்கிறது. நான் பழைய மைக்கேலாக மாறிக் கொண்டிருப்பதை உணர்கிறேன். என் கண்கள் இரத்தம் பார்க்க ஆசைப்படுகிறது.  என் நாசிக்கு குருதி நெடி தேவைப்படுகிறது.நான் கையை முறுக்கிக் கொண்டு அவன் மேல் பாய்கிறேன். அவன் "மிஸ்டர் மைக்கேல் நீங்கள் நினைப்பது போல் எதுவுமில்லை" என சொல்லிக் கொண்டு என்னை தடுக்கிறான்.

என் முழுப் பலத்தையும் வலது கையில் இறக்கி அந்த கையை அவன் நெஞ்சின் மீது இறக்கினேன். அமென்டா என்னைப் பிடித்துக் கொண்டு பின்னால் இழுக்க முயல்கிறாள். அந்த நேரத்தை பயன்படுத்தி அவன் பால்கனி வழியாக கீழே குதித்துவிட்டான். நான் உடனடியாக அறையை விட்டு வெளியேறி படிக்கட்டுகள் வழியாக கீழறங்கினேன். அமென்டாவும் பின்னாலேயே வந்து கொண்டிருந்தாள். வாசலிலேயே பிராங்க்ளின் நின்று கொண்டிருந்தான்.

"பிராங்கிளின் அந்த நாயை போய் பிடி"

பிராங்கிளின் பின்னால் திரும்பி பார்க்கிறான் ஆனால் அங்கு யாருமில்லை. வீதியில் ஒரு கார் வேகமெடுக்கும் சத்தம் மட்டும் கேட்கிறது. பிராங்கிளின் ஓடி வந்து கொண்டிருக்கும் என்னை பார்த்து "என்ன விஷயம் மைக்கேல்? ஏன் இப்படி கோபத்தோடிருக்கிறாய்? எனக் கேட்கிறான்.

"ஒன்றுமில்லை பிராங்கிளின். மைக்கேல் அவர் பார்த்ததை வைத்து தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்"

அமென்டா சொல்லி முடிப்பதற்கிடையில் நான் அவளை திரும்பிப் பார்த்தேன். நான் பார்த்த விதத்தில் அவள் பயந்து போய் இரண்டடி பின் வைத்தாள். நான் அவளை நோக்கி என் கையை உயர்த்தினேன். எனினும் என் மூளை இவளை விட்டு விடு பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் அவனைப் பிடி என்றது. என் வேட்டைக்கும் அந்த நாய் தான் தேவைப்பட்டது.

"பிராங்கிளின் நீ வருகிறாயா இல்லையா?"

நான் ஓடிச் சென்று காரில் ஏறினேன். பிராங்கிளினும் ஏறி கொண்டான். நான் காரில் வேகமெடுக்கிறேன்.

"யார் மைக்கேல் அது? என்ன தான் பிரச்சினை?"

"என்னிடம் கை நீட்டிக் சம்பளம் வாங்கும் நாய் அவன் இன்று என் அறைக்குள்ளேயே வந்துவிட்டான். இன்றைக்கு அவனை கொன்றால் தான் என் ஆத்திரம் அடங்கும்"

நான் காரின் வேகத்தை அதிகப்படுத்துகிறேன். என் வாயிலிருந்து தொடர்ந்து கெட்ட வார்த்தைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன.

அமென்டா இறுதியாக சொன்ன வார்த்தைகள் என் காதுக்குள்ளேயே ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை அவள் சொன்னது உண்மையாக இருக்குமோ?

அமென்டா குளித்து விட்டு அப்போது தான் வந்திருக்கலாம். அந்த கோச்சும் ஏதாவதொரு தேவைக்காக அறைக்குள் போயிருக்கலாம்.நான் தான் பார்த்ததைக் கொண்டும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறேனோ என்னவோ. எனினும் அதையெல்லாம் நிதானமாக யோசித்துப் பார்க்கும் நிலையில் நானுமில்லை.என் கோபமுமில்லை.

பிரங்கிளின் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன்.ஒரு கார் ஷோ ரூமில் வேலை பார்க்கிறான். வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.மாதாந்த கொடுப்பனவு சரியாக கட்டப்படாத கார்களை அதன் உரிமையாளர்களுக்கே தெரியாத வகையில் தூக்குவதில் கெட்டிக்காரன். அது போல ஒரு நாள் தான் என் வீட்டுக்கும், காரை கொண்டு போக வந்திருந்தான். அது என் மகனின் கார். அவன் ஒரு சோம்பேறி. வீடியோ கேம்ஸ் மட்டும் தான் அவன் உலகம். இந்த வயதில் நானெல்லாம் கை நிறைய சம்பாதிக்கவே ஆரம்பித்து விட்டிருந்தேன்.

பிராங்கிளின் பதுங்கி பதுங்கி வருவதை கண்ட நான் அவனை திருடன் என்று தான் நினைத்தேன். அதனால் கை துப்பாக்கியொன்றை எடுத்துக் கொண்டு காரின் பின் பக்க சீட்டில் பதுங்கி கொண்டேன். பிராங்கிளின் சத்தமேயில்லாமல் காரை வீதிக்கு இறக்கினான். பின் வேகமெடுத்தான். நான் திடீரென எழுந்து அவன் பின் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தினேன். அவன் பயந்து போனான். பின்னர் அவன், தான் இப்படி கார் ஷோ ரூமில் வேலை செய்வதாகவும் அவனது முதலாளி தான் காரை எடுத்துக் கொண்டு வரச் சொன்னதாகவும் கூறினான். எனக்கு கட்டுங்கடங்காத கோபம் வந்தது. ஏனெனில் முந்தைய நாள் தான் நான் முழுத் தொகையையுமே செலுத்தி விட்டு வந்திருந்தேன். நான் பிராங்கிளினை இந்த காரைக் கொண்டும் அந்த ஷோ ரூமை இடிக்க சொன்னேன். முதலில் முடியாதென்றான். பின் என்னிடம் துப்பாகியிருப்பதை நினைவு படுத்தியவுடன் சம்மதித்துவிட்டான். ஷோ ரூமின் கண்ணாடிகள் எல்லாம் நொறுங்கிச் சிதறியது. அவன் வேலையும் பறி போனது.

அடுத்த நாள் பிராங்கிளின் என்னைப் பார்க்க வந்திருந்தான். வேலை போய் விட்டதாகவும் என்னிடம் ஏதாவது வேலை இருந்தால் தருமாறு கூறினான். அந்த கணம் எனக்கும் அவனை பிடித்து விட்டது. நான் அவனை சேர்த்துக் கொண்டேன். ஒன்றாக சேர்ந்து பல சாகச வேலைகள் செய்தோம். ஒரு கடத்தல் கும்பலிடமிருந்து என் உருப்படாத மகன் ஜிம்மியை அவன் தான் காப்பாற்றினான். நாங்களிருவரும் நல்ல நண்பர்களாகவும் மாறிப் போனோம்.

அந்த கோச்சின் கார் ஒரு பாழடைந்த வீதியில் ஒரு பாறையின் அடிவாரத்தின் கீழிருந்தது. காரின் கதவைக் கூட ஒழுங்காக மூடாமல் ஓடிப் போயிருந்தான். பேடிப்பயல்.நானும் காரை நிறுத்தினேன்.இருவரும் இறங்கி அவனை தேடினோம்.
"மிஸ்டர் மைக்கேல்"

அந்த பாறையின் மீது ஒரு வீடிருந்தது.பாறையின் மேலாக இருக்கும் அந்த வீட்டின் முன் பகுதியை தரையோடு தொடர்பிலிருக்கும் இரு இரும்புத் தூண்கள் தாங்கி கொண்டிருந்தது. அங்கிருந்து தான் அந்த கோச் என்னை கூப்பிட்டான்.

"மரியாதையாக கீழிறங்கி வா. உன்னை கொல்லாமல் இங்கிருந்து நான் போவதாயில்லை."

"மிஸ்டர் மைக்கேல். நீங்கள் கோபத்தில் தவறாக புரிந்து கொண்டிருகிருக்கிறீர்கள். உங்கள் கோபம் அடங்கட்டும் அதன் பிறகு பேசுவோம்"

நாங்கள் இருவரும் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பிராங்கிளின் காரிருக்கும் கயிற்றின் மறுமுனையை அந்த இரும்புத் தூணோடு சேர்த்து பிணைத்துக் கொண்டிருந்தான்.

"மைக்கேல் தயாராகி விட்டது" பிராங்கிளின் குரல் கொடுத்தான்.
நான் காரில் சென்று அமர்ந்து காரை முன்னோக்கி செலுத்தினேன். கார் நகர மறுத்தது. எனினும் நான் விடுவதாயில்லை. என் கால் எக்சிலேட்டரிலிருந்து இம்மியளவும்  நகரவேயில்லை. இறுதியாக வெற்றி கிடைத்தது. தூண் உடைந்தது. வீட்டின் முன் பகுதி அப்படியே பாறையிருந்து வழுக்கிக் கொண்டு வந்து உடைந்து விழுந்தது. பிரங்கிளின் சந்தோசத்தில் உரக்க கூச்சலிட்டான்.

"அவனை என்ன செய்வது"

"எப்படியும் ஒரு நாள் அந்த கோச் என் கையில் கிடைக்காமலா போய் விடுவான்.அப்போது பார்த்துக் கொள்ளலாம்."

பின் நாங்களிருவரும் வீட்டுக்கு வந்தோம். வரும் போது கோபத்தில் பாதையில் இருக்கும் எல்லாவற்றையும் இடித்துத் தள்ளிக்கொண்டு வந்தேன். நடைபாதையில் இருந்த இரண்டு பேர் மேல் கூட காரை ஏற்றினேன்.

எங்கள் பின்னாலேயே ஒரு கார் வந்து வீட்டு வாசலில் நின்றது.கோட் ஷூட் போட்ட ஒருவனும் கூடவே அவனது அடியாட்களும் இறங்கினர். எல்லோருடைய கையிலும் துப்பாக்கி.

"நான் யாரென தெரியுமா?"

அந்த கோட் அணிந்திருந்தவன் கேட்டுக் கொண்டே அவன் அடியாளின் கையிலிருந்த தடியை வாங்கினான்.

"இருவரில் யாருக்காவது என்னை யாரென தெரியுமா?" அவன் கத்திக் கொண்டே முன் நோக்கி வந்தான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் அவன் அடக்க முடியாத  கோபத்தின் உச்சி நிலையிருக்கிறான் என்பது மட்டும் நன்றாக புரிந்தது.

"எனக்குத் தெரியும்" பிராங்கிளின் சொன்னான்.

"மைக்கேல் இது தான் மார்ட்டின் மட்ரோசோ"

"அப்படி என்றால் நான் யாரென்று தெரிந்து கொண்டே தான் என் வீட்டை உடைத்துத் தள்ளியிருக்கிறீர்கள்" அவன் கத்தினான்.

"உன் வீடா? அது அந்த கோச்சின் வீடு தானே"

அவன் தன் கையில் வைத்திருந்த தடியை பயன்படுத்தினான். என் மீது சரமாரியாக அடி விழுந்தது. நான் கீழே விழுந்தேன்.

"கோச்சின் வீடா? மாத மாதம் சம்பளம் வாங்கும் அந்த நாய் அப்படியொரு வீட்டை கட்டுவானா? அதுவும் ஒரு பாறையின் மீது"
என் முகத்திற்கு நேரே கத்திக் கொண்டிருந்தான்.பின் பிராங்கிளினைப் பார்த்தான்.
"உனக்கு நான் யாரென தெரியும் தானே? உன் கூட்டாளிக்கு என்னைப்பற்றி எடுத்துச் சொல்லி இரண்டு நாட்களுக்குள் சேதாரமான வீட்டுக்கு பணத்தை கொண்டு வந்து தரச் சொல்லு. புரிகிறதா?"

அவன் தடியை என் மீது வீசி எறிந்தான். பின் காரிலேறி வேண்டுமென்றே என் காரை இடித்துத் தள்ளி விட்டு போனான்.

பிராங்கிளின் என்னை தூக்கிவிட்டான்.

"இப்போ என்ன செய்வது மைக்கேல். அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது"

நான் சிறிது நேரம் யோசிக்கிறேன்.

"பிராங்கிளின் உனக்கு கொள்ளையடித்த ஏதாவதொரு அனுபவம் இருக்கிறதா?"

ஆமாம் நான் இப்போது மறுபடியும் கொள்ளையடிக்கப் போகிறேன். இந்த கொள்ளை சம்பவம் எங்கேயோ கண் காணாத தூரத்திலிருக்கும் ட்ரவரை உசுப்பி என்னைத் தேடி வர வைக்கப் போகிறது. ஒரு பக்கம்  இந்த மார்ட்டின் மட்ரோசோ. மறுபக்கம் எப்.ஐ.பீ. போதாததற்கு ட்ரவர் என்று நான் எல்லா பக்கமும் மாட்டிக் கொள்ளப்போகிறேன். இனிமேல் தான் என் கதையே ஆரம்பிக்கப் போகிறது. எனினும்...

வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்கிறது. நிச்சயமாக அது அப்பாவாகத் தான் இருக்கும்.
என்னை இந்த கோலத்தில் கண்டாரென்றால் "இதை தூக்கிப் போட்டுவிட்டு வேறு உருப்படியான வேலை இருந்தால் பாரு" என திட்டத் துவங்கி விடுவார். நான் உடனடியாக விளையாடிக் கொண்டிருந்த கேமிலிருந்து வெளியேறி கணனியை சட்டவுன் செய்து விடுகிறேன்.

பாஹிம் எம்.பரிட்

Comments