தமிழகத்தில் 'சிஸ்ட' த்தை மாற்ற முனையும் ஸ்டாலின் | தினகரன் வாரமஞ்சரி

தமிழகத்தில் 'சிஸ்ட' த்தை மாற்ற முனையும் ஸ்டாலின்

ஒரு மாநிலத்துக்கு இருக்கும் அதிகாரங்களை தமிழக முதல்வர் மிகவும் நேர்த்தியாக கையாள்கிறார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று ஆளுநர் மாளிகையில் ஒலித்த அந்த கம்பீர குரலின் அதிர்வுகள் அடுத்தடுத்தது தமிழகத்தில் அரங்கேறுவதை தமிழர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றார்கள்.

சில ஆண்டுகளாகவே சூப்பர் ஸ்டார் ரஜினி சிஸ்டம் தமிழகத்தில் சரியில்லை என்று தமிழகத்தை விமர்சித்து வந்தார்.

சீமான் ஒருபடி மேலே போய் தமிழகத்தின் அனைத்து அரசியல் சட்டங்களையும் மாற்றி புதிய தமிழகம் உருவாக்குவேன் என்று தடாலடி பிரச்சாரங்களை செய்து வந்தார்.

இப்போது அதற்கெல்லாம் மாற்றாக தமிழகத்தின் சிஸ்டத்தையே முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிதாக மாற்றி அமைப்பதில் ஈடுபட்டிருப்பது போலத் தெரிகிறது. அவரது நடவடிக்கைகளை கவனிக்கும்போது.

1ம் நாளில் வார் ரூம்,
2ம் நாளில் மாநில ஓக்சிஜன்
3ம் நாளில் சித்தா மையம்
4ம் நாளில் தடுப்பூசி இறக்குமதிக்கு உத்தரவு
5ம் நாளில் நல திட்டங்கள்

என்று ஐந்தாண்டுகால வேலைத் திட்டங்களை ஐந்து நாளில் முடித்திருப்பது, தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை அது உருவாக்கியிருப்பதாக அரசியல் விமர்சகர்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

அண்ணாத்துரைக்குப் பின்னர் தமிழக அரசியலில் ஆட்சிக்கு வந்தவர்கள் எவரும் எதிர் கட்சிகளுடன் நல்லுறவை வைத்திருந்தது இல்லை, பகைமையோடு இரு துருவங்களாகவே இருந்திருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் கலைஞர் செய்ததை எதையும் அவர் அனுமதிக்கவில்லை. கலைஞர் சகல வசதிகளுடனும் சென்னை ஓமந்தூரில் அமைத்த சட்ட மன்றத்தில் தான்; அமரக்கூடாது என்பதால் பழைய தலைமை செயலகமான ஜோர்ஜ் கோட்டைக்கு சட்டமன்றத்தை மாற்றியவரே ஜெயலலிதா.

இப்போதும் தலைமைச் செயலகம் ஜோர்ஜ் கோட்டையிலேயேதான் இயங்கி வருகிறது. ஜெயாவின் ஆட்சியில் நீண்ட காலமாக கைவிடப்பட்டு கிடந்த புதிய சட்டமன்ற வளாகம் பிறகு அரசு மருத்துவமனையாக மாற்றம் பெற்றது.

கலைஞரினால் நவீன முறையில் கட்டப்பட்ட பிரமாண்ட நூலகமான அண்ணா நூலகம் கலைஞரின் ஆட்சியில் கட்டப்பட்ட ஒரே காரணத்தினால் அந்த கட்டடமும் பராமறிப்பில்லாம் கைவிடப்பட்டு மாடுகள் படுத்து உறங்கும் தொழுவங்களாக மாறிப் போன அவலமும் நிகழ்ந்ததை நாம் அறிவோம்.

அதோடு பழைய பாடத்திட்டங்களை மாற்றியமைத்து புதிய கல்வியை சமச்சீர் கல்வியாக கலைஞர் கருணாநிதி மாற்றியமைத்ததை பொறுக்காத செல்வி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தப்பின் அந்த கல்வித் திட்டத்தை தடை செய்வதில் முனைப்பு காட்டினார்.

ஆனாலும் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு சமச்சீர் கல்விக்கு ஆதரவாக வரவே ஜெயலலிதாவால் அந்த சமச்சீர் கல்வியை மட்டும் மாற்றியமைக்க முடியாமல் போய்விட்டது.

தமிழக அரசியல் என்றால் அது இப்படித்தான் இருக்கும் என்பதற்கு நான் மேலே சொன்ன காரணங்கள் சிலவற்றை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தமிழகத்தின் இந்த அரசியல் ‘பாரம்பரிய’த்தை ஸ்டாலின் தகர்த்து எறிந்திருக்கிறார்.

அவரின் பதவியேற்பு விழாவின் முதல் நாளிலேயே தமது அரசியல் நாகரிகத்தை அவர் வெளிப்படுத்தியிரருந்தார். சீமான் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஸ்டாலினின் இந்த நல்ல பண்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது டுவிட்டர் தளத்தில் பாராட்டி வரவேற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதோடு ஸ்டாலின் முதல்வர் ஆனதும் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து டுவீட்டரில் போட்ட பதிவுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்ததோடு,

தமிழக அரசுக்கு ஆலோசனைகளையும் வழங்குமாறு அவர் கேட்டிருப்பது பலராலும் பாராட்டைப் பெற்றிருப்பதையும் தமிழக அரசியலில் மாற்றத்திற்கான புதிய அத்தியாயத்தை அது உருவாக்கியிருப்பதையும் காண முடிகிறது.

அதற்கு பிறகு நடைபெற்ற முதலாவது அனைத்துக் கட்சி கூட்டத்தில் தம்மை தேர்தல் மேடைகளில் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசிய அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கூட்டம் நடைபெற்ற அந்த பிரமாண்ட அரங்கில் அவர் இருக்கும் இடத்திற்கே மு.க.ஸ்டாலின் சென்று அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஆச்சியமாகவே நோக்கப்பட்டது.

இது தவிர ஸ்டாலினின் வெற்றியை கொண்டாடிய தி.மு. தொண்டர்கள் அம்மா உணவகத்தை அடித்து, உடைத்ததிற்கு உடனடியாக கண்டனத்தை தெரிவித்த ஸ்டாலின் உடைக்கப்பட்ட அம்மா உணவத்தின் சேதங்களை உடனடியாக சரி செய்து கொடுத்ததுமில்லாமல், அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க தொண்டர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். அதோடு அம்மா உணவகங்கள் அந்தப் பெயரிலேயே செயல்படும் என்று முதல்வர் கூறியிருப்பது. எதிர்கட்சியான அ.தி.மு.க பிரமுகர்களாலும் அதன் ஆதரவாளர்களாலும் இன்று வரை நம்ப முடியாத விடயமாகவே பார்க்கப்படுகிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அம்மாவின் அனைத்து திட்டங்களும், பெயர்களும் அடியோடு மாற்றம் பெறும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

ஜெயலலிதாவின் திட்டங்களை தடுப்பதில் தேவையில்லாமல் நேரத்தை ஏன் செலவழிக்க வேண்டும் என்று எண்ணிய ஸ்டாலின், தமது கவனத்தை தமிழகத்தின் வளர்ச்சியிலும் கொரோனா ஒழிப்பிலும் செலுத்தி வருகிறார்.

தினமும் அவரின் இல்லத்திலும் தலைமை செயலகத்திலும் அவசர ஆலோசனைகள் நடத்தப்பட்டு அதிரடி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

வெளிநாடுகளிலிருந்து 5கோடி தடுப்பூசிகளை தமிழகத்துக்கு நேரிடையாக இறக்குமதி செய்வது, மற்றும் நெதர்லாந்து, சீனாவிடமிருந்து பெருந்தொகையான ஒக்சிஜனை இறக்குமதி செய்திருப்பது, உள்ளிட்ட விடயங்கள் தமிழக அரசியலுக்கு முன்மாதிரியாகவும் முதலாவதாகவும் அமைந்திருக்கிறது.

முக்கியமாக, உயிர்வாயு, தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளதுடன், தயாராக உள்ள நிறுவனங்களிடமிருந்து
TIDCO நிறுவனம் விருப்பக் கருத்துகளைப் பெற்று ஆலைகளை அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்கவுள்ளது. இந்த செயல்பாடுகளின் மூலம் தமிழகம் தன்னிறைவு அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினின் அதிரடி அறிவிப்புகள் தமிழகம், தனி மாநிலமா, அல்லது தனி நாடா என்று நெட்டிசன்கள் வலைத்தளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். ஒரு மாநிலத்துக்கு இருக்கும் அதிகாரங்களை தமிழக முதல்வர் மிகவும் நேர்த்தியாக கையாள்கிறார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.
முதல்வரின் இந்தப் பெரும் பணிகளுக்கு மத்தியில் சாமானியர்களுடன் அவர் வலைத்தளங்களின் வழியாக உரையாடவும் செய்கிறார்.

சமீபத்தில் மருத்துவமனை செவிலியர்களுடன் அவர் காணொலி வழியாக பேசியதும், சைக்கில் வாங்குவதற்காக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ஆயிரம் ரூபாவை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியதற்காக அந்த சிறுவனுக்கு புது சைக்கிள் வாங்கிக் கொடுத்து அவனுடன் தொைலபேசி வழியாக முதல்வர் பேசிய நிகழ்வு வைரலாக இப்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

நாம் தமிழர் சீமானின் தந்தை செந்தமிழனின் மரணத்தின் போது முதல்வர் ஸ்டாலின் “நான் உங்களோடு இருக்கின்றேன், நீங்கள் தைரியமாக இருங்கள்.” என்று சொன்னதை தொலைபேசி வழியாக கேட்ட சீமான் மனம் உடைந்து அழுதார்.

“நீங்கள் எங்களோடு இருப்பது எனக்கு பலமாகவும், பெருமையாகவும் இருக்குது”ன்னு சீமான் தழுதழுத்த குரலில் பேசி கதறி அழுதது பார்ப்போரின் மனதை உருக்குவதாக அமைந்திருந்தது.

சீமான் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலினை மட்டமாக விமர்சித்து வந்திருக்கும் நிலையில் முதல்வர் சீமானுடன் அன்பாக உரையாடியது தமிழக அரசியலுக்கு புதிய பண்பாட்டை அடையாளம் காட்டியிருக்கிறது.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கிய உதயநிதி ஸ்டாலினிடம் சீமான் பற்றி சொல்லுங்களேன் என்றதும், முகமெல்லாம் சிரிப்பாக “அவரு மேலே எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு. எங்கே கண்டாலும் அண்ணே எப்படி இருக்கீங்க உடம்ப பார்த்துக்கங்க ரொம்ப ஆவேசப்படாதீங்கன்னு சொல்லுவேன், அதற்கு அவரும் என்னை அன்பாக தம்பின்னு பேசி நலம் விசாரிப்பாரு. என்ன மேடையில மைக்கை பார்த்ததும் கொஞ்சம் ஆவேசப்பட்டு பேசுறாரு சில நேரம் எங்களை அவதூராகவும் பேசிடுறாரு. என்னப் பண்ணுறது அது அவரு இயல்பு.

ஆனாலும் நான் அவரு மேல ரொம்ப பாசமும், மரியாதையும் வைத்திருக்கிறேன்” என்று உதயநிதி சொல்வதையும் நாம் கவனிக்க வேண்டும். உதயநிதியின் தந்தை தமிழகத்தின் முதல்வர்.உண்மையை சொல்லப்போனால் அந்த மண்ணின் மன்னர் அவர்தான். ஆனால் உதயநிதியிடம் அந்த கர்வம், திமிர், வெட்டிப்பந்தா என்று எதுவுமே இல்லை. இந்த விடயம் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இப்படியான பண்பாடுகளை பெரியாரின் நீட்சியாக வந்த கட்சியில் பார்ப்பது ஆச்சரியமில்லைதான்.

இந்திய மாநிலங்களில் விளம்பரங்களுக்கு ரொம்பவும் பெயர்போன மாநிலம் என்றால் அது தமிழகம்தான்

பிறப்பு, இறப்பு. என்று தொடங்கி காதுகுத்து, கல்யாணம், ஆத்தாவுக்கு கூல் ஊற்றுவது என்று அனைத்துக்கும், தலைவரின் நல்லாசியுடன் என்று தொடங்கும் விளம்பர தட்டிகளை தமிழகத்தின் தெருக்களில் ஆங்காங்கே பார்க்கலாம். அரசியல் விளம்பரங்களும் அப்படிதான். மக்களுக்கு வழங்கும் நிவாரண பொருட்கள், பொதிகள் என்று அனைத்திலும் தலைவர் படம் அச்சிடப்பட்டே வழங்கப்படுவது மரபாகவே அங்கே உள்ளது. கொரோனா நிவாரண பொருட்களின் மீது மோடி படம் ஓட்டப்பட்டிருப்பதாக செய்தி வந்தது சமீபத்தில்.

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் முதல் தவணை நிவாரணத் தொகைக்கான 2000 ரூபாவுக்கான டோக்கன் சீட்டு வழங்கப்பட்டு, தற்போது நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நிவாரண தொகைக்கான டோக்கன் சீட்டில் ஜெயலலிதாவின் படமும், எடப்பாடியின் படமும் அச்சிடப்பட்டிருந்த நிலையில் தற்போது வழங்கப்பட்ட டோக்கன் சீட்டில் முதல்வரின் படமோ, கட்சியின் சின்னமோ இல்லாமல் தமிழ்நாடு அரசின் கோபுர இலட்சினை மட்டுமே அச்சிடப்பட்டு,

“நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம்

தொற்றிலிருந்து தமிழகத்தை மீட்போம்”

மாண்புமிகு தமிழக முதலமைச்சர். என்று மட்டுமே அச்சிடப்பட்டிருப்பது தமிழகத்து புதுசு! தொடரும் புதிய ஆட்சியை பார்க்கும் போது இனி யாரும் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று சொல்ல முடியாது.

மணி ஸ்ரீகாந்தன்

Comments