91 மேலதிக வாக்குகளால் நிறைவேறிய சட்டமூலம் | தினகரன் வாரமஞ்சரி

91 மேலதிக வாக்குகளால் நிறைவேறிய சட்டமூலம்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொவிட்-19 தொற்றாளர்கள், பயணக் கட்டுப்பாடுகள், அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களே அழைக்கப்பட்டுள்ளமை என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமூலத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் பல முன்வைக்கப்பட்டிருந்தாலும், எந்தவித சலனமும் இன்றி பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக 19 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பில் சுமார் நான்கு நாட்கள் விசாரணைகள் நடைபெற்று, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பத்தின் போது சபாநாயகர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்தார்.

இதற்கு அமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் எட்டு சரத்துக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிகள் அரசியலமைப்புக்கு இணங்கவில்லையெனச் சுட்டிக் காட்டியிருந்த உயர் நீதிமன்றம், அவ்வாறான முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தது.

எட்டுப் பக்கங்களைக் கொண்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பில், 57ஆம் பக்கத்திலிருந்து 62ஆம் பக்கம் வரையான பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்த சரத்துக்களில் சேர்க்கப்பட வேண்டிய திருத்தங்கள் பற்றிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குறித்த பரிந்துரைகளுக்கு அமைய திருத்தங்கள் செய்யப்படுமாயின், அதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும், இல்லாவிட்டால் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், மூன்று சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு செவிசாய்த்து அரசியலமைப்புடன் முரண்படாத வகையில் திருத்தங்களைக் கொண்டு வரும் நிலைப்பாட்டை அரசு எடுத்தது.

பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க முன்னர் அது சம்பந்தப்பட்ட அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அல்லது தொடர்புபட்ட பாராளுமன்றக் குழுவொன்றில் அனுமதிக்கப்பட வேண்டும். அந்த வகையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 18ஆம் திகதி நடைபெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கு அங்கீகரிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய திருத்தங்களை முன்வைப்பதே பொருத்தமானது என பிரதமர் கூறியதும், குறித்த குழு அதற்கு இணக்கம் தெரிவித்தது. அது மாத்திரமன்றி அன்றைய தினம் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய திருத்தங்களை முன்வைக்க இணக்கம் காணப்பட்டது.

இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே கடந்த வாரம் 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது. (அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது முதலாவது வாசிப்பு என்றும், குறித்த சட்டமூலம் சபையில் விவாதிக்கப்படுவது இரண்டாவது வாசிப்பு என்றும் அர்த்தப்படும்)
ஆளும் தரப்பு எதிர்த் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சூடான வாதப்பிரதிவாதங்கள் இரு தினங்களும் இடம்பெற்றிருந்தன. வழமை போன்று ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்த போதும், கொழும்பு துறைமுக நகரத்தினால் நாட்டின் இறைமைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குறித்த சட்டமூலத்தினால் துறைமுக நகரம் இலங்கையின் ஒரு பகுதியில்லையென்று ஆகிவிடாது  எனவும் அமைச்சர்கள் பலரும் ஆணித்தரமாகக் கூறினர்.
இருந்த போதும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இலங்கை சீனாவின் கொலனியாகிறது போன்ற வழமையான எதிர்ப்பு அரசியல் கருத்துக்களையே முன்வைத்திருந்தார்கள்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் 20ஆம் திகதி 4.30 மணிக்கு முடிவடைந்ததும் அதனை நிறைவேற்ற வாக்கெடுப்புத் தேவையா என சபாநாயகர் கோரினார்.

பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, வாக்கெடுப்புத் தேவையில்லை எனினும், தமது எதிர்ப்பினைக் குறிப்பிட்டுக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொண்டது.

இருந்த போதும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வாக்கெடுப்புக் கோரினார். இதற்கமைய இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் பதிவாகியிருப்பதால், 89 மேலதிக வாக்குகளால் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார்.

அதன் பின்னர் திருத்தங்களை முன்வைப்பதற்காக பாராளுமன்றம் குழு நிலைக்குச் சென்றது. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய அரசாங்கத்தின் சார்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி திருத்தங்களை முன்வைத்தார்.

குழு நிலையின் போது எதிர்க் கட்சியின் சார்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா 08 திருத்தங்களை முன்வைத்திருந்த போதும் அவை நீதி அமைச்சரினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஒரு சில திருத்தங்களுக்கு ஹர்ஷ டி. சில்வா தனித்தனியான வாக்கெடுப்பைக் கோரியிருந்தார். இதில் அவருக்கு தோல்வியே கிடைத்திருந்தது.

அத்துடன், அரசாங்கம் கொண்டு வந்த திருத்தங்களுக்குத் தமது எதிர்ப்பினைப் பதிவு செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். திருத்தங்கள் யாவும் நிறைவேற்றப்பட்டதும், மூன்றாவது வாசிப்பு மீது மீண்டும் விஜித ஹேரத் வாக்கெடுப்பைக் கோரினார். இதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 149 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டு 91 மேதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்படுகிறது என சபாநாயகர் அறிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் அரசியலமைப்புக்கு முரண் அற்ற வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு சாதாரண பெரும்பான்மையுடன் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

எனினும், வாக்கெடுப்பில் தவறு இழைக்கப்பட்டிருப்பதாக ஆளும் தரப்பினர் குற்றஞ் சாட்டியுள்ளனர். குறித்த சட்டமூலத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்ற போதும் வாக்களித்த இரு ஆளும் கட்சி உறுப்பினர்களின் வாக்குகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லையென குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயரட்ன ஹேரத் ஆகியோரின் வாக்குகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என ஆளும் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சபையில் இருந்து சட்டமூலத்துக்கு ஆதரவாக தனது வாக்கைப் பதிவு செய்த போதும் அது வாக்கெடுப்பு எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லையென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது என்பதை மூடி முறைப்பதற்கு திட்டமிட்டு சதி செய்யப்படுகிறதா என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாஹர காரியவசம் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் சபாநாயகரிடம் முறையிட்டிருப்பதாகவும், விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

குறித்த சட்டமூலத்துக்கு ஆளும் தரப்பு உறுப்பினர்களுடன், ரிஷாட் பதியுதீனின் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமும் வாக்கெடுப்பின் போது சபையில் சமுகமளித்திருக்கவில்லை.

இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் ஆகியோர் சுகவீனம் காரணமாக சபைக்கு வரவில்லை என்பதுடன், குறித்த சட்டமூலத்தை ஆரம்பம் முதல் எதிர்த்த விஜயதாச ராஜபக்ஷ எம்பியும் வாக்கெடுப்புக்கு வரவில்லை.

இது இவ்விதமிருக்க வாக்கெடுப்பில் ஏதேனும் குழறுபடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு இரு குழுக்களை நியமித்திருப்பதாக சாபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். ஓய்வு பெற்ற பாராளுமன்ற செயலாளர் நாயகம் தலைமையிலான குழு இந்த விசாரணைகளை மேற்கொள்ளும் என்றும் சபாநாயகர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறு இடம்பெற்றுள்ளதா என்பதை இந்தக் குழுவின் விசாரணைகளில் அறிந்து கொள்ள முடியும்.

பாராளுமன்றத்தில் இடம்பெறும் இலத்திரனியல் வாக்கெடுப்பைப் பொறுத்த வரையில் சகல உறுப்பினர்களின் மேசையிலும் கைவிரல் அடையாளத்தை இரகசியக் குறியீடாகக் கொண்டு வாக்களிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நடத்தப்படும் போது உறுப்பினர்கள் தமது கைவிரல் அடையாளத்தைப் பதிவு செய்து தமது வாக்குகளை அளிக்க முடியும்.

ஒவ்வொரு உறுப்பினரும் தமது வாக்குகளைப் பதிவு செய்யும் போது அது சபையில் உள்ள பெரிய திரையில் காண்பிக்கப்படும். சில உறுப்பினர்களின் கைவிரல் அடையாளம் முறையாகப் பதிவு செய்யப்படா விட்டாலும் அது பெரிய திரையில் தெரியும். அவ்வாறான உறுப்பினர்கள் வாய்மூலம் தமது தெரிவு என்ன என்பதை சபையில் தெரியப்படுத்துவதே வழமையாகும்.

Comments