எரிந்த கப்பலும் எரிகின்ற பிரச்சினைகளும் | தினகரன் வாரமஞ்சரி

எரிந்த கப்பலும் எரிகின்ற பிரச்சினைகளும்

கொவிட் பெருந்தொற்று அடுத்து வரும் 15 தினங்களில் உச்சத்தை எட்டலாம் என்ற பின்புலத்தில், நாம் இப்போது கொழும்பு–நீர்கொழும்பு கடற்பரப்பில் மோசமான ‘கடல்–வளி சூழல் மாசை எதிர்கொண்டிருக்கிறோம். மத்தளத்துக்கு இரு பக்கத்தாலும் அடி என்பது போல இலங்கை இச் சோதனைகளையும் வெற்றிகரமாகவும் குறைந்த சேதாரங்களுடனும் கடந்து செல்ல வேண்டியிருக்கும். 

குஜராத்தின் ஹாஸினா துறைமுகத்தில் இருந்து இறுதியாக புறப்பட்டு வந்து எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற பெயர் கொண்ட சிங்கப்பூர் கொடி தாங்கிய இந்த கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குள் நுழைவதற்காகக் காத்திருந்த போது தான் கப்பலில் தீப்பிடித்துக் கொண்டது. மொத்தமாக ஆயிரத்து 486 கொள்கலன்களை சுமந்து கொண்டிருந்த இக்கப்பலில் 25 மாலுமிகள்–இந்தியர், சீனர், ரஷ்யர் பணியாற்றி வந்தனர். துறைமுகத்தில் இருந்து 18 மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்தபோதே கடந்த 19ம் திகதி கப்பலின் நடுப்பகுதியில் புகை வருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடலோர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, கடலோர பாதுகாப்பு பிரிவு, கடற்படை என சம்பந்தப்பட்ட கடல்சார் பிரிவினர் கப்பலை அண்மித்து தீயை கட்டுப்படுத்த முனைந்தபோது அது சாத்தியம் போலவே தென்பட்டது. கடந்த செப்டம்பரில் நியூடயமன்ட் என்ற பாரிய எண்ணெய் தாங்கிக் கப்பலில் தீப்பிடித்தபோது அக் கப்பலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல மில்லியன் பரல் எண்ணெய் கடலில் கொட்டிவிடுமா? என்ற நடவடிக்கைகள் இறுதியில் வெற்றியளித்து, கப்பல் காப்பாற்றப்பட்டது. இலங்கை எதிர் கொண்டிருக்கக்கூடிய பெரும் கடல் சூழல் மாசு தவிர்க்கப்பட்டது.

அது போலவே இதுவும் கடந்து போகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இருபதாம் திகதியின் பின்னர் தீ வேகம் பிடித்து கப்பலெங்கும் பரவத் தொடங்கியது. இக் கப்பலில் பிளாஸ்டிக் மற்றும் அழகுசாதன பொருட்கள் இருப்பதாக முதலில் வெளியான செய்திகள் ஆறுதல் அளிப்பனவாக இருந்தாலும் பின்னர் 25 தொன் நைட்ரிக் அஸிட் மற்றும் அழகு சாதானங்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்கள் கொள்கலன்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் வெளியான தகவல்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளன. கப்பல் தற்போது முற்றிலுமாக எரிந்து போய்விட்டது. மாலுமிகள் மீட்கப்பட்டுவிட்டனர். பல கொள்கலன்கள் எரிந்த நிலையில் கடலில் வீழ்ந்துவிட்டன. கப்பலின் மேல்தளம் எரிந்து முடிந்த பின்னர் கப்பல் தொடர்ந்தும் மிதக்குமா அல்லது மூழ்கிவிடுமா என்பது தெரியவில்லை. கடந்த வெள்ளிவரையில் எண்ணெய் கசிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரியவரவில்லை. கப்பலில் 325 தொன் பாவனைக்கான எண்ணெய் உள்ளது. கப்பல் மூழ்குமானால் அல்லது அதிக வெப்பம் காரணமாக இரண்டாக பிளக்குமானால் நாம் ஏற்கனவே சந்தித்துக் கொண்டிருக்கிற கொவிட் தொற்று, முடக்கப்பட்டிருக்கும் தொழில் துறை கடல் சார் சூழல் மாசு என்பனவற்றுக்கு மேலாக பாரிய எண்ணெய் கசிவு பிரச்சினையையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கப்பலில் இருந்து சரிந்து விழுந்த கொள்கலன்களில் இருந்து வெளிவந்து நீர்கொழும்பு பிரதேச கடற்கரையோரமாக ஒதுங்கிய பொருட்களை அப்பகுதி மக்கள் அவற்றை வெளிநாட்டு பரிசு பொருட்களாகக் கருதி வீடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். கருங்குழம்பாக கடல் அலைகள் கரையொதுங்கிச் செல்கின்றன. கப்பலில் இருந்த ஆபத்தான நைட்ரிக் அமிலமும் வேறு பல்வகையான இரசாயன பொருட்களும் உப்பு நீரில் ஒன்றோடு ஒன்று கலந்ததில் என்னென்ன இரசாயன மாற்றங்களை அடைந்திருக்குமோ நாமறியோம். எனவே இந்நீரில் கை கால்களை அளைய விடுவதும் இக் கருங்குழம்பு நீரை மிதிப்பதும் பல்வேறு சரும மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தக் கூடும். எனினும் ஊடகங்கள் வாயிலாக பொலிஸார் விடுக்கும் வேண்டுகோளை இப் பகுதி மக்கள் கருத்தில் கொள்ளவேண்டும். கப்பலில் இருந்து சில தினங்களாக வெளியாகும் கரும்புகை இம் மழைக் காலத்தில் அமில மழையாக பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வெளியாகியிருக்கும் எச்சரிக்கையை மக்கள் புறந்தள்ளிவிடக் கூடாது. மழை நேரத்தில் வெளியில் நடமாடுவதைக் தவிர்ப்பதே நல்லது.

இந்த இக்கட்டான சூழலில், சிங்கப்பூர் செல்லாமல் இலங்கைக்கு இக் கப்பல் ஏன் வந்தது? இலங்கைக்கான கொள்கலன்களை இறக்குவதுதான் வருகையின் நோக்கமா அல்லது கசிந்து கொண்டிருக்கும் இரசாயன கொள்கலன்களை இறக்கி வைப்பதற்காகத்தான் வந்ததா? இக் கப்பலை இந்தியாவும் கட்டாரும் துறைமுகத்துக்குள் அனுமதிக்க மறுத்த நிலையில் கொழும்பு துறைமுகம் அனுமதித்தது ஏன்? கப்பலில் புகை கிளம்பியபோதே ஏன் இன்னொரு கப்பலை கொண்டு சென்று முடிந்த அளவுக்கு கொள்கலன்களை அதில் ஏற்றுவதற்கு முயற்சி செய்ய வில்லை?

இவ்வாறு பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. குதர்க்கமற்ற வினாக்களுக்கு விடை கண்டுபிடிக்கப்படத்தான் வேண்டும் என்றாலும் இப்போது நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது. கடல் நீர், கடற்கரை மற்றும் வளிமாசு தொடர்பான விடயங்களுக்கும் நச்சுப் பொருட்களையும் நச்சு நீரையும் கையாளாமல் இருப்பதன் அவசியத்தை இப் பகுதி மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதும் தான். எப்போது எவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமோ  அப்போது அவற்றுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.

Comments