தடுப்பூசிக்குள் புகுந்து கொண்டது அரசியல்! | தினகரன் வாரமஞ்சரி

தடுப்பூசிக்குள் புகுந்து கொண்டது அரசியல்!

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இதுவரை சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலான காலப் பகுதியில் முழு உலகத்திலும் மனித உயிர்களுக்கு மாத்திரமன்றி, பொருளாதாரத்துக்கும் பாரியதொரு சவாலாக கொரோனா தொற்று நோய் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த அச்சுறுத்தலில் இலங்கையும் விதிவிலக்காக அமையவில்லை.

கொரோனா தொற்றின் முன்னைய இரு அலைகளை விட , இன்றைய மூன்றாவது அலை இலங்கைக்கு கடுமையான சவாலைக் கொடுத்துள்ளது. இதற்குக் காரணம் திரிபடைந்ததும் வீரியம் மிக்கதுமான கொரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவி வருவதுடன், கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் உடல் நிலையும் மோசமாகப் பாதிக்கப்பட்டு விடுகின்றது.

ஓரளவுக்குக் கட்டுப்பாடாக இருந்த நோய்ப் பரவல் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் எகிறி விட்டதென்றே கூற வேண்டும். சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் சுவாரஸ்யத்தில் மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியதனால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது அலை உருவெடுத்ததற்காக அரசாங்கத்தை குறை கூறுவதில் எந்த விதமான பயனும் இல்லை. ஏனெனில் சுகாதார வழிகாட்டல்கள் குறித்து அரசாங்கத் தரப்பு கடுமையான அறிவுறுத்தல்களை ஏற்கனவே வழங்கியிருந்தது. ஆனால் மக்களில் பெரும்பாலானோர் அதனை பொருட்படுத்தவேயில்லை. நாட்டை விட்டு கொரோனா முற்றாக நீங்கி விட்டதாகவே பலரும் எண்ணிக் கொண்டனர். அந்த அலட்சியத்தின் விளைவையே ஒட்டுமொத்த நாடும் இப்போது அனுபவிக்க வேண்டியுள்ளது.

தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த நோய்த் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டியதில் அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது. அரசாங்கம் கடுமையான விதிகளை மாத்திரம் நடைமுறைப்படுத்துவதனால் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தி விட முடியாது என்பதே சுகாதாரத் துறை நிபுணர்களின் வலுவான கருத்தாக உள்ளது.

‘மூன்றாவது அலை’ என அழைக்கப்படும் புத்தாண்டு கொத்தணியால் இதுவரை 73 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மே மாதம் 1ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மாத்திரம் 61,754 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் நாளாந்தம் சராசரியாக 2500 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றர். கடந்த வருடம் ஜனவரி முதல் இதுவரை இலங்கையில் 169,900 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 142,378 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன், 1300 இற்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் அல்லது சிகிச்சைக்காக எதிர்பார்த்திருப்பவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்துக்கும் அதிகமாகும். சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் தகவல்களுக்கு அமைய இலங்கையில் ஒவ்வொரு ஒரு மில்லியன் சனத்தொகையிலும் 7793 பேருக்கு கொரோனா தொற்று காணப்படுவதுடன், ஒவ்வொரு ஒரு மில்லியன் பேரிலும் சராசரியாக 58 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

கொரோனா தொற்றுப் பரவலில் கொழும்பு மாவட்டமே முன்னிலையில் காணப்படுகிறது. இங்கு 46,415 பேருக்கும், இதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் 31,469 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 14,839 பேருக்கும், குருநாகல் மாவட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கும் என கொரோனா தொற்று பரவல் காணப்படுகிறது.

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று காணப்படுவதுடன், முல்லைத்தீவு மாவட்டத்திலேயே ஒப்பீட்டளவில் குறைவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தத் தொற்று நோய் பரவலிலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குக் காணப்படும் சிறந்த வழி தடுப்பூசி ஏற்றுவதாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சுகாதார நிபுணத்துவ நிறுவனங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

இவ்வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து இலங்கை கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கான தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கியது. இதுவரை 14 இலட்சத்து  58 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு முதலாவது தடுப்பூசியும், 3 இலட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்ட் அஸ்ராசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி 925,242 பேருக்கும், 340,842 பேருக்கு அதன் இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன.

சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியில் 517,824 பேருக்கு முதலாவது தடுப்பூசியும், 2,435 பேருக்கு அதன் இரண்டாவது ஊசியும் ஏற்றப்பட்டுள்ளன. சினோபார்ம் ஊசியைப் பெற்றுக் கொண்டவர்களில் இலங்கையின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன நாட்டு பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர்.

இதனை விடவும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி 14,984 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

போதுமான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தொடர்ச்சியாக அறிவித்து வருகிறது. ஒரு சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் நட்பு நாடான சீனாவிடமிருந்து இரண்டாவது தொகுதியாக 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இது தவிரவும் மில்லியன் கணக்கான ஸ்புட்னிக் தடுப்பு மருந்துகள் மற்றும் பைசர் தடுப்பூசிகளையும் வெளிநாடுகளிடமிருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் அரசியல் காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கொரோனா பரவலுக்கு எதிராகப் போராடும் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதுடன், இத்துறையில் உள்ள சில தொழிற்சங்கங்கள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை சுமத்துவதுடன், உரிய தீர்வு வழங்கப்படா விட்டால் தொழிற்சங்கப் போராட்டங்களில் இறங்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளன.

தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தமது குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கியமையே இதற்குக் காரணமாகியுள்ளது. எனவே தமது குடும்ப உறுப்பினர்களும் பாரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதால் அவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பொது சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள், கிராமசேவர்கள் என முன்னணியில் செயற்படும் குழுவினர் முன்வைத்துள்ளனர்.

வைத்தியர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்கப்பட்டால் தமக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டி ஏற்படும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் விஞ்ஞான ரீதியான கொள்கையொன்று வகுக்கப்படாமையே இந்த முரண்பாடுகளுக்குக் காரணம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ் சாட்டியுள்ளார்.

வெளிநாடுகள் பலவும் வயது உள்ளிட்ட ஏதாவது ஒரு அடிப்படையில் தடுப்பு ஊசிகளை வழங்கி வருகின்ற போதும், இலங்கையில் எந்தவொரு அடிப்படையுமின்றி தடுப்பூசி ஏற்றலிலும் அரசியல் கலந்துள்ளது என அவர் தெரிவித்திருந்தார்.

பொது சுகாதார பணியக மட்டத்தில் தடுப்பூசி ஏற்றப்படும் போது, அந்தந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தமக்கு நெருக்கமானவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கள் சமூக ஊடகங்களின் ஊடாகவும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று செயற்படும் பணியாளர்கள் மாத்திரமன்றி அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நிச்சயமாக அச்சுறுத்தலுடனேயே காணப்படுகின்றனர் என்பதை மறுக்க முடியாது.

இது தவிர, மின்சாரசபை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் அரசாங்கப் பணியாளர்கள் பலருக்கு இன்னமும் தடுப்பூசி வழங்கப்படாதுள்ளது. எனவே தடுப்பூசியைப் பெற்றுக் கொடுக்கும் விடயத்தில் அரசாங்கம் ஏதாவது ஒரு அடிப்படையைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

அதேநேரம், நாடு கொரோனா தொற்று காரணமாக இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதால் எந்தவொரு தரப்பினரும் தமக்கிடையிலான தனிப்பட்ட கௌரவக் குறைவு கருதி தொழிற்சங்கப் போராட்டங்கள் குறித்து அச்சுறுத்தல்களை விடுக்காது, கூட்டுப் பொறுப்புடன் அனைவரும் ஒன்றிணைந்த செயற்பட்டு இந்த சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதே காலத்தின் தேவையாகும்.

இன்றைய காலப் பகுதி போராட்டத்துக்கோ, பணிப்பகிஷ்கரிப்புக்கோ உரிய தருணமல்ல என்பதை தொழிற்சங்கங்கள் ஒவ்வொன்றும் நிதர்சனமாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பி.ஹர்ஷன்

Comments