துறைமுக நகரத்தில் முதலீடு செய்வதற்கான பகிரங்க அழைப்பு | தினகரன் வாரமஞ்சரி

துறைமுக நகரத்தில் முதலீடு செய்வதற்கான பகிரங்க அழைப்பு

கொவிட் 19 பெருந்தொற்றின் முதலாவது அலையின் போது இலங்கை எடுத்த துரிதமான நடவடிக்கைகள் காரணமாக ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலப்பகுதிக்கு நாடு முற்றாக முடக்கப்பட்டு நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த துரிதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக நோய்பரவல் கட்டுப்படுத்தப்பட்டு தொற்றாளர்களின் செறிவு ஒரு சில மாவட்டங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது. இலங்கையின் இக்கடுகதி நடவடிக்கைகள் சர்வதேச மட்டத்தில் பெரிதும் சிலாகித்துப் பேசப்பட்டது.

உலக சுகாதார தாபனமும் கூட இலங்கைக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தது. தேர்தலொன்று வரவிருந்த நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நாட்டில் ஜனநாயக பாரம்பரியத்தை பாதிக்கும் சாத்தியமும் இருந்தது. எவ்வாறாயினும் நீண்டகால முடக்கல் நிலை காரணமாக நாட்டின் பொருளாதாரம் மரண அடி வாங்கியது. சாதாரண வாழ்வு நடத்தும் மக்கள் மத்தியிலும் வாழ்க்கையை கொண்டு நடத்தமுடியாதளவுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு முணுமுணுப்புகள் ஏற்பட்டன. 5000 ரூபா நிவாரணப்பணம் வழங்கப்பட்டு உதவி செய்யப்பட்டது. தேர்தல் முடிவடைந்து ஜனநாயகம் நிலைநாட்டப்பட்ட பின்னர் நாட்டின் நிலைமையை வழமைக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கைகழுவுதல் முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியைப் பேணல் போன்ற சுகாதார ஒழுங்கு விதிகள் கட்டாயப்படுத்தபட்டு பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. சீரிய ஒழுக்கப்பண்பு வாய்ந்த இலங்கை மக்கள் மத்தியிலே இந்த அறிவுறுத்தல்கள் எந்தளவு சொரணையுடன் பின்பற்றபட்டன என்பதை இற்றைவரை ஏற்பட்டுள்ள 1300 பேரின் மரணங்கள் மெய்ப்பித்து நிற்கின்றன.

ஏப்ரல் மாதம் வருடப்பிறப்புடன் ஏற்பட்ட புதுவருடக் கொண்டாட்டக் கொத்தணி இப்போது புது வீரியத்துடன் சென்று கொண்டிருக்கிறது. நாளாந்தம் இரண்டாயிரத்திற்கும் மூவாயிரத்திற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையினர் தொற்றுக்கு உள்ளானதாக அறிவிக்கப்படுகின்றனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் கருத்துப்படி அறிவிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையை விட சமூகத்திலுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை மும்மடங்காக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அடுத்துவரும் மூன்று வாரங்கள் அபாயமிக்கதாக இருக்குமென சுகாதாரத்தரப்பினர் கூறுகின்றனர். கொரோனா 19 பெருந்தொற்று நோய்க்கிருமியின் அத்தனை மாற்று வடிவங்களும் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆரம்ப காலங்களைப் போலன்றி நோய்த்தொற்றினால் நீரிழிவு இதயநோய் போன்ற நாட்பட்ட நோய்களுக்கு ஆளாகியிருந்தோர் அதிகளவு பாதிப்புக்குள்ளாகி நாட்பட்ட நோய்கள் காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் உயிரிழந்தனர். இப்போது கோரோனா டைபோயிட் நோயினால் நேரடியாகவே பாதிக்கப்பட்டு உடலுக்குத் தேவையான ஒட்சிசனை சுவாசப்பைகளூடாக பெறமுடியாத சிக்கல் காரணமாக இறக்கின்றனர்.
சிசுக்கள் தொடக்கம் திடகாத்திரமான இளைஞர்களும் கூட இந்நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து போகின்றனர். இன்றுள்ள சூழலில்காற்றின் ஊடாகவும் நோய்பரவலாம் என அறிவிக்கப்பட்டிருப்பதனால் மூடிய கட்டடங்களுக்குள் இருப்போரும் தொழில் புரிவோரும் முகக் கவசங்களை கட்டாயம் அணிந்திருப்பதுடன் சமூக இடைவெளியைப் பேணுவதும் தேனீர் இடைவேளைகளின் போதும் உணவு இடைவேளைகளின் போதும் கூட்டாகச் சென்று உணவருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் மின்னுயர்த்திகளைப் பயன்படுத்துவதையும் குறைப்பது நன்று. உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதே இன்று நம்மத்தியிலுள்ள ஒரே ஒரு தெரிவாகும்.

இப்போது பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து கிடையாது. ஆனால் அத்தியாவசிய சேவைகள் இயங்க வேண்டும். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் அத்தனைபேரும் தனிவாகன வசதியுடையோர் அல்ல. அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் அத்தனையும் தமது ஆளணிக்கு உரிய போக்குவரத்து வசதிகளை வழங்குவதுமில்லை. எனவே அத்தியாவசிய சேவைகளை வழங்கும் சேவையாளர்களின் போக்குவரத்து குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். கடந்த 25 ஆம் திகதி தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது வாகனங்களில் செல்ல முடியாது எனக் கூறப்பட்டது. கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகள் தமது வாகனத்தரிப்பிடங்களை மூடி சட்டத்தைப் பின்பற்றின. குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் நடந்து சென்று பொருள் கொள்வனவில் ஈடுபடுமாறு கூறப்பட்டது. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பவர்கள் நடந்துபோய் உடற்பயிற்சி எடுக்கட்டும் என்ற நல்ல நோக்கிலான ஒரு செயற்பாடாக இது பேசப்பட வேண்டும். அத்துடன் இலங்கையில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் அருகில் கூப்பிடு தூரத்தில் ஒரு கடையிருக்கும். அக்கடையில் அத்தியாவசியப் பொருள்கள் நிறைந்திருக்கும். வீட்டிலிருந்து போகின்ற ஒரு குடும்ப அங்கத்தவர் ஒரு குடும்பத்திற்கு ஒருவாரகாலத்திற்கு போதுமானளவு பொருள்களை சுமந்து வரும் வல்லமை வாய்ந்தவர் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட முடிவுகள் ஆச்சரியமூட்டுகின்றன.

கொட்டும் மழையில் குடைகளைப் பிடித்தவாறு மக்கள் வரிசையில் நின்ற காட்சிகளையும் காண முடிந்தது. இயற்கையும் கூட சாதாரண மக்களுக்கு எதிராகத்தான் செயற்படுகிறது. வழமைபோலவே வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சூறாவளி அதனால் அக்காலத்தில் நாட்டில் பெய்து வரும் தொடர் மழை அதனால் பாதிக்கபட்டுப் போயிருக்கும் விவசாயிகளினதும் மீனவர்களினதும் வாழ்வாதாரம். மறுபுறம் போக்குவரத்து நெருக்கடிகள் பயணத்தடை சந்தைப்படுத்தல் பிரச்சினைகள் மற்றும் மழை காரணமாக கிடு கிடுவென உயர்ந்த மரக்கறிவிலைகள் மற்றும் கடலுணவுப் பொருள்களின் விலைகள் நுகர்வோரின் கடின உழைப்பின் பெரும்பகுதியை கபளீகரம் செய்கின்றன. ஆனால் மழை மக்களை வீடுகளுக்கு உள்ளேயே வைத்திருக்க உதவியிருக்கிறது என்பது உதிரித் தகவல். புத்தபிரான் உதித்த வைகாசி விசாகம் இலங்கையில் சமூக ஒன்று கூடலுக்கான சாதகமான ஒரு சூழல். மழைமட்டும் இல்லாவிட்டால் பொதுசனம் விதிகளை மீறி வெசாக் கொண்டாட வெளியே வந்திருக்கும்.  மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்தது போல புதிதாக வந்திருக்கிறது ஒரு கப்பல் பிரச்சினை. இரசாயனங்கள் எத்தனோல் போன்றவற்றை ஏற்றிய கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்திற்கு அப்பால் தீப்பிடித்து எரிகிறது. சனிக்கிழமை அக்கப்பல் மூழ்கிவிடும் எனக் கூறப்பட்டது.

ஏற்கெனவே கப்பலில் இருந்த பொருள்களின் பாகங்கள் கொழும்புக்கு வடக்கே உள்ள கடற்பகுதிகளில் கரையொதுங்கிக் கொண்டுள்ளன. அபாயகரமான இரசாயனங்கள் இருக்கலாம் என்பதால் அவற்றைத் தொடவேண்டாமென்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை இதன் காரணமாக ஏற்பட்டுள்ள சூழற்பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள கடற்கரைகளைப் பயன்படுத்துவது மற்றும் சுற்றுப்புறக் கடற்பகுதிகளில் பிடிக்கப்படும் கடலுணவுகளை உட்கொள்வது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்கள் இன்னும் வரவில்லை. கப்பலில் இருந்த பொருள்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.

அது ஒருபுறமிருக்க கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசி ஏற்றுவதே நீண்டகாலத் தீர்வாக அமையும் என உலக நாடுகள் ஏற்றுக்ெகாண்டுள்ள  நிலையில் இலங்கையும் அந்நடவடிக்கைகளில் முனைப்பாக ஈடுபட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து அன்பளிப்பாகக் கிடைத்த தடுப்பூசிகளின் முதலாவது டோஸ் போடப்பட்டது. தற்போது எப்போதுமே இலங்கைக்கு நல்லதே செய்யும் என்று இலங்கையின் பெரும்பான்மை மக்கள் நம்பும் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. சமீபத்தில் மற்றொரு தொகுதி ஜந்து இலட்சம் தடுப்பூசிகள் அன்பளிப்பாக சீனாவிலிருந்து வந்துள்ளன. சார்பளவில் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி வலிகள் ஏதுமற்ற இரத்தம் கட்டியாதல் போன்ற சிக்கல்கள் இல்லாத பாதுகாப்பான ஊசியாகவே தோன்றுகிறது. கொரோனா பெருந்தொற்று சீனாவிலேயே உருவானது என்பதுடன் குறுகிய காலத்திலேயே அந்நாடு நோயைக்கட்டுப்படுத்தி அதற்கான தடுப்பூசியையும் கண்டுபிடித்து சந்தைப்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு உலகின் எல்லா நாடுகளும் எதிர்கணிய பொருளாதார வளர்ச்சியை எதிர்கொண்டிருந்தவேளை நேர்க்கணிய பொருளாதார வளர்ச்சி கண்ட ஒரேயொரு நாடு சீனாவாகும். எனவே சீனா வேண்டுமென்றே உலகில் இந்நோயைப்பரப்பியதா என்ற சந்தேகம் இன்னமும் தீர்ந்தபாடில்லை. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இந்நோயின் தோற்றம் பரவல் மற்றும் தாக்கம் குறித்து தீரவிசாரித்து ஆராய்ந்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இப்போது தனது அதிகாரிகளைப் பணித்திருக்கிறார்.

இந்த உலகவிவகாரங்கள் இப்போதைக்குத் தீர்ந்து போகும் என நாம் எதிர்பார்க்க முடியாது. எது எவ்வாறாயினும் துறைமுக நகரச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கை இன்றைய நிலையில் பொருளாதார ரீதியில் வலுவுடன் உள்ள சீனாவின் அரவணைப்பில் தொடர்ந்தும் இருக்கும் என்பது தெளிவாகத் தெரிவதுடன் எவரும் வந்து துறைமுக நகரத்தில் முதலீடு செய்யலாம் என்று பகிரங்கமாக அழைப்பு விடுப்பதன் மூலம் மேற்குலகையும் சமாதானப் படுத்தவும் முயற்சிக்கப்படுகிறது. பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா கௌக்கியமா என்ற கண்ணதாசன் பாடல் தவிர்க்க முடியாதவாறு நம் நினைவுக்கு வருகிறது.

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments