பலப்பரீட்சைக் களமாக மாறப்போகும் வடக்கு, கிழக்கு மாகாணசபை தேர்தல் | தினகரன் வாரமஞ்சரி

பலப்பரீட்சைக் களமாக மாறப்போகும் வடக்கு, கிழக்கு மாகாணசபை தேர்தல்

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் தொற்று பரவல் உலகளாவிய ரீதியான தொற்று நோயாக மாறி, இலங்கையை மாத்திரமன்றி உலக நாடுகள் பலவற்றையும் பாதித்துள்ளது. இத்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த வல்லரசு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.

இலங்கையும் மிகத் தீவிரமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் கொவிட் முதலாவது அலை உருவெடுத்தது. தற்போது கொவிட்-19 இன் மூன்றாவது அலை இலங்கையில் பரவியுள்ளது.

கடந்த இரண்டு அலைகளைப் பார்க்கிலும் மூன்றாவது அலையின் தாக்கம் ஒப்பீட்டளவில் அதிகமானது என மருத்துவ சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுகாதார ரீதியில் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு அப்பால், கொவிட்19 தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பயணக் கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகளால் பலரும் பொருளாதார ரீதியிலான சவால்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.

பொருளாதார ரீதியிலான பாதிப்புக்கள் ஒருபுறமிருக்கையில், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு நடத்தப்பட வேண்டிய தேர்தல்களையும் கூட  நடத்த முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக மாகாண சபைகளுக்கான பதவிக் காலம் முடிவடைந்து பல வருடங்கள் ஆகியுள்ள போதிலும், அவ்வப்போது எதிர்நோக்கிய காரணங்களுக்காக அவற்றுக்கான தேர்தல்கள் நடத்தப்படாது ஒத்திவைக்கப்பட்டே வருகின்றன.

தேர்தலுக்கான பௌதிக சூழலை கொவிட் தொற்று வழங்காமல் விட்டாலும் அரசியல் கட்சிகளாலும், அரசியல்வாதிகளாலும் தேர்தலுக்கான தயார்படுத்தல்கள் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டன. தென்னிலங்கை கட்சிகள் மாத்திரமன்றி வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்க் கட்சிகளும் இதில் விதிவிலக்கில்லாமல் தேர்தலுக்கான முன்முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உள்ளிட்ட பல விடயங்களில் ஏற்கனவே கட்சிகளுக்கிடையில் போட்டிகளும், பேரங்களும், முரண்பாடுகளும் ஆரம்பமாகி விட்டன.

கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, சிங்கள பெரும்பான்மைவாத பிரசாரங்கள் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்றுள்ளன என்ற கள உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இவ்வாறான பின்னணியில், மாகாணசபைத் தேர்தலில் சிறுபான்மை இனத்தவர்கள் தத்தமது ஒற்றுமையைக் காண்பிப்பது காலத்தின் தேவையாக உள்ளது. இருந்த போதும், சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் தமக்கிடையில் ஒரு சமரசத்துக்கு இன்னுமே வருவதாகத் தெரியவில்லை.
கடந்த காலங்களைப் போன்று ஒருவரை ஒருவரை தூஷிக்கும் அல்லது ஒருவரை ஒருவர் குறை கூறும் சேறு பூசுகின்ற அரசியல் கலாசாரத்திலிருந்து அவர்கள் விடுபடவும் தயாரில்லை என்பதும் அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது.

இந்த முரண்பாடுகள் கட்சிகளுக்கு இடையில் மாத்திரமன்றி கட்சிகளுக்கு உள்ளேயும் காணப்படுவது அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப்பூசலை முக்கியமானதாகக் குறிப்பிட முடியும்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அண்மையில் இலத்திரனியல் ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் சார்ந்த கட்சியின் செயற்பாடுகளை பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.

கட்சியின் தலைமைத்துவமானது ஒரு சிலரின் தேவைகள் மற்றும் அவர்களின் நிலைப்பாடுகளுக்கு அடிபணிந்து உரிய தீர்மானங்களை எடுக்காமல் இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்களுக்காக தீர்மானங்களை எடுக்காமல் இருப்பது அவர்களுக்குத் துரோகம் இழைக்கும் செயல் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா சுட்டிக் காட்டியிருந்தார்.

‘கொழும்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களுக்கு எதனையும் தமிழரசுக் கட்சி செய்யவில்லை. கடந்த காலங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி உள்ளடங்கலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்துள்ளது. தமிழத் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தலைமைத்துவங்களின் பலவீனமே இந்த நிலைமக்குக் காரணம்’ என்றும் சட்டத்தரணி தவராசா தெரிவித்திருந்தார்.

‘தமக்குத் தலைமைத்துவம் வர வேண்டும், செயலாளராக வர வேண்டும் என்ற எண்ணத்திலேயே சிலர் செயற்படுகின்றனரே தவிர, கட்சியை வளர்ப்பதற்குப் பாடுபடவில்லை. இதற்கு உதாரணம் கூறுவதாயின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்னைய பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டிருந்தார். அவருக்கு இம்முறை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட இடம் கொடுத்திருந்தனர். அவர் திறமையானவர் என்பது ஒருபுறம் இருந்தாலும், முந்திய தேர்தலில் வெற்றி பெற முடியாத அவரால் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முடிந்தது எவ்வாறு? தனிநபருக்கு வாக்குகள் அளிக்கப்பட்டனவா அல்லது கட்சிக்கு வாக்குகள் அளிக்கப்பட்டனவா என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாதபடி மக்கள் கட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனினும் இந்த நம்பிக்கையை வளர்ப்பதற்கு கட்சியைச் சேர்ந்தவர்கள் முயற்சிப்பதில்லை’ என்பது தவராசாவின் குற்றச்சாட்டாகவிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனித்துப் போட்டியிட்டால், அவரால் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற முடியாது என்றும் அவர் தனிப்பட்ட குற்றச்சாட்டொன்றை அந்தப் பேட்டியில் சுமத்தியிருந்தார்.

அதேநேரம், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையில் சாதித்திருக்க வேண்டிய நல்லதொரு சந்தர்ப்பம் தவற விடப்பட்டிருப்பதாகவும் தவராஜா இங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

‘நல்லாட்சி அரசாங்கத்தில் 100 இற்கும் அதிகமானவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக சிலர் மார்தட்டிக் கொள்கின்றனர். வழக்குகளைத் தாக்கல் செய்வதற்குப் போதிய சாட்சியங்கள் இல்லாத, வழக்குகளை தாக்கல் செய்ய முடியாத நபர்களே அவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்தனர். சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 48 பேர் இருக்கின்றனர். அவர்களை விடுவிப்பதே அவசியமானது.

அவ்வாறானவர்களை விடுவிப்பதற்கு கடந்த நல்லாட்சி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முடியாது போய் விட்டது’ என்பது குறித்தும் கே.வி.தவராசா அந்த ஊடகக் கலந்துரையாடலில் மேலும் விமர்சித்திருந்தார்.

அரசியல் கைதிகள் விவகாரம் இரு தசாப்தங்களுக்கு மேலாகப் பேசப்பட்டு வரும் ஒரு விடயமாகும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நல்லதொரு வாய்ப்பு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கிடைத்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையைக் கொண்டிருந்த அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை இக்கட்டான சூழல்களில் காப்பாற்றிய பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையே சாரும்.

ஆட்சிக் கவிழ்ப்பு சூழலின் போது ஐ.தே.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்து பாராளுமன்றத்தில் அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும், வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்கியிருந்தது.

ஒவ்வொரு முறை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் போதும், அரசியல் கைதிகளை சிறிது சிறிதாக விடுவித்திருந்தாலும் அந்த நான்கரை வருடங்களுக்குள் அனைவரையும் முழுமையாக விடுவித்திருக்க முடியும். எதிர்க் கட்சியாக இருந்து கொண்டு, அதுவும் பிரதான எதிர்க் கட்சியாக இருந்து கொண்டு மத்திய அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவது வழமையான அரசியல் கலாசாரத்திலிருந்து மாறுபட்டதாக இருந்தாலும், அன்றைய சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளடங்கலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறி விட்டது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலட்சியமும், தவறுகளும் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களுக்குத் தெரியாததல்ல. அதனால்தான் அவர்கள் தமிழ்க் கூட்டமைப்பை படிப்படியாக நிராகரிக்கத் தொடங்குகின்றனரென்பதுவும் தெரிந்த விடயம்.
தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் சட்டத்தரணி தவராசா கூறுவதில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது.

எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டிருந்த போதும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றியோ அல்லது நாட்டிலுள்ள பொதுவான பிரச்சினைகள் பற்றியோ பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தது மிகவும் குறைவு என்றே கூற வேண்டும். அக்காலத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அலட்சியப்படுத்ப்பட்டன என்பதே உண்மை.

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக அரசாங்கத்திடம் கேள்வி கேற்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்பட்ட போதும், அவர் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையென்றே கூறலாம். இது போன்று பல்வேறு சந்தர்ப்பங்களைத் தவற விட்ட பின்னர், இப்போது மீண்டும் பழைய பல்லவியைப் பாடுவதில் அர்த்தம் இல்லை.
தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சினைகளை உண்மையில் தீர்த்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதற்குரிய முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். இதனை விடுத்து மீண்டும் அவர்கள் தேர்தலுக்கு தயாராவதில் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.

இதேசமயம் கிழக்கு மாகாணத்திலும் முதலமைச்சர் ஆசனத்தைக் கைப்பற்ற தமிழ்க் கட்சிகள் இப்போதே களத்தில் இறங்கி விட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் கட்சியினர் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சியினர் இந்தக் களத்தில் இறங்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கிழக்கு முதல்வர் ஆசனத்துக்கு குறி வைத்துள்ளது. பொதுஜன பெரமுனவும் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

அதேசமயம் நல்லாட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை தவற விட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாகாண சபைத் தேர்தல் இம்முறை மிகப் பெரும் சவாலாக அமையுமென்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இவை தவிர முஸ்லிம் கட்சிகளும் முதலமைச்சர் ஆசனத்தை இலக்கு வைத்து காய்களை நகர்த்துவதைக் காண முடிகின்றது.

இது இவ்விதமிருக்க, தமிழ்க் கட்சிகள் இன்றைய சூழலில் தமக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தி ஓரணியில் திரண்டு செயற்பட வேண்டிய தேவையும் உணரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கு நிச்சயம் இந்த ஒன்றிணைவு அவசியமானது என்பதை தமிழ் அரசியல் தரப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Comments